இந்தியாவின் பெண் இலக்கிய ஆளுமைகளில் கமலா தாஸ் முக்கியமானவர். மலையாள இலக்கிய உலகத்தில் மாதவிக்குட்டி என்ற பெயரிலும், ஆங்கிலத்தில் கமலா தாஸ் என்ற பெயரிலும் புனைகதைளையும் கவிதைகளையும் எழுதியவர். ‘மலையாள நாடு’ வார இதழில் தன்னுடைய சுயசரிதையை ‘என்டெ கத’ (என் கதை) என்ற பெயரில் தொடராக இவர் எழுதத் தொடங்கினார். பிறகு அது மலையாளத்தில் ‘என்டெ கத’ என்ற பெயரி்ல் புத்தகமாக வெளிவந்தது. ‘மை ஸ்டோரி’ (My Story) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ‘தி கரண்ட்’ வார இதழில் தொடராக எழுதியது 1977-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.
கமலா தாஸ் தன் சுயசரிதையை எழுதத் தொடங்கியதி லிருந்தே அது பல தரப்பிலும் சர்ச்சைகளை உருவாக்கியது. அவர் தன்னுடைய வாழ்க்கையை நேர்மையாகவும், பட்டவர்த்தனமாகவும் பதிவுசெய்திருந்துதான் இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணம். “‘மலையாளப் பதிப்பைவிட அதிகமான வசவுகளை ஆங்கிலப் புத்தகம் வாங்கிக் கொடுத்தது. ஆங்கிலம் பேசினாலும் மலையாளத்தில் பேசினாலும் மரபான இந்திய மனம் ஒரே மாதிரித்தான் இருந்தது” என்ற கமலா தாஸின் இந்த வாசகங்கள் பல உண்மைகளை உணர்த்துகின்றன. ஆனால், இந்தச் சுயசரிதை மொழி நடைக்காகவும் உண்மைத்தன்மைக்காகவும் அதிகமாகப் பாராட்டப்பட்டது என்பதும் முரணான ஓர் உண்மை.
இந்தச் சுயசரிதையில் கமலா தாஸ், பெண்ணின் மீது கலாச்சாரம், மரபு, ஒழுக்க நெறி என்ற பெயரில் இந்தச் சமூகம் சுமத்தியிருக்கும் பல கட்டுப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். பெண்ணின் இருப்பை மட்டுமே பதிவுசெய்துவந்த இந்திய இலக்கிய உலகில் முதன்முறையாகப் பெண்ணின் அக வாழ்க்கைக் கனவுகளையும் வேட்கைகளையும் வெளிப்படையாகப் பேசினார். ஒரு பெண்ணின் தனிமை என்பது திருமணம், காதல், காமம் போன்றவற்றை கடந்துநிற்பது என்பதைப் பதிவுசெய்தார்.
கமலாவின் தாயார் பாலாமணியம்மா ஒரு கவிஞர். அவருடைய தந்தை வி.எம். நாயர் ‘மாத்ருபூமி’ நாளிதழின் இயக்குநர். கேரளாவில் நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த கமலாவின் திருமணம், பதினைந்து வயதில் அவரைவிடப் பல வருடம் மூத்தவரான மாதவ தாஸுடன் நடக்கிறது. இந்தப் பொருத்தமில்லாத திருமணத்தில் காதலையும், பரிபூரணமான அன்பையும் தேடித் தேடிக் களைத்துப்போகிறார் கமலா. அவரால் தன்னுடைய முதலிரவைத் ‘தோல்வியுற்ற வன்புணர்ச்சி’யாகவே பார்க்கமுடிகிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் திருமணம், காதல், காமம், நம்பிக்கை, துரோகம், தனிமை, மனநிறைவு, ஆன்மிக தேடல் போன்றவற்றின் நேர்மையான பதிவாக இந்த சுயசரிதையைச் சொல்லலாம். கமலா தாஸின் பரிபூரண அன்புக்கான தேடல் நிறைவேறாத தேடலாகவே கடைசிவரை தொடர்கிறது.
இருபத்தேழு அத்தியாயங்களில் எழுதப்பட்டி ருக்கும் இந்தச் சுயசரிதை, ஒரு பெண்ணின் இருப்பை ஒழுக்க நெறிக்குள் அடக்கிவைக்க முடியாது என்பதை விளக்குகிறது. கமலாதாஸின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், “சமுதாயம் என்கிற திருட்டுக்கிழவி உருவாக்கிய கசாப்புக்கூடமே ஒழுக்க நெறி. உண்மையைக் கண்டு அஞ்சுபவர்களையும் பொய் பேசுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் கருக்கலைப்பு செய்பவர்களையும் நீலிக் கண்ணீர் வடிப்பவர்களையும் கிழவி இரவு வேளையில் தனது கம்பிளியால் பாதுகாக்கிறாள். மனத்தின் சைதன்யத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் உடலின் அழிவையும் அற்பத்தனத்தையும் புரிந்து வைத்திருக்கும் சத்தியவான்களும் கம்பிளியின் பாதுகாப்புக்கு வெளியில் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைக் கண்ட சமுதாயக் கிழவி வாய்விட்டுச்சிரிக்கிறாள்”.
இந்தப் புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழில் நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார்.
(நன்றி: தி இந்து)