1997இல் ‘The God of Small Things’ நாவலுக்கு புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய், அதன் பிறகு நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆதிவாதிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவ்விவகாரத்தில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு மக்களுக்கு எதிராக இருந்த போது அதை விமர்சிக்கத் தயங்காதவர். அதனால் சிறைத் தண்டனையும் பெற்றார். பசுமை வேட்டை (Operation Green Hunt) என்ற பெயரில் இந்திய அரசு தண்டகாரண்ய காட்டுப் பகுதிகளில் பழங்குடி மக்களுக்கெதிரான போரில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ‘மாபெரும் அச்சுறுத்தல்’ ஆகிப்போன அப்பகுதிச் சென்று பழங்குடி மக்களுடன் தங்கியிருந்து அவர் எழுதியிருக்கும் நூல்தான் ‘தோழர்களுடன் ஒரு பயணம்’.
இந்தியாவின் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அரசை எதிர்த்துப் போரிடுவது தற்போது மட்டும் நடைபெறும் ஒன்றல்ல. ஹோ, ஓரான், கோன், சந்தல், முண்டாக்கள், கோண்டுகள் ஆகிய பழங்குடி மக்கள் பலமுறை ஜமீன்தார்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களுடன் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்களுக்கு நெடிய வரலாறு உண்டு (பக்.09) என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்துகிறார். பழங்குடியினர் எழுச்சியும் நக்சல்பாரி அரசியலும் பிரிக்க இயலாதவை. இந்திய அரசால் தொடர்ந்து திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு, விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு பெரும் கூட்டம் மாவோயிஸ்டுகளாக அணி திரண்டு நிற்பதை (பக். 10) சுட்டிக்காட்டி இம்மக்களின் வாழ்வுரிமைப் பறிப்பைப் பட்டியலிடுகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கிய தண்டகாரண்ய வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு (MoU – Memorandum of Understanding) ஒப்பந்தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளன. இவைகள் மூலம் இரும்பாலைகள், மின் திட்டங்கள், அலுமினிய ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள், சுரங்கங்கள் போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் அங்கிருக்கும் பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும். எனவே இந்திய அரசு உள்நாட்டு மக்களுக்கு எதிரான போரில் இறங்கியிருக்கிறது. ‘பழங்குடியினரை மைய நீரோட்டத்திற்கு அழைத்து வருவது’ அல்லது ‘நவீன வளர்ச்சியின் பயன்களை அவர்களுக்கு வழங்குவது’ என்ற சொல்லாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பாக்சைட்டை வெட்டியிருக்கிறது. அங்குள்ள பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி செய்கிறது. இதனை நம் மீது கரிசனம் கொள்ள வந்துள்ள மிருதுவான பூதங்கள் என்று கூறி பன்னாட்டு சமூக பொறுப்பை (CSR) என்.டி.ஆரின் தொன்மம் சார்ந்த படங்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். (பக். 13). கர்நாடகாவில் தனியார் நிறுவனம் அங்கு வெட்டியிருக்கும் ஒரு டன் இரும்புத் தாதுவிற்கு ரூ.27 ஐ அரசிற்கு அளிக்கிறது. அந்த நிறுவனத்திற்கு ரூ. 5000 கிடைக்கும் போது ஏன் அரசு, நீதிபதிகள், ஊடகங்களை விலைக்கு வாங்க முடியாது? ராய்ப்பூரில் வேதாந்தாவின் புற்று நோய் மருத்துவமனையைப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பாக்சைட் மலை இருப்பதை ஊகிக்க முடிகிறது என்கிறார். (பக். 14). வேதாந்தா நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞரான இன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இப்போரின் CEO வாக செயல்படுவதாக உண்மையை போட்டுடைக்கிறார்.
2005 இல் சத்தீஸ்கரில் இரு இரும்பு ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒன்று ரூ. 7000 கோடியில் பைலாதீலாவில் எஸ்ஸார் ஸ்டீல். மற்றொன்று ரூ.10000 கோடியில் லாகன்தீகுடாவில் டாடா ஸ்டீல். அப்போதுதான் பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகள் “உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்” என்ற ‘புகழ் பெற்ற’ அறிக்கையை வெளியிட்டார். உடனடியாக டாடா, எஸ்ஸார் ஆகிய நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு பெரும் ஏற்றம் கண்டதின் (பக். 40) சூட்சுமத்தை விளக்குகிறார்.
பிரதமரின் அறிக்கையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் களம் இறங்கலாம் என்ற செய்தியும் உட்கிடையாக இருந்ததையும் அதன் பிறகு அரசின் கூலிப்படையான சல்வா ஜுடும்-ன் செயல்பாடுகள் தொடக்கம் பெற்றதையும் “பழங்குடியினரின் நிலம் சார் தன்மையையும் இரட்டைப்பார்ப்பன நாஜி உணர்ச்சியையும் இணைத்த அற்புதக் கலவை” என்றும் எழுதுகிறார்.
சட்டீஸ்கர் ஆயுதப்படை (CAF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), இந்தியன் திபெத் எல்லை போலீஸ் (ITBF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISSF), க்ரே ஹவுண்ட்ஸ், ஸ்கார்பியன்ஸ், கோப்ராக்கள் என அனைத்து வகையான படைகளும் திரட்டப்பட்டுள்ள அரசின் கொள்கைக்கு ‘உள்ளங்களை மனங்களை வெல்வது’ (WHAM) என்று அரசு செல்லமாக அழைப்பதை என்னவென்பது? (பக்.46)
நாகா பெட்டாலியன் சென்று விட்டபோதிலும், காவல் துறையினர் பெண்களும் கோழிகளும் தேவைப்படும் பொழுதெல்லாம் வருவார்களாம். (பக். 61). 2005இல் நாகா பெட்டாலியனும், சல்வா ஜுடும் படையும் இணைந்து கோர்மா என்ற கிராமத்தைத் தாக்கி புரட்சிகர ஆதிவாசி மகளிர் அமைப்பின் உறுப்பினர்களான லுக்கி, சுக்கி மற்றும் வேறு ஒரு பெண்ணையும் பிடித்துச் சென்று பாலியல் வல்லுறவு கொண்டு கொன்று விடுகின்றனர். புல் தரையின் மீதுதான் பாலியல் வல்லுறவு கொண்டார்கள். ‘முடிந்த பின்பு அங்கே எந்த புல்லும் இருக்கவில்லை’ என்கிறாள் ரீங்கி – என்ற நிகழ்வைப் (பக். 61) படிக்கும்போது நமதரசின் கோரமுகம் வெளிப்படுகிறது.
மக்கள் யுத்தக்குழு (PWG), கட்சி ஐக்கியம் (PU), மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC) ஆகியன இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ.) CPI (ML) யுடன் இணைந்து தற்போது பீகார், ஜார்க்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆக செயல்படுவதையும் தோழர் வேணுவின் உரையாடல் வழியே ராய் வெளிப்படுத்துகிறார். இவர்களுடைய மக்கள் அரசில் வேளாண்மை, வர்த்தகம் – தொழில், பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மருத்துவம், மக்கள் தொடர்பு, கல்வி – கலாச்சாரம், வனம் ஆகிய 9 துறைகள் செயல்படுகிறது. பல மக்கள் அரசுகள் சேர்ந்தது ஒரு பகுதி குழு. மூன்று பகுதி குழுக்கள் ஒன்றிணைந்ததுதான் ஒரு பிரிவு என்றும் தண்டகாரண்யாவில் 10 பிரிவுகள் (Division) உள்ளதாகவும் தோழர் வேணு தெரிவிக்கிறார். (பக். 39). அரசு அறிக்கையின்படி நக்சல் பகுதிகளில் வனங்கள் விரிவடைந்திருப்பதின் காரணத்தை உணர முடிகிறது.
தண்டகாரண்ய காட்டில் அருந்ததி ராயின் நெடிய பயணத்தின் ஊடே மாவோயிஸ்டுகளைப் பற்றி தகவல்களையும் இந்திய அரசின் செயல்பாடுகளையும் விளக்குகிறார். சிவப்பு எறும்பு சட்டினி (சாப்போலி) சுவைத்து நன்றாக இருந்தது என்றும் எழுதுகிறார் (பக். 35). பழங்குடி மக்களுடன் ஒன்றிப் போன நிலையை இது உணர்த்துகிறது. சாரு மஜும்தார் சொன்ன ‘சீனாவின் பாதை எங்கள் பாதை’ என்ற வாசகம் ஏகாதிபத்தியமாகிப் போன சீனாவுடன் சேர்ந்து இந்தியா உச்சரிக்க வேண்டியதாகப் போனதுதான் தலைகீழ் மாற்றம் என்கிறார். ஆனால் “இன்றும் கட்சி சரியாக உள்ளது எனச் சொல்லும் அருந்ததி, இன்று மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பதால் மக்கள் கட்சி; அதன் ராணுவம் மக்கள் ராணுவம் ஆனால் புரட்சி முடிந்த பின்பு இந்தக் காதல் கசப்பான திருமண வாழ்க்கையாகிப் போகலாம்”(பக்.72) என்று தனது அய்யத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.
போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்ட செய்தியைப் பற்றிச் சொல்லும்போது “ஆயுதப் போராட்ட முறையில் ஒழுங்கு எப்படி ஒரு மிகவும் கீழ்த்தரமான வன்முறையில் முடிந்து விடக்கூடிய அல்லது சாதிய, இன, மதக் குழுக்களுக்கிடையேயான சண்டைகளாக மாறி விடக்கூடிய வாய்ப்புள்ளது என்பதற்கு உதாரணமாகும்”. அபாயம் பற்றி எச்சரிக்கையும் செய்கிறார்
(பக். 91, 92).
சாரு மஜும்தாரின் ‘நெடு நாளையப் போர்’ தந்திரம் எந்தவொரு அரசியல் பிரச்சினைக்கும் ராணுவத்தைப் பயன்படுத்தத் தயங்காத, காலனிய சக்தியாக மாறிப்போன இந்திய அரசை உயர்சாதி இந்துக்களின் அரசாக அருந்ததி ராய் மிகச் சரியாகவே கணிக்கிறார். இந்த அரசுதான் தேவைப்படும் போது எதிர் பகைமையைத் தருவிக்கும் என்றும் “சத்தீஸ்கரில் போரிட நாகாக்களையும், மிசோக்களையும் அனுப்புகிறது. சீக்கியர்களை காஷ்மீருக்கும் காஷ்மீரிகளை ஒரிசாவுக்கும் தமிழர்களை அசாமுக்கும் அனுப்புகிறது” என்றும் இந்திய அரசின் நெடுநாளையப் போரை அம்பலப்படுத்துகிறார்.
தண்டகாரண்யாவின் மக்கள் அரசு, “மொத்த உலகத்திற்கான மாற்று அல்ல, அல்லாஸ்காவுக்கு அல்ல, புதுதில்லிக்கு அல்ல, மொத்த சட்டீஸ்கருக்குக் கூட அல்ல, இது இவர்களுக்கு மட்டுமானதே. தண்டகாரண்யாவுக்கானதே” என்று கூறும் அருந்ததி ராய்,“ஆனால் அதுவே அவர்களை பூண்டோடு ஒழித்து விடும். இது வரலாற்றையே போருக்கு அழைக்கிறது”. என்கிற யதார்த்தத்தையும் பிரதிபலிக்கிறார்.
பாகிஸ்தானில் ஜியா – உல் – ஹக்கின் அடக்குமுறைக் காலத்தில் பாடப்பட்ட அகமத்பெயஸ் எழுதிய ‘அந்த நாளைக் காண்போம்’ என்ற பாடல் வனத்தில் பாடப்பட்டதையும் அடக்குமுறைகளுக்கு எதிரான, சற்று விநோதமான கூட்டணி நாமாக ஏற்படுத்தாமல் இயல்பாகவே அமைகிறது என்பதை நயம்படச் சொல்கிறார்.
(நன்றி: மு. சிவகுருநாதன்)