புத்தக சந்தையில் பூவுலகின் நண்பர்கள் பதிப்பகத்தில் வாங்கிய சிறிய புத்தகம். 50 பக்கங்கள் தான். சில மணி நேரத்தில் படித்து முடித்து விட்டேன். இம்முறை சூழலியல் சார்ந்த புத்தகங்கள், ஆரோக்கியம் சார்த்த புத்தகங்கள், குழந்தை இலக்கியம் என்று வாங்கினேன். மூன்றிலுமே எஸ்.ராவின் புத்தகங்கள் இருந்தது. அவரது எழுத்தாளுமை நிச்சயம் வியக்கத்தக்கதே!
இந்த புத்தகத்திலும் அவரது பரந்த வாசிப்பும், ஊர் சுற்றிய அனுபவமும் வெளிப்படுகிறது. அவரது எழுத்துக்குள் நம்மை இழுத்து செல்லும் வசியமும் மற்ற புத்தகங்களை போல இதிலும் இருக்கிறது. அந்த வசியம் தான் உடனே இந்த புத்தகத்தை பற்றி எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன்.
அமெரிக்க எழுத்தாளர் தோரோ (Henry David Thoreau) இரண்டு ஆண்டுகள் தனித்து வாழ்ந்த வால்டன் ஏரியை எஸ்.ரா தன் அமெரிக்க பயணத்தில் பார்ப்பதில் இருந்து துவங்குகிறது. தோரோவின் புத்தகங்களை வாசித்த அனுபவத்தை வைத்து, அவருக்கும் எமர்சனுக்கும் உண்டான நட்பை பற்றியும், தோரோவின் இயற்கை வாழ்க்கை பற்றியும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்.
புத்தகம் தோரோவை மையமாக கொண்டு எழுதப்பட்டாலும், எஸ்.ரா தன் பரந்த வாசிப்பை, அனுபவங்களை பல ஆளுமைகளின் வாழ்கையோடு தொடர்பு படுத்தி நமக்கு தருகிறார். புத்தர், ஜே. கிருஷ்ணமூர்த்தி, காந்தி ஆகியோரின் வாழ்வில் நடை, நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை எழுதி இருக்கிறார். சீக்கிரமே நடைபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது.
பிறகு அமெரிக்கா உருவாக்கப்பட்ட வரலாற்றையும் சொல்கிறார்.
புத்தகத்தில் இருந்து சில பத்திகளை தர விரும்புகிறேன். இவை நிச்சயம் தகவல் களஞ்சியமாகவும் உங்களை இந்த புத்தகத்தை வாசிக்க தூண்டுபவையாகவும் இருக்கும் என நம்புகிறேன்..
ஒருமுறை கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் வீட்டுக்கு சென்ற ஒரு வாசகர் கவிஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று அவரது பணிப்பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப்பெண் ஜன்னலுக்கு வெளியிலுள்ள உலகை படித்துக்கொண்டிருக்கிறார் என்றாராம்.
இயற்கையைக் காண்பது ஒரு வாசித்தலே . அதனால் தான் மானுட வாழ்க்கையைப் புல்லினும் சிறியது என அவரால் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.
இயற்கையை வெறும் கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது என்கிறார்கள். அது உண்மையே . இயற்கை என்றவுடன் நமக்கு பச்சை நிறமே நினைவுக்கு வருகிறார். ஆனால், இயற்கையின் நிறம் பச்சை மட்டுமில்லை. செம்பழுப்பும் மஞ்சளும் இளஞ்சிவப்பும் இயற்கையின் நிறங்கள் தானே . மனதை நாம் பசுமையோடு மட்டுமே பழக்கி வைத்து இருக்கிறோம். இயற்கையை காணுவது ஒரு கலை. அதை நாம் முயன்று பழக வேண்டும்.
கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி. நடத்தலுக்கு ஏன் எப்போதும் இயற்கையான சூழ்நிலை தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு தோரோ சொல்லும் பதில் அற்புதமானது.
நாம் நடக்கும் போது உடல் தனியாகவும் மனது தனியாகவும் இயங்கக்கூடாது. வணிக சந்தையினுள் நடந்து சென்றால் அது உங்கள் ஆசைகளை , செய்ய வேண்டிய வேலைகள், பணம் சம்பாதிக்கும் வழியை, இயலாமையை எனத் தூண்டிவிட்டு உங்கள் நடையை விட வேகமாக உங்கள் மனது அலைபாயச் செய்துவிடும். அதே வேளையில் தனிமையான இயற்கையான சாலையில் நடக்கும் போது மனதில் தூய்மையான காற்றும் இயற்கையான காட்சிகளும் மட்டுமே நிரம்பும். அப்போது தான் கால்களும் மனதும் ஒன்றாக நடக்கும். அது தான் நடத்தலின் ஆனந்தம்.
நடைப்பயிற்சி நம்மைப் பயத்திலிருந்து வெளியேற்றுகிறது. உலகம் மீது நாம் காரணமின்றி கொண்டுள்ள அச்சத்தை விலக்கிவிடுகிறது. அதே நேரம் எல்லா விலங்குகளும் தன் பசிக்காக உணவு தேடி அலைந்து கொண்டு தானிருக்கின்றன. தானும் அது போன்ற இயற்கையின் பகுதியே என்று மனிதனை உணர வைக்கிறது.
தத்துவவாதி ஜே. கிருஷ்ணமூர்த்தி தினசரி பல மைல் நடக்ககூடியவர். அவருடன் ஒரு நாள் துணையாக நடந்த பத்திரிக்கையாளர் அதைப் பற்றி எழுதிய குறிப்பு முக்கியமானது. கிருஷ்ண மூர்த்தி சாலையில் நடக்கும் போது காற்றில் மிதந்து செல்வது போல இலகுவாக நடக்கிறார். வழியில் யாராவது நிறுத்தி பேசினால் அவர் நின்று பேசுவதில்லை. கடந்து சென்றபடியே இருக்கிறார். தற்செயலாக எதாவது ஒரு மரத்தையோ நாயையோ கண்டதும் அவரது முகம் மலர்ச்சி கொள்கிறது. அதைப் பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.
சில வேளைகளில் அதைப் பார்த்து மிக நட்புணர்வோடு புன்னகை புரிவார். சாலைகளோடு அவர் மௌனமாக எதையோ பேசிக்கொண்டு வருவது போலவே அவரது பார்வை இருக்கும். நீண்ட தூரம் நடந்து திரும்பிய போதும் அவரிடம் களைப்போ அசதியோ காணப்படாது. மாறாக மிகுந்த புத்துணர்வும் சந்தோசமும் முகத்தில் பீறிடும் என்கிறார்.
நடத்தலின் போது எதை உணர்ந்து கொண்டீர்கள் என்றதற்குத் தோரோ சொன்ன பதில். ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் நடந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு இயற்கையின் விசை என்னை நடக்க வைக்கிறது. அது என்னை ஈர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
கால்கள் தான் மனிதனின் ஆதாரம் என்பதை இந்திய சமூகம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறது. கடவுளின் பாதங்கள் தான் வணங்கப்படுகின்றன. பெரிய மனிதர்களின் கால்களில் விழுந்து ஆசிவாங்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். பாதங்கள் தனித்து வழிபடப்படுகின்றன. தனது கால்கள் நடந்த தூரம் பற்றி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
தோரா நடையை ஒரு புனித செயல் என்கிறார். இரண்டு வகை நடையிருக்கிறது. ஒன்று குறுநடை. அருகாமை வரை சென்று திரும்புவது. இன்னொன்று நீள் நடை. இது முடிவில்லாமல் நடந்து கால்கள் அலுத்துப் போகும்போது வீடு திரும்புவது. நீண்ட நடையின் பின்னால் வீடு திரும்பும் போது தான் வீட்டின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உணர முடியும். உலகம் எவ்வளவு பெரியது என்பதையும் வீடு எத்தனை அற்புதமானது என்பதையும் நடை நமக்குக் கற்றுத்தருகிறது. நன்றாக நடக்கத் தெரிந்தவன் பாக்கியவான். அவன் உலகை தனது கால்களால் அளக்கிறான். நீண்ட தூரங்களுக்குத் தனியாக ஒருவன் நடக்க ஆரம்பிக்கும் போது ஒருவன் தனது மன வலிமையை, உடலுறுதியை ஆராயத் துவங்குகிறான். நடை ஒருவனை உறுதிப்படுத்துகிறது. விழிப்புணர்வு கொள்ள வைக்கிறது. பாதங்களில் ஒட்டிய புழுதியோடு வீடு வந்து சேர்வது அலாதியான ஆனந்தம். நடை என்பது ஆரோக்கியதிற்கான மருந்து மட்டுமில்லை. அது ஆன்மாவிற்கான மருந்து.
(நன்றி: ராஜராஜன்)