திராவிட இயக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டி ருக்கும் இந்த நேரத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை நினைவுகூர்வது சரியானதாக இருக்கும். காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என மூன்று இயக்கங்களில் பங்காற்றிய பெருமை இவருக்கு உண்டு. தேவதாசி முறையிலிருந்து பெண்களை விடுவிப்பதற்காகப் போராடியவர்களில் ராமாமிர்தம் அம்மையார் முன்னோடியாகத் திகழ்கிறார்.
இவருடைய வாழ்க்கையை ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’என்ற பெயரிலேயே புத்தகமாக எழுதியிருக்கிறார் மு. வளர்மதி. இந்தப் புத்தகம் இவரது வாழ்க்கையை மட்டும் பதிவுசெய்யாமல், அந்தக் காலகட்டத்தில் பொதுவாழ்வில் பங்கெடுத்துக்கொண்ட பல பெண்களையும் அறிமுகம் செய்கிறது. அத்துடன், தேவதாசி முறையைப் பற்றியும் அதை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளையும் விரிவாக அலசுகிறது.
வறுமையின் காரணமாக பெற்றோரால் ஐந்து வயதிலேயே கைவிடப்படும் ராமாமிர்தம் அம்மையார், ஆச்சிக்கண்ணு அம்மாள் என்ற தாசிக்குலப் பெண்ணால் வளர்க்கப்படுகிறார். அதனால், தேவதாசி குடும்ப வழக்கப்படி அவருக்குக் கல்வி, இசை, நாட்டியம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பதினேழு வயதானவுடன் கோயிலில் பொட்டுக்கட்டுவதற்கு அவருடைய வளர்ப்புப் தாயார் முடிவுசெய்தார். ஆனால், ஆண் வாரிசு வயிற்றுப்பெண் என்பதால் அவருக்குப் பொட்டுக்கட்ட கோயில் பஞ்சாயத்து மறுத்துவிட்டது. இப்படித் தாசியாக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர், துணிந்து தன்னுடைய இசை ஆசிரியர் சுயம்பு பிள்ளையைக் காதல் மணம் புரிந்துகொண்டார். இந்தத் திருமணம் சமூகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இருவரும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
சிறுவயதிலிருந்தே தேவதாசி முறை என்ற பெயரில் பெண்கள் அனுபவித்து வந்த கொடுமைகளைப் பார்த்து வளர்ந்ததால், அதை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார். இவருடைய புரட்சிகரமான பல்வேறு செயல்பாடுகளையும் சொற்பொழிவுகளையும் இந்தப் புத்தகம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது. 1925-ம் ஆண்டு, ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக மாயவரத்தில் ஒரு பெரிய மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டைப் பற்றி திரு.வி.க தன்னுடைய ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் விளக்கியிருப்பது இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் ராமாமிர்தம் அம்மையார் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் காணமுடிகிறது. ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’என்பது ராமாமிர்தம் அம்மையார் எழுதிய நாவல். இந்த நாவல் உருவான பின்னணி, அவருடைய முக்கியமான கட்டுரைகள் போன்றவற்றை யும் இணைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். ஆங்காங்கே இருக்கும் எழுத்துப்பிழைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சுகமான வாசிப்பு அனுபவத்தை அளித்திருக்கும்.
தன்னை வளர்த்த தாயின் பெயரின் முதலெழுத்தைத் தனது பெயருக்கு முன்னால் சேர்த்து, சென்ற நூற்றாண்டி லேயே ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார். அத்துடன், தாசி இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட ஓர் இளம்பெண்ணைத் தன் மகன் செல்லப்பாவுக்கே திருமணம் செய்துவைத்திருக்கிறார். பல திருமணங்களுக்குச் சென்று தேவதாசிகளைத் திருமணம் செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார். பிரச்சாரத்தோடு மட்டும் நிற்காமல் அதைத் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்பற்றி வாழ்ந்துகாட்டியிருக்கிறார் ராமாமிர்தம் அம்மையார்.
(நன்றி: தி இந்து)