பதினெட்டாவது அட்சக்கோடு

பதினெட்டாவது அட்சக்கோடு

ஜெ,

அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ்தான். ஆனால் 18 வது அட்சக்கோடு நாவல் எனக்குப்பிடிபடுவதில்லை. என்னதான் சொல்ல வருகிறார்? இதில் என்ன சிறப்பை காண்கிறீர்கள்?

ஆர்வி

**************

அன்புள்ள ஆர்வி

18 அவது அட்சக்கோடு ஒரு குறிப்பிட்ட வகையில் வரலாற்றைப் பார்க்கும் கதை. ஒரு முக்கியமான வரலாற்றுநிகழ்வின்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்த்தால் அந்தக்கதையின் முக்கியத்துவம் தெரியும். நாம் அந்த வரலாற்று நிகழ்வில் சென்று முட்டிக்கொள்வதுவரை எதையுமே கவனிக்காமல் நம் அன்றாட எளிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்.

எல்லீ வீசலின் இரவு தன்வரலாற்று நாவலில் இதே விஷயம் வருகிறது. ஹிட்லரின் படுகொலை முகாம்களில் என்ன நடக்கிறது எனத் தெரிந்த ஒருவன் திரும்பிவந்து போலந்தின் யூதக்குடியிருப்புகளில் அதைச் சொல்கிறான். எவருமே பொருட்படுத்துவதில்லை. எளிய மனிதர்களால் வரலாற்றை கற்பனைசெய்ய முடியவில்லை. கற்பனை செய்தாலும் என்ன செய்வதென்று புரியவில்லை. அன்றாட வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு மட்டுமே அவர்கள் பழகியிருக்கிறார்கள். வரும்போது பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்கிறார்கள்.

18 ஆவது அட்சக்கோடு காட்டுவது இந்திய தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான வரலாற்றுச் சந்தர்ப்பம். ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் இணைய அல்லது தனித்தியங்க விரும்புகிறார். அதன்பொருட்டு மதவெறி தூண்டிவிடப்படுகிறது. நெருக்கமானவர்கள் கூட சட்டென்று மதவேற்றுமை பாராட்டி எதிரி ஆகிறார்கள். ரசாக்கர்களின் அடிதடி அரசியலுக்கு அஞ்சி மக்கள் அனாதைகளாக தப்பி ஓடுகிறார்கள். எங்கும் அச்சம், பதற்றம். இந்திய ராணுவம் வந்ததும் நிலைமை தலைகீழாகிறது. அஞ்சியவர்கள் தலைதூக்க அடிதடியில் அலைந்தவர்கள் அஞ்சி ஓடும் நிலைமை.

நவீன இந்திய அரசியல் தேசிய உருவாக்கத்தில் ஒரு திருப்புமுனை தருணம் அது. பிற மகாராஜாக்களுக்கும் பிராந்திய ஆதிக்கங்களுக்கும் முன்னுதாரணமான அச்சுறுத்தலாக விளங்கியது அந்நிகழ்ச்சி. அது நிகழவில்லை என்றால் இந்தியா முழுக்க இன்னும் பல பிரிவினைக்குரல்கள் கிளம்பி குட்டையை மேலும் குழப்பியிருக்கும். பல இடங்களில் அதேபோல வன்முறைக் கலவரமும் பிரிவினைப்போக்கும் ஒரேசமயம் தலையெடுத்திருந்தால் இந்தியராணுவம் செயலற்றிருக்கும். பெரும் மானுட அழிவுகள் நிகழ்ந்திருக்கும். அந்த வடுக்களை ஆற்ற முடியாமல் சுதந்திர இந்தியா மேலும் அழிவை நோக்கிச் சென்றிருக்கும். சிறந்த உதாரணம் தெலுங்கானாவும், திருவிதாங்கூரும். நல்லவேளை நாயர்கள் திருவிதாங்கூர் மகாராஜாவை நம்பவில்லை. காரணம் திவான் ஒரு அய்யர். நாயர்கள் நம்பி ஆயுதமெடுத்திருந்தால் திருவிதாங்கூரிலும் கலவரம் நடந்திருக்கும்.

அவனைச்சுற்றி இத்தனை வரலாறு நடக்கும்போதும் சந்திரசேகரன் கிரிக்கெட் தான் விளையாடிக்கொண்டிருக்கிறான். கன்யாகுமரியில் இருந்து கிளம்பி, சென்னை வரை ஓடி, டெல்லியில் இருக்கும் ஸ்டம்பை நோக்கி எறிவதாக உத்தேசித்து கராச்சிக்கோ டாக்காவுக்கோ பந்தை விட்டெறிந்துகொண்டிருக்கிறான் . அவன் அப்பா வழியில் சிங்கம் வந்து உறுமினாலும் ’நான் ரெயில்வே செர்வெண்ட்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். வீட்டுக்கு வெளியே நிகழ்பவை அவர்களுக்கு மெல்லிய அதிர்வுகளாக மட்டுமே வந்து சேர்கின்றன. நிலைமை சூடாகும்போதுகூட முடிந்தவரை வாழ்ந்து பார்க்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

அவர்களுக்குள் வன்முறை இல்லை. ஆகவே வன்முறை தங்களை பாதிக்காது என்ற அசட்டு நம்பிக்கை. பிரச்சினை என்றால் எங்காவது பதுங்கினால் போயிற்று என்கிற தலைமுறை தலைமுறையாக பயின்று வைத்திருக்கும் மனநிலை.

இன்னொருபக்கம் நைஜாமின் அரசகுலப்பின்னணியைச்சேர்ந்த உயர்குடிகளும் அவர்களின் சொகுசு வாழ்க்கையில் எந்தச்சிக்கலும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் வரலாற்றைப் பொருட்படுத்துவதே இல்லை. அது அவர்கள் வரை வந்து தொடாது என்று நினைக்கிறார்கள். சந்திரசேகரனுக்கு வரலாறு தலைக்குமேல் நிகழ்கிறது அவர்களுக்கு கால்கீழே ஓடிக்கொண்டிருக்கிறது.

அசோகமித்திரனின் நாவல் பொதுவரலாற்றை ஒரு சரடாகவும் சாமானியர்களின் சாமானிய வாழ்க்கையை ஒரு சரடாகவும் பின்னிக்கொண்டே செல்கிறது. இரண்டுக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை. சட்டென்று ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் வரலாற்றில் முட்டிக்கொள்கிறான். அதுவே உச்சகட்டம் மதமோ அரசியலோ இல்லாத எளிய மாணவனாகிய சந்திரசேகரனில் அவனுடைய அன்றாட வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகும்போதுதான் அரசியல் குடியேறுகிறது.
அதுவும் எளிமையான அரசியல். பணம் உள்ளவர்கள் அதிகாரத்தைக்கையாளும் விதத்தைப்பற்றிய ஒரு பிரக்ஞையாக மட்டும் அந்த அரசியல் நீடிக்கிறது. அவனுடைய சூழலே இந்து- முஸ்லீம் என பிரிவுபடும்போது கூட அவன் சையது மாமாவை நம்பிக்கொண்டு மதவெறுப்புக்கு அப்பால்தான் வாழ்கிறான். காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைக்கும்போது அந்தக்கொலையை ஒரு முஸ்லீம்தான் செய்திருப்பான் என ஊகித்து சந்திரசேகரன் கொலைவெறி கொண்டு ஒரு மைதானத்தில் ஓடும் காட்சி அவன் எப்படி அரசியல்படுத்தப்படுகிறான் என்பதைக் காட்டுகிறது.

அவனே உள்ளூர மதத்துருவத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறான். அந்த தருணத்தில் கொன்றது முஸ்லீம் என அவன் இயல்பாக நம்புவதே அதற்குச் சான்று காந்தியை தன்னுடைய கையாலாகாத எளிமையின் அடையாளமாகவே அவனும் அவனைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினரும் காண்கிறார்கள். அவர் கொல்லப்படுவது அவர்களின் கடைசி எல்லை. விழுமியங்களுக்கும் பணிந்துபோவதற்கும் மதிப்பே இல்லை என அவர்களுக்கு காட்டுவது அது. சந்திரசேகரன் கையாலாகாதவனாகத்தான் இருளில் ’காந்தீ காந்தீ ’ என கூச்சலிடுகிறான். ஆனால் அந்த அரசியல்படுத்தப்படலின் மறுபக்கத்தை உடனே காட்டி நாவல் முடிகிறது.

இந்துக்கள் திரும்ப அடிக்கும்போது அடிவாங்குவது பணக்கார நைஜாம் வம்சம் அல்ல. எளிய அன்றாடங்காய்ச்சி முஸ்லீம்கள். அவர்களின் கந்தைக்குடிசைகள். யார் யாருடன் சண்டையிட்டாலும் அந்த குடிசைகள்தான் எரிந்தாகவேண்டும். இந்துக்குடிசை அல்லது இஸ்லாமிய குடிசை. ஆனால் அது குடிசைதான் எப்போதும்.
எங்கிருந்தோ வந்து உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கும் அந்த எளிய இஸ்லாமியக்குடும்பத்தின் பெண் உயிரச்சத்துடன் வந்து சட்டையை கழட்டி ’என்னை எடுத்துக்கொள் என் குடும்பத்தை விட்டுவிடு’ என கூறும் இடத்தில் சந்திரசேகரன் உடைந்து விடுகிறான். அந்த கணத்தில் அவன் அவனுடைய அரசியல் பிரக்ஞையை மீறி அறப்பிரக்ஞையை அடைகிறான். அதுவே இந்நாவலின் உச்சம்.

இந்த மூன்று புள்ளிகளும் முக்கியமானவை. காந்திகொலையில் சந்திரசேகரன் மதம் சார்ந்த திரள் அடையாளத்தை அடைகிறான். அதன் கோபங்களையும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்கிறான். எளிய தனிமனிதனாக இருந்தவன் அரசியல்சுயம் கொள்கிறான்.

இரண்டாவது புள்ளியில் அந்த அரசியல் சுயம் எத்தனை செயற்கையானது என உணர்கிறான். அவனறிந்த யதார்த்தம் அந்த குடிசை வாசிகளும் அவனும் ஒன்றே என்பதுதான். எந்த அரசியலும் அவர்களுடையவை அல்ல.

அவையெல்லாம் வீடும் சோறும் உள்ளவர்களுடையவை. அவர்கள் எல்லாரும் அதற்குகீழே வாழ்பவர்கள். தன்னை அவன் அம்மனிதர்களின் ஒருவனாக, வரலாறெங்கும் நிறைந்திருக்கும் சாமானியனாக காண்கிறான் சந்திரசேகரன்.
மூன்றாவது புள்ளியில் அவன் தன் ஆழத்து அற உணர்ச்சியைக் கண்டுகொள்கிறான். அவன் ஏதும் செய்யவில்லை.

ஆனால் அந்த எளிய பெண் அவனை அவள் எதிரியாக எண்ணி விட்டாள். எண்ணும் இடத்தில் அவன் இருக்க நேர்கிறது. அந்த அடையாளம் அவனுக்கு இருக்கிறது. அதுவேகூட பாவம் என அவன் உணர்கிறான். அந்த அடையாளத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் தனியனாக ஆகி அவன் ஓடும்போது அவனுடைய அறம் முழுமை அடைகிறது. இனி எந்த திரளிலும் அவனால் இணைய முடியாது. அவன் தன் அறவுணர்ச்சியுடன் தனித்தே வாழப்போகிறவன்.

இந்த பரிணாமத்தைச் சொல்லும் முக்கியமான படைப்பு 18 ஆவது அட்சக்கோடு. அதை மிக நுட்பமாக நகைச்சுவையாக சாதாரணமாகச் சொல்லிச்செல்கிறார் அசோகமித்திரன். ‘நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நானும் கூட்டுப்பொறுப்புள்ளவன்’ இந்தவரியை அசோகமித்திரனின் ஆக்கங்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.

ஹிட்லரின் வதைமுகாம்களை, இலங்கைச்சிறையின் படுகொலைகளை, மதக்கலவரங்களை அப்படி உணரக்கூடிய சாமானியர்களின் அகக்கொந்தளிப்புகளை அற்புதமாக விவரிக்கும் கதைகளை அவர் எழுதியிருக்கிறார்.

இந்திய இலக்கியத்தில் ’சாமானியனின் அறப்பிரக்ஞை’ என்ற இந்த அம்சம் அசோகமித்திரன் ஆக்கங்களில் வெளிவந்த அளவுக்கு நுட்பமும் தீவிரமுமாக எவர் ஆக்கத்திலும் வெளிப்பட்டதில்லை. உலக இலக்கியத்திலேயே குறைவுதான். நான் ஐசக் பாஷவிஸ் சிங்கரை மட்டுமே அவருக்கு நிகராகச் சொல்வேன்.

இன்று சதத் ஹசன் மாண்டோவைத் தமிழில் சிலர் திடீரென்று தூக்கிப்பிடிக்கிறார்கள். மொழிபெயர்ப்பின் மூலம் கண்டுவிட்டார்களாம். மாண்டோவோ அல்லது பீஷ்ம சாஹ்னியோ [தமஸ்] எழுதியவை அதிர்ச்சியூட்டும் புறச்சித்தரிப்புகள், செயற்கையான நாடக உச்சங்கள். ஒவ்வொரு தனிமனிதனும் தன் ஆன்மாவின் ஆழத்தால் அடையாளம் காணும் வாழ்க்கைத்தருணங்கள் அல்ல அவை.

அசோகமித்திரன் எழுதுவதும் நாமனைவரும் அறியும் நமது ஆழத்தை கண்முன், நம் சமகாலத்தில், இலக்கியமேதை ஒருவர் தன் மகத்தான ஆக்கங்களுடன் வாழ்கிறார். நாம் தொலைநோக்கி வைத்து திசைகளை துழாவிக்கொண்டிருக்கிறோம் .

ஜெ

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp