உலகச் சரித்திரம் கற்பித்த மன்னர்களின் யுத்தங்களுக்கான நோக்கம் என்பது, நிலம், நீர், மனித வளத்தோடு வீரத்திற்கானதாகவும் இருந்தன. குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயதானவர்கள், பசுக்கள், அத்துடன் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற பொது இடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றிப் போருக்கான அறம் காக்கப்பட்டது. சமீபத்திய இனப்போர்களின் உள் அரசியலில், வஞ்சத்தின் உச்சமாக மனிதக் காடுகளைத் தீ வைத்து கொளுத்துகின்றனர். மயிர் பொசுங்கும் பிண வாடையைச் சுவாசித்து, புல் பூண்டு முளைக்காத விஷம் தோய்ந்த உயிரற்ற நிலத்தைக் கையகப்படுத்தி வெற்றி என எக்காளமிடுவது எவ்வகையில் அறச் செயலாகும்? அப்படியான நியாயமற்றவைகளில் ஒன்று பொஸ்னிய யுத்தம்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன், தொன்மத்தின் அடையாளமாக உலக மக்களைக் கவர்ந்த நாடு பொஸ்னியா. சோசலிசக் குடியரசு நாடாகச் சகோதரத்துவமான மக்களைக் கொண்டது யூகோஸ்லாவியா. மூன்றாம் உலக நாடுகளைப் பிரித்து ஆளும் மேற்கு ஐரோப்பியர்களின் வரைபடத்தில் சிக்கியது இந்த யூகோஸ்லாவியா நாடு. ஒரு கட்டத்தில் சோவியத் யூனியனுடன் உறவை முறித்துக்கொண்டு, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்தி, கடன் உதவிகளைப் பெற்று வந்தது. “டிட்டோ” அவர்களின் மறைவிற்குப் பின் புதிய சனாதிபதியாக பொறுப்பேற்றவர் ‘மிலோசவிச்’. மத்திய அரசாங்கம் பலவீனப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா மற்றும் பொஸ்னியா போன்ற நாடுகள் தங்களுக்கான சுதந்திரத்தை பிரகடனம் செய்தன. தேசியவாதிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தச் சந்தர்ப்பத்தால் பொஸ்னியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் செர்பியர்கள் (Serbs), கத்தோலிக்கர்களான குரோவாசியர்கள் (Croats), முஸ்லீம்களாக மாறிய (துருக்கி ஆட்சி காலத்தில்) செர்பியர்கள் மற்றும் பொஸ்னிய முஸ்லீம்கள் (Bosnia muslims). இவர்கள் பேசும் பொதுவான மொழி செர்போ – குரோவாசியா. அத்தனை ஒற்றுமையோடு இணக்கமாகப் பொஸ்னியாவில் வாழ்ந்த இந்த மூன்று சமூகங்களில் இருந்தும் மதப்பிரிவினைகளைத் தூண்டும் தீய சக்திகள் புரையோடின. பொஸ்னியா தனி ஆட்சி அமைத்தால் பெரும்பான்மையினரான இஸ்லாமியர்கள் வசம், ஆட்சி அதிகாரம் போகக்கூடும் என்கிற வக்கிரத்தை மதவாதிகள் கிளர்த்தினர். வந்தேறிகளாக வெளியேற்றப்படும் அச்ச உணர்வில் சிறுபான்மையினராக வாழ்ந்த குரோவாசியரையும் செர்பியரையும் ஆயுதம் ஏந்திய அமைப்பாக மாற்றினர். தேசிய இராணுவம் பொஸ்னிய முஸ்லீம்கள் பொறுப்பில் வந்தபிறகு, சுதந்திரம் அடைந்த குரோவாசியாவின் உதவியுடன் பொஸ்னிய குரோவாசியர்கள் ஆயுதக் குழுக்களாக மாற்றப்பட்டனர். பொஸ்தானிய எல்லைக்குள் போர் துவங்கியது. மூன்று சமூகங்களின் ஆயுதக் குழுக்களும் துளியும் இரக்கமின்றி மனித உரிமைகளை மீறின. 1990-இல் தொடங்கி விடாது நான்கு ஆண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் குடித்த போர். இறுதியில் வழக்கம்போல் அமெரிக்கா தலையிட்டது. செர்பியக் குடியரசில் செர்பியர்கள். பொஸ்னியக் குடியரசில் குரோவாசியர்களும் முஸ்லீம்களும் என ஒரு தலைமையின் கீழ் இரண்டு குடியரசுகள் பிரிக்கப்பட்டன. இதற்கான முதலாளித்துவ தேசிய அரசியல் பங்கீடு என்பது இந்த நாட்குறிப்பில் அடங்காத தனித்த கதை.
ஹெர்ஸகோனாவைத் தலைநகராகக் கொண்ட சராஜூவோவின் (Sarajevo) போர்க்காலங்களில் உணவு, உறக்கம் இன்றி, பீரங்கிகளின் திடும் ஒலியில், மரண பயத்தோடு, பதுங்கு குழியில் பதுங்கிக்கிடந்த ஒரு சிறுமி எழுதிய நாட்குறிப்பு இந்தப் புத்தகம். ஸ்லெட்டா ஃபிலிப்போவிக். சராஜீவோ பகுதியில் வசித்த பதினோறு வயது சிறுமி. அப்பா மாலிக் வக்கீல், அம்மா அலைகா வேதியியல் நிபுணர். வசதியான குழந்தையின் எண்ணற்ற கனவுகளோடு பாடல், நடனம், இலக்கியம், விருந்துகள், கொண்டாட்டங்கள் எனத் துள்ளித் திரிந்தவள். (1992 – மார்ச்- 1 இன் போர் தொடங்கிய முந்தைய நாள் வரை) இந்த நாட்குறிப்பிற்கு ‘மிம்மி’ எனப் பெயர் சூட்டுகிறாள். 1991 ஆம் ஆண்டு செப்டம்பர். 2, திங்கட்கிழமையில் இருந்து 1993- அக்டோபர்.17 ஞாயிறு வரையிலான காலகட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“என் பின்னால் நீண்ட வெப்பமான கோடை விடுமுறை. என் முன்னால் ஒரு புதிய பள்ளி ஆண்டு” என ஸ்லெட்டா எழுத ஆரம்பிக்கிறாள். கடற்கரையிலும், மலைகளிலும், கிராமப் புறங்களிலும், வெளிநாடுகளிலும் கழிந்த விடுமுறை நாட்களை மிர்னா, ஆஹா, போஜனா, மாரிஜானா, இவானோ, மாஸா, அஸ்ரா, மினெலா, நட்ஸா போன்ற தன் சக தோழிகளிடம் பகிரவும் கேட்கவும் ஆர்வமாக இருக்கிறாள்.
இசைப்பள்ளி துவங்குகிறது. பியானோவும், சோல்ஃபெகியோவும் கற்கிறாள். டென்னிஸ் பயிற்சிக்கு செல்கிறாள். அமெரிக்காவின் ‘சிறப்பான 20’ நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பவள். படிப்பில் முதல் தர தேர்ச்சி பெறுபவள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் பெற்றோர்களுடன் குரோனோடினா அல்லது ஜஹோரினா (பனிச்சறுக்கு நடைபெறும் உலகின் மிக அழகான மலை) செல்லக்கூடியவள். பழத்தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான வீடு. அங்குதான் அவள் தாத்தா, பாட்டி வாழ்கின்றனர். சுத்தமான காற்றை, அழகான கிராமத்தை எனக்குத் தேடுகிறது.” குரோனோடினா கமகமவென்றிருக்கிறது. அது என்னைப் பேணுகிறது. அது என்னைத் தழுவிச் செல்கிறது” என இயற்கையோடு தன்னை இயைத்து பறவைகளை, பூக்களை ரசித்து வாழப்பழகியவள். ஹெர்பேரியத்தில் வைப்பதற்காக விதவிதமான இலைகளை சேகரிக்கிறாள். மைக்கேல் ஜாக்ஸன் பாடல் கேட்கிறாள். “கண்ணாடியில் மனிதன்” எனக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணமிருக்கிறது. நான் மடோனாவின் ரசிகர் மன்றத்தில் இணைய முயற்சி செய்யப்போகிறேன். உண்மையிலேயே நான் பைத்தியக்காரிதான்” எனக் குறிப்பிடுகிறாள்.
நியூ கிட்ஸ் ஆன் தி பிளாக், துப்பாக்கிகளும் ரோஜாக்களும், நிர்வாணா, எனக்கு நினைவில்லை, pet shop boys குழுவினர் வாசித்த was it worth it? போன்ற நிகழ்ச்சிகளை டயல் எம்.டி.வி இல் பார்க்கிறாள். “oops, ‘பக்ஸ் பன்னி’ படம் ஓடுகிறது. நான் பார்க்க வேண்டும்” துள்ளிக் குதிக்கிறாள். நோட்டுப் புத்தகத்தில் லிண்டா இவான் ஜெலிஸ்டா, கிளாடியா ஷிஃபர், சின்டி கிராஃபோர்ட், யாஸ்மின், லீ பான் ஆகியோரின் புகைப்படங்களை சேகரித்து ஒட்டி வைத்திருக்கிறாள். போரின் துயர காலங்களிலும், அம்மா, நான் உன்னை நேசிக்கிறேன், கழுகுகள் அதிகாலையில் பறக்கின்றன, குட்டி டோடோ முதலான புத்தகங்களை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிக்கிறாள். இத்தனை கலை ஆர்வம் மிக்கவள். போரின் வெறித் தாக்குதலில் எப்படி நிலைகுலைந்தாள் என்பதை நாட்குறிப்பில் கூறுகிறாள்.
துப்ரோவ்னிக்கில் போர். நகரம் மோசமாகக் குண்டு வீச்சுக்கு உள்ளாகி இருக்கிறது. தொலைக்காட்சி செய்தியில் மக்களின் அவலத்தைக் காண்கிறாள்.
“சில சேமப் படையினர் மோன்டேக்ரோவிலிருந்து ஹெர்ஸகோவினாவினுள் நுழைந்திருக்கின்றனர். ஏன்? எதற்காக? எனக்கு அரசியல் புரியாதோ என்று தோன்றுகிறது. ஸ்லோவேனியா மற்றும் க்ரோஷியாவை அடுத்து, போர்க்காற்று இப்போது பொஸ்னியா – ஹெர்ஸெகோவினாவை நோக்கி வீசுகிறதோ?- இல்லை. அது நடக்காது.” என முதல்முறையாகப் போர்மீதான பயமும் குழப்பமும் தோன்றுகிறது. சராஜிவோவில் அவளது இல்லத்தில் டிசம்பர் 3 அவளுக்குப் பிறந்தநாள். கிண்ணங்கள், தட்டுகள், பொம்மைகள், ஆப்பிள்கள் எனத் தோழிகளுடன் உற்சாகமாக இருக்கிறாள்.
1992- மார்ச்.1 சராஜீவோவை போர் நெருங்குகிறது. சிறிய கும்பல் ஒன்று செர்பியன் திருமண விருந்தினர் ஒருவரைக் கொன்று, பாதிரியாரை காயப்படுத்தியது. மார்ச் 2 நகரம் முழுவதும் பாதுகாப்பு வேலிகள். ரொட்டி கூட இல்லை.தெருக்களில் மக்கள் வெளியே வந்தனர். “போஸ்னியா, போஸ்னியா” சராஜீவோ, சராஜீவோ” இணைந்து வாழ்வோம். வெளியே வாருங்கள்” எனக் கதறுகிறார்கள். நான் என் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காக மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறேன். முடியவில்லை. நகரில் ஏதோ நடக்கிறது. குன்றுகளில் இருந்து துப்பாக்கி சப்தம். நகரத்தை விட்டு சாரை சாரையாக மக்கள் வெளியேறுகிறார்கள். மிம்மி நான் போரைக் கண்டு பயப்படுகிறேன். பதுங்கு குழியினுள் சென்றுவிடுவோம். நம்பிக்கை இழந்துவிட்டேன். தேவை இப்போது சமாதானம். நகரத்தின் புதிய பகுதிகளான டோப்ரின்ஜா, மோஜ்மிலோ, வோஜ்னிகோ, போல்ஜே இவை அனைத்தும் குண்டுவீச்சால் அழிக்கப்படுகின்றன. சராஜீவோவில் பயங்கரம். குண்டுகள் விழுகின்றன. மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். இரவை நிலவறையினுள் கழிக்கிறாள். எல்லோரும் போய்விட்டனர். நண்பர்கள் இல்லாமல் தனித்து விடப்படுகிறாள். அவளின் மஞ்சள் வண்ணப் பாடும்பறவை ‘சிக்கோ’ உணவின்றி இறக்கிறது. அழுகிறாள். சனாதிபதியை கடத்திவிட்டனர். தபால் அலுவலகம் தீச்சுவாலையினுள் இருந்ததைப் பார்க்கிறாள். பயங்கரமான காட்சி. நினா மாசற்ற சிறுமி. மழலையர் பள்ளிக்கு ஒன்றாகச் சென்றோம். எறிகுண்டு வெடிப்பில் சிதறிப் பாய்ந்த சில்லுகளில் ஒரு துண்டு அவள் மூளையில் தங்கிவிட்டது. நினா இறந்துவிட்டாள். முட்டாள்தனமான போருக்கு பலியாகிவிட்டாள். அம்மா வேலை செய்யும் இடமான வோடோப்ரைவ்ரெடா நெருப்புக்குள் இருக்கிறது. அம்மா மனமுடைந்து அழுகிறாள். அவளுடைய வருடக்கணக்கான உழைப்பும் முயற்சியும் எரிகிறது. சுற்றிலும் கார்கள் எரிகின்றன. மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. கடவுளே, ஏன் இது நடக்கிறது? “நான் பைத்தியமாகிவிட்டேன். எனக்குக் கதற வேண்டும். எல்லாவற்றையும் உடைக்க வேண்டும் போல் இருக்கிறது. அம்மாவின் நண்பர். அவசர சிகிச்சைபிரிவு மருத்துவர் மரணித்துவிட்டார்.
1992. மே.25 – ஸெட்ரா பொதுக்கூடமும், ஒலிம்பிக் ஸெட்ராவும் தீக்கிரையாகின. அந்த ஒலிம்பிக் அழகை உலகம் முழுவதும் அறியும். படுகொலை! கொன்று குவிப்பு! பயங்கரம்! குற்றம்! இரத்தம்! ஓலங்கள்! கண்ணீர்! பரிதவிப்பு! பாலத்தின் வழியே அம்மா ஓடி வருவதைப் பார்த்தேன். அவள் வீட்டினுள் வந்ததும் குலுங்கிக் குலுங்கி அழுதாள். துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்களைத் தான் பார்த்ததாகக் கண்ணீர் விட்டாள். பயங்கரமான நாள். மறக்க முடியாது. பயங்கரம்! பயங்கரம்!
மாநகர மகப்பேறு மருத்துவமனை எரிந்து விழுகிறது. ஸ்லெட்டாவின் அறையில் குண்டும் சிதறிப் பாய்கின்ற சில்லுகளும் மிக அருகே அவளைத் தொடாமல் கடந்து சென்றிருந்தன. சிறிய சில்லையும் எரி குண்டின் நுனியையும் பெட்டியில் பாதுகாக்கிறாள். பயங்கரம். இந்த வார்த்தையை எத்தனை தடவை எழுதினேன் என்று தெரியவில்லை. எங்களுக்கு பயங்கர நடுக்கம். இங்கே கழியும் நாட்கள் முழுவதுமே நடுக்கம். 150 வருடங்கள் பழமையான எங்கள் கிராமத்து வீடு சாம்பலாகிவிட்டது. தண்ணீர் இல்லை, உணவு இல்லை, மின்சாரம் இல்லை. புதுமை நாடக நடிகர் நாரிமின் டியூலிக் தன் இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். மோசம். மோசம். மிக மோசம். தொடர்ந்து மக்களைக் கொல்கிறார்கள் கொலைகாரர்கள் என்கிறாள்.
ஜீலை எட்டாம் தேதி எங்களுக்கு உலக நாடுகளின் பொட்டலம் கிடைத்தது. மனிதநேய உதவி. அழகிய மரபில் வந்த நாய்கள் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றன. உணவளிக்க ஏதுமில்லை. அவற்றின் எஜமானர்கள் அனேகமாக அவற்றைப் போக விட்டுவிட்டார்கள். மிருகங்கள் கூடத் துன்பப்படுகின்றன. அவற்றையும் இந்தப் போர் விட்டுவைக்கவில்லை. சராஜீவோ தெருக்களில் குழந்தைகள் தனியே நடக்க முடியாது. நான் ஏற்கெனவே கிளர்ச்சியாகி பைத்தியமாகி விட்டேன். அன்புள்ள மிம்மி. என் நாடகக் குழுவிலிருந்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். அவன் கிர்பாவிகாவிலிருந்து வந்த அகதி.
“போரை மறப்பதற்காகவே நாங்கள் பிறந்த நாட்களை இங்கே கொண்டாடுகிறோம். முயற்சி செய்கிறோம்… நாட்கள் செல்லச் செல்ல வாழ்க்கை கடினமாக, மேலும் கடினமாக இருக்கிறது. சில நேரங்களில் நான் சொல்லுவேன். இது வாழ்க்கை இல்லை. வாழ்வதைப் போன்ற ஒரு நடிப்பு” அற்புதமான மக்களை இழப்பதன் மூலம் சராஜீவோ மிகவும் ஏழையாகிவிடக் கூடும். குழந்தைகளாகிய நாங்கள் விளையாடவில்லை. அச்சத்தில் வாழ்கிறோம். துன்பப்படுகிறோம். சூரியன், பூக்கள் எவற்றையும் அனுபவிக்கவில்லை. எங்களின் குழந்தைப் பருவத்தையும் அனுபவிக்கவில்லை. நாங்கள் அழுகிறோம். மிம்மி நீ என்னைப் புரிந்து கொள்வாய் எனத் தன் வேதனைகளை மிம்மியாகிய நாட்குறிப்புடன் பகிர்கிறாள்.
ஸ்லெட்டா மகிழ்ந்து விளையாடிய பூங்கா சேதமடைந்தது. மரங்கள் காணாமல் போகின்றன. லின்டன், பிர்ச் மற்றும் பிளேன் மரங்கள் அனைத்தும் ஒரேயடியாக மறைகின்றன. இப்போது அவை அயல்நாட்டுப் பணத்திற்காக விற்கப்படுகின்றன. வெளிநாட்டுச் சந்தை மக்களை ஏமாற்ற ஆரம்பிக்கிறது. சோகம். முழு ஓடெஸ்சும் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு விட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இல்லாமலும், குழந்தைகள் பெற்றோர் இல்லாமலும் எஞ்சினர். பேரச்சம். மிசேவாவும் ப்ராகோவும் நெருங்கிய நண்பர்கள். மிசேவா அடிபட்டு இறந்தார். அவரை இழுத்து ஒரு வீட்டினுள் போட்டுவிட்டு தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிட்டார். ஒரு நண்பனுக்கு உதவச் சக்தியில்லாமல் போவதென்பது… கடவுளே, எங்களுக்கு என்னதான் நடக்கிறது? எவ்வளவு நாட்களுக்குப் பொம்மைகள், புத்தகங்கள், நினைவுகள் எதுவும் மறக்கவில்லை. இந்தப் போர் என் பெற்றோர்களுக்கு என்ன செய்கிறது? அவர்கள் இனிமேல் பார்ப்பதற்கு என் பழைய அம்மா, அப்பாவைப்போல இருக்க மாட்டார்கள். எனக்கு என்ன பிடிக்கும் தெரியவில்லை. இந்தப்போர் எங்களிடமிருந்து வருடக்கணக்கான வாழ்க்கையையும் குழந்தைமையும் திருடிச் சென்றுவிட்டது. சராஜூவோவின் அடையாளச் சின்னமான புறாக்கள் கூட்டம் இல்லை. இந்தப் பித்துப் பிடித்தவர்கள் எங்களிடமிருந்து எங்கள் குழந்தைப் பருவத்தைத் திருடி விடுவதோடு நிற்கவில்லை. எங்கள் பாட்டி, தாத்தா மற்றும் பிறரின் அமைதியான வயதான காலத்தையும் அவர்களிடமிருந்து திருடிவிட்டனர். சௌவ்க் – புனார் மோசமாகத் தாக்கப்பட்டது. நாங்கள் பதுங்கு குழியினுள் சென்றோம். குளிரான, இரட்டான, மோசமான பதுங்கு குழி. நான் அதை வெறுக்கிறேன் என்கிறாள்.
விஜெஸ்னிகாவில் உள்ள பழைய சராஜீவோ நூலகம் சாம்பலாகிவிட்டது. தலைமுறை தலைமுறையாக மக்கள் தங்கள் அறிவை வாசித்தும் எண்ண முடியாத புத்தகங்களைப் புரட்டுவதன் மூலம் வளப்படுத்தி இருக்கிறார்கள். புத்தகப் புதையலை, நண்பர்களை, தொன்ம கட்டிடம் எல்லாமே நெருப்பினுள் சென்றுவிட்டதாகக் கூறுகிறாள்.
படுகொலைக்கும் பேரழிவிற்குமான போருக்கான காரணம் அரசியல் என்பதை ஸ்லெட்டா உணர்ந்திருந்தாள். ஆனால், அவளைச் சுற்றி நடந்த இன அரசியல் அவளுக்கு பிடிபடாமலே போனது.
“என் தோழிகளிடையில், நண்பர்களிடையில், நமது குடும்பத்தில்கூடச் செர்பியர்கள், குரோஷியர்கள், முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரேமாதிரி இருக்கிறார்கள். யார் செர்பியர், குரோஷியர், முஸ்லீம் என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இப்போது அரசியல் தன் வேலையை ஆரம்பித்துவிட்டது” “...………என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆமாம்.நான் இளையவள். பெரியவர்களால் அரசியல் நடத்தப்படுகிறது. ...நாங்கள் இளையவர்கள்...நிச்சயமாகப் போரை தேர்ந்தெடுக்க மாட்டோம்” என ஆதங்கப்படுகிறாள். அழுகிறாள்.
நாட்குறிப்பின் கடைசிப் பத்தியில் 1993.அக்டோபர்.17 ஆம் தேதி தங்களின் கையறுநிலையைக் கூறுகிறாள். “ இந்தப் போர் ஒருபோதும் முடியாது... மக்களையும் குழந்தைகளையும் வெறுக்கும் கெட்ட மனிதர்கள் போரை முடிக்க விரும்பவில்லை. நிச்சயம் நான் மக்களுக்கான அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள்.
“மக்கள் எங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால், அற்பர்களோ எங்களை அழிக்க விரும்புகிறார்கள். ஏன்?நான் தனக்குத் தானே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ஏன்? நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் அப்பாவிகள். நாதியற்றவர்கள்” என முடித்திருக்கிறாள்.
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த குறிப்பிடத்தகுந்த போஸ்னியப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி. சகலத்தையும் இழந்த அவளின் அவலக்குரலை, உளவியல் சிக்கலை நீங்காத வலியாக நமக்குள் கடத்துவது என்பது மிகப் பெரிய சமூகப் பொறுப்பு. அதை மொழிபெயர்ப்பாளராக அனிதா பொன்னீலன் அவர்கள் திறம்படச் செய்திருக்கிறார்கள் என உறுதியாகக் கூறலாம். சேர்போ – குரோவாசியா என்ற மொழியில் இருந்து கிறிஸ்டினா பிரிபிஷேவிச் – ஸோரிக் இவர்களால் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை ஒரு குழந்தையின் இயல்பான சொல்வன்மையோடு எளிய நடையில் தமிழுக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
ஸ்லெட்டாவின் மன மொழி வாசிக்கும் நமக்குப் புரிகிறது. சூச்சி சூச்சி சூ… ஹோ….ஹே…. என்ற அவளது ஒலிக்குரல்கள். அவளது அழுகை, சிரிப்பு, கோபம், வெறுமை அனைத்தையும் நம்மால் உள்வாங்க முடியும். ‘பைரம்’ என்பது இஸ்லாமியர்களின் பண்டிகை, நவம்பர்.29 அந்நாட்டின் குடியரசுதினம், ‘பொடியன்கள்’ – அரசியல்வதிகளின் குறியீடு என்பவைகள் கூடுதல் தகவல்கள். ஸ்லெட்டாவின் கலைத் தாகம் வியக்க வைக்கிறது. பிறருக்காகத் ததும்பும் அவளின் மனிதநேயம், தன்னம்பிக்கை பெருமைப்பட வைக்கிறது. மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் வார்த்தைக்கு வார்த்தை நகல் எடுக்காமல், மூலத்தை சிதைக்காது இலக்கிய நெறியில் நின்று கருத்தை பதிய வைத்திருப்பதை உணரலாம்.
இத்தகைய வரலாற்று நிகழ்வுகள், ஆவணங்கள் குறித்த நூல்களைக் கையாள்கிறபோது, அதுகுறித்த காரண முழுமையைத் தெரியப்படுத்துதல் அவசியமாகிறது. சிராஜூவோ நாட்டின் கல்வித்திட்டம் என்னவாக இருக்கிறது? தமிழகக் குழந்தைகளின் பள்ளித் தேர்வுகள் போல் காலாண்டு, அரையாண்டு முறைகள் அங்கு உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாசகர்களுக்கான உலகளாவிய அரசியல் மற்றும் சமூகத் தெளிவு ஏற்படவும், நூல் குறித்த பயன்பாட்டிற்கும் இவைகள் ஏதுவாக அமையும். ஒரு படைப்பு எந்த மொழிக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதன் தாக்கம் பொதுவானதாக இருக்கவேண்டும். சிறந்த மொழிபெயர்ப்பாளராக வளர்வதற்குரிய கூறுகள் தென்படுகின்றன என்று கூறியிருப்பதற்கிணங்க முதல் நூலிலேயே வெற்றிக்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் அனிதா பொன்னீலன் அவர்களுக்குப் பாராட்டுகள். ஒரு குழந்தை எதையெல்லாம் பார்க்கக்கூடாதோ அந்த உறைய வைக்கும் நிகழ்வுகளை, மரணங்களை, சித்திரவதைகளை, துயரங்களைத்தான் ஸ்லெட்டா பதிவு செய்தாள். அவளது துன்பம் நமது துன்பமாகிறது. 1993 இல் டிசம்பர். 23. அவள் தன் பெற்றோருடன் பாதுகாப்பாகப் பாரிசுக்கு சென்றுவிட்டாள் என்பதான லண்டனைச் சேர்ந்த கேனின் டி ஜியோவானியின் விரிவான முன்னுரை, நூலை மேலும் சிறப்பிக்கிறது. உலக நடப்புகளை அறியச்செய்யும் இதுபோன்ற நூல்களைத் தேர்ந்தெடுத்து பதிப்பிக்கும் ‘புலம்’ பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்.
(நன்றி: கீற்று)