பதின்ம வயதினர் படிக்க ஏதுவான புனைவு நூல்கள் தமிழில் வருவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. ஒன்று அவர்கள் சிறுவர் நூல்களைப் படிக்கவேண்டும் இல்லையெனில் பெரியவர்கள் நூலினை படிக்கும் நிலைதான் உள்ளது.
இதுபற்றி தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேலை நாடுகளில் பதின்ம வயதினருக்கான புவைவெழுத்துக்கள் அதிகம் வாசிக்கக்கிடைக்கின்றன என்றார். எனக்கு அந்த ஏக்கம் இங்கே எப்போதும் உண்டு.
ஆனால் இக்குறையை போக்கும்படியாக, சமீபத்தில் பதின்ம வயதினருக்கான ஒரு கதையை வாசித்தேன். கொ.மா.கோ. இளங்கோ எழுதிய, ’சஞ்சீவிமாமா’என்ற புதினம்தான் அது.
முழு கிராமமும், நகரமுமில்லாத ஒரு சிற்றூரில் வசிக்கும் பேச்சிராசு என்ற சிறுவனுக்கும், அதே ஊரில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றும் சஞ்சீவி என்பவருக்கும் இடையில் ஏற்படும் நட்பும் கதையின் மையம். சாதிய பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை பற்றி எல்லாம் அச்சிறுவன் சிந்திக்கிறான். அவர்களும் மனிதர்கள்தானே என்று அச்சிறுவனின் மனதில் தோன்றும் கேள்விகளுமாகக் கதை செல்கிறது. 80களில் ஒரு சிற்றூரின் எப்படி இருந்திருக்கும்/ இருந்தது எனும் புவியியலை கண்முன் கொண்டுவருகிறார் நூலாசிரியர். ஓவியர் அர்ஸ் கதைகளுக்கிடையே வரைந்திருக்கும் ஓவியங்கள் கூடுதல் பலம்.
இன்றைக்குக் குழந்தைகளை சாதிய பெருமிதமற்றவர்களாகவும், சாதிய மோக மற்றவர்களாக வளர்க்க விரும்புகிறவர்களும், சாதீய ஒடுக்குமுறையில்லா சமூகம் உருவாக வேண்டும் என்பவர்களும் தங்களின் குழந்தைக்கு இந்நூலைப் பரிசளிக்கலாம். அதற்கு இந்நூல் நிச்சயம் துணை புரியும்.