பெரும் அணைக்கட்டுகளும், தொழிற்சாலைகளுமே நவீன இந்தியாவின் கோவில்கள் என்று பிரகடனப்படுத்தினார் நேரு. நவீன காலத்திற்கு முந்தைய இந்தியாவிலும் தமிழகத்திலும், பொருளியல் மற்றும் சமூகவியல் தளங்களில் கோவில்கள் செலுத்திவந்த செல்வாக்கினை அறிந்தோர் அணைக்கட்டுகளும் தொழிற்சாலைகளும் உருவாக்க இருந்த பாதிப்பின் ஆழத்தை உணர்ந்திருக்க முடியும். நேருவினது கூற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் உணர்ந்திருக்க முடியும். இரண்டு தாக்கங்களுமே முற்றிலும் நேர்மறையானவை என்றும் சொல்ல முடியாது. எதிர்மறை அம்சங்களும் அதிகம் என்று நாம் உணரும்போது நேருவின் கூற்றின் அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
1950களில் தொடங்கி தமிழகத்தில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் பெருகின. கூடவே பெரும்தொழிற்சாலைகளும் வந்தன. தமிழகம் இந்தியாவின் அதிக அளவில் தொழிற்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் ஒன்றாக மாறியது. பொருளாதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றமும் நிச்சயம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் திரும்பிப் பார்க்கும்போது அதற்காக கொடுத்த விலை மிக அதிகமோ என்ற ஐயம் தோன்றாமலில்லை. இந்த நவீன கோவில்கள் நம் சமூகத்தின் மீது செலுத்திய பாதிப்பும் அவை நம்மைக் கொண்டு வந்திருக்கும் இடமும் இன்று பரிசீலனைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தப் பரிசீலனை இலக்கியம் மூலம் நிகழும்போது அதற்கு ஒரு தனி மதிப்பு உண்டாகிறது.
இந்த அணைக்கட்டுகளும் தொழிற்சாலைகளும் மக்கள் வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் குறித்த இலக்கிய படைப்புகள் என்றால் தமிழில் மிகச் சிலவே இருக்கும் என்று தோன்றுகிறது. ஆர்..சண்முகசுந்தரத்தின் தனிவழி, மில்கள் கோவையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழ்ந்த எளிய மக்களின் வாழ்வில் பெருமுதலீட்டில் உருவான முன்னேற்றமும் தொழில்நுட்ப மாற்றமும் ஏற்படுத்திய தாக்கத்தைப் பேசின. அதற்குப் பின் விட்டல் ராவின் போக்கிடம், மற்றும் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆகியவற்றைச் சொல்லலாம். கள்ளிக்காட்டு இதிகாசம், நவீன இலக்கியக் கூறுகளைவிட, உணர்ச்சி மிகுந்த, மிகை உணர்ச்சிக் கதை என்பதே சரியாக இருக்கும். போக்கிடம், அச்சு அசலான நவீனத்துவ, இயல்புவாத நாவல். தமிழில் அந்த வகைகளில் வந்தவற்றுள் முக்கியமான ஒன்றும் கூட.
தனிவழி, மற்றும் போக்கிடம், இரண்டும் கூட அணைக்கட்டு மற்றும் தொழிற்சாலை அமைப்பதனால் மக்கள் வெளியேற்றம் என்ற தருணத்தையும் அந்த அம்சத்தையும் மட்டுமே பேசின என்று சொல்ல வேண்டும். இவ்விரண்டும் ஒரு நீடித்தகால ஓட்டத்தில், மக்களின் வாழ்வு, வாழிடச் சூழல் போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களை முழுமையாகப் பேசும் ஒரு படைப்பு என்றால் அது இப்போது வந்திருக்கும் இரா. முருகவேளின் முகிலினி நாவல்தான் .
1949ல் துவங்கி தற்காலத்தில் முடியும் இந்த நாவல், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் பவானி சாகர் அணை மற்றும் சவுத் இந்தியா விஸ்கோஸ் ஆலை (நாவலில், டெக்கான் ரேயான்) உண்டாக்கிய மாற்றங்களை, முதன்மையாக மூன்று குடும்பங்களை முன்வைத்து அவர்களது வாழ்வினைத் தொடர்ந்து சென்று விவரிக்கிறது. ஆலை நிறுவனர் கஸ்தூரிசாமி, அவரோடு ராணுவத்தில் பணியாற்றி, பின்பு அவரது ஆலையிலேயே பணி செய்யும் ராஜு மற்றும் ராஜுவின் நெருங்கிய நண்பனான ஆரான் ஆகிய மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே தமிழகத்தின் முக்கியமான வகைமாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் முருகவேள். மாறிவரும் காலத்தைச் சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட, தேசிய முதலாளியாகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈர்க்கப்பட்டு தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரனான இடது சாரி பார்வை கொண்ட ஆரான் ஆகிய பாத்திரப் படைப்புகள் சிறப்பானவை. இந்த மூன்று இயக்கங்களும் தமிழகத்தின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் இந்தப் பாத்திரப்படைப்புகள் மிகப் பொருத்தமானவை. இதையே இந்நாவலின் முதல் வெற்றி எனச் சொல்லலாம்.
இம்மாதிரியான அண்மைக்கால வரலாற்று சம்பவங்களை புனைவாக்குவதில் உள்ள பெரிய சவால் அது ஒரு ஆவண அறிக்கையாகிவிடாமல் தவிர்ப்பதிலேயே உண்டு. இதில் முருகவேள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளார் எனறே சொல்ல வேண்டும். நாவலின் துவக்கத்தில் ராஜுவுக்கும், கஸ்தூரி சாமிக்கும் இடையே உள்ள பரஸ்பர மரியாதை கலந்த ஆனால் முதலாளி- தொழிலாளி எனும் கோட்டைத் தாண்டாத தோழமை. கஸ்தூரி சாமி அவரது மனைவி சௌதாமினி இடையே இருக்கும் பிரியமும் மதிப்பும், ராஜுவுக்கும் ஆரானுக்கும் இடையே உள்ள உறவு, அவர்களின் ஊர்ப்பாசமும் நொய்யல் ஆறின் மீதான பாசமும் சித்தரிக்கப்பட்ட விதங்கள் எல்லாம் இதற்கு பெரிதும் துணையாகின்றன. அதே போல ஒரு ஆலை அமைக்கப்படுவதன் தொழில்நுட்ப மற்றும் வணிக அடிப்படைகள், சிக்கல்கள் போன்றவை எல்லாமே மிகவும் சரளமாகவும் நம்பகத் தன்மையோடும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அமைக்கப்படும் பகுதிக்கு துவக்கத்தில் பெரும் வரமாக தோன்றும் அந்த ஆலையால் காலம் செல்லச் செல்ல ஆறு மாசடைவதையும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவும் , அதுவரை இருந்த விவசாய முறைகள் மெல்ல மெல்ல மாறி ஒரு கட்டத்தில் மாசடைந்த ஆறால் விவசாயமே செய்ய முடியாமல் போய்விடும் நிலைமை வருவதை படிப்படியாகவும் தவிர்க்க இயலாமலும் ஏற்படும் நிகழ்வுகள் மெல்லப் பரவி வரும் ஒரு பயங்கரத்தின் விளைவுகள் போல் தோன்றும் ஒரு சித்திரம் துல்லியமாக படம் பிடித்தது போல காட்டப்படுகிறது. அதே போல, ஆற்றையும் அதன் சுற்றுப்புரத்தையும் மாசுபடுத்தி வாழ்வாதாரங்களைப் பறிக்கும் ஆலையும், மெல்ல மெல்ல மாறி வரும் தொழில் நுட்பங்களிலினாலும் போட்டிகளாலும் மாறும் அரசின் கொள்கைகளினாலும் உலகமயமாக்கலின் விளைவுகளினாலும் முடங்கிப்போவதும் கூடவே ஒரு இணைச் சித்திரமாவும் குறியீடாகவும் வருகிறது.
இதைச்சொல்லும்போது ஒரு பெரும்துயரத்தின் கதையாகவே நாவல் உள்ளதோ என்றென்ன வேண்டாம். நிச்சயமாக ஒரு ஆலை தொழிலாளர்களிடையேயும், பொதுச் சமூகத்திலும், உண்டாக்கும் பொருளாதர வளர்ச்சி, அதன் பயனாக வரும் கல்வி மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகியவற்றையும் காட்டத் தவறுவதில்லை. ஒரு கட்டத்தில் ஆலை தொடர்ந்து செயல்படுவதை எதிர்க்க போராடும் பிரதிநிதிகளிடம் ஒரு மூத்த இடதுசாரி தொழிற்சங்கத் தோழர் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் மூலமாக வரும் மக்களின் விழிப்புணர்வுக்கும் அந்த ஆலை பங்காற்றியதை நினைவுபடுத்தி இப்போது எடுக்கும் புதிய முடிவின் விவேகத்தை கேள்விக்குள்ளாக்குவதும் அவரின் மனப் போராட்டமும் இந்த நாவலின் முக்கிய இடங்களில் ஒன்று.
இந்த நிகழ்வுகள் தவிர்க்க இயலாமல் மக்களின் வாழ்வாதாரங்கள், வழிகள் குறித்த ஒரு மாற்றுச் சிந்தனையை தோற்றுவிப்பதையும் இயற்கை வேளாண்மையின்பால் ஏற்படும் விழிப்புணர்வும் அது பரவுவதும் நாவலில் காட்டப்படுகிறது. நாவலின் இந்த கட்டத்தில் நாம் பார்த்த பாத்திரங்களின் மூன்றாவது தலைமுறை – ராஜுவின் பேரன் வழக்குரைஞர் கௌதம், கஸ்தூரிசாமியின் பேரன், ராஜ் குமார் ஆகியோர் முதன்மை பெறுகிறார்கள். இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டு அதில் தன் நண்பர்களோடு ஈடுபடும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய திருநாவுக்கரசு பாத்திரம் இங்கே மிக முக்கியமானது. அதே போல, அணைக்கட்டினிடம் தம் நிலங்களைப் பறி கொடுத்திருந்தாலும் அதிலேயே தொடர்ந்து மதியூகத்துடன் விவசாயத்திலும், மீன் பிடித்தலிலும், ஈடுபட்டு போராடும் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளும் மக்களின் பிரதிநிதியாக வரும் சந்துருவும் ஒரு நல்ல பாத்திரம். எந்த ஒரு புதிய முயற்சியிலும், போலிகளும், ஏமாற்றுக்காரர்களும், தமக்கே உரிய இடங்களை உருவாக்கிக்கொண்டு விடுவார்கள் என்பதை காட்டும் சில பாத்திரங்களும் கார்ப்பரேட் குருமார்களை நினைவுபடுத்தும் ஒரு பாத்திரமும் கூட உண்மை நிகழ்வுகளை ஒட்டிய நல்ல கற்பனைகள். எவ்வளவுதான் அறிவியல்ரீதியான விஷயங்களானாலும் அவையும் மக்களிடையே ஒரு மூட நம்பிக்கை போலவே பரவுவதை மெலிதான ஒரு நகைச்சுவையோடு சொல்ல முடிந்திருக்கிறது ஆசிரியருக்கு.
மூடப்பட்ட ஆலையின் விலையுயர்ந்த இயந்திரங்களைத் திருடி விற்பது அந்தப் பகுதியின் மக்களுக்கு ஒரு முக்கியமான வாழ்வாதாரமாகி வருவதையும் அதில் ஒரு போலிஸ், அரசியல்வாதி, கிரிமினல் கூட்டணி உருவாவதையும் நாவலின் கடைசிப்பகுதி விறுவிறுப்பாக விவரிக்கிறது. இந்தச் சம்பவங்கள் ஒரு துப்பறியும் கதைக்குரிய வேகம் கொள்கின்றன. முருகவேளின் மிளிர்கல்லையும் படித்தவர்களுக்கு அவருக்கு இந்த ஜானரில் ஒரு நல்ல ஈடுபாடு உண்டோ என்றே நினைக்கத் தூண்டுகிறது. ஒரு விறுவிறுப்பான சேஸ் கூட உண்டு. ஒரு முழு நீள துப்பறியும் கதை ஒன்றைக் கூட அவர் முயலலாம்.
அந்தத் திருட்டுகளில் ஈடுபட்டு ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொ ள்ளும் கௌதமின் நண்பன் சந்துருவைக் காப்பாற்ற கௌதம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், கோர்ட்டில் நடைபெறும் விவாதங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நீதிமன்ற காட்சிகளுக்கு இருந்த செல்வாக்கை நினைவுபடுத்தும் இடங்கள் இவை. ஆனால் தமிழ் நாவல்களில் நீதிமன்ற காட்சிகள் விவாதங்கள் அவ்வளவு இடம்பெறவில்லையோ? சுஜாதாவின் சில கணேஷ் வசந்த் கதைகள், மற்றும் டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு ஆகியவற்றில்தான் நீதிமன்றக் காட்சிகளைக் கடைசியாகப் படித்தது. அதற்கும் முன்னால் என்றால் தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதனில் நல்ல விவரிப்புகள் உண்டு. முகிலினியில் வரும் நீதிமன்ற கா ட்சிகள் அதன் ஆசிரியர், வழக்குரைஞர் என்பதால் நன்றாகவே வந்துள்ளன.
இது போன்ற இயல்புவாத நாவல்களில் கவித்துவமோ மனவெழுச்சிக் கொள்வதற்கான இடங்களோ வருவதற்கான இடங்களும் சாத்தியங்களும் குறைவாகவே உண்டு. இதிலும் அப்படியே. ஆனாலும், கோவையின் தென்மேற்குப் பருவகால நிலையின் அசலான சித்தரிப்புகள், பவானி ஆற்றங்கரையில் ராஜு தம் குடும்பத்தாருடன் செலவழிக்கும் காட்சிகள், நாவலின் இறுதியில் கௌதம் தன எதிர்காலத்தின் வழியை தீர்மானிக்கும் அந்த இடத்தில், பொழியும் மழையினூடாக அவன் கால்களை நனைக்க பெருகி வரும் பவானியின் காட்சி என்று அழகான காட்சிகளும் உண்டு. முக்கியமாக, பவானி ஆற்றை முகில்களிருந்து நேராக இறங்குபவள் , என்று அர்த்தம் கொள்ள வைக்கும் முகிலினி என்ற தலைப்பே கவித்துவமானது..
நாவல் எந்த ஒரு தரப்பையும் அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்குவதில்லை. ஒவ்வொரு தரப்பும், அவரவர்கள் கோணத்தில் செயல் புரியும்போது, பொது நன்மை என்பதும் தீமை என்பதும் இயல்பாகவே உருவாவதைத்தான் காட்டுகிறது. ஆனால், மூன்று தலைமுறை பாத்திரங்களில், அந்த இரண்டாம் தலைமுறை பாத்திரங்கள், ராஜூவின் மகள், கஸ்தூரி சாமியின் மகன், ஆரானின் பிள்ளைகள் ஆகியோர் தங்கள் தந்தையரின் இலட்சியங்கள் ஏதுமற்ற சாதாரண நடைமுறைவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதில் சுதந்திரத்துக்குப் பின் பிறந்த ஒரு தலைமுறையின் மீதான ஒரு நுட்பமான விமரிசனம்.வைக்கப்படுகிறதோ என்று ஒரு எண்ணம் எழாமலில்லை.
பெருமளவு தொய்வில்லாமலேயே எழுதப்பட்டிருக்கும் நாவலில் டெக்கான் ரேயான் நிறுவனம் உள்நாட்டு முதலாளிகளிடமிருந்து பன்னாட்டு முதலாளிகளிடம் கைமாறும் அந்த நிகழ்வுகள் புனைவின் சுவாரசியமின்றி ஒரு ஆவண அறிக்கை போல அமைந்துவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. மேலும் நாவலில் வலுவில்லாமல் அமைந்துவிடும் குழப்பமான இடங்களும் உண்டு. குறிப்பாக, கௌதமின் கல்லூரி காலங்கள் , அவனது அக்கா படித்து முடித்து தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்குச் சேர்வது போன்ற இடங்ளில் எல்லாம் காலகட்டத்தில் தெளிவு இல்லாமல் உள்ளது. அதேபோல கௌதம் நண்பர்களுடன் கஞ்சா அடிக்கும் காட்சிகள், திருமணமான ஒரு நர்சுடனான அவனது உறவு போன்றவை நாவலோடு ஒட்டவேயில்லை என்பதோடு, அந்தச் சம்பவங்கள் எல்லாம் நாவலுக்கு ஏன் தேவை என்றும் தெரியவில்லை. கௌதமின் தாய் மணிமேகலையின் கல்வி பற்றி எழுதுவதிலும் ஒரு குழப்பம், 217ம் பக்கத்தில், வேதியியல் என்றும் 219ம் பக்கத்தில் பொருளியல் என்றும் வந்திருப்பது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
.அந்த முதல் தலைமுறை பாத்திரங்களில் திராவிட இயக்கத்தின் பால் பற்று கொண்ட ராஜூ இன்னமும் கூட வளர்ந்து வந்திருக்கலாம். அவரது இளமையின் இலட்சியங்கள், அவரது பார்வைகள் முதுமையில் என்னவாயின என்பது மிக பலகீனமாகவே சொல்லப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. துவக்கத்தில் இருந்த தனித்துவம் மறைந்து ஒரு வகைமாதிரியாகவே நின்றுவிடுகிறது. அதே போல் சில இடங்களில், நிகழும் காலத்துக்கு முன்னே ஓடுகிறது ஆசிரியர் விவரணைகள். கஸ்தூரி சாமி, காமராஜரை சந்தித்து ஆலை குறித்து விவாதிப்பது, 1954-55 என்று தெரிகிறது. ஆனால் அதனை ஒட்டி எழுதும்போது அருவங்காடு, ஆலை, பெல் நிறுவனம், ஆவடி தொழிற் பேட்டை ஆகியவற்றை குறிப்பிடுவது பிழையானது.. இவையெல்லாம் 64-65 காலகட்டத்தில் உருவானவை.
ஆனால், பொதுவாக முருகவேளின் இதுவரை வெளிவந்துள்ள இரண்டு நாவல்களுக்கும் பொதுவான ஒரு அம்சம், தனித்தனித் திரியாக எழுதப்பட்டு வரும் நிகழ்வுகள் கடைசியில் ஒன்று சேர்ந்து ஒரு முழுமையை அடைவது. இந்த இடத்தில் The Whole is Greater than the sum of its parts என்பது போல, தனித் தனியான திரிகள் தரும் வாசிப்பனுபவத்தை விட, அவை இறுதியில் ஒன்று சேரும் இடங்கள் ஒரு அலாதியான நிறைவைத் தருகின்றன. மிளிர்கல்லில் கதையின் நாயகி, தன் பயண்ங்களின் ஊடாக வாழ்வின் இலக்கைக் கண்டு கொள்வது போலவே இங்கும், கௌதம், தன் பலவேறு நண்பர்களின் லட்சியப் பயணத்தின் ஊடாகத் தன் வாழ்க்கைப் பயணத்தின் திசையையும் உணரும் அந்த உச்சகட்ட இடம், நாவலுக்கு சட்டென்று ஒரு முழுமையை அளித்து விடுகிறது. இதுவே அவர் கலையின் வெற்றி.,
நாவலில் ஏனோ பெண் பாத்திரங்கள் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை, வளர்ந்து வரவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. கஸ்தூரி சாமியின் மனைவி சௌதாமினி ஓரளவு வலுவான பாத்திரம். கணவரின் இலட்சியங்களைப் புரிந்து கொண்டு, அவருக்கு ஆலோசனையும் சொல்லக் கூடிய மதிநுட்பத்தோடு படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற பெண் பாத்திரங்களான, ராஜுவின் மனைவி மரகதம், பெண் மணிமேகலை, ஆரானின் மனைவி, கௌதமின் காதலி வர்ஷினி, எல்லாருமே வெறும் உலகாயத நடைமுறைவாத பாத்திரங்களாகத்தான் வந்திருக்கின்றன. குறிப்பாக இந்த யுகத்தின் பெண்ணான வர்ஷினி ஏன் கௌதமுக்கு இணையான ஒரு முற்போக்கான இன்றைய உலகின் பிரச்னைகள் குறித்து சிந்திக்கின்ற ஒரு பாத்திரமாகக் காட்டப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. சொல்லப்போனால், இந்த யுகத்தின் நுகர்விய கலாச்சாரத்தின் ஒரு பிரதிநிதி போலவே அந்தப் பாத்திரம் படைக்கப்பட்டிருகிறது. அதை ஒரு குறை என்று சொல்லலாமா அல்லது யதார்த்தம் என்று சொல்லலாமா?
(நன்றி: சொல்வனம்)