இந்திய வரலாற்றின் மீதான விவாதங்களும் முடிவுகளும் இதுவரையில் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டத்திலேயே நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் தளத்தில் பரந்த அளவில் விவாதங்களை உருவாக்க வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம்.
இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதில் இரு போக்குகள் நிலவுவதை கான முடியும். தனிச் சொத்துடமை இல்லாத, சுயதேவை பூர்த்தி அடைந்த கிராமங்களை கொண்ட, மாறாநிலை சமூக அமைப்பு பிரிட்டிஷார் வரும் வரை நிலவியது என்ற கருத்தும். அதற்கு மாறாக, ஐரோப்பிய சமூக வளர்ச்சியை போலவே இந்தியாவும் புராதன பொதுவுடமை, அடிமை முறை, நிலவுடமை முறை என்ற வளர்ச்சியையே கண்டுள்ளது என்கின்ற கருத்தும் உள்ளது. பிந்தைய கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட கருத்தாகும்.
“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”க்கு 1888-ஆம் ஆண்டு எங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் “மனிதகுல வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் - சுரண்டும் வர்க்கங்களுக்கும், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்றார்.
இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து டி.டி.கோசாம்பியால் முன்வைத்த பிறகுதான் இங்கு வரலாற்று ஆய்வு சரியான திசையில் பயணித்தது. மார்க்சிய அடிப்படையில் வரலாற்றை ஆய்வது என்றால் என்ன? இதில் அடிப்படையாக புரிந்துகொள்ள வேண்டியது சமுதாயத்தில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று, பொருளியல் அடித்தளமான உற்பத்தி உறவுகளும், உற்பத்தி சக்திகளும். இரண்டு, மதம், சாதி, சித்தாந்தம், பண்பாடு ஆகிய மேற்கட்டுமானம். இதில் இறுதியாக பார்க்கும்போது பொருளியல் அடித்தளமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது.
எடுத்துக்காட்டாக நிலவுடமை சமுதாயத்தின் சட்டங்களும் மதிப்புகளும் முதலாளித்துவ சமூகத்தில் மாறிவிட்டன. இதற்குக் காரணம் அடித்தள மாற்றமே ஆகும். நிலவுடமை சமூகத்தில் நிலத்தோடு பிணைக்கப்பட்ட விவசாயிகளும் நிலவுடமையாளர்களும் பிரதான பங்கு வகிக்கின்றனர். பிரதான வர்க்கங்களாகவும் விளங்குகின்றனர். அந்த சட்டங்களும் மதிப்புகளும் அந்த நிலைமைக்கு ஏற்ப அமைந்தன. முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் பிரதான பங்கு வகிக்கின்றனர். பிரதான வர்க்கங்களாகவும் விளங்குகின்றனர். உற்பத்தி சக்திகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் சட்டமும் பிற மதிப்புகளும் முதலாளித்துவத்தை கட்டிக்காக்கும்படியாக அவர்களைக் காப்பாற்றும் படியாக, முற்றிலும் மாறுபட்டிருக்கின்றது. அதாவது அடித்தளத்தில் சீராக ஏற்பட்ட மாற்றம் மேற்கட்டுமானத்தை நிர்ணயித்துள்ளது.
இந்த அடிப்படையில் ஆய்வு செய்த சர்மா பண்டைய இந்தியாவைப் பற்றி பின்வரும் முடிவுகளுக்கு வந்தார்: கி.மு. 1500லிருந்து கி.மு. 1000 வரையிலான காலத்தில் ஆளும் பழங்குடி அரசின் கீழே தனியுடைமை தோன்றியது. பிறகு தனிச் சொத்துடைமை திடப்பட்டது. கி.மு. 1000லிருந்து கி.மு.500க்குப் பிறகு நிலத்தில் தனியுடைமை தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. நிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவரே நிலத்தின் உரிமையாளராவார். அதன் பிறகு கி.மு.322லிருந்து கி.மு.200 வரை காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட அரசு உருவாகி அடிமைச் சமூகத்தை திடப்படுத்தியது. சுரண்டலை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக வர்ணாசிரம தர்மம் வடிவமைக்கப்பட்டது. இந்த தர்மங்களும் கௌடில்யர் போன்றோரால் வகுக்கப்பட்ட சட்டங்களும் நிலைபெற்றிருந்த சமூகப் படிநிலை அமைப்பை உயர்த்திப் பிடித்தன.
இதன் பிறகு நகரங்கள் வீழ்ந்தன. இது உற்பத்தி முறையில் நெருக்கடியை தோற்றுவித்தது. வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய மறுத்தனர். கி.பி.3ஆம் நூற்றாண்டு, கி.பி.4ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் (இதுவே கலிகாலம்) உற்பத்தி உறவுகள் பெரும் மாற்றங்களுக்குள்ளாயின. குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய முறை ஒரு புதிய சமூக உருவாக்கத்தை, புதிய தொழில் பிரிவினைகளை, வர்க்கத்தை தோற்றுவித்தது. இது முந்தைய உற்பத்தி முறைக்கு உரியதான வர்ண முறையை செயலற்றதாக்கியது. புதிய நிலப்பிரபுத்துவ (நிலமானிய) முறையை தோற்றுவித்தது. அதற்கான சமூக வடிவமாக சாதியை தோற்றுவித்தது. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் சமூக வளர்ச்சிகான கட்டங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஆசிய உற்பத்தி முறை இங்கு நிலவியதற்கான எந்த வரலாறும் இல்லை, இதை 100 ஆண்டுகால அகழாய்வுகள் நிருபிக்கின்றன என்ற கருத்துகளை முன்வைத்தார்.
ஆர்.எஸ்.சர்மாவின் இந்திய நிலமானியம் குறித்த குறிப்பான ஆய்வுகள் இந்திய வரலாறு பற்றிய ஆய்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக “இந்திய நிலமானிய முறை” மற்றும் “மத்திய காலங்களின் தொடக்கத்தில் இந்திய சமூகம் - நிலப்பிரபுத்துவ உருவாக்கம் பற்றிய ஒர் ஆய்வு” (Early Medieval Indian Society - A Study in Feudalisation) என்ற நூல்கள் இது குறித்த மிக விரிவான, ஆழமான ஆய்வுகளாகும்.
இது போன்றே தமிழக வரலாற்றிலும் 7ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் பரவலாக புகுத்தப்பட்ட நிலமானிய முறை இங்கு முதன்முதலாக சாதி அமைப்பை உருவாக்கி திடப்படுத்தியது. மேற்கண்ட பொருளியல் அடித்தளத்தின் மாற்றமும், வளர்ச்சியும் அதற்கான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது என்பதை பார்க்க முடியும்.
இந்த வரலாற்று ஆய்வுகள் சமூக வடிவத்தை, சாதியைப் பற்றிய சரியான ஆய்வுகளை வைக்க உதவியது. அதாவது “பரம்பரைத் தொழில் பிரிவினை அடிப்படையில் சாதி முறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதி மற்றும் தீண்டாமையின் சமூக வேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை நிராகரிக்கும் வகையில் கிராம்சிய வாதிகள் இந்து மதத்தை உற்பத்தி உறவாக, அடித்தளமாக இருக்கிறது என்கிறார்கள். அதாவது “இந்து மதத்தைப் பொறுத்தவரையில் அது மேற்கட்டுமானத்தின் கூறாக இருப்பதோடு பிரதானமாக அடித்தளமாகவே இருக்கிறது; சாதிய அடக்குமுறை என்ற வடிவத்தில் - பார்ப்பனியமாக - அடித்தளத்தில் உள்ளது” என்று கூறுகிறார்கள். இப்படி இங்கே வர்க்கம் என்பதே வர்ணமாக, சாதியாக இருப்பதால் அதுவே உற்பத்தி உறவாக இருக்கிறது என்கிறார்கள். இதே போல் பெரியார், சாதியத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆதாரமாக இருக்கும் இந்து மதத்தையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும் என்றார். சாதி முறைக்கு பார்ப்பனியமே வேர் என்றும், இதை ஒழிக்கும் போராட்டத்தையே முதன்மையான பணியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய படிநிலைக்கான வேர் நிலப்பிரபுத்துவம் தான் என்பதைப் பார்க்க மறுத்து சாதியையும், மதத்தையும் அடித்தளம் என்று கூறுபவர்களும், அடித்தளம், மேற்கட்டுமானம் என்று சமூகத்தை பிரிக்கக் கூடாது என்று கூறுபவர்களும் பெரியாரிய, அம்பேத்காரிய தத்துவத்தின் பின்னே நிற்கிறார்கள். அடையாள அரசியலின் பின்னே நிற்கிறார்கள். பண்பாட்டு தளத்திலேயே சாதியை ஒழிக்கமுடியும் என்று கருதுகிறார்கள். மார்க்சிய அடிப்படையிலான ஆய்வை மறுக்கிறார்கள். பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கிறார்கள்.
இந்து மதத்தை ஒழிப்பதாலோ, பார்ப்பனியம் என்ற பேரால் பார்ப்பனரை மட்டும் எதிர்த்து, பார்ப்பனர் அல்லாத ஆளும் வர்க்கத்தை தாங்கி நிற்பதாலோ, இந்து மதம் அடித்தளம் என்று வரையறுத்து, இந்து மதத்தின் மீது போர் தொடுப்பதாலோ சாதியை ஒழிக்க முடியாது.
இந்தியாவில் நிலவுடமை அமைப்பு தோற்றம் பெறாத வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர், மிஜோரம், நாகாலாந்து, அசாம் போன்ற மாநிலங்களில் சாதிப் பிரிவினைகள் இல்லை என்பது மண்டல் குழு வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் சாதியத்துக்கு பொருளியல் அடிப்படை என்பது நிலவுடமை சமூக அமைப்பே தவிர மாறாக இந்து மதம் அல்ல என்பதே.
அதே போல் நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஆன்மீக வகைப்படாத நிலப்பிரபுக்களுக்கு இணையாக ஆன்மீக நிலப்பிரபுக்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும். ஆன்மீக நிலப்பிரபுக்களின் (கோயில்கள், மடங்கள்) ஆதிக்கம் தென்னிந்தியாவில் மிக வலுவானதாகும். அதிலும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது பார்ப்பன மடங்கள், கோயில்கள் மட்டுமல்ல அதைவிட வலுவான பார்ப்பனர் அல்லாத கோயில்களும் மடங்களும்தான். சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேயம், பள்ளிச்சந்தம், தேவதானம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதை அறியமுடியும். தமிழகத்தில் மட்டும் 36,355 கோயில்கள் மற்றும் மடங்கள் 4,79,021 ஏக்கர் நிலத்தினை வைத்துள்ளதாக 2002-03ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை கூறுகிறது.
நிலவுடமைக்கும் மத நிறுவனங்களுக்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ள எங்கல்ஸ் கூற்றினை புரிந்துகொள்ளவேண்டும். “மத்தியகாலத்தின் உலகக் கண்ணோட்டம் பெரும்பான்மையாக இறையியல் கண்ணோட்டம்தான். ஒரு பொது எதிரியான சராசன்களுக்கு (முஸ்லீம்) மாற்றாக ஐரோப்பிய நாடுகளை கிருத்துவம் ஒருமைப்படுத்தியது. கத்தோலிக்கம் இதைச் செய்தது. கருத்தளவில் மட்டும் இந்த இணைப்பு நின்றுவிடவில்லை. உண்மையிலேயே இந்த இணைப்பு இருந்தது. போப்பாண்டவரை மையமாகக் கொண்டு நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைக்கப்பட்டிருந்த தேவாலய அமைப்பில் அது காணப்பட்டது. நில உடமையாளர் என்ற முறையில் உள்ள தேவாலயம் பல்வேறு நாடுகளுக்கிடையிலான இணைப்பாக விளங்கியது. தேவாலயத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிரபுத்துவ அரசாங்க முறைக்கு ஒரு மத அங்கீகாரத்தை அளித்தது. மேலும் குருமார்கள் மட்டுமே படித்த வர்க்கத்தினர். எல்லா சிந்தனைகளுக்கும் தேவாலயம் ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் விளங்கியது” என்று எங்கல்ஸ் கூறுவது இந்தியாவுக்கும் பொருந்துவதைக் காணமுடியும்.
பண்டைய இந்திய சமூக அமைப்பு முறை உருவாக்கத்தில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கையும், மத்திய கால இந்தியாவில் இந்துமதமும், சாதியும் ஆற்றிய பங்கையும் அதாவது மேற்கட்டுமானம் ஆற்றிய பங்கை தெளிவாக பார்க்க முடியும்.
உற்பத்தி முறையிலும், உற்பத்தி உறவுகளிலும் ஏற்படும் மாற்றம்தான் அதன் மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அதாவது “நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும்” என்கிறோம். இதை வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.சர்மாவும் நிரூபித்துள்ளார்.
“இந்து மதம் நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து உயிர் வாழ்வது சாத்தியமானதேயாகும். இவ்வாறு மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை” என்பதைக் காணலாம். வடிவங்கள்தான், அதன் மேற்கட்டுமானங்கள்தான் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கே உரிய சிறப்பம்சத்தோடு வளர்கின்றது அது போலவே இந்தியாவிலும் வளர்ந்துள்ளன. பொருளாதார கூறுகள் ஒரே மாதிரியாகவே வளர்ந்துள்ளன.
இந்த சமூக வளர்ச்சியின் விதிகளில், பண்டைய இந்திய சமூகத்தின் பொருளியல் அடித்தளமும் அதன் மீதமைந்த மேற்கட்டுமானமும் பற்றி புரிந்துகொள்ள ஆர்.எஸ்.சர்மா அவர்களால் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளின் தொகுப்பான “பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்” என்ற இந்த நூல் மிகவும் முக்கியமானதாகும். இதன் நோக்கம், இந்திய வரலாற்றை சரியாக புரிந்துகொள்ளும் போதுதான் இந்த சமூகத்தை மாற்ற முடியும் என்பதே. அதற்கான தொடக்கமாக இந்நூல் புதுமைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுவது மகிழ்ச்சியானதே. தமிழில் இது போன்ற ஆய்வு நூல்களை அதிகமாக கொண்டுவருவதற்கான முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.