புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம்

புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம்

ஒருவன் புயலடிக்கும் பெருங்கடலில் தோணி ஓட்டுகிறான். புயல் தோணியைக் கவிழ்க்கப் பார்க்கிறது. தோணி ஓட்டுபவன் அதிலிருந்து மீள பெரும் சாகசத்தில் ஈடுபடுகிறான். அவனுக்கு அந்தச் சாகசம் பிடித்துள்ளது. புயல் எழுப்பும் அலையின் ஆக்ரோசத்தை துடுப்புகளின் லாவகம் கொண்டு சமாளிக்கிறான். புயலின் எதிர்ப்பாராதத் தீவிரத்தாக்குதல்களை, அறிவின் – உடலின் வேகத்தால் எதிர்க்கொள்கிறான். இறுதியில் அந்தப் பெரும் கடலில் , பயங்கரப் புயலில் தோணி கவிழ்கிறது. அதுவரை போராடிய தோணி அங்கு அர்த்தமற்று மூழ்குகிறது. அதற்குப் பின் பெரும் கடல் புயலில் தோணி கவிழ்ந்தது ஒரு ஒற்றை வரி செய்தி. அவனது சாகசத்தை யாரும் வர்ணிக்கப் போவதில்லை. அவன் திறமை கடல் உள்ளவரை கொண்டாடப்பட போவதில்லை. கடலுக்கு முன் அவன் சாகசம் அர்த்தமற்றவை. எளிதில் மறக்கப்பட கூடியவை. அதுதான் அதன் இயல்பு. அதுதான் வாழ்வின் இயல்பும்.

புறநாறூற்றுப் புலவராகிய கோதமனார் சொல்கிறார்.

‘காவு தோறு இழைத்த வெறியர் களத்து
இடம்கெடத் தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே’

‘வெறியாடல்’ என்பதை இங்கே பெரும் விருந்தென அர்த்தம் கொண்டால், ஆடுமாடுகளைக் அவ்விருந்துகளில் வெட்டிச் சமைத்து விருந்து படைப்பது எவ்வளவு நிச்சயமான சம்பவமோ அவ்வளவு நிச்சயம் மனிதனுக்கு மரணம் என்பது.

மரணம் என்பது மாயை அல்ல. அது நிஜம். பிற்காலத்தில் உலகம் மாயை எனப்பட்டது.பிறப்பு, இறப்பு இவை இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வு அனைத்தும் மாயையாகக் கருதப்பட்டன. ஆனால் ஆதித் தமிழர்கள் மாயைக் குறித்து பேசவில்லை. அவர்கள் வாழ்வின் எதார்த்தங்களை ஒப்புக்கொண்டார்கள். பிறப்பும் நிஜம் அதுபோல இறப்பும் நிஜம். இறப்பு நிஜமாகிற போது வாழ்வும் நிஜம். இதற்குச் சான்றாகப் புறநானூற்றுப் பாடல்கள் பல இருக்கின்றன.

‘புயலிலே ஒரு தோணி’யை வாசித்துமுடித்தவுடன் எனக்கு ப.சிங்காரத்தை இந்த மரபில் வைத்தே இணைத்து பார்க்கத் தோன்றியது. இங்கு நான் வாசிப்பு என்றது மூன்றாவது கட்ட வாசிப்பை.

***

முதல் கட்ட வாசிப்பை 2006ல் நிகழ்த்தியதாக ஞாபகம். நாவலின் தொடக்கம் படு சுவாரசியமாக வேகம் எடுக்க சட்டென நாவலின் மையப்பாத்திரமான பாண்டியனின் மனம் மதுரைக்குத் தாவிச்செல்கையில் குழப்பம்; சோர்வு. அதன் பின் எல்லா சிக்கல்களையும் தனியாளாக நின்று சமாளிக்கும் எம்.ஜி.ஆர் படம் போன்ற ஒரு மனநிலையில்தான் பாண்டியனை உள்வாங்கி படித்து முடித்தேன். ஆனால், நாவலை படித்து முடித்துவிட்டேன் என்ற நம்பிக்கையே எழவில்லை. படங்களில் எம்.ஜி.ஆர் தப்பித்துக்கொள்வார் பாண்டியன் செத்துவிட்டான் என எண்ணிக்கொண்டேன். ஆனால், அவ்வப்போது அந்நாவல் குறித்து ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் இலக்கியச் சூழலில் எழ என் வாசிப்பில் ஏதோ ஒரு கோளாறு என அறிய முடிந்தது. நான் நாவலை வாசித்திருக்க வேண்டும் என்பதற்காக வாசித்திருக்கிறேன். அதை அகங்காரம் என்று சொல்லலாம். ‘வாசித்துமுடித்துவிட்டேன்; இதுதான் கதை’ எனச் சொல்ல மட்டுமே அந்த அகங்காரம் எனக்கு உதவியது. ஒரு நாவலை தட்டையாகப் புரிந்துகொள்ள முயலும் வாசிப்பு அது.

இரண்டாவதாக 2010ல் ஜெயமோகனின் வருகைக்குப் பின் வாசித்தது. வல்லினம் விழாவில் நாவல் குறித்த அவரது பேச்சு, வாசிப்பின் நுட்பத்தை உணர்த்தியது. ஜெயமோகனின் வாசிப்பு தொழில்நுட்பமானதல்ல. அவர் பேச்சில் நாவல்கள் குறித்த கதையை சொல்லவில்லை. அதன் மையத்தை விவரிக்கிறார். வாழ்வின் விளக்க முடியாத தன்மையை அந்த மையத்தில் கண்டடைகிறார். அதை தரிசனம் என்கிறார். இந்நாவலின் இறுதியில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை (வரலாற்று அபத்தத்தின் தரிசனம்)வாசிப்புக்கான வேறு சில சாத்தியங்களை வழங்கியது. என் முன்முடிவுகளைக் களைத்துப்போட்டது. குறிப்பாக இந்த நாவல் இரண்டாம் உலகப் போர் குறித்து அல்ல என உறுதி செய்துக்கொண்டேன்; எல்லா சம்பவங்களும் போரின் பின்னணியில் நடக்கும் பதபதைப்பை ஏற்படுத்தினாலும் அதன் நோக்கம் அதைச் சொல்ல வருவதல்ல என புரிந்தது. கூறுமுறை சார்ந்த வாசிப்பு சிக்கலைக் களையவும் ஜெயமோகனின் அக்கட்டுரை உதவியது.

அதே போல இதே காலக்கட்டத்தில் வாசித்த அ.ரெங்கசாமியின் ‘இமையத் தியாகம்’ வேறு வகையில் ப.சிங்காரம் காட்டும் காலத்தை புரிந்துகொள்ள உதவியது. ஜப்பானியப் படை மலாயாவுக்குள் புகுந்து பரவும் காட்சிலிருந்து ‘இமையத்தியாகம்’ தொடங்குவது போல ‘புயலிலே ஒரு தோணி’யிலும் மேடானில் ஜப்பானியர் பரவுவதிலிருந்து ஆரம்பமாகிறது.

ஜப்பானியர் கொடுமைகள், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம், தமிழ் வீரர்களின் தியாகங்கள் என பல்வேறு ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கும் இருந்தாலும் இரண்டுக்கும் மிக முக்கிய அடிப்படை வித்தியாசம் உண்டு. ‘இமையத்தியாகம்’ ஒரு காலக்கட்டத்தின் போர் வரலாற்றை துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. அந்தப் போரில் பங்கு பெற்ற எளிய மனிதர்களுக்கு எவ்வித அடையாளமும் இல்லை. அவர்கள் தியாகங்களுக்கென்றே வரலாறு உருவாக்கிக்கொண்ட கருவிகள். அங்கு லட்சியமே முக்கியம்; மனிதர்களல்ல. அவர்கள் மரணங்களுக்கு பெரும் அர்த்தமும் இல்லை. அவை ஒரு லட்சியத்துக்காக விதைக்கப்பட்டவை. ஆனால், ப.சிங்காரத்தின் கண்கள் லட்சியவாதத்துடன் அலையும் அந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவனை உற்று நோக்குகிறது. அவன் சாகசங்களை நுட்பமாகப் பதிவு செய்கிறது. அவனுக்கு அடையாளங்களை வழங்குகிறது. ஆனால் அவன் முடிவும் மரணம்தான். அதற்கும் பெரிய அர்த்தங்கள் இல்லை.

***

‘புயலிலே ஒரு தோணி’ இவ்வாறு வாசித்து நிறைவு பெற்றிருந்தது என்றாலும் சில கேள்விகள் எழுந்த வண்ணமே இருந்தன. அது பாண்டியன் ஈடுபடும் விவாதங்கள் குறித்தவை.

பாண்டியன் பல்வேறு தருணங்களில் உடனிருப்போரிடம் விவாதங்களில் ஈடுபடுகிறான். எல்லாவற்றிலும் முரண்படுகிறான். அவன் முன்வைக்கும் ஆதாரங்கள் வலுவானவையாக உள்ளன. அவன் சொல்லும் ஆதரங்களை ஆராய வாசகனும் தேடலில் ஈடுபட வேண்டியுள்ளது. அவன் எதையும் யூகத்தில் சொல்லாத பட்சத்தில் சிங்காரம் நேரடியாக நம்மிடம்தான் உரையாடுவதாகத் தோன்றுகின்றது. அது ஓர் அறிவு பூர்வமான உரையாடல். அந்த அறிவுடன் நாம் மோத வேண்டியுள்ளது. விவாதிக்க வேண்டியுள்ளது. உடன்படவும் முரண்படவும் வேண்டியுள்ளது. என் தர்க்கத்தை மெய்ப்பிக்கவும் உன் தர்க்கத்தை நிராகரிக்கவும் வாசிப்பு இன்னும் முதிரவில்லை என கைகளை உயர்த்தி சரணடையவேண்டியிருக்கிறது. புயலிலே ஒரு தோணியை இந்த நோக்கத்துக்கென்றே மூன்றாவது முறையாக வாசித்தேன்.

தமிழகத்தை நேரில் காணாமல் கவிதை வழி கண்ட தில்லைமுத்துவிடம் பாண்டியன் தமிழ் வீரம் குறித்து பேசும் காட்சி முக்கியமானது. வேங்கைமார்பன் எனும் சின்னஞ்சிறிய கிராமத் தலைவனை பாண்டியன் எனும் பெரும் படை கொண்ட மன்னன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது எனக்கேட்கிறான் பாண்டியன். விவாதம் தொடரவே, மாலிக்காபூரின் குதிரைப்படை வெகு தொலைவில் வரும்போதே, ‘வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென் திசையாண்ட தென்னவன்’ ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் தேரியமங்கலம் மலைக்காட்டில் ஒளிந்துகொண்டான் என கிண்டலும் செய்கிறான். கிண்டலில் இறுதியில் “தமிழ் வீரம், தமிழ் நாகரீகம் என்பதெல்லாம் நம் புலவர்களின் தோப்பி மயக்கத்தில் தோன்றிய வெறும் கற்பனையாக இருக்கலாம்” என்கிறான்.

‘தமிழ்ப்பேரவை’ எனும் பாகத்தில் பினாங்கு நாஞ்யாங் தங்கும் விடுதியில் பாண்டியன் மற்றும் அவன் நண்பன் மாணிக்கமும் பிற தமிழ் பெருமை பேசும் நண்பர்களுடன் ஈடுபடும் விவாதம் அங்கதம் மிக்கது. உரையாடல் வடிவில் அமைந்துள்ள பகுதியில் அவர்கள் பேச்சு உலக வரலாற்றில் ஆரம்பித்து, இலக்கியம், ஜாதி என தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் பாண்டியனிடம் மாற்று சிந்தனை உண்டு. அவன் எல்லாருடைய போலி நம்பிக்கைகளை, பெருமிதங்களை உடைக்கிறான்.

உலகின் ஒளி விளக்காய்த் திகழ்ந்த பாபிலோன் போகத்தால் அழிந்ததைக் கூறுகிறான். போகக் கடலில் நீந்திக்கொண்டிருந்த பாபிலோனியர்களின் கோட்டை வாயிலை பாரசீய வேந்தன் படை கொண்டு இடித்த போது தடுக்க வேண்டிய ஆடவர்கள் பொன்மாலையும் பூமாலையும் அணிந்து தெருச்சந்தியில் ஆடிக்கொண்டிருந்ததை கூறி, போகத்தின் விளைவு அழிவு என்கிறான். அதன் தொடர்ச்சியாக ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க நேர்ந்த அவலத்தையும் சொல்கிறான். மாலிக்கபூர் தொடங்கி டூப்ளேயும் கிளைவும் தமிழகத்தை விருப்பம் போல வலம் வந்து சூறையாடியதைச் சொல்கிறான். அது மூதாதையர்களின் போக விளைவாக வர்ணிக்கிறான். தமிழகம் வேரோடு அழியாமல் போனதே வியப்புக்குறியது என சொல்லும்போது அதற்கு தமிழர் நாகரீகப் பெருமையும் பழமையும் காரணம் என அடிகளார் சொல்ல தமிழர் நாகரீகம் தொடர்பான விவாதம் முற்றுகிறது.

பாண்டியன் தமிழர் சிறப்பு குறித்து பேசத் தொடங்குகிறான். பெரிய கோயிலுக்கும் கல்லணைக்கும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஃபேரோ மன்னர்கள் பிரமித் கோபுரங்களைக் கட்டிவிட்டதைக் கூறுகிறான். பாபிலோனியர் எப்போதும் நீர் நிறைந்த – அகன்ற யூபிரத்தீஸ் நதிக்கு அடியில் பதினைந்து அடி அகலமும் பன்னிரண்டு அடி உயரமும் கொண்ட சுரங்கப்பாதை ஒன்றை அமைத்திருந்தார்கள் என்கிறான்.

விவாதம் சட்டென இலக்கியத்துக்குள் நுழைகிறது. மாணிக்கம் தன் பங்குக்கு இலக்கியத்திலும் தமிழர்கள் தனிச்சிறப்பென்று சொல்ல ஒன்றும் இல்லை என்கிறான். திருக்குறளையொத்த பல நீதி நூல்கள் பல்வேறு நாடுகளில் தோன்றி இருக்கின்றன. காப்பியங்களும் அவ்வாறே என்கிறான். பாண்டியன் இன்னும் தீவிரமாக விவாதத்தை முன்வைக்கிறான். எகிப்திய அமைச்சன் ப்தாஹோத்தப் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பை படித்தபோது திருக்குறளைக் கரைத்துக்குடித்தவன் எழுதியது போல உள்ளது எனக்கூறி, அக்கடிதம் திருவள்ளுவருக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் என்கிறான்.

அடிகளாரின் தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது. தமிழின் பழமையான இலக்கியங்கள் நீராலும் நெருப்பாலும் அழிந்ததைச் சொல்கிறார். அந்த இயற்கைக்கே தமிழின் பெருமை தெரியும் என்கிறார். விடுவானா பாண்டியன், எத்தனையோ நாடுகளில் தொன்னூல்களும் மாமாளிகைகளும் அழிந்து போயிருக்கின்றன. அது தமிழகத்துக்கு மட்டுமே உடைய நிகழ்ச்சியல்ல. அதை வைத்து பெருமை பாராட்டுவது மடமை என்கிறான். கூடவே கிரேக்க மகா நாடகாசிரியன் சாஃபக்லீல் (கி.மு 495- 406)எழுதிய நூற்றுக்கும் அதிகமான நாடகங்களில் ஏழு மட்டுமே கிடைத்திருக்கிறது எனக்கூற, அடிகளார் பரிதாபமாக யாரவன்? என்கிறார். பாண்டியன் எள்ளலுடன் ‘அடிகளாருக்குத் தெரிந்திருக்க முடியாது . தெரிந்திருந்தால் அவருடைய இலக்கியப் பார்வை…’ என கிண்டல் செய்கிறான்.

பாண்டியன் பேச்சில் சமரசம் இல்லை. மாணிக்கம்தான் நிலையை சமப்படுத்துகிறான். இரண்டுமே சிங்காரத்தின் இருவேறு மனவெளிப்பாடுகள். “இலக்கியத்திலும் மற்ற சில வகைகளிலும் தமிழன் சாதனை சிறப்பாக இருக்கிறதென்றும் ஆனால், தமிழே சிறந்த மொழி தமிழனே திறனாளி என்பது பிழை . எதற்குமே உண்மையின் அடிப்படை வேண்டும்” என்கிறான் மாணிக்கம்.

இவர்கள் பேச்சு தொடர்ந்து எவ்வாறு தமிழர்களைத் திருத்துவது என தொடர ஜாதி குறித்த பேச்சு வருகிறது. ஜாதியை ஒழித்தால் தமிழன் உயர்வான் என கருத்து நிலவ அதற்கும் பாண்டியன் மாற்றுக்கருத்தை வைக்கிறான். “ஜாதி முறை ஜாதி வெறியாகத் தலை தூக்கியதற்குக் காரணம், பொது மக்களின் பாதுகாப்புக் கூட்டுறவு தேவை. தனியாகச் சென்று கோரினாலும் கூட்டமாகச் சென்று கோரினாலும் ஒரு மாதிரியான நீதியையே எதிர்ப்பார்க்க முடியும் என்ற நிலைமை ஏற்படின் ஜாதி முறையின் பிடிப்பு தளரும் என்கிறான். கூடவே ஜாதிமுறையைத் தாங்குவோர் அதற்காகப் போராடுவது , அதன் தன்மையினால் வரக்கூடிய பணம், பதவி, பட்டம் போன்ற பயனை எண்ணியே. அவற்றை அடைய ஜாதியின் துணை வேண்டாம் என்கிற போது ஜாதிப்பேர் தானாக மரிந்துவிடும்” என்கிறான். பாண்டியன் தனது விவாதத்தில் ஜாதி ஒழிப்பு தேவையே இல்லை என பகிரங்கமாகவே சொல்கிறான். அறிவு வளர்ச்சி காரணமாக தோன்றும் பரந்த மனப்பான்மையின் முன் ஜாதி, சமயம், இனம் போன்றவை அர்த்தமற்றவை என வாதிடுகிறான்.

ப.சிங்காரத்தின் சிந்தனை வியப்பளிக்கக்கூடியது. என் பாட்டி முன்பு சில ஜப்பானிய நோட்டுகளை வைத்திருந்தார். அதை வாழைமர நோட்டுகள் என்றும் சொல்வார்கள். அதில் வாழைமரப்படம் அச்சடிக்கப்பட்டிருக்கும். ஜப்பான் காலத்தில் அதிகம் சிரமப்பட்ட கதையை அவர் சொல்லியுள்ளார். வறுமை பயத்தின் விளைவாக சேமித்தப்பணம். அதை என்றாவது செலவளிக்க பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அவர் பத்திரப்படுத்திய இடம் ரகசியமாக இருந்தது. எனக்கு விவரம் தெரிந்த பின் அதற்கு மதிப்பில்லாத நிலையை விளக்கியவுடன் அவருக்கு பெரும் அதிர்ச்சி. ‘ஜப்பானில் கூடவா ?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். மெத்தைக்கு அடியில் வைத்திருந்த அதை தூர வீசினார். ஒன்றுக்கு மதிப்பில்லாத போது ஒருகாலத்தில் மதிப்புள்ளவை தூர எரியப்படுகின்றன. ஜாதியால் கிடைக்கக்கூடிய பலன்களை நீக்கிவிடுதல் அதன் வேரை பிடுங்குவதற்கான வழி. மிஞ்சி இருக்கும் கிளைகள் சுயமாக காய்ந்து, உதிர்ந்து, அழிந்துவிடும். மற்றபடி ‘ஜாதியை ஒழிப்போம்’ எனும் கூச்சல்களுக்குப் பலம் மிகக்குறைவு.

பாண்டியனின் விவாதங்கள் ராணுவப் பயிற்சியில் சேர்ந்த பின்பும் தொடர்கின்றது. இம்முறை தமிழர் உணவு பழக்கம் குறித்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டில் நம் மூதாதையர்கள் மாட்டுகறி தின்றார்கள் என்கிறான். அதற்கு சங்க இலக்கியத்தில் இருந்து குடவாயில் கீரதனின் பாடலையும் ஆதாரமாக முன்வைக்கிறான். அவன் கூற்றை அப்துல் காதர் என்பவரும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை. தமிழனாவது மாட்டுகறி தின்பதாவது என முகம் சுழிக்கிறார். மாணிக்கமும் விவாதத்தில் இணைந்து, தொண்டியாமூர் சாத்தன் பாடல்படி தமிழர்கள் யானை கறி சாப்பிட்ட மரபை சொல்கிறான். இப்பாடல்கள் அசல் பாடல்கள் எனவும் இடைசெருகல்கள் இல்லை எனவும் உறுதி சொல்பவர்கள் பகடி தொணியில், யானையைத் தின்றவன் வேறென்ன செய்திருப்பான்? என சொல்கிறார்கள்.

பாண்டியனின் இந்த விவாதங்கள் ஒரு சந்தர்ப்பத்தின் தத்துவங்களின் சாயலோடு வெளிப்படுகிறது. அந்த விவாதம் நாவலின் இறுதி பாகத்தில் நடக்கிறது. இந்தோனேசிய கொரிலா படையில் இணையும் அவன் திட்டத்திற்கு நண்பர்கள் தடை சொல்கிறார்கள். இந்தோனேசியர் ஆண்டாலும் டச்சுக்காரர்கள் தங்களுக்கு இழப்பு இல்லை என புரியவைக்க முயல்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அனைத்தும் மாயக்கற்பனை என்கிறார்கள். பாண்டியன் அதற்கு பதில் சொல்கிறான்.

கற்பனையில்லாமல் வாழ்க்கை இல்லை. கொள்கையில்லை. சமுதாயமில்லை என்பவன் அதை விவரிக்கவும் செய்கிறான். கற்பு எனும் கற்பனை இல்லையானால் குடும்ப அமைப்பு இருக்காது என வாதிடுகிறான். உண்மை அறிவின் அடிப்படை வழியை அறுதியிட்டு சொல்ல முடியாது. அவரவர் அறிவு போக்கில் சென்றால் குழப்பமும் அழிவும் கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு. அது அறிவுக்கு வரம்பு. வரம்பில்லா அறிவும் புல்லறிவும் ஒன்றே என்கிறான். இறுதியில் மனதில் சலிப்பு தோன்றியுள்ளதாகவும் கொஞ்ச காலத்துக்கு இடம் மாற வேண்டும் என்கிறான்.

இவ்விடத்தில் பாண்டியனை முழுமையாக அறிய முடிகிறது. அவன் சாகசத்தை விரும்புகிறான். அவனால் செயல்படாமல் இருக்க முடியவில்லை. போரிடுவது ஒரு சவால் என்றால் விவாதிப்பதும் ஒரு சவால். அவன் சவால்களுடனேயே முயங்கிக் கிடக்கிறான். சவால்களை நோக்கி அவன் எப்போதும் எதிர்க்கொண்டே ஓட பார்க்கிறான். அதற்கான எந்தக் கொள்கைகளும் அவனிடம் இல்லை. விருப்பங்களே உள்ளன. பெரும் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள ஒரு சாகச நாயகன் தன்மையை உருவாக்க முயல்கிறான். ஒரு தோணி பெரும் கடல் புயலில் தன்னை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வது போல.

பாண்டியனிடம் எல்லாவற்றிர்க்கும் மாற்றுக்கருத்து உண்டு. தமிழ் மன்னர்கள் வீரம், தமிழின் தொன்மை, தமிழ் இலக்கியத்தின் சிறப்பு, சாதிய மறுப்பு, தமிழர் உணவு மரபு, அறிவின் தேவை என எல்லாவற்றிலும் அவன் சொல்ல ஏதோ ஒன்றை வைத்துள்ளான். ப.சிங்காரமே பாண்டியன் மூலமாக பேசுகிறார் எனத் தோன்றும் கணம் அவரது ஆளுமையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் பா.சிங்காரம்தான் பாண்டியன் என்றும் தோன்றுகிறது.

***

இந்நாவலின் தொடக்கத்திலேயே ந. முருகேசபாண்டியன், ப.சிங்காரத்தைச் சந்தித்த அனுபவம் குறித்து எழுதியுள்ளார். அது தவிர எஸ்.ராமகிருஷ்ணன் ப.சிங்காரத்தின் ஆளுமையை நேரடி பழக்கத்தின் வழி எழுதியுள்ளதையும் வாசித்துள்ளேன்.

தமிழின் தற்கால படைப்புகள் குறித்து அறிந்திராத, இலக்கிய சூழலில் இருந்து முற்றிலும் விலகிய அவரின் தனிமை குறித்து ந.முருகேசபாண்டியன் கேட்கும் கேள்விக்கு “எல்லாரும் ஒரு வகையில் தனிமையில் தான் இருக்கோம்” என்கிறார்.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறியப்படாத பா.சிங்காரம் மதுரை நகரில் தனது பெரும் பகுதி வாழ்வை கழித்து 1997 இல் மரணம் அடைந்துள்ளார். அவர் காலக்கட்டத்து தமிழ் இலக்கியச் சூழலை அறியாமல் இருந்தாலும் ஆங்கில இலக்கியங்களைக் கற்றவராக இருந்திருக்கிறார். முருகேசபாண்டியனிடம் ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களை பினாங்கு நூலகத்தில் வாசித்த அனுபவத்தைக் கூறுகிறார். ஹெமிங்வேயின் ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல் தனக்கு விருப்பமானது எனக்கூறி தல்ஸ்தோயின் ‘அன்னா கரேனினா’ நம்பர் ஒன் என்கிறார். ஆனால் மேல் நாட்டு விமர்சகர்கள் ‘வார் அண்ட் பீஸ்’ சிறந்ததுன்னு சொல்றாங்க எனவும் விளக்கம் தருகிறார். அதேபோல தான் மணிக்கொடி வாசித்த அனுபவத்தின் வழி புதுமைப் பித்தனையும் மௌனியையும் நினைவு கூற்கிறார்.

18 வயதில் (1938) கப்பலேறி மேடானுக்கு வட்டிக்கடையில் வேலை செய்ய வந்துள்ளார். இரண்டு வருடங்களில் இந்தியா திரும்பி மீண்டும் இந்தோனேசியா சென்றுள்ளார். அப்போதுதான் அவர் திருமணம் நடந்திருக்கிறது. மனைவியும் தலைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளையும் இறந்துவிட அதற்குப் பின் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர் மனைவி குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால் தொடர்ந்து தனிமையில் இருந்திருக்கிறார். மீண்டும் 1946 ல் இந்தியா திரும்பியவர் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947ல் ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்திப்பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் தமிழகத்தில் இருந்த காலக்கட்டத்தில்தான் ‘கடலுக்கு அப்பால்’ என்ற நாவலும் (1950) ‘புயலிலே ஒரு தோணி’யும் (1962) எழுதப்பட்டன.

சமீபகாலமாக ப. சிங்காரம் மலேசியர் என்பது போன்ற ஒரு கருத்து நிலவுவதையும் கவனிக்க முடிகின்றது. மலேசிய இலக்கியத்தில் இயங்கி கொண்டிருந்த / கொண்டிருக்கிற பல படைப்பாளிகளை இன்னமும் விமர்சனங்கள் மூலம் முன்னெடுக்க முடியாத சூழலில் சில காலம் இங்கு வாழ்ந்தார் என்பதற்காக அவர் ஆளுமை மலேசிய இலக்கியத்துக்கு உரியது என்பது போன்ற வரலாற்று பிழைகளால் நடக்கப்போவது ஒன்றும் இல்லை. மாறாக, ப.சிங்காரம் மலேசியாவில் இருந்த காலத்தில் அவருடன் தொடர்புடையவர்கள் மூலம் அவர் மங்கலான உருவத்தை மேலும் வர்ணமாக்க முயலலாம்.

***

இந்நாவலை வாசிக்கும் போது அசாதாரண காட்சிகளையும் எளிதாக உள்வாங்க உதவுவது அதன் மொழி. ப.சிங்காரம் நன்கு மலாய் மொழியை அறிந்திருக்க வேண்டும். தேவையான இடங்களில் அதை துல்லியமாகப் பயன்படுத்துகிறார். குறிப்பாக சீனர்கள் ரகரத்தை லகரமாக உச்சரிப்பார்கள். மலாய் மொழி நன்கு தெரிந்த ஒருவனாலேயே அவர்கள் உச்சரிப்பில் உள்ள தவறுகளை அடையாளம் காணமுடியும். நாவலில் சீனர்கள் பேசும் இடங்களில் லகரங்களைத் திணிக்கிறார் . ‘கூலி’க்கு ‘கூரி’ என எழுதி அடிக்குறிப்பில் சீனர்களுக்கு ரகரம் வராது எனவும் விளக்கம் தருகிறார். அதே போல வட்டார வழக்கு சொற்களும் மிக விரிந்தே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதே அளவுக்கு கதை களமும். மேடான், இந்தோனேசியா, மலேசியா, பினாங்கு, மதுரை, தாய்லாந்து என விரிந்த நிலபரப்பில் நாவலை உலவ விட்டிருக்கிறார். அவர் காட்டும் இடங்களிலெல்லாம் போரில் இருள் முற்றும் அகலாமல் ஆங்காங்கு ஒட்டியுள்ளது. யுத்தம் காரணமாக செழிப்பு குன்றாத தென்கிழக்காசிய நகரமாக கருதப்படும் பேங்காக்கிலும் துப்பாக்கி சூடு நடக்கும் காட்சியையே கவிய விட்டுள்ளார். பாண்டியன் சாகசங்களை முழுமையாக்க புது புது வியூகங்களை அமைத்தபடியே இருக்கிறார் சிங்காரம். நாவல் தொடக்கம் முதல் பாண்டியன்தான். மற்றவர்கள் எல்லாம் உபரிகள். யாருக்கும் தெளிவான தோற்றம் இல்லை. வரலாறும் இதில் ஓர் உபரிதான்.

முதல் கட்ட வாசிப்பின் காலக்கட்டத்தில் நான் ஓஷோவைத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். நாவலின் முடிவு எனக்குச் சட்டென ஒரு ஓஷோ சொன்ன கதையை நினைவு படுத்தியது. இன்றெனது வாசிப்புக்குப் பின்பும் அந்தக் கதையே நினைவில் வந்து அமர்கிறது.

ஒரு நதியில் இரு குச்சிகள் விழுகின்றன. ஒன்று குறுக்காகவும் மற்றது நேர்கோட்டிலும் மிதக்கின்றன. நேர்கோட்டில் விழுந்த குச்சி நதிக்கு தான்தான் பாதை காட்டுவதாக ஆனந்தத்தில் நதியுடன் இணைந்து பயணித்தது. குறுக்கே விழுந்த குச்சி தான் நதியின் ஓட்டத்தைத் தடைப்படுத்தப் போவதாகக் கடைசி வரை சாகசங்கள் செய்து பார்த்தது. இறுதியில் இரு குச்சிகளுமே பெரும் பள்ளத்தில் போய் விழுந்தன. நதிக்குக் குச்சிகள் குறித்து ஒன்றுமே தெரியாது. ஓஷோ சொல்ல வருவது வாழ்வின் நிஜத்தை.

ப. சிங்காரம் சொல்ல வருவதும் அதை தான் என நினைக்கிறேன்.

(நன்றி: வல்லினம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp