‘பர்ஸா’ (முகத்தைத் திறந்து வைத்தல் - ‘பர்தா’வின் எதிர்ப்பதம்) என்னும் இந்த நூல் நாவல் வகைமைக்குள் சேர்க்கப்பட்டிருந்தாலும், வாசிப்பு அனுபவத்திற்குப் பின்பு இந்நூலைத் ‘தன் வரலாறு’ என்ற பகுப்பிற்குள்ளும் அடக்கத் தோன்றுகிறது. ’ஸபிதா’ என்னும் டாக்டர், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சௌதி அரேபியாவின் ‘மெக்கா’வில் பல மருத்துவமனைகளில் பணியாற்றிய தன் அனுபவக் குறிப்புகளை, ஆர்வம் தூண்டும் வகையில், கதைப் போக்கில் சொல்லியிருப்பதால் இந்த நூலைத் தன் வரலாற்று நாவல் (autobiographical novel) எனவும் குறிப்பிடலாம். கதீஜா மும்தாஜின் இந்த நாவல் ஆழ்ந்த இறைப் பற்று உள்ள ஒரு பெண் தன் மதமான இஸ்லா த்தின் மீதும் புனித நூலின் மீதும் அடுக்கிவைத்துள்ள வினாக்களின் தொகுப்பாகும். “உண்மையின் உறைய வைக்கும் அழகு, எப்போதுமே ஆச்சார அனுஷ்டானங்க ளின், முகத்திரையின் பின்னால்தான் இருக்கிறது” என்ற ஸொரோஷின் வார்த்தைகளை (ப. 10) மேற்கோளாகக் காட்டும் ஆசிரியர் இந்த உண்மையின் அழகைத் தேடி நடத்திய ‘உடல் - மனம் - சிந்தனை’ ஆகியவற்றின் பயணமே இந்த நாவல். “நான் பண்டிதை இல்லை. எஞ்சியிருப்பவை அனுபவங்களும் மனசாட்சியின் குரல்களும் மட்டும்தான்” (ப.11) என நாவலாசிரியர் கூறியிருந்தாலும், எல்லா மதங்களையும் சார்ந்த, தனித்துவம் மறுக்கப்படுகிற அனைத்துப் பெண்களின் மனசாட்சிக் குரல்களாகவும், உண்மையைத் தேடும் அறிவின் வினாக்களாகவுமே இந்நாவல் அமைந்திருக்கி றது.
கதை என்ற நிலையில் நோக்கும்போது, மரபுவழிப்பட்ட ஏற்ற இறக்கங்கள், திருப்பங்கள், அதிர்ச்சிகள், தீர்க்கமான முடிவு என எதுவும் இந்நாவலில் இல்லை. ஆனால், படிக்கும் வாசகன் ஸபிதா டாக்டரின் ஏழாண்டுகளுக்கான அனுபவ - உணர்ச்சி நெருக்குதல்களில் ஆழ்ந்துபோகி றான். கேரளாவின் சிற்றூர் ஒன்றிலிருந்து சௌதி அரேபியாவுக்குப் பணம் சேர்க்கச் செல்லும் மருத்துவ டாக்டர்களான ஸபிதாவும் அவர் கணவனான ரஷீதும் மெக்கா நகரின் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படு கிறார்கள். இம்மருத்துவமனைகளில் எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா எனப் பல நாடுகளிலிருந்தும் வரும் பலரும் மருத்துவரிலிருந்து அடிமட்டப் பணியாளர்கள் வேலை வரை செய்கிறார்கள். சௌதி அரேபியர்களும் மற்றும் அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களும் மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்களென்ற மனோபாவம் உடையவர்க ளாகவும் அதை எப்போதும் வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
வாழ்வைத் தேடி, பணத்தைத் தேடி சௌதிக்கு வந்த மலையாளிகளில் டாக்டர் முகம்மதுவும், லாரி கம்பெனி யொன்றில் கிளீனராக வேலை செய்யும் அப்துவும் ஸபிதா - ரஷீது குடும்பத்திற்கு நெருக்கமாகிறார்கள். மருத்துவமனையில் ஆண் - பெண் மருத்துவர்க ளுக்கிடையே உள்ள உறவுகள், டாக்டர் - நர்ஸ் உறவுகள், பகல் - இரவு நேரப் பணிகளின் துன்பங்கள் எனக் கதை நகர்கிறது. தொடர்ந்து சௌதியில் வேலை செய்ய உடல் நலச் சோதனைக்காக மருத்துவமனைகளில் வந்து குவியும் பரிதாபத்திற்குரிய அடிமட்டப் பணியாளர்கள், இடையிடையே இஸ்லாம் பற்றி வரும் விவாதங்கள் என எந்தச் சூழ்நிலையிலும் ஸபிதா தனித்து நிற்கிறாள். ரஷீது நல்ல டாக்டர் என்று பெயரெடுத்ததோடு, இஸ்லாமியத் தத்துவ விசாரணையில் ஆழ்ந்து இறங்குகிறான்.
ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் புனித நாள்களில் மருத்துவமனையைப் பொறுத்தவரை ஷிப்ட் என்பது 12 மணிநேரம் ஆகும். பலமாதங்களாக ஸபிதாவும் ரஷீதும் பார்த்துக் கொள்ள முடியாதபடிக்குப் பகல் - இரவு நேரப் பணிகள் அமைந்துவிடும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு இத்தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. வாழ்க்கை ‘வேலை’ என்ற ஒரே திசையில் நகர்கிறது.
சௌதிகளின் வீட்டில் பணிசெய்ய வரும் ‘கத்தாமா’ எனப்படும் பணிப்பெண்களின் அவல நிலை; ஒரு வேளை உணவுக்காக, நுழைவுச் சீட்டு இல்லாமலே சௌதிக்கு வந்துவிடும் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் எப்போதும் போலீசை எண்ணி நடுங்கிக் கொண்டிருக்கும் துன்பம்; நர்சுகள், டாக்டர்கள் இவர்களிடையே ஏற்படும் காதல், காதல் தோல்வி, மன உறவுகள்; இரண்டாவது, மூன்றா வது திருமணம் என்பது மிகச் சாதாரணப் பழக்கமாக ஆணுக்கு இருத்தல்; மிக இளம்பருவத்துப் பெண்களை மணத்தல்; இடையிடையே நபிகளாரைப் பற்றிய குறிப்புகள் எனச் செல்கிறது இக்கதை. இறுதியில் ரஷீது உடல்நலம் கெடல், அது காசநோயா, புற்றுநோயா என அறிந்துகொள்வதற்கு இடையிலான ஸபிதாவின் மனத் துன்பம்; காசநோய்தான் எனக் கண்டறியப்பட்டு, அவன் குணமாகியதும் ஸபிதா - ரஷீது - குழந்தை ஆகியோர் நாடு திரும்புகின்றனர்.
இஸ்லாம் குறித்த வினாக்கள், விவாதங்களுக்கிடையில் கதை என்பது மருத்துவமனை நடவடிக்கைகளாக நகர்கிறது.
“கஃபா என்ற வழிபாட்டில்லத்தைப் பெரியதொரு விக்கிரகமாக்கி விட்டிருக்கிறோம் இல்லையா” (ப.55) என்ற கேள்விக்கு இல்லை எனப் பதில் வந்தாலும் “இன்று அது, ஒரு விக்கிரகத்தின் எல்லாப் பண்புகளுடனும்தான் கவனம் பெற்றுக் கொண்டிருக்கிறது... ஏகத்துவ நம்பிக்கையாளர்கள் ஏன் அதை வலம் வர வேண்டும்? எதற்காக அதைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்” (ப.55) முதலான கேள்விகள் ஸபிதாவின் நெஞ்சில் புகைந்து கொண்டிருக்கின்றன.
ஆண்டான் - அடிமை மனோபாவம் அரபி இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று 1500 ஆண்டுகளுக்கு முன்புள்ள காலத்தில் நாம் ஏன் குடியேற வேண்டும்; எப்படிப்பட்ட மேம்பட்டவராக இருப்பினும் பெண் என்றால் கொச்சைப்படுத்திப்பேசும் பெட்ரோ டாலரின் அகம்பாவம்; நோன்பு திறப்பு என்பது ஒரு தீவன உற்சவம்தான்; “இங்கே யும் கல்தான் வில்லன். கல்லில் கொத்திய விக்கிரகங்கள் இல்லாமல் போனபிறகும்கூட கல்லைப் பற்றிய குறியீடு அழிந்து விடவில்லை, இல்லையா?”. கர்ப்பம் தரிக்காவிட்டால் வேறு திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டும் கணவர்களால், டாக்டரிடம் வந்து ஏதாவது சிகிச்சை செய்து என்னைக் கர்ப்பம் தரிக்க வையுங்கள் என வேண்டும் சௌதிப் பெண்கள் - இப்படி ஒவ்வொ ன்றைப் பற்றியும் வினாக்களையும் விவாதங்களையும் எழுப்புகிறாள் ஸபிதா.
“இதிலென்ன சந்தேகம்... கலிமாவை மனதில் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாத யாருமே சுவர்க்கத்தை அடைய முடியாது”.
“மகாத்மா காந்தியும் மதர் தெரஸாவுமெல்லாம் நரகத்திற்குத்தான் போவார்களா?”
“சந்தேகமில்லாமல்”.
ஸபிதா, தனக்குக் காந்தியும் தெரசாவும் இருக்கும் நரகமே போதுமானது என எண்ணுகிறாள்.
ஸபிதாவின் கேள்விகள் முடிவில்லாத பயணத்தில் ஏற்படும் எண்ணற்ற ஐயங்கள்; சொல்லுக்கும் நடை முறைக்கும் வித்தியாசப்படும் புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குதல்; எல்லையற்ற கருணை கொண்ட இறைவன் பெண்களைப் பற்றி இப்படிக் கூறியிருப்பானா என்ற வெளிப்படையான வினாக்கள் - இப்படியாகவே ஸபிதா வாழ்கிறாள்.
“பெண் என்பவள் ஆணின் போக பூமி. நீ எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அங்கே நுழையலாம். அவள் அனுசரணையின்றி நடந்துகொண்டால் அவளை அடிக்கலாம்”. ஸபிதாவுக்கு இந்தப் புனித வாசகங்களும், இவற்றிற்குக் கொடுக்கப்ப டும் பல்வேறு விளக்கங்களும் அதிர்ச்சி உண்டாக்குகி ன்றன.
“இஸ்லாம் பெண்களுக்கு மிகுந்த உன்னதமான இடத்தையும் சுதந்திரத்தையும் அளித்திருக்கும் மதம் என்கிற வாதம் எழும்போது ... சிறைக் கூடத்தினுள் நான் முழுச் சுதந்திரத்துடன் செயல்படுகிறேன் என்று ஒரு கைதி சொல்வதுபோல் கேலியான உணர்வுதான்” ஸபிதாவுக்கு உண்டாகிறது.
ஸபிதா ஆழ்ந்த இறைப்பற்றும், கருணை மிக்க அல்லா’ வின் மீது மாசற்ற நம்பிக்கையும் உடையவள். ஆனால் இறைவன், தூதர், தூதரின் வாழ்க்கை முறை என எந்தப் பெயர்களில் சொன்னாலும் பெண்ணின் மீதான மதத்தின் ஒடுக்குமுறையை ஏற்காதவள்; கண்டிப்பவள்.
“இந்த நாவலின் மையப்பாத்திரமான ஸபிதா, முகத்தைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் மனத்தையும் திறந்து வைத்திருக்கிறாள். திறந்த மனதுடன் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளுக்குள் பயணம் செய்கிறாள். அதன் சடங்குகளைக் கேள்விக்குட்படுத்துகிறாள். பெண் என்பதா ல் மதம் தன்னை உதாசீனம் செய்கிறதா என்று விசாரணை செய்கிறாள்”(பின்னட்டை) என்ற சுகுமாரனின் கூற்று இந்த நாவல் முன் வைக்கும் விவாதப் பொருளாக விளங்குகிறது.