‘காத்திருக்கிறேன்’.. ‘வந்துவிடுவேன்’ என்பதுதான் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்க் கவிதை யின் மையம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுதியும் இந்தச் சொற்கள் மட்டும் உயிர்ப்புடன் இன்றும் இருக்கின்றன. ‘காத்திருக்கிறேன்’ என்பதற்கும், ‘வந்துவிடுவேன்’ என்பதற்கும் இடையில் இருப்பது, ‘நெஞ்சின் தவிப்பு’. நெஞ்சின் தவிப்பைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்க் கவிதை மட்டுமல்ல, உலகக் கவிதையும் எழுதிக்கொண்டிருக்கிறது.
நெஞ்சின் தவிப்பு, அன்பால் ஏற்படுகிறது. அதுவே, வாழ்க்கையாக இருக்கிறது. எக்காலத்தில், யார், எந்த மொழியில், எந்த தேசத்தில் எழுதினாலென்ன? அன்பை மட்டும்தான் இலக்கியம் பேச முடியும். இலக்கியத்தின் நோக்கமும் அடிப்படையும் அன்பை - நெஞ்சின் தவிப்பை எழுதுவது மட்டுமே. 45 சங்கப் பெண் கவிகளின் நெஞ்சின் தவிப்பு எப்படிப்பட்டது என்று பேசுவதுதான் சக்திஜோதி எழுதிய ‘சங்கப் பெண் கவிதைகள்’ என்ற நூல்.
காதல், காத்திருப்பு, பிரிவு, துயர், காமம், கண்ணீர் என்று சங்கப் பெண் மட்டும் எழுதவில்லை. இக்காலப் பெண்ணும் அதையேதான் எழுதியிருக்கிறாள். சங்கப் பெண்ணின் மொழியும், இக்காலப் பெண்ணின் மொழியும்தான் வேறுபட்டது. வாழ்க்கை ஒன்றுதான். கவிதை ஒன்றுதான். காதலனுக்காக, கணவனுக்காக, மகனுக்காக சங்கப் பெண் மட்டுமல்ல. நவீன, அறிவியல் யுகமான இக்காலத்துப் பெண்ணும் காத்திருக்கிறாள். எக்காலத்திலும், உலகெங்கும் காத்திருப்பது மட்டும்தான் பெண்ணுக்கு வாழ்க்கையாக இருக்கிறது. ‘பெயரற்ற பறவையொன்றின் - மாய இசைக் குரலாய் - ஒருமுறை வர மாட்டாயா?’ என்றும், ‘என் காமம் ததும்பும் - என் யாழிசை உனக்காகக் காத்திருக்க’ என்றும், ‘உன் அண்மையில்தான் - என் வாழ்க்கை இருக்கிறது’ என்றும், ‘நீதான் வேரும் நீரும்’ என்றும், இக்கால தமிழ்ப் பெண் மட்டுமல்ல; ஜப்பானிய இசுமிஷிகிபு என்ற பெண் ‘நம் சந்திப்பினூடே கோயில்மணி சத்தத்தைக் கேட்கிறேன் - இரண்டு மணி சத்தத்துக்கு இடைப்பட்ட நேரத்தில்கூட - உன்னை நான் மறக்க மாட்டேன்’ என்று எழுதியிருக் கிறார். காலம் காலமாக எழுதப்படும் கவிதை - நெஞ்சு விடு தூதுதான். “நோம், என் நெஞ்சே.”
45 சங்கப் பெண் கவிதைக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்பது சக்திஜோதியின் நோக்கம். அதற்காக இக்காலப் பெண்கள் எழுதிய 63 கவிதைகளையும், தமிழ், இந்திய, உலகச் சிறுகதைகள் பதினேழையும், தமிழ், இந்திய, உலக நாவல்கள் பதினெட்டையும், தமிழ், இந்திய, உலக சினிமாக்கள் பத்தொன்பதையும் பயன் படுத்தி, சங்கப் பெண் கவிதைகளுக்குப் புது வெளிச்சம் தந்திருக்கிறார். சங்கப் பெண் கவிதைகளை, நவீன கவிதை, சிறுகதை, நாவல், சினிமாக்களோடும் மட்டுமல்ல. நிஜவாழ்க்கையில் தான் பார்த்த பெண்களின் வாழ்க்கையோடும் ஒப்பிட்டிருக்கிறார் சக்திஜோதி. இந்த ஒப்பீடு தமிழுக்குப் புதிது.
‘தலைக்கடனாக’ இருப்பது யார், தலைக் கடனைச் சுமப்பது யார், பலியாவது யார், ‘பலிசோறு’ படைப்பது யார் என்பதோடு காத்திருத்தலின்போது ஏற்பட்ட கண்ணீரையும், ‘கூடலில் ஊற்றெடுத்த கண்ணீரையும்’ சங்கப் பெண் எழுதியிருக்கிறாள். பெண் அன்பால் மட்டுமல்ல, கண்ணீராலும் நிறைந்தவள். அதனால்தான் அவளுக்குக் கூடலிலும் கண்ணீர் ஊற்றெடுக்கிறது. காதலின் நோக்கம் காதலை அடைவதல்ல, காத்திருப்பது என்று சொல்கிற சக்திஜோதி, தன்னுடைய வாதத்தை மெய்ப்பிக்க சங்கப் பெண் கவிதைகளில், நவீன பெண் கவிதைகளில், சிறுகதைகளில், நாவல்களில், சினிமாக்களில் இருக்கக்கூடிய ஆதாரங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்து சங்கப் பெண் கவிதையில் என்ன உள்ளதோ அதுவே உலகெங்கும் இன்றுவரை உள்ளது என்று காட்டுகிறார். கொன்றை மரமும் பனைமரமும் இன்றும் இருக்கிறது. அன்று பனைமரத்தில் சாய்ந்து காத்திருந்த சங்கப் பெண் இன்று கல்மரம். சங்கப் பெண் கவிதைகளை இன்றைய சமூக நிகழ்வுகளான குஜராத் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மட்டுமல்ல, சங்க கால இலக்கியங்களில் காதல் தோல்வியினால் தற்கொலைகள் நடந்ததாகக் குறிப்புகள் இல்லை என்று சொல்வதன் வழியாகவும், இன்றைய ஆணவக் கொலைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறார். எது மேம்பட்ட சமூகம்?
உலகெங்கும் சந்நியாசம் போகிறவர்கள் ஆண் களாகவே இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். சந்நியாசம் போனவர்கள் எல்லாம் ஞானம் அடைந்துவிட்டார்களா என்று கேள்வி கேட்கிற சக்திஜோதி, ஞானம் குறித்து ‘ஆணுக்கு ஞானம் என்பது வீட்டைத் துறப்பது, பெண்ணுக்கு ஞானம் என்பது உலக வாழ்வோடு இணைந்த உறவு களாலானது’ என்றும், ‘பெண் பொறுப்புகளை உவந்து ஏற்கிறாள். ஆண் பொறுப்புகளை ஏற்க மறுக்கிறான். அதனால், சந்நியாசியாகிறான்’ என்றும் அளித்திருக் கிற விளக்கம் முக்கியமானது. அதோடு, ‘ஞானம் என்பது வீட்டைத் துறப்பதல்ல, தன்னுடன் இருப்பவர் களுக்காகத் தன்னிடம் இருப்பதை, தன்னைத் துறப்பது’ என்று புது விளக்கம் ஒன்றையும் அளிக் கிறார். பெண்களின் துறவு என்பது, தூக்கத்தை, உணவை, விளையாட்டை, உடையை, கல்வியைத் துறப்பதாக இருக்கிறது. வீட்டை, கணவனை, குழந்தை யைத் துறப்பதாக இல்லை.
ஆண் போருக்குப் போனாலும், பொருள் தேடப் போனாலும், சந்நியாசம் போனாலும் பெண் காத்திருக்கிறாள். ஒரு குழந்தை பசியில் அழுகிறதா, தூக்கத்துக்காக அழுகிறதா, நோயினால் அழுகிறதா என்பதை ஆண் ஒருபோதும் அறிவதில்லை. ஆண் ஒருபோதும் நிறுவனமாக முடியாது. பெண்தான் வீடு. நிறுவனம். பெண் எப்போதும் தாயாகவே இருக்கிறாள். தாய்மை உணர்வற்ற ஒரு கணம்கூடப் பெண்ணுக்கு வாய்ப்பதில்லை என்பதை சங்கப் பெண் கவிதைகளின் வழியாக நிறுவிக்காட்டுகிறார் சக்திஜோதி.
ஒரு பெண் குழந்தையின் உடல் வளர்ச்சி குறித்து தாயின் கவலைக்கும், மனவோட்டத்துக்கும், தந்தை யின் கவலைக்கும், மனவோட்டத்துக்குமான வேறுபாடு என்ன என்பதை நிஜமாகவே நுணுகி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். சங்கப் பெண் கவிதைகளில், நவீன பெண் கவிதைகளில், சிறுகதை, நாவல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். எந்த இடத்திலும் உரிமை கோரல், இரக்கத் தைக் கோரல் என்ற தொனியில் ஒரு சொல் எந்தக் கட்டுரையிலும் இடம்பெறவில்லை. சார்பற்ற எழுத்து தான் அவருடைய வலிமை. மனித வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது ‘உறவுகள்’தான் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர் என்பதைத்தான் எல்லா கட்டுரைகளும் மெய்ப்பிக்கின்றன.
‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்’. ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்டிருக்கிறாள்’. ‘ஒருவரின் நினைவு என்பது அவர் சொன்ன சொற்களாகவே இருக்கின்றன.’ பத்திக்குப் பத்தி இதுபோன்ற வாக்கியங்கள் வருவதால் கட்டுரைகளைப் படிக்கிற உணர்வு எழாமல், சிறுகதைகளைப் படிக்கிற உணர்வே மேலெழுகிறது.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சங்கப் பெண் கவிகள் பற்றி கொடுக்கப்பட்டிருக்கிற தகவல்களுக்காகவே இந்நூல் கவனம்கொள்ளப்பட வேண்டும். கட்டுரைகளின் மூலமாக சங்கப் பெண் கவிதை களுக்கு நூலாசிரியர் விளக்கம் தரவில்லை. உரை எழுதவில்லை. சங்கப் பெண் கவிதையை மட்டுமல்ல, மற்ற கவிதைகளையும், பிற இலக்கியங்களையும் எப்படிப் படிக்க வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறார். கவிதையை, இலக்கியத்தை அணுகுவதற்கான கருவிகளைத் தந்திருக்கிறார். வலிமை உள்ளது எஞ்சும். சங்கப் பெண் கவிதைகள் - நூலுக்கு வலிமை இருக்கிறது.
(நன்றி: தி இந்து)