அசோகமித்திரனின் மறைவை ஒட்டி அவரது எழுத்தை மீண்டும் ஒருமுறை புரட்டத் தோன்றியது. பதினெட்டாவது அட்சக்கோடு.. இந்திய விடுதலை வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஹைதராபாத் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல். நாட்டின் விடுதலையையொட்டி பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய தேசியத்தோடு இணைந்தபோது, அதனை மறுத்தவற்றுள் ஒன்று ஹைதராபாத் சமஸ்தானம். அங்கே நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்தது.
பாகிஸ்தானுடன் இணைவது அல்லது தனிநாடாக இருப்பது என்ற முடிவில்தான் நிஜாம் மன்னர் இருந்தார். அங்கு பெரும்பான்மையாக இருந்த இந்துக்கள் இந்தியாவுடன் சேர்ந்துவிட விரும்பினர். இந்த எதிர்க்குரல்கள் மேலெழுந்துவிடாதபடி ரஜாக்கர்கள் எனப்பட்ட கூலிப்படையினரையும் காவல்துறையையும் வைத்து கண்காணித்து வந்தது நிஜாம் சமஸ்தானம். அது இந்துக்களின் மீதான ஒடுக்குமுறையாக மட்டுமல்ல வன்முறையாகவும் அமைந்தது. 1947க்குப் பிறகு வன்முறை எல்லை மீறியது. முதலில் விட்டுப்பிடித்த பிரதமர் நேரு, பின்னர் இந்திய ராணுத்தை அனுப்பி ரஜாக்கர் படையை அழித்து 1948இல் ஹைதராபாத்தைக் கைப்பற்றினார். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையைப்போல இந்த இணைவும் எண்ணற்ற உயிர்ப்பலிகளையும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளையும் சந்தித்தது. இதுகுறித்து விசாரிக்க சுந்தர்லால் தலைமையில் நேரு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அக்குழுவின் அறிக்கையில் இந்தக் கலவரங்களால் 27,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. அந்த அறிக்கையை நேரு இறுதிவரை வெளியிடவேயில்லை.
இந்திய விடுதலையை ஒட்டி நிகழ்ந்த அந்த வன்முறையை மையமாகக் கொண்டுதான் நாவல் இயங்குகிறது. அதைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், ஒரு வன்முறையை எழுத்தாக்குவது குறித்து அமிதவ் கோஷ் சொல்லியிருப்பதை இங்கு நினைவுகூறலாம் : ஒரு வன்முறைச்சூழலை எழுத்தாக்குவது என்பது அந்தக் கலவரத்தை உள்ளபடியே படம்பிடித்துக்காட்டுவது அல்ல. மாறாக அந்த வன்முறைகளைக் கண்டு மனங்கசிந்த மனித மாண்புகளை அடையாளம் காட்டுவதுதான்.
அதாவது, குஜராத் 2002 கலவரத்தை எழுத்தாக்குவதென்றால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே எடுத்து வெட்டிக் கொன்றதை எழுதுவதல்ல. அந்தப் பணிகளை செய்தித்தாள்களேகூட செய்துவிடுகின்றன. மாறாக அங்கு வன்முறையாளர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் குரலுயர்த்திய மனிதர்களின் அடையாளத்தை எழுத்தில் கொண்டுவருவதுதான் ஒரு எழுத்தாளரின் பணி என்கிறார் அவர்.
பதினெட்டாவது அட்சக்கோடு ஒருவகையில் அமிதவ் கோஷின் வரையறைக்குள் வருவது தான். இது வெறுமனே ஹைதராபாத் கலவரத்தைப் பேசுவதல்ல, அந்த வன்முறைகளைக் கண்டு மனசாட்சி உலுக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதறலைக் கூறுவது. இந்து – முஸ்லிம் என்கிற உணர்ச்சிவயப்பட்ட அடையாளங்களில் எந்த ஒன்றையும் தாங்கிப் பிடிக்காமல் ஒரு பொதுத் தன்னிலையாகவே நின்று இப்படைப்பை எழுதியிருக்கிறார் அ.மி. இந்திய – சமஸ்தான அதிகார மோதல்களுக்கிடையே சாமான்ய மனிதர்கள் எப்படி அரசியல்மயப்படுகின்றனர் என்பதை வெகு இயல்பாக எழுத்தாக்கியிருப்பதில்தான் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது. 1946 – 1948 காலகட்டம்தான் கதைக்களம். அன்றைய கட்டத்தில் தேசவிடுதலை என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர மக்களுக்கு வேறெந்த குறிக்கோளும் இல்லை என்கிற மாயை வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற விடுதலைப்போராட்டக்கால திரைப்படங்களைப் பார்த்து நமக்குள் உருவாகியிருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறானது..
தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து தெலுங்கு தேசத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் சந்திரசேகரன். அவனது எண்ணமெல்லாம் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. ஆகஸ்ட் 14 நள்ளிரவு. விடுதலை அடைந்தாயிற்று. சமஸ்தானம் இணைய மறுக்கிறது. ஊர் நிலவரம் சரியில்லை. ‘இந்த கிரிக்கெட் மண்ணாங்கட்டியெல்லாம் வேண்டான்டா’ என்று சொன்னால் கூட அவன் கேட்பதில்லை. அவன் ஒரு சாமான்ய இளைஞன், அரசியலுக்கு அப்பாற்பட்டவன். கல்லூரிக்குப் போவது, கழுத்தில் பச்சை நரம்புகள் ஓடும் தாராபூர்வாலாவையோ, பத்மாவையோ, புஷ்பாவையோ பார்த்து மயங்குவது, ரயில்வே குடியிருப்பில் நண்பர்களோடு விளையாடுவது, சினிமாவிற்குப் போவது இப்படித்தான் அவன் வாழ்க்கை.
விடுதலைக்குப் பிறகு ஊரில் வன்முறைகள் எல்லை மீறுகின்றன. திடீரென்று நிறைய ரெபியூஜிகள் தோன்றுகிறார்கள். தமிழர்கள் பலர் சொந்த ஊருக்கே திரும்புகிறார்கள். முன்பு சந்தித்த மனிதர்களும் கூட்ட நெரிசலும் காணாமல் போயிருக்கிறது. ஆனால், சந்திரசேகரன் குடும்பத்தைப் பொறுத்தவரை ஓரளவிற்கு இயல்பான வாழ்வைத்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு திரும்ப வேண்டிய அளவு நெருக்கடியை அவர்கள் இன்னும் சந்திக்கவில்லை. வீட்டிற்கு பாட்டு வாத்தியாரை வரவழைத்து அக்காக்களுக்கு சங்கீதம் பயிற்றுவிப்பது, டாங்கா வண்டியை அழைத்து வந்து மூன்று மைல் தொலைவில் உள்ள டெண்ட் சினிமாவை குடும்பத்தோடு போய் பார்ப்பது, அப்பாவின் ரயில்வே பாஸை வைத்து சுற்றுலா சென்று வருவது என்பதாக அவர்களின் வாழ்க்கை நகர்கிறது.
அதிகபட்சமாக அவர்களைப் பாதிக்கும் விஷயம் அரிசி கிடைக்காமல் சோற்றுக்குப் பதில் சோளரொட்டி சாப்பிடுவதுதான். மற்றபடி, அங்கிருக்கும் பிரச்சினைகளுக்குள் அடங்கிப்போக அவர்கள் ஒருவாறு பழகிவிட்டார்கள். அவர்கள் சாமான்யர்கள். அதுமட்டுமல்ல போராட்டங்கள், இயக்கங்கள், கோஷங்களுக்கு எல்லாம் பெரிதாக பழக்கப்படாத உயர்சாதியினரும்கூட. அவர்களுடையது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பார்ப்பனக் குடும்பம். அந்தத் தன்மை சந்திரசேகரனிடம் இயல்பிலேயே இருக்கிறது. இவ்வளவு நாற்றமெடுக்கும் மாமிசத்தை இவர்கள் எப்படி தின்கிறார்கள் என்று யோசிக்கும் அவனுக்கு முஸ்லிம்கள் குழுமியிருக்கும் வீட்டில்கூட ஒருவித நாற்றத்தை உணரமுடிகிறது. மற்றபடி, தாம் இந்த ‘மண்ணின் மைந்தர்கள்’ இல்லை என்ற உணர்வும் அவர்கள் எந்த அரசியலிலும் கலக்காமல் இருந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவகையில் பார்த்தால் அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்பதெற்கெல்லாம் அர்த்தம் இல்லாமல்தான் இருக்கிறது. அவர்கள் வழிபடும் இந்துக் கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு மசூதி. அதனால் எல்லா நாள்களிலும் கோயிலில் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள். பெரியதாக மணி அடிக்க மாட்டார்கள். பாடுவதோ வாத்தியம் வாசிப்பதோ கிடையாது. விடுதலைக்குப் பின்பு ஜாக்கிரதையுணர்வு இன்னும் அதிகமாகி இருந்தது. மிக அந்தரங்கமாக ஏதோ சொல்வதுபோலப் பிள்ளையாருக்கு அஷ்டோத்திரம் கூறப்பட்டது. ஆக, அப்போது எல்லாவற்றையும் ஆட்சி அதிகாரம்தான் நிர்ணயித்திருக்கிறது..
அரசுக்கு எதிராக காங்கிரஸ் இளைஞர்கள் நடத்தும் ‘க்விட் காலேஜ் மூவ்மெண்டில்’ சந்திரசேகரன் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டுத் தந்தாலும் அவனுடைய நினைப்பு முழுக்க கல்லூரி மீதுதான் இருக்கிறது. ஏன்தான் இப்படி வகுப்பைப் புறக்கணிக்கிறோமோ என்று நொந்து கொள்கிறான். அவனைப் பொறுத்தவரை இன்றைய பிரச்சினை அவனுக்குரியது அல்ல.. அது லெயிக் அலி, காசிம் ரஸ்வி, ஜயப்பிரகாஷ் நாராயணன், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல்.. ஆகியோருக்குரியது. அவர்கள்தான் இதைத் தீர்த்து வைக்கவேண்டும் அல்லது அதுவாகவே தீர்ந்துகொள்ளும்.
இப்படித்தான் அந்தப் பதின்ம வயது இளைஞன் எந்த ஒரு அரசியலுமற்று காலத்தை ஓட்டுகிறான் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒருநாள் அவனது அரசியல் பீறிட்டுக்கிளம்புகிறது. அது காந்தி கொலையை ஒட்டி நிகழ்கிறது. காந்தி சுடப்பட்டார், யாரோ கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி ஊருக்குள் பரவுகிறது. அந்த இழப்பை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவன் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுபவனோ காங்கிரஸ்காரனோ இல்லை. என்றாலும் ‘காந்தீ காந்தீ’ என்று கத்திக்கொண்டு தலைதெறிக்க வீதியில் ஓடுகிறான். காந்தியைச் சுட்டவன் யார்? ஒருவேளை முஸ்லிமா? சட்டென்று அவன் ரத்தம் சூடேறுகிறது. முஸ்லிம்.. இந்தக் காரியத்தை மட்டும் ஏதாவது முஸ்லிம் செய்திருந்தால் பத்து பேரை அல்ல, நூறு பேரை அல்ல, முடிந்தவரை முஸ்லிம்களைக் கொன்றுகொண்டே இருப்பான். நிஜாமை, காசிம் ரஸ்வியைக்கூட கொன்றுவிடுவான்.
இப்படித்தான் அவனுக்குள் ஒரு வெறுப்பின் அரசியல் புதைந்து கொண்டு இருந்திருக்கிறது. அவன் முஸ்லிம்களை வெறுத்தவன் அல்ல, சையது மாமா, கிரிக்கெட் கேப்டன் நாஸிர் அலிகான், அப்புறம் கல்லூரியில் அவன் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் தாராப்பூர்வாலா..இப்படி முஸ்லிம் பரிச்சயங்கள் அவனுக்கு உண்டு. ஆனாலும் இந்த வெறுப்பு எப்படித் தோன்றியது என்பதற்கெல்லாம் எந்த விடையும் இல்லை.
அவன் மட்டுமல்ல, அங்கே அரசியல் சூழல்கள் மாறுவதையொட்டி பலரது நிறமும் மாறுகிறது. நிஜாம் அரசு இந்தியாவுடன் இணைய மறுத்து, ரஜாக்கர்களுக்கு அதிகாரம் அளித்த பின் அவனது வீட்டிற்குள்ளும் வன்முறையின் நிழல்படிகிறது. பக்கத்துவீட்டு காசிம் – வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியாத அளவிற்குச் சாது – தண்ணீர்ப் பிரச்சினைக்காக காம்பவுண்ட் எகிறி குதித்து சந்திரசேகரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு செருப்புக்காலுடன் அவர்கள் வீட்டிற்குள் கத்திக்கொண்டே போகிறார். மிரட்டிவிட்டு வருகிறார். இதெல்லாம் கொஞ்ச நாட்கள்தான். இந்தியத் துருப்புகள் நுழைந்து ரஜாக்கர்களை ஒடுக்கி முன்னேறிக்கொண்டு வரும்போதே நிலைமை மாறிவிடுகிறது. சந்திரசேகரின் அப்பா அதே காசிமை பெயர் சொல்லி அழைத்து அவர்கள் வீட்டு ரேடியோ வேண்டுமென்று மிரட்டல் தொனியில் கேட்கிறார். ரேடியோ சரியாகப் பாடவில்லை என பவ்யமாக அவர்கள் பதில்சொல்ல, சந்திரசேகரன் காம்பவுண்ட் எகிறி குதித்து அவர்கள் வீட்டிற்குள் போய் உண்மையாவென பார்த்துவிட்டு வருகிறான்.
இப்படியே மாறி மாறி அதிகாரம் செய்துகொண்டிருந்தால் முடிவுதான் என்ன? இறுதியாக அதைச் சந்திரசேகரனே எட்டிவிடுகிறான். இந்திய ராணுவம் ஹைதராபாத்தைக் கைப்பற்றுகிறது. இந்தியாவுடன் இணைந்து விடுவதாக நிஜாம் அறிவிக்கிறார். இத்துடன் பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைய இரவே ஆங்காங்கு கலவரங்கள் வெடிக்கின்றன. இப்போது தாக்குபவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள். எங்கிருந்தோ விரட்டப்பட்டு இங்கே தஞ்சம் புகுந்திருந்த வறிய முஸ்லிம்களின் ரெபியூஜிக் கொட்டகைகள் கொடூரமாகப் பிய்த்து எறியப்படுகின்றன. ஆங்காங்கே தீ வைப்புகள், கடை உடைப்புகள், பெண்கள் மீதான வன்முறைகள். அந்த இரவு நேரத்தில் சந்திரசேகரன் கலவரச்சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறான். திடீரென்று முஸ்லிம்கள் இந்துக்களை விரட்ட அதில் சந்திரசேகரனும் பயந்து ஓடுகிறான்.
எங்கெங்கோ தப்பி ஓடி ஒரு வீட்டுச் சுவர் மீது ஏறி உள்ளே குதிக்கிறான். அது ஒரு வறிய முஸ்லிம் வீடு. பெண்கள், ஆண்கள், குழந்தைகள், கிழவி என பெரிய குடும்பம். இவன் தனி ஒருவன். இவனைப் பார்த்ததும் அவ்வளவு பெரிய குடும்பம் நடுங்குகிறது. அதில் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுமி, “பிச்சை கேட்கிறோம், எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்று கெஞ்சிக்கொண்டே தன்னுடைய கமீஸையும் பைஜாமாவின் நாடாவையும் அவிழ்த்துவிட்டு அவன் முன்னால் நிர்வாணமாக நிற்கிறாள். சந்திரசேகரன் வந்தபடியே சுவர் ஏறித் தெருவில் குதித்து வெறிபிடித்தவன் போல் ஓடுகிறான். தன்மேல் ஒரு இந்துத்துவக் கறை படிந்துவிட்டதை நொந்தபடி ஓடுகிறான்..
ஆக, தன் முன்பாக வளர்ந்து வந்த மதவெறுப்பு அரசியலுக்கு எதிராக எந்த ஒரு அடியையும் எடுத்து வைக்காத சந்திரசேகரன், அந்த வெறுப்பு அரசியலுக்குத் துணை போகாமலும் அதற்குள் தன்னை அடையாளம் காணாமலும் விலகி நின்ற வகையில் இந்தக் கதையின் நாயகன் ஆகிறான்.
மற்றபடி இந்தப் படைப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அதன் எழுத்துநடை. ஒரு அரசியல் வரலாற்றையும் சாமான்ய வாழ்வையும் பிசிறு தட்டாமல் பிணைத்துச் செல்வது அசாத்தியமானது. தீவிர வாசிப்புக்கு இடையே திடீரென்று குலுங்கிச் சிரிக்க வைக்கும் லாவகமும் அசோகமித்திரனுக்கே உரியதாகத்தான் இருக்கக்கூடும். அவரது இழப்பின் வெற்றிடத்தை இன்னமும் விசாலமாக்கும் முக்கியமான படைப்பு இது.
(நன்றி: இப்போது.காம்)