அல்குர்ஆனின் ஸூராக்களை பொதுவில் மக்கீ மற்றும் மதனீ என அல்குர்ஆனிய ஆய்வாளர்கள் வகைப்படுத்துவர். மக்கீ ஸூராக்கள் நபிகளாரின் மக்கா காலத்தில் இறக்கியருளப்பட்டவை; இஸ்லாத்தின் நம்பிக்கைப் பகுதியை முதன்மையாகப் பேசுபவை; ஒப்பீட்டு ரீதியில் சிறிய ஸூராக்கள். மேலும், மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் இறைவன் பௌதீக உலகையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் எவ்வாறு அமைத்துள்ளான் என்பதை மனிதனின் கண்முன் நிறுத்தும் ஒழுங்கிலான வசனங்களை அதிகம் கொண்டவை. இன்னொரு வகையில், மனிதனுக்கு இறைவனை தர்க்க ரீதியில் அறிமுகப்படுத்தும் தன்மையை அதிகம் பெற்ற ஸூராக்கள்.
மனிதனுக்கு இறைவன் தன்னை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்?! இறை நம்பிக்கை என்பது மறையுலகு சார்ந்தவை. நாம் வாழும் பௌதீக உலக எல்லைக்குள் உட்பட்டவை அல்ல மறையுலகு பற்றிய நம்பிக்கை. பௌதீக உலகின் ஆய்வுக் கருவிகளுக்கு அப்பாற்பட்ட மறையுலகு பற்றிய உண்மைகளை இறைவன் அறிவிக்காமல் மனிதனால் சுயமாக அறிய முடியாது. இறைவன் பற்றிய சரியான புரிதல் 'வஹி' இன் உதவி இன்றி சாத்தியமற்றது. இதனை மனிதனுக்கு அறிவிக்கும் இறை ஏற்பாட்டின் அங்கமாகவே 'வஹி' அமைகிறது. பௌதீக உலகிற்கும், மறையுலகிற்குமான ஒரே தொடர்பு வஹி மாத்திரமே.
மனிதப் படைப்பின் மூலமாக அல்குர்ஆன் 'மண்' மற்றும் 'ஒளி' என்பவற்றை குறிப்பிடுகின்றது. மனித உடல் மண்ணினாலும், ஆன்மா(ரூஹ்) ஒளியினாலும் ஆனவை. 'ரூஹ்' இறைவன் பற்றிய தேடலை அதன் இயல்பு காரணமாகவே கொண்டவை. ('ரூஹ்' தான் மனிதனை உலகிலுள்ள ஏனைய படைப்புகளிலிருந்து பிரதானமாக வேறுபடுத்துகிறது). மனிதனின் 'ரூஹ்' இன் தூண்டுதல், இறைவன் பற்றிய தேடலை அவனது வரலாறு நெடுகிலும் தொடர்ந்திருக்கச் செய்தன. கடவுளை நோக்கிய மனித ஆன்மாவின் இயல்பான தேடல், அதன் பயணத்தில் இரண்டு முக்கிய இடர்களை சந்தித்தது. முதலாவது, இறைவனை புரிந்துகொள்வதில் அவனின் பண்புகள் விடயத்தில் கொள்ளும் திரிபுபட்ட / பிழையான கருத்து. மற்றது, ஆன்மீகம் நிறுவனமயப்பட்டு சீரழிதல்.
இன்னொரு வகையில், நபிமார்கள் இவ்விரு விடயங்களில் மனித சமூகம் கொண்டிருந்த பிறழ்வான கருத்துக்களை சீர்திருத்துவதனை முதன்மை இலக்காகக் கொண்டே செயற்பட்டனர். ஏனெனில், அனைவருக்கும் தெளிவாக / வெளிப்படையாக தெரியும் அரசியல் - பொருளாதார சமூக அநீதிகளைப் போன்று மனிதனால் இவை இலகுவில் விளங்கிக் கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், இவற்றின் சீர்கேடுகள் எவ்வகையிலும் அரசியல் - பொருளாதார சீர்கேடுகளைக் காட்டிலும் தாக்கத்தில் குறைந்தவை அல்ல; சில நேரங்களில் இவை இரண்டை விடவும் மோசமான தாக்கத்தையுடையவை. வேறுவார்த்தையில் சொல்வதென்றால், ஆன்மீகம் நிறுவனமயப்பட்டு நெறிபிறழும் போது, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மனித சமூகத்தில் ஏற்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும், அராஜகங்களுக்கும் சற்றும் குறையாக சீர்கேடுகளை அது மனித சமூகத்தில் தோற்றுவித்துள்ளன. வெளிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பகுதியில் தெரியும் சீர்கேடுகளைப் போன்று இவை மனிதர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதுமில்லை.
மனிதனின் தனிப்பட்ட தெரிவுச் சுதந்திரமாக தான் விரும்பிய கொள்கையை அல்லது மதத்தை பின்பற்றுவதனை அங்கீகரித்து உறுதிப்படுத்திய இஸ்லாம், கடவுள் / ஆன்மீக விடயத்தில் மனித சமூகம் ஏற்படுத்திக் கொண்ட சறுக்கலை அறிவுறுத்தவும், சீர்திருத்தவும் முயன்றது. சமூக அநீதி ஆன்மீகப் பரிமாணம் பெறும்போது, அவை இலகுவில் மக்களால் புரிந்து கொள்ளத்தக்கதாய் இருப்பதில்லை. இவ்விடத்தில் சமூக அநீதியை மறைத்துக் கொள்ள / நியாயப்படுத்த கடவுளைக் காரணமாக்கிய மனிதன், சடங்குகள் வழி கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கவும் விழைகிறான். நீங்களாக ஏற்படுத்திக் கொண்டவைகளுக்கு அல்லாஹ் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டான் என்று மக்காவின் இணைவைப்பாளர்களைப் பார்த்து அல்குர்ஆன் அறிவுறுத்தல் செய்தது. அல்குர்ஆனின் இறுதி அத்தியாயமான ஸூரா நாஸ், பொருளாதாரம் - அரசியல் - ஆன்மீகம் ஆகிய மூன்றிலும் ஏற்படும் அநீதிகளை விட்டும் அவற்றின் இறைவனிடமே பாதுகாப்புத் தேடும்படி மனிதனுக்கு சூட்சுமமாக உணர்த்தியது.
மனிதனுக்கும், இறைவனுக்குமிடையில் இடைத்தரகர்கள் ஏற்படுத்தப்படுவதனை இஸ்லாம் கடுமையாக கண்டித்தது. நபிமார்களைக் கூட அது இடைத்தரகர்களாக முன்னிறுத்தவில்லை. இறைவனுக்கும், மனிதனுக்குமிடையிலான திரையை நீக்கியதன் மூலம் ஒவ்வொரு மனிதனையும் அவனது செயலுக்கான பொறுப்பாளனாக ஆக்கியது.
எந்த உள்ளுணர்வின் தூண்டுதலினால் மனிதன் இயல்பில் இறைவனை / பேருண்மையைத் தேடக் கூடியவனாக அமைந்தானோ, அந்த உள்ளுணர்வை ஏற்படுத்திய இறைவன் அதற்கு பதிலளிக்க வேண்டுமல்லவா?! ஆம், அந்த இறைவன் அதற்கு 'வஹி' மூலம் பதிலளித்தான். மனிதனுக்கு வழிகாட்டுவதை தனது பொறுப்பாக இறைவன் ஏற்றுக் கொண்டான். முதல் மனிதன் ஆதமிலிருந்து மனிதனுக்கு வழிகாட்டும் இறைநியதி தொழிற்படத் தொடங்குகிறது.
இறைவன் தன்னை அறிமுகப்படுத்த அல்லது மறையுலகு பற்றிய நம்பிக்கையை மனிதனிடம் விதைக்க ஏன் பௌதீக உலகு பற்றிய உண்மைகளை குறிப்பிட வேண்டும்?! மனிதன் எந்த இயற்கையின் பிரமாண்டத்தின் முன் மிரண்டு போய் அதனை வணங்கத் தலைப்பட்டானோ அந்த இயற்கையை ஏக இறைவனின் படைப்பாக அல்குர்ஆன் அதன் மிக ஆரம்ப மக்கா காலத்திலேயே முன்னிறுத்தியது. இதன் மூலம் இயற்கை பற்றிய மனித அறிதலுள்ள குறையையும், பௌதீக உலக இயக்கத்தின் சீரான தன்மை உணர்த்தும் ஏக இறையையும் மனிதனுக்கு உணர்த்த முனைந்தது. மறுபுறம், மிகப் பிரமாண்டமான அண்ட சராசரத்தை இறைவனின் படைப்பின் ஓர் அங்கமாக முன்னிறுத்தியதன் மூலம் பிரபஞ்சத்தை மனிதனின் ஆய்வறிவிற்குட்பட்ட பகுதியாகவும் மாற்றியது.
நாம் வாழும் பௌதீக உலகு மற்றும் அதன் இயக்குவித்தலுக்கு காரணமான பிரமாண்டமான பிரபஞ்சமும் கூட மனிதப் புரிதலுக்கு இன்னும் பூரணமாக உட்பட்டவை அல்ல. தொடர்ந்தேர்ச்சையான பிரபஞ்சம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் எமக்கு இதனையே காட்டுகின்றன. பாரிய ஆற்றல் வாய்ந்த மனித அறிவு அதன் ஆய்வுக்குட்படும் பகுதியிலேயே இன்னும் முழுமைத் தன்மையை ஈட்டிக் கொள்ளவில்லை என்பதை இறைவன் பிரபஞ்ச உண்மைகளை சுட்டுவதன் மூலம் விளக்குகிறான். மனிதன் தனது அறிவாற்றல் குறித்தும், ஆய்வுக் கருவிகள் குறித்தும் பெருமிதம் கொள்வதற்கான எல்லையை, மனிதனை இதனை ஆய்வுக்குட்படுத்தும் படி ஏவுவதன் ஊடாக உணர்த்துகிறான்.
மாபெரும் பிரபஞ்ச வெளி, அதிலுள்ள சூரியன், நட்சத்திரங்கள், கோள்கள்; மனித வாழ்வுக்கேற்ற பரந்து விரிந்த பூமி, அது தன்னுள் உள்ளடக்கியிருக்கும் கோடான கோடி உயிரினங்கள் என்பவற்றின் முன்னிலையில் மனிதனை மக்கி ஸூராக்கள் முன்னிறுத்துகிறது. தான் எவ்வளவு பாரிய பிரபஞ்ச இயக்கத்தின் ஓர் உயிரி என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரும் போது, பிரபஞ்சத்தில் தனது இடம் எது என்று ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கத் தொடங்குகிறான். செருக்கும், கர்வமும், தற்பெருமையும் கொண்டலைந்த மக்கத்துக் குறைசிகளைப் பார்த்து வானம், பூமியைப் படைப்பது கடினமானதா அல்லது உங்களையா என்று அல்குர்ஆன் கேட்கிறது. மனிதன் அகங்காரம் கொண்டு பூமியில் சுற்றித் திரிவதற்கான தகுதியை இதன் மூலம் இறைவன் கேள்விக்குட்படுத்துகிறான். மக்கத்துக் குறைசிகள் தமது முன்னைய மதிப்பீடுகள் தகர்ந்து, தம் கண்முன்னே உதிர்வதனை அல்குர்ஆனின் முன் அவர்கள் உணர்ந்தனர். தமது உலகு பற்றிய நோக்கினிடத்தில், புதியதொரு உலகப் பார்வையை அல்குர்ஆன் கட்டியெழுப்பும் போது அவர்கள் பதற்றமடைந்தனர்.
உலக அழிவு மற்றும் மறுமையின் தோற்றத்தை அல்குர்ஆன் பிரபஞ்ச இயக்கத்தின் தொடர்ச்சியாகவே முன்வைக்கின்றன. அதாவது, இன்றைய பிரபஞ்சத்தின் இன்னொரு நிலைமாற்றமாக; எந்த இயற்கை விதியின் படி பிரபஞ்சம் தொழிற்படுகிறதோ, அந்த இயற்கை விதியின் தொடர்ச்சியாக. மறுபுறம், பூமியை வளப்படுத்தும், மனித முயற்சியுடன் இணைந்த அல்லது மனித முயற்சியில் பெரிதும் தங்கியுள்ள (பயிர்செய்கை போன்ற) செயற்பாடுகளை இறைவன் ஏற்படுத்தியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றன. (மனித இனத்தின் வரலாற்று ஓட்டத்துடன் இணைத்து விரிவாக ஆராய வேண்டியதொரு பகுதி இது).
பேராசான் உஸ்தாத் மன்ஸூரின் "குர்ஆனிய சிந்தனை" இன் இரண்டாம் பாகமான அம்ம ஜுஸ்வுவின் ஆரம்ப 09 ஸூராக்களுக்கான விளக்கவுரை, அல்குர்ஆனிய தர்க்கத்துக்குள் எங்களை அழைத்துச் செல்கிறது. மக்கீ ஸுராக்களை கொண்டமைந்த பகுதி இது. இஸ்லாத்தின் நம்பிக்கைப் பகுதியை மரபு ரீதியாக பெற்றுவரும் ஒரு சமூகம் என்ற ரீதியில், எமது நம்பிக்கை பகுதியையும் அல்குர்ஆனிய தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு மீள் பரிசீலிக்கும் வாய்ப்பினை "குர்ஆனிய சிந்தனை" எமக்கு வழங்க முடியும். மேலும், எந்த அதிகாரமுமற்று ஒடுக்கப்பட்ட சமூகமாக காணப்பட்ட மக்காவின் ஆரம்ப முஸ்லிம் தலைமுறையின் நாட்ட சக்தியினை வலுப்படுத்திய வசனங்கள் இவை. அதே வசனங்கள் எம்கண் முன் அவ்வாறே உள்ளன. ஆனால், எமது தலைமுறைகள் நாட்ட சக்தியை இழந்து காணப்படுகின்றன. அதற்கான காரணங்களையும் கண்டடைவதற்கும் இவ்விளக்கவுரை உதவ முடியும்.
அல்லாஹூ அஃலம்!