உயிர்கள், அதனுடைய சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்வதும் அதற்கு உகந்தார்போல தமது இயல்பைத் துறந்து வேறொன்றாக நடந்துகொள்வதும் இயற்கை. அப்படியான ஒன்றினாலேயே இப்புவியில் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்வது சாத்தியமாகிறது. இதில் உயிர்கள் என்பதை மனிதர்கள் என மாற்றினோமென்றால் இந்த வாக்கியத்திற்கான அழுத்தம் இன்னும் வலுப்பெறும். ஆக, சமூகத்திலிருந்து குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்படும், புறக்கணிக்கப்படும் மூன்றாம் பாலினத்தினரில் அநேகமானோரின் தொழில் தனது உடலை நம்பி இருக்க நிர்பந்திக்கிறது. தங்களிடம் துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக, தங்களை முரட்டு குணமுடைய இரக்கமற்றவர்களான பிம்பத்தை சுமந்து திரிய பணிக்கிறது. பெண்மையை விரும்பும் மனது, துறக்க நினைக்கும் ஆண்மையை முன்னிறுத்துகிறது. தனித்து அல்லாமல் குழுவாக இயங்கச் சொல்கிறது. இப்படியான பாதுகாப்பற்ற சூழலை, அவர்களைத் தொடுவதையே அருவருப்பாக எண்ணும் சிந்தனையை உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்திடம், தனது தொடுகையையே சமூகத்திற்கெதிரான வெளிப்பாடாக காட்ட வேண்டியிருக்கிறது. தங்களுக்கான கவசமாகவும். ஆயுதமாகவும்!
திருநங்கைகள் குறித்த இரு எதிரெதிர் துருவங்களினாலான சிந்தனைகளே நம்மிடமிருக்கின்றன. ஒரு சாரார் அவர்களைக் கண்டு அஞ்சுவதாகவும் மற்றொரு சாரார் அவர்களிடத்தே பரிதாபப்படுபவர்களாகவும். ஒரு புறம் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியர்கள் என்பதாகவும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைப்போல உணர்ச்சியுள்ள ஜீவன்கள் என்பதாகவும். இந்த இரு எண்ணமுமே – அவர்களுக்கு ஆதரவானதாகவும் அல்லது எதிரானதாகவும் – மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் வேறொரு வஸ்து என்று பார்ப்பது போல தான். இந்த இரண்டுமே அவர்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஏதோ ஒன்றை எதிர்கொள்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. சு.வேணுகோபால் ஒரு சார்பு நிலை எடுக்கிறார். அது, மூன்றாம் பாலினத்தவரின் மீது அன்பைப் பொழிவதாக, அனுதாபப்படுவதாக, இரக்கம் காட்டுவதாக இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காக அதற்கு எதிர் நிலையிலிருக்கும் பாத்திரங்களை வார்க்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிட்ணனுக்கு எதிராக செயல்படும் போது, ‘இல்லை இல்லை அது அப்படி அல்ல’ என்று சொல்வதாக கிட்ணனின் குரலும், கதைசொல்லியின் குரலும், ஆங்காங்கே சு.வேணுகோபாலின் குரலும் ஒலிக்கிறது.
பால்கனிகள் நாவலானது கறுப்பு அல்லது வெள்ளை என்ற படைப்புத்தளத்தில் இயங்குகிறது. இங்கு கிட்ணனனை – கிட்ணன் போன்றவர்களை – நல்லவனாக சித்திரப்பதற்கே நாவல் முற்படுகிறது. கிட்ணனிடமிருக்கும் குறைகளை, பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான தடயங்கள் நாவலில் இருந்தபோதும் அது கிட்ணனின் பக்கம் தன்னை சாய்த்துக்கொள்கிறது. கிட்ணனின் மீது சுதாகருக்கு இருக்கும் கோபத்தில் அவன் பக்க நியாயங்கள் இருக்கவே செய்கின்றன. திவ்யா தங்கியிருக்கும் அறையை கிட்ணன் சிலாகிப்பது, தனது நண்பனின் மடியில் அமர்ந்திருப்பது, கிட்ணனை கணேசன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது என இன்னொரு பக்கத்தை ஓரிரு வரிகளில் கடந்துசெல்கிறார். கிட்ணனின் தாயார் அவனை மகளாக ஏற்றுக்கொள்கிறார், திவ்யாவிற்கு இருக்கும் தயக்கம் அவளை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகிறது, திவ்யாவின் தோழிக்கு கரிசனம் ஏற்படுகிறது, ஒவ்வொரு சச்சரவின் போதும் பெண்களே ஆதரவாக இருக்கிறார்கள். இது குடும்பத்தில் மட்டுமே. ஆண்கள் பெண்கள் என சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாகவே நடந்துகொள்கிறார்கள். இதில் சரி தவறு, தேவை தேவையற்றவை என்பதைத் தாண்டி சார்பு நிலையற்ற படைப்பாகும் போது அது வேறொரு சாரத்தை தரவல்லது. இந்நாவலில் திருநங்கைகள் மீதிருக்கும் பொதுபுத்தி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் ஏற்றி, அப்படி இல்லை என கிட்ணனின் மூலம் பிரச்சாரம் செய்யும் தொனி வெளிப்படுகிறது.
‘என்னடா கோலம் இது’ என சித்தி பதறும் போது, ‘நான் உன்னோட அக்கா மக, என்ன கோலம்ன்னா… இதுதானம்மா என் கோலம். நீங்க எதுக்கு வருத்தப்படுறீங்க? நீங்க என்ன ஆம்பளையாப் பாக்குறதுதாம்மா ஒரே வெக்கமா இருக்கு. வருத்தமாவும் இருக்கு. நான் பொம்பளம்மா, நீ வருத்தப்படாத. என்ன நீ ஒருவாட்டி மகளேன்னு கூப்பிடு. ஜென்ம புண்ணியம் கெடுச்சிரும்மா’ என்கிறான் கிட்ணன். திவ்யா தனது குழந்தைக்கு பால் தர முடியாமல் உடலாலும் மனதாலும் அவதியுற்று இதென்ன பிழைப்பு என பெண்மையை வெறுக்கும் வேளையில், கிட்ணன் தனது சுரக்காத குறுமுலையை உண்ணத் தருகிறான். அவன் பெண்மையை தாய்மையை ஆராதிப்பவனாக இருக்கிறான். ‘ச்சீ எந்திரி, பொண்டுகா. வழமை கெட்டவன். எங்க வந்து ஒக்கார்றாம் பாரு’ என பேருந்தில் ஒரு பெண் குரல் கடுகடுக்கும் போது, ‘நானும் ஒன்ன மாதிரி தாம்மா. ஆம்பள பக்கம் நான் போய் ஒக்கரா முடியுமா? எனக்கு வெக்கமாயிருக்காதா? என்னை திட்டுறியே. ஒன்ன நான் திட்டட்டுமா? ஒன்ன எம் பெறப்புன்னு நெனச்சு ஒக்காந்தா அசிங்கப்படுத்துறியேம்மா’ என்கிறான். இதைத் தொடர்ந்து கதைசொல்லியின் குரல் ஒலிக்கிறது, ‘ஆண்கள் சங்கடப்பட்டால் இவனே இடம்விட்டு தள்ளி நிற்பதுண்டு. பெண்கள் ஒருமாதிரி நெளிந்தால் கிட்ணனால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. அந்தளவு கோவம் வரும்’. நான் உனக்கு மக இல்லையா, சுதாகருக்கு தங்கச்சி இல்லையா, கிட்ணனின் மகளுக்கு திவ்யா பெரியம்மா இல்லையா? என மீண்டும் மீண்டும் கிட்ணன், இதை அழுத்தமாக சொல்ல வேண்டியிருக்கிறது. ‘யக்கா… நான் பட்ட அவமானத்த அசிங்கத்த அடிய வேதனைய இந்த மண்ணுல யாரும் பட்டிருக்க மாட்டங்கக்கா. நீங்க பட்ட வேதனைய சொல்லிடுவீங்க. நான் யாருகிட்ட சொல்றது. அத எப்படிச் சொல்றது. எப்படிச் சொல்ல முடியும். சொன்னாலும் புரிஞ்சிக்குவாங்களா. இந்த ஜென்மம் போதும்க்கா. இன்னொரு ஜென்மம் எனக்கு வேணாம்’ என்பது நாவலில் இறுதியாக ஒலிக்கும் கிட்ணனின் துயரார்ந்த வார்த்தைகள்.
பெண்களின் மனதை தத்ரூபமாக படைப்பதிலுள்ள சு.வேணுகோபாலின் சிறப்பம்சம் இலக்கிய உலகம் நன்கறிந்த ஒன்று. பெண் பாத்திரங்களும் கிட்ணனின் பெண்மையையும் நாவலில் உயிர்ப்புடன் வார்த்திருப்பது சு.வேணுகோபாலுக்கு கைவந்த கலை. போகிற போக்கில் வெகு எளிதாக அவரால் சாத்தியப்படுத்திவிட முடியும். இதையெல்லாம் தாண்டி வேறு சில கேள்விகள் எட்ட நின்று வேடிக்கை பார்க்கின்றன. அவற்றையெல்லாம் விரட்டி விட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கி.ராவின் ‘கோமதி’ வெளியாகிய ஆண்டு 1964. சு.வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ டிசம்பர், 2013இல் வெளியாகியது. கோமதிக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. கிட்ணனும் மீசை மழித்து சிகை வளர்த்துக் கொள்கிறான். அக்காவின் செருப்பை அணிவதில் கிட்ணன் தயக்கம் காட்டுவதில்லை. கோமதிக்கும் கிட்ணனுக்கும் பெண்மையின் நளினம். கோமதிக்கு சமையல் கலை அற்புதமாகக் கைவந்திருந்தது. கிட்ணனுக்கும். கோமதி பெண் குரலில் உருக்கமாக பாடுகிறான். இந்நாவலில் கிட்ணனும் பாடுகிறான். ஐம்பது ஆண்டுகளில், மூன்றாம் பாலினத்தவர் குறித்த சித்தரிப்புகளைக் கையாள்வதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இத்தகைய வர்ணனைகள், அவர்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்தும் சுற்றத்தார், குடும்பமே புறக்கணிக்கும் அவலச் சூழல், இன்னபிற என இவையெல்லாம் வாசகர் நன்கறிந்ததே. தலித் இலக்கியம் தளிர்விடத் தொடங்கிய போது, அவை பெரும்பாலும் ஒருவித ஆவணத் தன்மையைக் கொண்டிருந்தன. அப்போது அது அவசியமாகவும் அதுவே போதுமென்பதாகவும் இருந்தது. ஒரே மாதிரியான படைப்புகள் தொடர்ந்து வெளியான போது அவை விமர்சனத்திற்குள்ளாயின. தலித் இலக்கியம் மீதான விமர்சனங்கள் தொண்ணூறுகளின் இறுதியிலேயே எழத் தொடங்கிவிட்டன. இதை ஈழ இலக்கியத்திற்கும் பொருத்திக்கொள்ளலாம். ‘பால்கனிகளு’ம் புறக்கணிப்பட்ட ஜீவன்களின் துயரார்ந்த குரலாக, பிரச்சார நெடியுடன், முன்முடிவுடன், ஒரு வகை ஆவணத்தன்மையுடன் வெளிப்படுகிறது என்ற வகையில் இந்நாவலும் வழமைக்குள் தன்னை இருத்திக்கொள்கிறது.
(நன்றி: சாபக்காடு)