பிஞ்சுகள்: சொல்லின்றி உயிரில்லை!

பிஞ்சுகள்: சொல்லின்றி உயிரில்லை!

ஆசை
Share on

இயற்கைக்கும் பழந்தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள உறவு முக்கியமானது, நுட்பமானது. சங்கப் பாடல்களில் எதை எடுத்துப் பார்த்தாலும் இயற்கையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு செய்தி இருக்கும். ஆனாலும், சங்கக் கவிதைகளின் பாடுபொருளாக இயற்கை இருக்காது. மனிதர்கள், இயற்கை என்ற இருமை நிலை உருவாகாத காலத்தில் இயற்கையைத் தனியாக வைத்து மனிதர்கள் இலக்கியமாக்கியதில்லை. இயற்கையிலிருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் இயற்கையைப் கருப்பொருளாகக் கொண்டு படைப்புகள் உருவாவதே இந்த இருமை நிலையின் அடையாளம்தான்.

ஆங்கிலத்தில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இயற்கை இலக்கியம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தமிழ் நவீன இலக்கியத்திலோ இயற்கை இலக்கியம் என்பது இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இயற்கை என்பது குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பதுபோல் எழுதப்படுகிறது. அல்லது குழந்தைத்தனமாக எழுதப்படுகிறது. எனினும், தமிழின் மிகச் சில இயற்கை சார்ந்த பதிவுகளில் கி. ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள்’ குறுநாவலைக் குறிப்பிட வேண்டும்.


இயற்கை இலக்கியம் என்ற வகைக்குள் அவ்வளவு எளிதாக இந்த நூலைக் கொண்டுவந்துவிட முடியாது. ‘சிறுவர் வேட்டை இலக்கியம்’ என்ற தனித்த ஓர் இலக்கிய வகையைத் தமிழில் உருவாக்கி அநேகமாக அதன் ஒற்றைப் பதிவாக இந்த நூல் இருக்கிறது. ‘சிறுவர் வேட்டை இலக்கியம்’ என்றாலும் பல வகைகளில் இயற்கை இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பாக இந்த நூல் இருக்கிறது.

பெரியவர்கள் போல் சிறுவர்கள் பணம், பேராசை போன்றவற்றுக்காக வேட்டையாடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது சிறுவர் விளையாட்டு. இந்தக் குறுநாவலின் நாயகனான சிறுவன் வெங்கடேசு, சிறிய அளவில் பறவைகளை வேட்டையாடினாலும், பறவை முட்டைகளைச் சேகரித்தாலும் அடிப்படையில் பறவைகள் மீது பரிவு கொண்டவனாகவும், அவற்றின் அழகை ரசிப்பவனாகவும் இருக்கிறான். இரு இடத்தில், ‘மாமா இந்தப் பறவைகள்தான் எம்புட்டு அழகா இருக்கு?’ என்று வியந்துபோகிறான். மஞ்சளும் பச்சையும் கலந்த தங்க நிறப் பறவையொன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது மோகன்தாஸ் என்ற இளைஞன் அதை வேட்டையாடுவதைப் பற்றிப் பேசும்போது, “மாமா அப்பிடி செஞ்சிராதிங்க எப்பவும்! பிறகு அப்பிடி அபூர்வமான பறவைகளெ நம்ம ஊர்லெ பாக்க முடியாமப் போயிரும்” என்கிறான் வெங்கடேசு.

இதுதான் பெரியவர்கள் உலகுக்கும் குழந்தைகள் உலகுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு. வேட்டை தவறு என்று பெரியவர்களுக்கே இன்னும் புரியவில்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு வந்த நூல் இது என்பதால் அதன் கதாநாயகச் சிறுவனிடம் இது குறித்த விழிப்புணர்வை நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும், வியக்கத் தகுந்த அளவில் இயற்கை பற்றிய அறிவும் வியப்பும் பரிவும் வெங்கடேசுக்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதை அறிந்துகொள்ளும் மோகன்தாஸ், படிப்பைத் தொடரும்படி அறிவுறுத்துகிறான். அதைத் தொடர்ந்து தன் கிராமத்தை விட்டுப் படிப்பதற்காகப் புறப்படுகிறான் வெங்கடேசு, தனது வளர்ப்புப் பிராணி, கிராமத்துப் பறவைகள், பூச்சிகள், வண்டுகள் போன்ற எல்லாவற்றையும் விட்டு.

இந்தக் குறுநாவலில் கதை என்று ஒன்று கிடையாது. பறவைகள், இயற்கையுடன் சில அனுபவங்கள், இயற்கை உலகைப் பற்றிய தொன்மங்கள், சில நினைவுகள் என்று கதை போகிறது. மண்ணுக்கு நெருக்கமாக வாழும் வாழ்க்கையின் கதை இது. நமது இன்றைய சிறுவர்கள் பல மாடி அடுக்ககங்களில் சூரியனையும் மண்ணையும் வானத்தையும் தொலைத்துவிட்டு வாழும் காலத்தில் ‘பிஞ்சுகள்’ நாவல் நம்முள் பெருமூச்சை ஏற்படுத்துகிறது.

‘இயற்கைச் சூழல், பிராணிகள் போன்றவற்றுக்கென்று ஒரு பிரதேசத்தில், ஒரு மொழியில் வழங்கப்படும் சொற்களைத் தெரிந்துகொள்ளாமல் அந்த மண்ணின் பிராணிகளையோ சுற்றுச்சூழலையோ சூழலியலாளர்களால் காப்பாற்ற முடியாது’ என்பார்கள். இன்றைக்கு இயற்கை மீது நிறைய பேருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆர்வம் மண்சார்ந்ததாக இருப்பதில்லை, இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கிறது. மங்குணி ஆமைகளை (ஆலிவ் ரிட்லி ஆமை) காப்பதற்காக திருவான்மியூரில் கூடிய இளைஞர்கள் கும்பலைப் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதியிருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும். அந்த இளைஞர்களெல்லாம் தமிழ்நாட்டுக்காரர்கள்தான். ஆனால், ஒருவர் கூட தமிழில் பேசவில்லை. இதைப் பற்றி எழுதிய சாரு நிவேதிதா, ‘ஆமைகளைக் காப்பாற்றுவது இருக்கட்டும். தமிழ் மொழியை எப்போது காப்பாற்றப் போகிறீர்கள்?’ என்று கேட்டிருப்பார்.

கி. ராஜநாராயணின் இந்த நாவலை இயற்கை இலக்கியமாக மாற்றுவது இதுதான். மண் சார்ந்த சொற்கள், பறவைகள் பெயர்கள் இவற்றில் எத்தனை எத்தனை வகைகள்! பல நேரங்களில் எந்தப் பறவையைச் சொல்கிறார், எந்த உயிரினத்தைச் சொல்கிறார் என்பதை அவர் சொல்லும் சொற்களை வைத்துக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மண்ணின் சொற்களிலிருந்து இன்று நாம் தூர விலகிவந்துவிட்டோம்.

இந்தப் புத்தகத்தில் காகம், புறா, கிளி, மைனா போன்ற எல்லோரும் அறிந்திருக்கும் பறவைகளோடு இடம் பெற்றிருக்கும் பறவைகளின் பெயர்களைப் பாருங்கள்: வாலாட்டிக்குருவி, போர்க்குயில், கருங்குயில், வல்லயத்தான், தேன்கொத்தி, தேன்சிட்டு, தட்டைச்சிட்டு, செஞ்சிட்டு, பூஞ்சிட்டு, பட்டுச்சிட்டு, வேலிச்சிட்டு, முள்சிட்டு, மஞ்சள்சிட்டு, செஞ்சிட்டு கருஞ்சிட்டு, தைலான் பறவை, தாராக்கோழி, தண்ணிக்கோழி. பரவலாக வழங்கப்படும் பெயர்களுக்கு மாற்றாக வேறு சொற்களும் இடம்பெறுகின்றன, (எ.கா) நாணாந்தான் – மைனா.

பூச்சிகள், மீன்கள், தாவரங்கள் முதலான மற்றவை தொடர்பான சொல்களும் அழகானவை: ஏத்துமீன், தூறி, ஈராங்காயம் (வெங்காயம்), ஒட்டுப்புல், கொக்கராளி இலைகள், பல்லக்குப் பாசி, கல்லத்தி, புன்னரசி, குழிநரி, புழுதி உண்ணி,
குங்குமத் தட்டான், பட்டு வண்டு (இன்னொரு பெயர்: இந்திரகோபம்).

சுற்றுச்சூழலாளர்கள், பறவையாளர்கள் கி.ராவிடம் கற்றுக்கொள்வதற்கும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அந்த அளவுக்கு இயற்கையை ‘சொகமாக’ கவனித்துப் பல விஷயங்களை கி.ரா. உள்வாங்கியிருக்கிறார். மைனாக்களின் சொற்களைப் பற்றி இப்படி எழுதுகிறார்: ‘மற்ற பறவைகளைக் காட்டிலும் மைனாக்களிடம் பேச்சுச் சொற்கள் அதிகம். கோழிகளிடம் மொத்தமே ஏழுஎட்டுச் சொற்கள்தான் உண்டு.’ கோழியின் ஒவ்வொரு சொல்லைப் பற்றியும் விவரிக்கிறார். பறவைகளின் இயல்பை நுட்பமாகக் கவனித்திருக்கிறார் என்பது அவர் சொல்லும் ஒரு சொலவத்திலிருந்து நமக்குத் தெரிகிறது: ‘காக்கு (காக்கை) நோக்கு அறியும்; கொக்கு ‘டப்’ அறியும்’.

சுற்றுச்சூழல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்குவதற்கு முன் நம் மண்ணில் ஏற்கெனவே இருக்கும் சொற்களை நாம் ஏறிட்டுப் பார்க்க வேண்டும் என்பதை இந்தப் படைப்பு வலியுறுத்துகிறது. விருந்தாளிப் பறவை, வரத்துப் பறவை, நாட்டுப் பறவை, தாப்பு (வலசை போகும் பாதையில் இடைவழியில் பறவைகள் தங்கி இளைப்பாறிப் போகிற இடம்), பறக்காட்டும் பருவம் (குஞ்சுப் பறவைகளைப் பறப்பதற்குப் பழக்கப்படுத்தும் பருவம்) என்று பல சொற்களை உதாரணம் காட்டலாம்.

இத்தனைக்குப் பிறகும் ஒரு படைப்பாக ‘பிஞ்சுகள்’ நாவலை மதிப்பிட்டால் சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்தபோது கிடைத்த உணர்வு இப்போது கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பறவையின் பெயர் ஒரு சமூகத்தால் மறக்கப்படும்போது அந்தப் பறவை இனமும் அழிய ஆரம்பிக்கிறது. பெயர்களும் பறவைகளைப் போலத்தான். அந்தப் பெயர்கள் நம் மொழியில், நினைவில் பறந்துகொண்டிருந்தால்தான் அந்தப் பெயர்களின் பறவைகளும் வானில் சுதந்திரமாகப் பறந்துகொண்டிருக்கும். இதைதான் கி.ரா-வின் ‘பிஞ்சுகள்’ நினைவுபடுத்துகிறது.

(நன்றி: ஆசை)

More Reviews [ View all ]

அகமறியும் ஒளி

ஜெயமோகன்

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

ராமமூர்த்தி நாகராஜன்

ஏழு அரசியல் நாவல்கள்

யமுனா ராஜேந்திரன்
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp