தத்துவ நிலை, கவித்துவ நிலை ஆகியவை ஒருபுறம். அன்றாட வாழ்க்கைப்பாடு, அதன் சிறுசிறு தருணங்கள் இன்னொரு புறம். முதல் வகையில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் அதே தளத்தில் நின்று எழுதிக்கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்க்கை சார்ந்த சித்தரிப்புகள் அந்தத் தளத்தில் விரிவாக இடம்பெறாது. அப்படியே இடம்பெற்றாலும் தத்துவச் சாயை பூசப்பட்டு, கவித்துவப் பிரயோகங்களுடன் இருக்கும். இதற்கு தமிழில் சிறந்த எடுத்துக்காட்டு மௌனி. கட்டை வண்டி, நாய்க்குரைப்பு, திறந்து கிடக்கும் வீடு, மழைக்கு ஒதுங்குதல் எல்லாம் அவருக்கு வேறு ஏதோ சொல்வன. இதற்கு நேரெதிர் அன்றாடச் சித்தரிப்புக் கலைஞர் அசோகமித்திரன். ஆனால், இந்த இரண்டு வகைக்கும் நடுவே நிற்பவர் லா.ச.ராமாமிர்தம். அன்றாட வாழ்க்கையின் ஓட்டமும் ஆன்மிக, தத்துவ, கவித்துவ வீச்சும் ஒன்றுக்கொன்று குறையாமல் பின்னிக்கொண்டு ஓடும். தத்துவத்துக்காகவும் கவித்துவத்துக்காகவும் அன்றாட வாழ்க்கையை இவர் ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. இப்படி அருகருகே இரண்டும் இருப்பதால் நமக்கு ரசக்குறைவோ அசௌகரியமோ ஏற்படுவதில்லை. மாறாக, வியப்புதான் தோன்றும். ஏனெனில் அன்றாடத்தை உச்சாடனம் செய்து செய்து தத்துவமாகவும் கவிதையாகவும் ஆக்குபவர் அவர்.
‘புத்ர’ நாவல் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவலின் முன்னுரையில் லா.ச.ரா.வே குறிப்பிட்டிருப்பதுபோல் அவர் ஒரு ஐதிகவாதிதான். ‘புத்ர’ நாவலும் ஐதிகத்தைப் பேசினாலும் நாவலில் கதை சொல்லும் முறை அசரவைக்கும் அளவு நவீனமாய் இருக்கிறது. ஒரு கோட்டில் செல்வதில்லை கதை, முன்பின் மாறிமாறிச் செல்கிறது. வெவ்வேறு கோணங்களில் போய் கதை உட்கார்ந்துகொள்கிறது. “அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது! பிறந்தாலும் தக்காது!” என்ற ஒரு தாயின் சாபம் எங்கெல்லாம் விரிகிறது. கருவில் இருக்கும்போதே சாபத்தைத் தாங்கிக்கொண்டு பிறக்க யத்தனிக்கும் குழந்தை தனது ‘நான்’ குறித்துப் பேசுகிறது. சாபமிட்டவளின் அன்றாட வாழ்க்கையையும் நாவல் பின்தொடர்கிறது. இளம் வயதில் இறந்துபோன, பாட்டியின் மாமனாரின் தகப்பனாரைப் பின்தொடர்கிறது. பாட்டி வீட்டில் ஆடு மாடு மேய்ப்பவரைக் கொஞ்சம், அவரது சினையாட்டைக் கொஞ்சம் என்று கதை செல்லும் போக்கு நம்மைத் திகைக்க வைக்கிறது. ஆனால், நாவலில் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பருந்துபோலப் பறந்துகொண்டிருக்கிறது ஒரு சாபம். சாபத்தின் விளைவுகள் மட்டுமல்ல, சாபமிடுவதும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது.
திட்டவட்டமாகவோ கட்டுக்கோப்பாகவோ இல்லாத நாவல் இது. ஆனால், வாசிப்பின்பத்தை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும், லா.ச.ரா. நடைமீது மயக்கம் கொண்டவர்களுக்கும் நாவலின் அமைப்பு சார்ந்த குறைகள் ஏதும் தொந்தரவு செய்யாது. நாவலின் பல இடங்கள் கவிதையாகவே செல்கின்றன. பாட்டியைப் பாம்பு கடித்துவிடுகிறது. கடித்தது பாம்பா, அல்லது முள் குத்தியதுதான் அப்படித் தோன்றுகிறதா என்றும் தெளிவாகத் தெரியவில்லை. விளக்கை ஏற்றுகிறாள் பாட்டி. அதற்குப் பிறகு வரும் பகுதி பாரதியின் வசன கவிதைகளை நினைவூட்டுவது:
‘சுடர் நிலைத்து நீலமானது.
நீலத்துக்கும் பச்சைக்கும் வித்தியாசம் சுருக்கத் தெரிவதில்லை. காண்பது சுடரின் நீலமா? விஷத்தின் பச்சையா?
விஷம் பச்சையா? நீலமா?...
விஷம் இவ்வளவு குளுமையாய் இருக்குமா என்ன?
இவ்வளவு சுகமா?
…
தன்வியப்பே நீல மீனாய்த் தன்னின்று சுழன்று,
தான் காணும் கடலில் குதித்து துள்ளித் துளைவது கண்டாள்.
என்னுள் இவ்வளவு பெரிய கடலா?’
சாபத்தைச் சுமந்துகொண்டு பிறக்கவிருக்கும் குழந்தை சொல்கிறது:
‘சப்தத்தின் சத்தியத்தில்
நா நறுக்கிய வடிவில்,
ஸர்வத்தின் நிரூபத்தினின்று
வாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில்,
அதுவே என் உயிர்ப்பாய்,
அதன் கதியே என் ப்ரக்ஞையாய்,
நான்
பிதுங்கினேன்’
கூடல் வேளையில் இருவர் ஒருவராய் ஆகத் துடிக்கும் தருணத்தின் தவிப்புகளை லா.ச.ரா இப்படி எழுதுகிறார்:
‘மூச்சோடு மூச்சு கோர்த்து வாங்கும் மூச்சிரைப்பில் யார் மூச்சு யாருடையது.’
‘வெள்ளி மணிகளின் கிண்கிணி
மலரின் செங்குஹை
ஈரத்திரியில் நீலச்சுடர்ப் பொறி
மீனின் அடிவயிற்றின் ஒளிமருட்சி
எண்ணாயிரம் நட்சத்திரச் சொரி’
என்ற வரிகளை மட்டும் நவீன கவிதை வாசகரிடம் கொடுத்து ‘இது யார் எழுதியது?’ என்று கேட்டால் ‘பிரமிள்தானே?’ என்று அவர் திருப்பிக் கேட்கக்கூடும். ‘இன்று/ என்பது/ நானே தான்’’ என்ற வரிகளைக்
காட்டிக் கேட்டால் ‘நகுலனா?’ என்று கேட்கக்கூடும். அந்த அளவுக்குக் கவிதை எழுதாத பெருங்கவிஞர் லா.ச.ரா. அவருடைய உரைநடைக்கு வசனம், கவிதை என்று தனித்தனியே பிரித்துப் பார்க்கத் தெரியாது. லா.ச.ரா.வின் வாசகர்கள் அவரைக் கொண்டாடுவதற்கு முக்கியமான காரணம் இது. அந்தக் கொண்டாட்டம் முழுமையாகக் கூடியிருக்கும் நாவல் ‘புத்ர’.
(நன்றி: தி இந்து)