பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

வாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும்.

பவளமல்லி மரம் பூத்து தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் அந்த மலர் பரப்பைக் காண்பதே ஒரு சுகம். விடி காலையில் பூத்து முடிந்து காலை ஏழு எட்டு மணி வரை மணம் பரப்பி, உதிர்ந்து கொண்டே இருக்கும். நந்தியா வட்டை பூக்க ஆரம்பித்தால் முற்றும் மலரவும் பின் வாடவும் வெகுநாட்கள் ஆகும்.
பூக்களுக்காக வரும் வண்ணத்திப் பூச்சிகள் வானில் மிதக்கும் பூக்களாகவே வரும் போகும் அவற்றின் இஷ்டத்துக்கு. நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு கீச் கீச் என்று ஓயாது கூவிக்கொண்டே வரும் ஜோடியாக. எப்போதும் அவை ஜோடியாகத் தான் வரும். ஆனால் அவை மரத்தின் கிளைகளுக்குள் எங்கெங்கோ உட்காரும். பிறகு வேறு கிளைக்குத் தாவும். ஓரிடத்தில் அவை ஒரு சில கணங்களே இருக்கும். கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். ஒரு இலையடர்ந்த கிளையிலிருந்து இன்னொரு இலையடர்ந்த கிளைக்கு எப்படித்தான் எப்படியோ குண்டு பாய்வது போல சட்டென பாய்ந்து பறக்கும். இடைப்பட்ட வெளியில் அதை பறக்கும் ரூபத்தில் காணமுடியாது. ஒரு கணத்தில் ஒரு கிளையில். மற்ற கணத்தில் இன்னொரு கிளையில். என்ன விந்தை இது! எப்படி இவ்வளவு வேகம் அதால் சாத்தியமாகிறது! எப்படி இன்னொரு அமரும் இடத்தைக் கணித்துக் கொள்கிறது?

தேன் சிட்டு (பெண்)

மிக மெல்லிய மிருதுவுமான செம்பருத்திப் பூவின் இதழ்களில் உட்கார்ந்து எப்படித்தான் தேனை உறிஞ்சுகின்றனவோ, தெரியாது. அவற்றின் வருகையும் கூச்சலும், சுறுசுறுப்பும் பின் சட்டெனெ ஓடி மறைவதும் பார்க்க மடிப்பாக்கத்தை சொர்க்க பூமியாக்கிவிடும். இயற்கையில் நாம் காணத்தவறும் எத்தனையோ அழகுகளில் இதுவும் ஒன்று. சாதாரண நம் விரையும் வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. வேலையற்ற ஒய்வு பெற்ற வாழ்க்கையில் ஒரு சில கிழங்களுக்குத் தான் இந்த பாக்கியம் சித்தியாகும் போல. அதிலும் எல்லா கிழங்களுக்குமல்ல. இதில் அழகும் சொர்க்கமும் காணும் கிழங்களுக்கு மாத்திரமே. ஷேர் மார்கெட் ஏற்ற இறங்ககங்கள் அனுதினமும் கொண்ட ஒரு உலகம் வேறு இருக்கிறதே.

தேன் சிட்டு, அதன் சிறகுகளின் நிறம் தான் என்ன என்று நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாது ஒரு இடத்தில் சற்று ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. நாஞ்சில் நாடன் வருவார். இது என்ன பட்சி என்று தெரியவில்லை. குருவிகளைக் காணோம். அதனிலும் சிறியதாக இருக்கிறது. ஆனால் கொள்ளை அழகு என்று அவரிடம் வியந்து சொன்ன போது அவர் சொல்லித் தான் அதற்கு தேன் சிட்டு என்று பெயர் அறிந்தேன். அவரிடமிருந்து எத்தனை நூறு பட்சிகளின் பெயரை, மீன்களின் வகைகளை அறியலாம் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.

சிட்டுக் குருவிகளைக் காணவில்லை. சென்னை வந்ததிலிருந்து. தில்லியில் அவற்றை நிறையப் பார்த்தோமே அப்போது அது பற்றி நினைக்க வில்லை. நிறைய கூட்டம் கூட்டமாக வந்து அமரும். அவற்றிற்காகவே தானியத்தை பரக்க இரைத்திருப்பார்கள். இருபது முப்பது என்று கூட்டமாகக் கொரிக்க வந்துவிடும். ஒரே இரைச்சல். கூட்டம் கூட்டமாகப் பள்ளிச் சிறுவர்களைப் போல. அவற்றை இரைச்சலிடும், வாதிடும், சண்டையிடும் குழந்தைகளாகத் தான் பார்க்கத் தோன்றும். அந்த ரம்மியமான, காட்சிகள் இப்போது இல்லை. சிறு வயதிலிருந்து பார்க்கும் ஒன்றைப் பற்றி அது இல்லாத போதுதான் நினைக்கத் தோன்றியது. இல்லையே ஏன் என்று கேட்கத் தொடங்கியதும் தான், இந்த மொபைல் டவர்ஸின் கதிரியக்கத்தினால் அவை எல்லாம் செத்து மடிந்து விட்டன என்கிறார்கள். சிட்டுக் குருவி மாத்திரம் அல்ல தேனீக்களுக்கும் அவற்றால் ஆபத்து என்கிறார்கள். டைனாசோர்ஸைப் பார்த்ததில்லை. வீட்டு முற்றத்தில், அவற்றோடு பழகியதில்லை. அவை எப்படியோ போகட்டும். ஆனால் குருவிகளைச் சாகடித்து ஒரு வாழ்க்கை வசதி வேண்டுமா?

மிகவும் வேதனை தரும் செய்தி. யாரும் இதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இனி சிட்டுக் குருவிகளையே பார்க்கமுடியாது. சட்டென இப்போது தான் குருவிகள் மறைந்துவிட்டன என்று நினைக்கும் போது தான் வெகு காலமாக பார்க்காத, பழனி வைத்தியசாலையின் வயோதிக வாலிபர்களுக்கான சிட்டுக் குருவி லேகிய விளம்பரங்களும் நினைவுக்கு வருகின்றன. வாரா வாரம் வரும் அவையெல்லாம் இப்போது காணப்படுவதில்லை. சிட்டுக் குருவிகளே இல்லையென்றால் சிட்டுக்குருவி லேகியம் எங்கிருந்து வரும்? வயோதிக வாலிபர்களின் பாடு திண்டாட்டம் தான். சிட்டுக் குருவிகளைப் பார்க்கும் போது அது ஆண்மையை மீட்டுத் தரும் லேகியமாகவா பார்க்கத் தோணும்?. வீட்டில் வளரும் கோழியையும் ஆட்டையும் உணவாகத் தான் பார்ப்பார்கள் அந்த வீட்டுக்காரர்கள். வீட்டில் கறிகாய்த் தோட்டம் போடுவது போல. வெகு அரிய மான்வகைகளை விருந்துக்கான பொருளாகத் தான் சல்மான் கானுக்குப் பார்க்கத் தோன்றுகிறது. அந்த அழகிய அரிய ஜீவனைப் பார்த்தால் நாக்கு ஊரும் என்றால் அந்த வாழ்க்கையை, பார்வையை வளர்த்துக் கொண்டவர்களை என்ன சொல்ல?..ஆனால் தில்லியில் எங்கிருந்தோ வரும் புறாக்கூட்டங்களைக் கூவி அழைத்து அவற்றிற்கு தானியத்தை வீசி இரைக்கும் பழக்கத்தையும் முஸ்லீம்களிடம் தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இச்சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இச் சின்ன பறவைகளே கவிதை. இக் கவிதை அனுபவத்தைக் கவிதைகளாக வெளிப்படுத்தத் தோன்றும் தானே கவிஞர்களுக்கு?

தோன்றிற்று ஒரு கவிஞருக்கு. அத்தகைய கவிதைகளின் தொகுப்பு தான் கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’. கொண்டலாத்தி மாத்திரம் இல்லை. எத்தனையோ பறவைகள், நாம் அன்றாடம் காணும் பட்சிகள் தான் என்கிறார், ஆசை. ஆனால் இத்தொகுப்பில் காணும் பறவைகள் அனேகம் நாம் சாதாரணமாகப் பார்த்திராதவை. கிளி காடை, கௌதாரி, புறா அல்ல இவை. புள்ளி மீன் கொத்தி, தேன் சிட்டு, தவிட்டுக் குருவி, குக்குறுவான், உப்புக் கொத்தி, இப்படியானவை. இதே குறியாக இருந்தால் பார்த்திருப்போமோ என்னவோ.

பறவைத் தேடல் (Bird watching) நம்மில் ஒரு சிலருக்கு அவர் தம் வாழ்க்கையின் தேடலேயாயிருக்கிறது. சலீம் அலி போன்றோருக்கு. வேத கால ரிஷிகளைப் போல அவர்கள் தம்மைச் சுற்றிய இயற்கையை ஆராதித்தவர்கள். அதுவும் ஒரு தவமே தான். சலீம் அலியும் ஒரு ரிஷி தான். இதைச் சுட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு போதும் அவர் அராபிய ஷேக்குகளைப் போல நினைத்தும் பார்த்திருக்க மாட்டார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

பறவைத் தேடல் ஒன்றும் சாதாரண பொழுது போக்கல்ல. எனக்குத் தெரிந்த ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸருக்கு பொழுது போக்கு bird watching தான். ஒரு முறை அவர் அது பற்றிப் பேசியது மிக வேடிக்கையாக இருந்தது. தில்லியில் அக்பர் ரோட் ஆபீஸிலிருந்து ஒன்றாக கரோல் பாக் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை அவர் ஒரு நாளைக்கு ஒரு அனுபவமாகச் சொல்லி வருவார். முஷ்டாக்கின் கிரிக்கெட் மட்டை சுழன்று அடிக்கும் போதெல்லாம் பந்து ஆகாயத்தில் பறப்பதைப் பார்த்துக்கொண்டே “முஷ்டா…………..க்” என்று பெண்கள் இருக்குமிடத்திலிருந்து ஏகத்துக்கு கூச்சலும் பெருமூச்சும் கிளம்புமாம். அப்பாஸ் அலி பேக்குக்கும் அதே மாதிரி பெருமூச்சும் கூச்சலும் கிளம்பும். யாருக்கான பெண்கள் கூட்டத்தின் பெருமூச்சில் வெப்பம் அதிகம் என்று தீர்மானிக்க முடியாது என்பார். அது ஒரு நாள். இன்னோரு நாள் தன் பறவை வேட்டை சாகஸங்களைப் பற்றி அவர் சொல்லிக்கொண்டு வந்தார். அதற்கான முஸ்திப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். ஸ்தம்பித்துப் போனோம். காலையில் மூன்று மணிக்கு எழுந்து அதற்கான கம்பளி உடைகள், ஷூ, குல்லாய், டெலெஸ்கோப், ஃப்ளாஸ்கில் டீ, காமிரா, என்று ஒன்றொன்றாக அடுக்கினார். ஏதோ காட்டில் வீரப்பனைப் பிடிக்க விஜய் குமாரும் அவர் பட்டாளமும் செய்யும் ஆயத்தங்கள் போல இருந்தது. இயற்கை சிருஷ்டித்துள்ள இந்த சின்ன சின்ன அற்புதங்களை, அழகுகளை காத்திருந்து காத்திருந்து ஒரு சில விநாடிகள் காண இத்தனை பாடு. அக்பர் ரோடிலிருந்து கரோல் பாகிற்கு தினசரி எங்களுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் ஐ.பி.எஸ் ஆபீஸர் வேறு எப்படி இருக்க முடியும்?

அப்படித்தான், இக் கவிதைத் தொகுப்பில் உள்ள புகைப்படங்களை எடுத்த ஞானஸ்கந்தனும், ஆசையும் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தன்னுடன் வந்த ஒரு டஜன் பொடிப் பசங்களின் பெயரையும் அடுக்குகிறார் ஆசை.

கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்.
தேன் சிட்டின் மயக்கும் வண்ணம் பற்றிச் சொன்னேன். ஆசையின் கவிதை வேறு விதமாகச் சொல்கிறது:

கோடிகோடி மைல் நீ
கடந்துவந்ததெல்லாம் என்
குட்டித் தேன்சிட்டின் மூக்கில்
பட்டு மிளிரவா ஒளியே சொல்?

பறவைகள், தாவரங்கள் மனித வாழ்வோடு மட்டும் பிணைந்தவை அல்ல. அகன்ற பிரபஞ்சத்தோடும் தான். ஏதும் ஒரு இடையூறு, பிரபஞ்சத்தின் முழுமையையும் பாதித்துவிடுகிறது. ஒன்றில்லை எனில் ஏதோ ஒன்று குறை பட்டுப் போகிறது. நமது செல் போனுக்கும் தேனீக்களுக்கும் தேனடைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியா இழையறா சம்பந்தம் இருக்கிறது. பிரபஞ்சத்தின் முழுமையை ஒரு குருவி சொல்லிக் கொடுத்து விடுகிறது.. இதோ இன்னொரு ஆசையின் கவிதை -

நீ தேன் உறிஞ்சும் கணத்தில்
ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் சேர்த்தே
உறிஞ்சிவிடுகிறாய்
கூடவே காலத்தையும்
ஒளியும் தப்பாது உன்னிடமிருந்து
உன்னுள் என்ன இருக்கிறது என்று
அறிய முடியாமல் போகிறது யாராலும்

பிரபஞ்சத்தின் கருந்துளை நீ

ஆசையின் கவிதைகள் பல கணங்களில், பல பறவைகள் அவரில் தோற்றம் கொள்ளும் பார்வைகளையும், உணர்வோட்டங்களையும் நமக்குச் சொல்கின்றன.

வானவெளியின் கோலமாக, குழந்தைகளாக, பிடிவாதம் பிடிக்கும் சிறார்களாக, இன்னும் எத்தனையோ விதங்களில்.

இதோ ஒரு கோலம் -

வானத்தை
வானத்தைக்
கலைத்துப் பறக்கும்
கொக்குக் கூட்டம்
அவை கடக்கும்போதெல்லாம்
கலைந்து
கலைந்து
ஒன்று கூடும்
மீண்டும் வானம்

கரிச்சானைப் பற்றி ஒரு நீண்ட கவிதை. தாயின் வரவிற்காகக் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் குஞ்சுகளைப் பற்றியது. கவிதை முழுதையும் கொடுக்க முடியாது. ஒரு சில வரிகளிலிருந்து இப்போதைக்கு கவிதையின் முழுமையைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

இவ்வளவு
சின்னஞ்சிறிய ஒன்றுக்கும்
இடம் கிடைத்துவிடுகிறது உலகில்
எப்படியோ
………..
என்ன செய்யமுடியும் அதனால்
ஒரு பருந்து வந்தால்
பெருமழை அடித்தால்…….
…………..
ஒட்டு மொத்த உலகும்
அதற்கு எதிராக
………..
அப்படியே உட்கார்ந்திருக்கிறது
பெண் கரிச்சான்
அற்புதங்களை அடைகாக்கிறது அது
வெளிவந்தால் தெரியும்
அவற்றின் அட்டூழியங்கள்
…………
சின்னஞ்சிறியது கரிச்சான்
அதனினும் சிறியது அதன் கூடு
அதனினும் சிறியது அதன் முட்டை
ஒட்டுமொத்த உலகமும்
சார்ந்திருக்கிறது
அதனை

இப்பறவைகளின் உலகம் குழந்தைகளின் உலகம்.

குழந்தைகளுக்கு தம் விளையாட்டுக்கும் பிரமிப்புக்கும் கொஞ்சிக் குலாவவும் சினேகிக்கும் உலகம். குழந்தைகளுக்கு அவற்றைப் பார்த்ததும் பார்பெக்யூ நினைவுக்கு வருவதில்லை நாக்கில் ஜலம் சொட்டுவதில்லை.

பெரும் பொறுப்புதான்
பாவம் இந்தச் சின்னஞ்சிறுவயதில்
ஏற்றுக்கொண்டிருக்கிறாள் அவள்
………………
பறவைகளுக்குப் பெயரிட
அதுவும் இல்லாத பறவைகளுக்கு
இனி வரப்போகும் பறவைகளுக்கு
…………….
பெயர்களை மட்டுமன்றி
பெயர்களுக்குரிய புதிய பறவைகளையும்
கண்டுபிடிக்க ஆரம்பித்தாள்
முதலில் காற்றுக்கொத்தி பார்த்ததாகச் சொன்னாள்
இப்போதோ மழைக்கொத்தி என்கிறாள்…
……..
…………..
நம்பவில்லை தானே நீங்களூம்
என்னைப்போலவே
மழைக்கொத்தி
உண்மைதான்
என்றுணர
ஒன்று நாம் அவளாக வேண்டும்
இல்லை
மழையாக வேண்டும்
அதுவும் இல்லையென்றால்
மழைக்கொத்தி ஆக வேண்டும்
நாம்.

ஆசைக்கு இப்படியும் ஒரு பார்வை, அனுபவம், ஒரு உலகம் சாத்தியமாகித்தான் உள்ளது

வரலாறு என்பது
வேறெதுமில்லை
தேன்சிட்டு தேன் குடித்தது
தேன்சிட்டு தேன் குடிக்கிறது
தேன்சிட்டு தேன் குடிக்கும்
அவ்வளவுதான்

சொல்லிக்கொண்டே போகலாம். சொல்வதென்றால் அவ்வளவு கவிதைகளையும் சொல்ல வேண்டும். ஆசையின் உலகத்திற்கும், அவருடன் சென்ற சிறுவர் உலகத்துக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசை. பறவைகளும் கவிதைகளும் தெய்வம் தந்த அற்புதங்களும் நிறைந்த உலகம். இது.

இப்படி ஒரு உலகை ஆசைக்கு முன்னர் சிருஷ்டித்துத் தந்தவர்கள் என எனக்கு உடனே நினைவுக்கு வருபவர்கள் ஆண்டாளும் தி.ஜானகிராமனும். ஆண்டாளின் உலகம் காலையில் நம்மைத் துயில் எழுப்பும் பறவைகளின், மிருகங்களின் ஜீவ ஒலிகளும் தெய்வமும் நிறைந்தது. தி. ஜானகிராமனின் உலகில் பறவைகள், பூத்துக்குலுங்கும் மரங்கள். பின் பெண்மையும் நிறைந்த உலகம் அது. தனித்திருக்கும் வயதான பாட்டிக்கு இன்னொரு ஜீவன் துணை ஒன்றுண்டு. காக்கை. வேளாவேளைக்கு தவறாது வந்துவிடும் சினேகம் அது. “உனக்கு இப்பவே என்ன கொட்டிக்க அவசரம்?. இன்னம் கொஞ்சம் நாழி ஆகும். கொஞ்சம் ஊரைச் சுத்திட்டுவா. அதுக்குள்ளே உனக்கு எல்லாம் பண்ணி வைக்கறேன்” என்று அடம் பிடிக்கும் குழந்தைக்குச் சொல்வது போல உரிமையோடு அதட்டுவாள். வேண்டாம் பூசணி என்ற கதையில் ஆசை கண்ட காகம் ஒன்று தோசை தின்னப் பழகிய காகம். காகம் என்றாலே நம்மில் பலருக்கு அருவருப்பாக இருக்கும். அதன் நிறமும், அதன் தோற்றமும், அதன் வாழ்க்கையும்.

அந்தக் காக்கை கூட அழகிய, சற்று நேரம் அதிலேயே கண் பதித்திருந்தால் நம்மை எங்கேயோ இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த சித்திரங்கள் உண்டு. கோட்டுச் சித்திரங்கள் தான். தாழ் வாரத்தில் துணி உலர்த்தும் கம்பியில் உட்கார்ந்திருக்கும் காக்கைளின் அணிவகுப்பு, தரையில் கூட்டமிட்டுக் கொட்டமடிக்கும் காக்கைகள். அழகு எங்கும் இருக்கும்.

தன் வாழ்நாள் முழுதும்
சிரமப்பட்டு
இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்
படைத்தார் கடவுள்
பிறகு தேன்சிட்டுக்கென்று
தேனையும்,
தேனுக்குப் பூவையும்
பூவுக்கென்று செடியையும்
செடியிருக்கத் தரையையும்
தரைக்கென பூமியையும்
பூமிக்கென் வானம்
நட்சத்திரங்களென்று
யாவற்றையும் படைத்தார் கடவுள்
…………
இப்படி நீண்டு செல்கிறது இன்னொரு கவிதை.

(நன்றி: ஆசை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp