பண்பாட்டு அசைவுகள்

பண்பாட்டு அசைவுகள்

நெல்லை மாவட்டத்தில் ஐயா.தொ.ப நேரடியாகக் கண்டு பதிவு செய்த சம்பவத்துடன் தொடங்குவோம்.

இருபத்தெட்டு வயது திருமணமான இளைஞன் விபத்தில் இறந்து போகிறான். மனைவிக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். ஒரு பெண் குழந்தை. துக்க வீட்டினுள் ஒரே அழுகை சத்தம். துக்க வீட்டின் முன் மேளச்சத்தம். ஊரே துக்க வீட்டில் கூடி நிற்கிறது. திடீரென்று துக்க வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி ஒரு தண்ணீர் செம்பு நிறைய தண்ணீரோடு வெளியே வருகிறாள். பெரியோர்கள் நிற்கிற இடத்தின் நடுவே தண்ணீர் செம்பை வைத்துவிட்டு தன் வலக்ககையில் மறைத்து வைத்திருந்த பிச்சிப்பூ( முல்லைப்பூ) ஒன்றை சொம்பு தண்ணீரில் இடுகிறாள். கூட்டம் மூச்சடங்கியது. இரண்டாவது பூவையும் தண்ணீரில் இடுகிறாள். கூட்டம் ச்சூ ச்சூ என அனுதாப ஒளி எழுப்புகிறது. மூன்றாவது பூவையும் தண்ணீர் சொம்பில் இடுகிறாள் மூதாட்டி. கூட்டம் அனுதாப ஒளி எழுப்புகிறது. பிறகு சில வினாடிகள் கழித்து மூன்று பூவையும் எடுத்துக் கொண்டு தண்ணீரை கீழே கொட்டிவிட்டு மூதாட்டி வீட்டினுள் சென்றுவிடுகிறாள். கூட்டத்தில் அனுதாப ஒலியோடு “ம்... பாவம் என்னத்த சொல்றது” என்ற அனுதாப வார்த்தைகள் சேர்ந்து கொள்கிறது.

சாட்சியாய் நின்று கொண்டிருக்கும் தொ.ப அவர்களுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியாமல் அங்கிருந்த முதியவரிடம் இது பற்றி கேட்க,”இது தெரியலையா ஒனக்கு... தாலி அறுக்கிற பொம்பளப்புள்ள மூணு மாசமாம முழுகாம இருக்கு’ என்கிறார். விவரம் புரியாமல் தொ.ப “அந்தப் பொன்னு முழுகாம இருக்கற விஷயத்தை ஏன் ஊருல சொல்லனும்” எனக்கேட்க, அதற்கு ஒரு பெரியவர் எரிச்சலுடன், “பேரப்புள்ள , ஏழு மாசம் கழிச்சு அவபுள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா, எப்படி புள்ள வந்திச்சுன்னு” என்கிறார். தொ.ப அதிர்ச்சியாலும் அவமானத்தாலும் குன்றிப் போகிறார். ‘ இதோ , இந்தப் பெண் இறந்து போனவனுக்காக வயிறு வாய்த்திருக்கிறாள். ஏழு மாசம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை இன்றைக்கு இறந்து போனவன்தான்’ என்று ஊரும் உலகமும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்திருக்கிறது. பிறக்கின்ற எந்த உயிறும் தந்தை பெயர அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

இது சோக சம்பவமாயினும், ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சிறு அசைவின் மூலம் எவ்வாளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது.

இந்த பண்பாட்டு அசைவைப் பற்றித்தான் இந்த நூல். இந்நூல் தொ.ப அவர்களின் அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இரண்டு முந்தைய நூல்களின தொகுப்பு.

இந்நூலின் முற்பகுதி அறியப்படாத தமிழகம் என்பது. இதில்தான் மேற்சொன்ன சம்பவம் வருகிறது. சாதாரணமாக நாம் கடந்து செல்லும் செயல்களுக்கு புதிய நோக்கில் “ தெறி” விளக்கம் அளித்துள்ளார் தொ.ப. இந்த நூலின் முற்பகுதி பல்வேறு தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளையே கொண்டது. ஆனால் இதன் வீச்சு விரிவானது.

நீர் என்னும் தலைப்பில்

ஊற்று என்பது தானே நீர் தசிந்த நிலப்பகுதியாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’ என்பதாகவும், உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘ ஊருணி’ என்பதாகவும், ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ‘ ஏரி’ என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என தமிழர்கள் பெயரிட்டு அழைத்திருப்பதையும், நீர் உவர் நீராக இருந்தால் நெல்லிக்காய் வேரினை இட்டு பயன்படுத்தி இருப்பதையும் நீர் என்னும் தலைப்பிலான சிறு கட்டுரையில் அழகாக நமக்குக் கடத்துகிறார் நூலாசிரியர்.

தமிழர் உணவு என்னும் தலைப்பில்

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளை பொருட்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றை பொருத்து அமையும் என்கிறார்.

மேலும் நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள் என்கிறார்.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பல்வேறு நோயின் தாக்கங்களுக்கு உணவு முறையை சரிவர பின்பற்றாததும் ஒரு காரணமே என்பதையும், ஹோட்டல்கள் பெருகப் பெருக மருத்துவமனைகளும் நோயாளிகளும் பெருகினர் என்பதையும் நம்முள் இயல்பாக உணர்த்துகிறது இக்கட்டுரை.
மேலும் உணர்வும் உப்பும், உணவும் நம்பிக்கையும், எண்ணெய், சோறு விற்றல் போன்றவற்றைப் பற்றிக் கூறும் தமிழ் என்ற தலைப்பிலான முதலாவது பெருங்கட்டுரை தமிழர்தம் பண்பாடு சார்ந்து பலப்பல தகவல்களை அள்ளித் தருகின்றன.

அன்றிலிருந்து இன்று வரை குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் தமிழர் பண்பாட்டில் முக்கியமானது. “ஒரு சமூகத்தின் ஆசைகளும் கடந்த கால நினைவுகளும்,-எதிர்பார்ப்புகளும்,அழகுணர்ச்சியும்,நம்பிக்கையும், மனிதனுக்குப் பெயரிடும் வழக்கத்தில் புதைந்து கிடப்பதைக் கூறும் மக்கட் பெயர் என்னும் கட்டுரை அலாதியானது.

உறவுப் பெயர்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் தம்+ அப்பன்= தமப்பன் என்பதே தகப்பன் என்றானதும், தம் பின் என்பதே மருவியே தம்பி என்றாயிருப்பதையும் இன்னும் பல் உறவுகளுகளுக்கான காரணப்பெயரை விளக்கும் இக்கட்டுரை தரும் தகவல்கள் ஏராளம்.

தைப்பூசம் என்னும் பெயரிலான பெருங்கட்டுரையினுள் வரும் தீபாவளி, விநாயகர் வழிபாட்டின் தொடக்கம் பற்றிய தகவல்கள் பண்பாட்டுத்தளத்தில் புது வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

இந்தியாவில் சமூகம் என்பது சாதியப் படிவங்களால் ஆனது. சாதியில்லாமல் ஒரு மனிதன் பிறப்பதுமில்லை, வாழ்வதுமில்லை. இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மனிதன் மதம் மாற முடியும் ஆனால் சாதி மாற முடியாது என்பதை மதமும் சாதியும் என்னும் கட்டுரையில் அழுத்தமாக முன்வைக்கிறார்.

இன்றைய IPL மோக காலகட்டத்தில் விளையாட்டைப் பற்றிக்கூறும் தமது பல்லாங்குழி கட்டுரையில், “சூதாட்டத்துக்கும், விளையாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதை நிகழ்கால உலக அரசியலிலும்காணலாம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பரிசுத்தொகைகளின் மூலம் விளையாட்டு வீரர்களையும் தடகள வீரர்களையும் சூதாட்ட உணர்வுடையவர்களாக மாற்றியுள்ளன. வெல்வதற்கு அல்ல விளையாடுவதற்கே விளையாட்டு என்ற ஒலிம்பிக் குறிக்கோள் எளிதாக முறியடிக்கப்பட்டுவிட்டது. பழைய ரோமானிய கிளாடியேட்டர்கள் எனப்பட்ட மனித சண்டைக் கடாக்கள் விளையாட்டின் பேரால் மீண்டும் உருவாக்கப்படுவதுதான் கவலையைத் தருகிறது” என்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்றாகிறது.

தமிழக பௌத்த, சமண மதங்களின் எச்சங்கள் நமது தமிழ்ச் சமூகப் பண்பாட்டில் மிச்சம் மீதிகளாய் ஆங்காங்கே வழங்கி வருவதை தம் கூறிய அவதானிப்புகளாலும், தமது உள்ளுணர்வாலும் கண்டு, அதற்கு தொ.ப அவர்கள் தரும் விளக்கங்கள் நம்மைப் பிரமித்துப் போகச்செய்பவை.

தமிழ்ச்சமூகத்தில் கறுப்பு நிறம் கீழ்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், கல்வியறிவற்றவன் அல்லது நாகரீகமற்றவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுவதையும், மனிதத் தோலின் நிறத்தையும் அழகையும் இணைக்கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விவரிக்கும் கறுப்பு என்னும் கட்டுரையோடு நூலின் முதல் பாகம் முடிவடைகிறது. தமிழ்ப்பண்பாட்டில் பிறப்பு திருமணம் முதல் இறப்பு வரையில் வரும் சடங்குகளையும், இதில் தாலி, மஞ்சள், சங்கு போன்றவற்றின் பங்குகளையும் அழகுற எடுத்தியம்பியுள்ளார் தொ.ப.

நூலின் இரண்டாம் பாகம் தெய்வங்களும் சமூக மரபுகளும் ஆகும்… பொதுவாக தொ.ப ஆய்வுகளில் சிறு தெய்வ வழிபாடும், தாய்தெய்வ வழிபாடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரியாரிய, மார்க்சிய அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தொ.ப, “பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு, ராமன் எதிர்ப்பு போன்று நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராகத்தான் இருந்தாரேயொழிய சிறு தெய்வ வழிபாடுகளுக்கு எதிராக இருந்ததில்லை” என்கிறார். பௌத்த சமண பண்பாட்டின் தொடர்ச்சியான அசைவுகளை சமூகத்தின் பலப்பல பகுதிகளிலிருந்து திரட்டித் தந்திருப்பது சிறப்பு. பலராம வழிபாட்டைப்பற்றியும், அழகர் கோயில் பற்றியும், அழகர் கள்ளழகர் ஆன வராலாற்றையும் கூறும் கட்டுரைகள் அக்மார்க் தொ.ப ரகம். அதேபோல் பார்ப்பணர். வரலாற்றைக்கூறும் கட்டுரை, மதுரைக்கோயில் அரிசன ஆலயப்பிரவேசம் நிகழ்த்தப்படக் காரணம் சாதி என்னும் சமூகப்பிரச்சினையைத் தாண்டி இருந்த அரசியல் காரணம் என இந்நூலின் இரண்டாம் பாகமான “ தெய்வங்களும் சமூக மரபுகளும்” என்பது ஆய்வு நோக்கிலான படைப்புகள். இப்பகுதியை ஒரு சாதாரண வாசகன் புரிந்து கொள்ள நல்ல உழைப்பைத் தர வேண்டும்.

இந்நூலைப் படித்து முடித்ததும், சிறு வயதில் எங்கள் பகுதியில் நாங்கள் பாடும் பாடல் கூட சமணப் பண்பாட்டின் எச்சமோ எனத்தோன்றியது.

அந்தப்பாடல்,

“முண்ட கட்டை சாமியாரு
மோரு வாங்கப் போனாராம்
அங்க ஒருத்தன் நின்னுகிட்டு
அரோகரா போட்டானாம்”

என்பதாகும்.

இதை தொ.ப வழியில் நான் இவ்வாறு விளங்கிக் கொள்கிறேன். அதாவது முண்டகட்டை சாமியார் என்பது சமண திகம்பர சாமியார்களை குறிக்கும். இதில் அரோகரா என்பது தற்போது முருகனுக்கு உகந்த மந்திரமாக இருந்தாலும், அப்போது இது சிவனை வாழ்த்தும் சைவ மத கோசமாக இருந்துள்ளது. இதைப் பற்றி மாலை மலர் இதழ்: ‘அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் சுருக்கம்.

இதற்கான பொருள், ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதாகும்.

முன்பு, சைவ சமயத்தினர் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்தபோது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர்.

இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, ‘அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாயிற்று.” என்று குறிப்பிடுகிறது.

எனவே எங்கள் தஞ்சைப் பகுதியில் நான் சிறுவயதில் விளையாட்டாய் சொல்லித் திரிந்த பாடலானது சமண மதத்தின் நிர்வாண தத்துவமே கேலிக்கு ஆளாகி பின் சைவர்களால் அது அரோகரா கோசத்துடன் பழிக்கப்பட்டதாகவும் நான் விளங்கிக் கொள்கிறேன். இதில் தவறிருந்தால் சான்றோர்கள் விளக்குக..

இவ்வாறாக தொ.ப அவர்களின் நூல்களிலேயே சற்றுப் பெரிதான நூலான பண்பாட்டு அசைவுகளிலிருந்து எனது பார்வைக்கு சொல்லத் தோன்றிய தகவல்களை ஒரு சிறு அளவே தந்துள்ளேன். தமிழிலக்கிய மாணவர்களேயன்றி அனைத்து தரப்பினராலும் புரிந்து கொள்ளக்கூடியதுதான் இந்நூல். இரண்டாம் பகுதி தெய்வங்களும் சமூக மரபுகளும் வேண்டுமானால் சிறிது கடுமையாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை குன்றின் மீதிட்ட விளக்காக உயர்த்திப் பிடித்துள்ளது இந்நூல். இதற்காக தமிழ்ச் சமூகம் ஐயா. தொ.ப அவர்களுக்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளது எனலாம். நூலின் இரண்டு பகுதிகளுக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் ந.முத்துமோகன் ஆகிய ஆய்வாளர்கள் எழுதிய முன்னுரைகள் மிகவும் சிறப்பு.

Buy the Book

பண்பாட்டு அசைவுகள்

₹237 ₹250 (5% off)
Out of Stock

More Reviews [ View all ]

பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்

ராமமூர்த்தி நாகராஜன்

விடுபூக்கள்

ராமமூர்த்தி நாகராஜன்

பாணர் இனவரைவியல்

சண்முகராஜா சிறிகாந்தன்
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp