இராமாயணம், மகாபாரதம் எனும் காவியங்கள், பதினெட்டுப் புராணங்கள் என்னும் கதைக் குவியல்களில் இடம்பெற்ற பாத்திரங்களிலேயே மக்கள் மனம் கவர்ந்த, அவர்கள் நேசத்துக்குரிய பாத்திரமாக கர்ணனே இருக்கிறான். சாதி காரணமாகத் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் உதாசீனத்திலேயே வாழ்ந்தவன் கர்ணன். வெகுமக்கள் மனதில் தருமனை விட, அர்ச்சுனனை விட மேலான இடம் பெற்றவனாக இருக்கிறான் கர்ணன். காலம் காலமாக ஒடுக்கப்பட்டும், இழிவு செய்யப்பட்டும் வாழ்ந்துகொண்டிருக்கிற உழைக் கும் மக்கள், தங்களில் ஒருவனாகவே கர்ணனைப் பார்த் தார்கள்.
கர்ணனை துரியோதனன் அங்கதேசத்து மன்னனாக முடிசூட்டுகிறான். அவ்விழாவுக்கு வந்த கர்ணனின் வளர்ப்புத் தந்தை ரதமோட்டி அதிரதன், மகன் கர்ணனை அணைக்கிறான்.
அத்தனைப் பெரியக் கூட்டத்தில் பீமன், கர்ணனைப் பார்த்து ‘‘தேர்ப் பாகன் மகனே! உன் குலத்துக்குரிய குதிரைச் சவுக்கை எடுத்துக் கொள். யாக உணவை நாய் விரும்பலாமா? உனக்கு அங்க தேசத்து அரசனாக என்ன தகுதி?’’ என்கிறான்.
குருசேத்திரப் போரில் கர்ணனுக்கு சாரதியாகச் சல்லியனை வேண்டுகிறான், துரியோதனன். சல்லியன், கர்ணன் சாதியைச் சொல்லி மறுக்கிறான். போர்க்களத்தில் தொடர்ந்து அவமானப்படுத்துகிறான் சல்லியன். துரோணரும், பீஷ்மரும் அவனை இழித்துரைக்கிறார்கள்.
தமிழ் நாட்டார் மரபில் ‘பொன்னுருவி மசக்கை’ என்ற அம்மானை 1,724 வரிகள் கொண்டது. கர்ணனின் மனைவியாக நாட்டுக் கவியால் உருவாக்கப்பட்டவள் பொன்னுருவி. மனைவி பொன்னுருவியால் கர்ணன் பட்ட அவமானம் மிகப்பெரியது. கிருஷ்ணன் யோசனை சொல்ல, மனைவியை மயக்கி அவளுடன் உறவு கொள்கிறான் கர்ணன். பொன்னுருவியோ ‘இழிகுலத்தான் என்றனைத் தீண்டலாமோ, தேர்ப்பாகன் என்று சொல்லித் தீண்டாமல் நான் இருந்தேன்’ என்று பேசுபவள். ‘‘நான் இப்போது மாசடைந்துவிட்டேன்’’ என்கிறாள். இதுதான் கர்ணன் வாழ்க்கை. கர்ணன் இறந்து, தாய் குந்தி அவனை மடியில்போட்டு ‘‘மகனே’’ என்றவுடன், கர்ணன் மேல் இருந்த சாதி இழிவு நீங்கியதாம். அவன் உயர்சாதிப் பிணமானான்.
கர்ணன் ஜீவிதமும், மரணமும் சாதா ரண மக்களின் மனசாட்சியைத் தொட்டு அவர்களின், குற்றவுணர்ச்சியைக் கிளறிவிட்டிருக்கிறது. இதன் வெளிப்பாடு தமிழகத்தின் சில பகுதியில், முதியவர்கள் இறப்புச் சடங்கில் 16-ம் நாள் இரவில் ‘கர்ண மோட்சம்’ தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடப்பதைக் காண்கிறோம்.
சாதாரண மக்கள் என்று அசாதாரணர்களால் கருதப்படும் அவர்கள் தத்துவம், தர்க்கம், ஞானம், எதையும் பார்ப்பதில்லை. மனிதத்தை மட்டுமே முன்நிறுத்துகிறார்கள். அதுதான் நாட்டார்களின் வாழ்க்கைப் பார்வை .
தமயந்தி, நளன் மனைவி. ராமனின் மனைவி சீதையைப் போலப் பழி சுமந்தவள். மனைவியைச் சந்தேகிப்பது, இழிவு செய்வது முதலான மொண்ணை ஆண் மதிப்பில் ராமனை நிகர்த்தவன் நளன். கணவர்கள் தம்மை இழிவு செய்தபோது மனைவிகள் அதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது முக்கியமான விஷயம். நாட்டார் மரபு இந்தக் குணங்களைக் கட்டமைக்கிறது.
திரவுபதி தருமனிடம் விவாதித்தது, ராமன் தம்பி சத்துருக்கன் மனைவி சுரதகீர்த்தி ராமனிடம் விவாதித்தது, நளன் மனைவி தமயந்தி ஆவேசப்பட்டு நளனிடம் பேசியது போன்றவை நாட்டார் மரபின் மரியாதைக்குரிய பங்களிப்புகள்.
தமயந்தி நளனை நேசித்து மணக்க இருப்பவள். சுயம்வரத்தில் இந்திரன் முதலிய தேவர்களே அவளை விரும்பி வருகிறார்கள்.
இந்திரன், நளனையே தன் தூதுவனாகாத் தமயந்தியிடம் அனுப்புகிறான். ‘நளனே தன்னை இந்திரனுக்கு சிபாரிசு செய்கிறான்’ என்பதை அறிந்து கொதித்து எழுகிறாள் தமயந்தி.
‘‘குதிரையின் ரகசியம் அறிந்தவர் நீர். குதிரையின் புத்திதான் உமக்கும் இருக்கிறது. உம் மீது உயிரையே வைத்திருக்கிற என்னிடமா இப்படிப் பேசுகிறீர்? ஒரு அரசனுடைய கடமை, பண்பு, அஞ்சாமை போன்றவற்றை விட்டுவிட்டு தூது வந்திருக்கிறீரே. ஒரு பெண்ணின் மனதைப் புரியாதவரைக் காதலித்துவிட்டேனே!’’ தமயந்தி அவனைப் பழிக்கிறாள். தமயந்தியின் விவாதம் அறிவுபூர்வமாக விளக்கப் படுகிறது.
நளன் சூதாடித் தன் சொத்துகள் அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறான். நளனை வெறுப்போடு பேசுகிறாள். சொல்ல வேண்டிய அறிவுரையைச் சரியான நேரத்தில் நிகழ்த்துகிறாள்.
‘ ‘நீர் படித்த படிப்பும் என்னிடம் காட்டிய அன்பும் பொய்யா? நம் இரண்டு ஆண் பிள்ளைகளின் கதி என்ன என்பதை யோசித்துப் பார்த்தீரா?’’ என்று கேட்கிறாள். ஒருகட்டத்தில் ‘ ‘பொறுப்பில்லாத கணவனுடன் வாழும் மனைவி வாழ்வின் எல்லா நிலையிலும் முடிவெடுக்க உரிமையுடையவள். தான் பெற்ற குஞ்சைத் தின்ன முற்படும் நண்டிடம் இருந்து அதன் குஞ்சுகள் வெளியேறலாம்தானே?’’ தன்மேல் ‘பாலியல் சந்தேகம்’ கொள்ளும் நளனியுடன் தமயந்தி இப்படி கேட்கிறாள்
‘‘சூது விளையாடி நாட்டைத் தொலைத்த ஒருவன், நடுக்காட்டில் ஓராடையுடன் கூடிய மனைவியைத் தனியே விட்டவர் பேசுகிற பேச்சா இது? கணவனைத் தேட மனைவி செய்த உபாயம் இது என்று கண்டுபிடிக்க முடியாத அரசன், ஒரு நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்? தர்ம பத்தினிகளைப் பழிப்பதற்காக ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம் சந்தேகம். குதிரையுடன் பழகுபவன் உன் புத்தி எப்படி யோசிக்கும்?’’
நாட்டார் மரபின் மனிதார்த்தங்களை இவ்வாறு தேடிக் கொடுத்திருப்பவர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்றியியலில் பெரும் பங்காற்றியவர். 56 புத்தகங்களின் ஆசிரியர். தமிழகம் முழுக்க ‘நாட்டார் கலை’ குறித்து ஆராய்ந்தவர். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர். இவர் எழுதிய ‘சீதையின் துக்கம் தமயந்தி ஆவேசம்’ என்ற நூலில் இடம்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளில் சில பகுதிகள்தான் நீங்கள் மேலே படித்தது. ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் இது.
இதே ஆவேசம் கொண்டு பேசிய இன்னொரு பெண் சுரதகீர்த்தி. ராமன் தம்பி சத்துருக்கனின் மனைவி இவள். ராமன் தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பும் முடிவைக் கேட்டு, ராமனிடமே நேருக்குநேர் விவாதிக்கிறாள்.
யாரோ ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றிக் கிளப்பிய வதந்தி அல்லது வம்புப் பேச்சைக் கேட்டு அவளைக் காட்டுக்கு அனுப்புவதை, சத்துருக்கன் மனைவி சுரதகீர்த்தி எதிர்க்கிறாள். ‘‘ராமராஜ்யம் என்பது ஆண் - பெண் அனைவருக்கும் பொது என்பதுதான் அறம்’’ என்று விவாதிக்கிறாள் சுரதகீர்த்தி. ‘ராமன் தன் உள்மனதில் நம்பிய சீதையைப் பொதுஜனங்களைத் திருப்தி செய்ய காட்டுக்கு அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்’ என்பது அவளது வாதம். ஆனால், ‘ஒரு சக்கரவர்த்தியின் முன் உண்மையும் யதார்த்தமும் நிற்காது என்னும் பொதுவிதியின்படி சீதை மறுபடியும் காட்டுக்கு அனுப்பப்படுகிறாள்…’ என்று எழுதும் அ,கா.பெருமாள் அவர்கள் வில்லுப்பாட்டில் இருந்து எடுத்து எழுதுகிறார்.
‘‘சூது விளையாட்டில் மனைவியைப் பணயம் வைப்பவரை நாட்டு மன்னராக எப்படிக் கருத முடியும்? இது ராஜ நீதிக்கு உகந்ததா?’’
இந்தப் பேச்சைப் பீமன் ஆதரிக்கிறான்.
‘‘குந்தி இருவரையும் சமாதானப்படுத்துகிறாள். இங்கும் யதார்த்தமும் தனிமனித உணர்ச்சியும் பேணப்படுகின்றன. பெண்களுக்கான இடமும் நியாயமும் வரையறை செய்யப்படுகின்றன.’’
சிறந்த பல கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் அரவான் பற்றிய கட்டுரை மிக முக்கியமானது. ‘எதிர்ரோமம் உடையவள்’ என்ற தலைப்பில் நிறைந்த உழைப்பையும் தகவல்களையும் கொண்டது.
சகாதேவனிடம் துரியோதனன் பாரதப் போர் வெற்றியடைய வேண்டுமானால் யாரைக் களப்பலி கொடுக்கலாம் என்று கேட்கிறான். அந்தத் தகுதி உடையவர்கள் மூன்றுபேர். ஒருவன் கிருஷ்ணன், மற்றவன் அர்ச்சுனன், மிகுதிப்பட்டவன் அரவான். அரவான் களப்பலிக்கு ஒப்புக்கொள்கிறான்.
அர்ச்சுனனின், ஒரு வனவாசத்தின்போது நாகலோக இளவரசியான உலூபியைக் காண்கிறான். இருவரின் காதலில் பிறந்தவன் அரவான். பாண்டவரின் ஆட்சி அதிகாரத்தில், பெருமையில் எந்தப் பங்கும் கொண்டவன் இல்லை அரவான். தந்தையால் எச்சுகமும் அறியாதவன். ஆனாலும் தந்தையும் பாண்டவர்களும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வருகிறான் அந்த வீரன்.
இது நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான அம்சம். நாட்டுக்காக, அரசனுக்காகத் தன் உயிரை தானே அளித்தல், வெகுமக்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்பாடுடன், அரவான் பற்றிய கதைகளோடு, இன்றைய திருநங்கைகள் பற்றிய சடங்குகளையும் இணைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை.
தமிழ்ப் பண்பாட்டுக்கும் கூத்துக் கலை வளர்ச்சிக்கும் செழுமையான பங்களித்த கதைகள். பாட்டுகள், சடங்குகள் என நாட்டார் ஆக்கங்கள் பலவற்றைக் குறித்த பல புதிய புரிதல்களை ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்’ என்ற இந்த நூல் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறது.
(நன்றி: தி இந்து)