கவிஞரும் ஊடகவியலாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதத்தின் பத்தாண்டு கால உழைப்பில் உருவாகியிருக்கிறது ‘பாரதி விஜயம்’. பாரதியின் வாழ்வில் இடம்பெற்றவர்கள், அவரைப் பற்றி சொன்ன குறிப்புகள் அடங்கிய 1,040 பக்கப் பெருந்தொகுப்பு இது. சந்தியா பதிப்பகம் இதை வெளியிடுகிறது. கடற்கரயுடன் ஒரு பேட்டி…
பாரதி தொடர்பான மற்ற நூல்களிலிருந்து உங்கள் நூல் எப்படி வேறுபடுகிறது?
பாரதியாரோடு நெருங்கிப் பழகிய 65 பேர் அவரைப் பற்றி எழுதிய, பேசிய குறிப்புகளின் தொகுப்பு இது. ரிக் ஷாகாரர் ஒருவர், குள்ளச்சாமி என்ற சித்தர், அரவிந்தர் ஆகியோருடனான பாரதியின் உறவைப் பற்றி பல தகவல்கள் இந்த நூலில் உண்டு.
நீங்கள் புதிதாகக் கண்டடைந்த விஷயங்கள் என்னென்ன?
பாரதியைப் பற்றி வ.ரா. எழுதியதுதான் முதல் புத்தகம் என்று கருதப்பட்டுவந்தது. அவருக்கு முன்பாகவே 1931-ல் புதுச்சேரியைச் சேர்ந்த வாசுதேவ சர்மா எனும் பாரதியின் நண்பர், பாரதியின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகளாக எழுதியிருக்கிறார். இவ்வளவு காலமும் கவனத்துக்கு வராத அந்தப் புத்தகம் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. பார்த்தசாரதி கோயில் யானையால் பாரதி தாக்கப்பட்டபோது, அவரைக் காப்பாற்றிய அ.ஜி.ரங்கநாயகியின் நினைவுக் குறிப்பு முக்கியமானது.
இந்தத் தொகுப்புக்கான எண்ணம் எப்படித் தோன்றியது?
பாரதியின் தந்தையார் நடத்திய - பித்தராஜபுரத்தில் மண்மேடாகக் கிடக்கும் பஞ்சாலைக்கு முன்னால் நின்றபோது, இங்குதானே பாரதி சிறுவனாக விளையாடியிருப்பார் என்று தோன்றியது. அந்த நினைவுகள் படிப்படியாக வளர்ந்தன. ஆவணக் காப்பகங்களில் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து தேடியதில், பாரதியைப் பற்றி அவரோடு பழகியவர்கள் எழுதிய பல அரிய குறிப்புகளைக் கண்டடைந்தேன்.
வரலாறு என்றாலே வாதப் பிரதிவாதங்களும் உண்டே?
நிறைய. ஒவ்வொருவரின் நினைவுக் குறிப்புக்கும் இடையில் ஆண்டுகளைப் பொறுத்தவரையில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. நினைவுப் பிசகால் ஆண்டுகள் மாறிவிட்டன. அவற்றை விளக்கி 87 பக்கங்களுக்கு ஒரு விரிவான முன்னுரை எழுதியிருக்கிறேன்.
உங்கள் பார்வையில் பாரதி?
உணர்ச்சியின் வடிவம். அத்தனை நிறை குறைகளையும் தாண்டி, அப்பழுக்கற்ற தன்மையோடு ஒரு ராஜாவைப் போல வாழ்ந்திருக்கிறார். வறுமையில் வாழ்ந்தார் என்று ஒரு பொதுவான எண்ணம் இருக்கிறது. அந்தக் காலத்திலேயே நூறு ரூபாய் சம்பளம் வாங்கியவர் அவர். அவரது நண்பர்கள் அவரை ஆராதித்திருக்கிறார்கள். பாரதியை அவரது காலத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை எனும் கருத்தை இந்தத் தொகுப்பு உடைத்தெறியும்!
- புவி
(நன்றி: தி இந்து)