‘சமாதானக் காலத்தில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள். யுத்தகாலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கிறார்கள்.’ யுத்தத்தில் தோய்ந்த ஐரோப்பாவின் வாசகம் இது. இந்த வாசகத்தைக் ‘கலிங்கு’ நாவலுக்கான பகுதி பொழிப்புரையாக சொல்லலாம். யுத்தத்துக்குப் பிறகான காலங்களைப் பற்றி வாசகங்கள் எதுவுமில்லை. எம்.ஏ.நுஃப்மான் 1977லில் எழுதிய ‘நேற்றைய மாலையும் இன்றைய காலையும்' என்ற கவிதையை இந்த நாவலின் பொழிப்புரை என்று சொல்லலாம்.
644 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், முதல் பார்வையில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. அது கலிங்கின் குற்றமல்ல. தமிழில் தடித்த நாவல்கள் செய்த குற்றம். 2000 வாக்கில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர், நாவலை முயல்பவர் என யாரைக் கேட்டாலும் 2000-3000 பக்க அளவில் ஒரு நாவல் எழுதப்போவதாக சொல்வது மிகச் சாதாரணமாய் இருந்தது. தமிழ் நாவலில் ஒபிசிட்டி கூடிய காலமது. சொன்னதில் பெரும்பான்மையினர் எழுதவில்லை. பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ படத்தில் இரண்டாயிரம் நாலாயிரம் எனச் சொல்லி தலைகோதுவார்களே, அப்படியாக அந்த துர்கனவு இனிதே முடிந்தது.
எழுதப்பட்ட தடித்த நாவல்களில் மிகச் சிலவே வென்றன. மற்றவை காட்டை அழித்த கணக்கில் சேர்ந்தன. எழுதியவர்களும் முடித்த கையோடு வனப்பிரஸ்தம் புறப்பட்டுவிட்டார்கள். மூவாயிரம் பக்கத்தில் வாழ்வை நீட்டி நீட்டி சொன்ன பிறகு வாழ்வதற்கு என்ன இருக்கிறது?
இந்நாவல் யுத்த காலத்தையும், யுத்தத்துக்குப் பிறகான காலத்தையும் பேசும் நாவலாக இருக்கிறது. எனினும், நமக்கு வாசிப்பனுவத்தைத் தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. நான் வாசிப்பின்பத்தை சொல்லவில்லை. 2003 முதல் 2015 வரை நாவலின் காலம் என வரையறுத்துக்கொண்டாலும் சாமி, குசுமவதி, பந்துல, பரஞ்ஜோதி போன்ற பாத்திரங்களின் வழி 70, 80 ஆண்டுகள் பின்னோக்கியும் போகிறது.
தமிழ், சிங்களம், இடதுசாரி இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) என முத்தரப்பையும் சார்பில்லாமல் பேசுகிறது. முத்தரப்பையும் பேசுவதால் மட்டுமே இது முக்கியமான நாவலாக ஆகவில்லை. நாவல் முழுக்க ஒரு பதற்றம் இருக்கிறது.
மனிதர்கள் இரவுக்குள் வீடு போய்ச் சேர்ந்துவிட முடியுமா என்கிற பதற்றத்துடனேயே அலைகிறார்கள். யுத்தகாலத்தில் இன்றிரவை உயிரோடு கடந்து விடுவோமா என்ற பதற்றத்தோடும், யுத்தத்துக்குப் பின் வீடு போய்ச் சேருவோமா என்ற பதற்றத்தோடும் மனிதர்கள் அலைகிறார்கள். அந்தப் பதற்றம் நம் மீதும் கவிகிறது.
கூரிய அவதானிப்பின் வழியும், வசீகரமான மொழியின் வழியும் நாவல் நம்மை ஈர்க்கிறது. நுண்மையான தகவல்களின் வழி கட்டப்பட்டது இந்நாவல்.
கள்ளிக்கோட்டை ஓடு, கும்பகோணத்திலிருந்து போன நடன மங்கை ஜெகதாம்பிகை, சிங்களம், தமிழ், தெலுங்கு கலந்த வேட்டுவர்களின் பாஷை. மதுரை தமிழ் சங்கத்துக்குக் கூட்டமாகப் படிக்கப்போகும் புலவர்கள். மதுரை மீனாட்சியம்மனை தோணி எடுத்துப்போய் வழிபட்டு வரும் ஆச்சிகள், ஈழ மின்னல், மலையாள மின்னல். சுதந்திரமடைந்த காலத்தில் 78 சதவீதமாய் இருந்த வனம் இன்றைக்கு 20 சதவீதமாய் சுருங்கி இருப்பது, யாழ்ப்பாணம், வன்னிப்பிரதேச வித்தியாசங்கள் புத்த பிக்குகளுக்கு என பேருந்தில் தனி இருக்கை, புத்த பிக்கு ஆகும் சடங்கு. முதலியார் முதலியாக மாறுவது. வட்டில் அப்பம். 1900-களின் ஈழ நூல்கள் சென்னையில் அச்சாவது போன்ற நுண் கலாச்சார தகவல்கள் நாவலை மேலும் நுட்பமாக்குகின்றன.
“இரகசியம் பேச பார் வசதியான இடம் முப்பது மேசைகளும் தனி உலகங்களாக இருக்கும். கோல்பேஸ் திடலில் நின்றிருக்கையில் இந்துமகா சமுத்திரத்தின் இரைச்சல், அந்த மேசையில் இருப்பவர்கள் அந்தந்த உலகத்துவாசிகளாக மட்டுமே இருப்பார்கள்.”
“அவன் அந்த அரசியலைப் பொறுத்தவரை ஒரு மீனைப்போலவே இருந்தான். அதிலிருந்து வெளியே தூக்கிப்போட்டால் வாழமுடியாதவனாக இருந்தான்.”
“காலம் வேவுகளின் கொடுங்கரங்கள் பற்றியதாய் இருக்கிறது. யார் யாரை காட்டிக்கொடுப்பர் என்று நிறுதிட்டமான வரைவுகள் ஏதுமில்லை.”
யுத்தமும், யுத்தத்துக்குப் பின்னான பதைபதைப்பான வாழ்வும் அந்த பதைபதைப்பிலிருந்து மீள முடியாத மாந்தர்களைச் சுற்றியே மொத்த நாவலும் இயங்குகிறது. இயக்கத்திலிருந்தோர், வெளிவந்தோர், அலையும் தாய்கள், காட்டிக்கொடுப்போர், மாற்று இயக்கத்துக்கு பயந்து 17 ஆண்டுகள் தலைமறைவாய் இருப்போர், வெள்ளை வேன், காணாமல் போனவர்களைப் பத்தாண்டுகளாய்த் தேடி அலைவோர், மௌனமாய்ப்போன குழந்தைகள், ரசாயன ஆயுதத்தில் உருகிப்போனவர்கள், குற்றஉணர்ச்சியின் நிழலில் வாழ்கிறவர்கள் என பல்வேறு மனிதர்களோடு பயணிக்கிறது நாவல்.
ஷெல் தாக்குதலில் கால் போன சின்னப்பிள்ளை ஜெனேட் தன் காலைப் பார்த்து அழும்போதெல்லாம் அவள் அம்மா, “அழாதே நீ பெரிய பிள்ளை ஆகும்போது கால் முளைத்திடும்” என்பாள்.
நாம் மீண்டும் கால் முளைத்திடும் என்று நம்பவேண்டியதில்லை, வாழ்வு முளைக்கவே விரும்புகிறோம்.
(நன்றி: தி இந்து)