“மனப்பாடக் கல்வி”… இந்த ஒற்றைச் சொல் பல காலமாய் விவாதப் பொருளாய் இருந்து வருகிறது. பெரும்பாலும் கல்வியாளர்களால் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த இந்த மனப்பாடக்கல்விமுறையின் தீமைகள் சமீப காலங்களில் பொதுத்தளத்திலும் வலுவாக விவாதிக்கப்படுவது நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது. மாணவர்களின் சிந்திக்கும் திறனையும், பகுப்பாய்வு செய்யும் திறனையும் வளர்க்காத பாடத்திட்டங்களால் மாணவர்கள் கல்வியின் பயனை முழுமையாக அடையப்போவதில்லை.
தற்போது பேசுபொருளாய் மாறி இருக்கும் மனப்பாடக்கல்வியின் குறைகளைச் சிந்தித்து மாணவர்களின் உண்மையான உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்ந்த ஒரு ஆசிரியரின் சுய அனுபவப் பதிவாக இருக்கிறது “பகல் கனவு” என்னும் புத்தகம். இப்புத்தகம் ‘திவசப்னா’ என்ற பெயரில் 1931ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டது. இந்தப் படைப்பு கல்வித்துறையில் “டோட்டோசோன்- ஜன்னலில் ஒரு சிறுமி’ புத்தகத்தைப் போல் ஒரு உலகலாவிய பாராட்டுதலைப் பெற்ற நூல். இந்நூலைப் பற்றிய விமர்சனங்கள் இணைய வெளியெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.
குஜராத்தைச் சேர்ந்த ஜிஜூபாய் பதேக்கா(1855 – 1939) என்பவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,கல்வியாளர், ஆசிரியர். இவருடைய மகனை வளர்ப்பதற்காக இத்தாலியக் கல்வியாளரான மாண்டிசோரியின் கல்விமுறையை ஆழமாக ஆய்வு செய்தார். 1916ஆம் ஆண்டு குஜராத்தின் பவநகரில் இருந்த தக்ஷிணாமூர்த்தி பால மந்திரில் கல்விப் பரிசோதனைகளை மேற்கொண்டார். இவர் கல்வித்துறை அதிகாரியின் சிறப்பு அனுமதியின் பேரில் இந்தப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்விமுறையின் அடிப்படை அம்சங்களை எடுத்துக் கொண்டு அதை உள்ளூர் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார்.
இவர் ஆசிரியர் பெயரை லக்ஷ்மிராம் என்று மாற்றியும் கொஞ்சம் கற்பனை கலந்தும் எழுதிய சுய அனுபவப் பதிவுதான் இந்தப் பகல் கனவு புத்தகம். இந்த லக்ஷ்மிராம் ஆசிரியர், காலம்காலமாக கல்வித்துறையில் பின்பற்றப்பட்டு கெட்டிதட்டிப்போன மனப்பாடக்கல்வி முறையை மாற்ற விரும்பும் ஒரு புதுமை விரும்பி. இவர் மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர வழக்கமான பாடத்திட்டங்களை விட்டு வெளியேறி புதிய செயல்திட்டங்களுடன் மாணவர்களை அணுகுகிறார். இந்த அணுகுமுறையே பகல் கனவு என்னும் இப்புத்தகமாக விரிகிறது. இதனை நான்கு தலைப்புகளில் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
முதலாவது தலைப்பு, “பரிசோதனை தொடங்குகிறது”.
கல்வி அதிகாரியிடம் நான்காம் வகுப்புக்குப் பாடம் நடத்த அனுமதி பெற்று முதல் நாளில் பலவித முன்தயாரிப்புகளுடனும், கனவுகளுடனும் வகுப்புக்குச் செல்கிறார் லக்ஷ்மிராம் ஆசிரியர். அங்கு முதலில் மௌன விளையாட்டு; அடுத்தது வகுப்பறையின் சுத்தம்; அதை அடுத்து கூட்டுப்பாடல். கடைசியாக மாணவர்களுடன் உரையாடல் என்ற திட்டங்களை செயல் படுத்த விரும்பினார். தன் வகுப்புக்கு தலைமை ஆசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தக் குழந்தைகளை பார்க்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். “முற்றிலும் புதிய குறும்புக்காரக் கூட்டம், இந்தக் குழந்தைகளுக்குத்தான் நான் கற்றுத்தர வேண்டும்” என தனக்குத் தானே சிரித்துக்கொள்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். முதலில் மௌன விளையாட்டைத் தொடங்குகிறார், கூச்சல் குழப்பம்; திட்டத்தை செயல்படுத்தமுடியாத வெறுமையால் அந்த வகுப்பறைக்கு விடுமுறைவிட அவர்கள் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டே வெளியே ஓடுகிறார்கள். பள்ளியே திகைக்க, தலைமை ஆசிரியர் ஆசிரியர் லட்சுமிராமைக் கடிந்து கொள்கிறார். கவலையோடு வீடு திரும்பியவர் அடுத்த நாள் புதிய உத்தியோடு சென்று மாணவர்களுக்கு கதை சொல்கிறார். மாணவர்கள் ஆடாமல் அசையாமல் கூர்ந்து கேட்கிறார்கள். வகுப்பு முழுவதும் அமைதி. எங்கும் சத்தமோ அசைவோ இல்லை. மாணவர்கள் கதைகளில் லயித்துப் போகிறார்கள். வகுப்பு இயல்பாய் கட்டுக்குள் வருகிறது. கதை என்பது ஒரு அற்புதத்தைச் செய்கிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாக, கதை என்பது ஒரு மந்திர மாத்திரை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொள்கிறார் ஆசிரியர் லட்சுமிராம்.
இவ்வாறு கதைகளின் மூலம் வகுப்பு வசப்பட, அடுத்ததாக மாணவர்களின் தன்சுத்தத்தில் ஆசிரியர் கவனம் செலுத்துகிறார். “அழுக்கு உடை அணிந்த, ஒழுங்கீனமான பையன்களுக்குக் கற்பிக்க வேண்டிய முதல் பாடம் என்னவாக இருக்க முடியும். அவர்களுக்குச் சுத்தமும், ஒழுங்கும்தானே முதலில் கற்பிக்கப்பட வேண்டும்” என்று முடிவு செய்து பெற்றோர்களின் ஏச்சுப்பேச்சுக்களைத் தாண்டி வகுப்பறையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்டுகிறார். பிறகு கடினமான , கெட்டிதட்டிப்போன வழக்கமான பாடப்புத்தகங்களை விடுத்து எளிய புத்தகங்களைக் கொண்டு வகுப்பறை நூலகம் அமைக்கிறார். அடுத்ததாக வகுப்பறைக்குள்ளேயே அடைந்து கிடந்த மாணவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்கிறார். மைதானத்தில் மாணவர்கள் சண்டையிட்டு ஒருவனுக்குக் காயம் ஏற்படுகிறது. “விளையாட்டாம்… அதுவும் பள்ளிக்கூடத்திலாம்… முட்டாள்தனம்” என்று பலர் கேலிபேச, “ஐயா, விளையாட்டுதான் உண்மையான கல்வி, விளையாட்டு மைதானத்தில்தான் பெரிய வீரர்கள் உருவாகிறார்கள். விளையாட்டுத்தான் மனிதனின் குணாதிசியத்தை மேம்படுத்துகிறது” என்று விளையாட்டின் அவசியத்தைக் கூறி மாணவர்களை விளையாட வைக்கிறார்.
பிறகு தனது முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அதில் ஏழு பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். அவர்களும் அதில் பெரிய ஆர்வம் காட்டுவதாய்த் தெரியவில்லை, இருந்தும் தன் முயற்சியை அவர் கைவிடவில்லை. “ சமூகத்தில் புதிய பழக்கவழக்கங்களை ஏற்படுத்த வேண்டுமானால் தொடர்ந்து முயற்சி செய்தல் தேவை” என்பதை உணர்ந்து தொடர்ந்து பயணிக்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விளையாட்டுகளும், கதைகளும் மாணவர்களின் கல்வியில் சரிபாதி என அபிப்பிராயம் கொள்கிறார்.
கதைகள், விளையாட்டுகள், நூல் நிலையம் , ‘மாதிரி வாசிப்பு’ ,தன்சுத்தம், மாணவர்களின் ஒழுங்கான நடைமுறைகள் என முதல் இரண்டு மாதங்கள் கழிந்துவிடுகின்றன. இதுவரை அடிப்படையான முதல்படிக்கட்டு வேலைகளைத்தான் செய்திருப்பதை உணர்கிறார். அதில் திருப்தியும் அடைகிறார். ஆனால் மொழிப்பாடம், கணக்கு, வரலாறு, அறிவியல் முதலிய பாடங்களில் விதிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தான் இதுவரை எதுவும் முடிக்காமல் இருப்பதை உணர்கிறார். இத்துடன் முதல்பகுதி நிறைவுறுகிறது.
இரண்டாவது தலைப்பு, “பரிசோதனையின் முன்னேற்றம்”.
மூன்றாவது மாத துவக்கத்திலிருந்து இந்தப் பகுதி தொடங்குகிறது. இதில் முதலாவதாக கேட்டு எழுதுதலில் மாணவர்களிடம் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் பக்கத்து வகுப்பு மாணவன் ஆசிரியரிடம் அடிவாங்குகிறான். அதைக்கண்டு மனம் இரங்குகிறார் ஆசிரியர் லட்சுமிராம். தான் யாரையும் அடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். சுகாதாரத்திற்கான மேலும் பல முன்னெடுப்புகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கண்ணாடி, ஒரு சீப்பு, சிறிய கதர்த்துண்டு, ஒரு சிறிய கத்தரிக்கோல் போன்றவையும் வகுப்புக்காக வாங்கப்படுகிறது. மெல்ல மெல்ல மாணவர்களின் சுகாதாரம் மேம்படுகிறது. பிறகு கதைகளின் மூலம் வரலாறு கற்பித்தல் பணி சிறப்புற நடைபெறுகிறது. இதைப்பற்றி யாரோ கல்வி அதிகாரியிடம் குறைகூற, அவர் வகுப்பறையைச் சோதித்து மிக்க மகிழ்வடைகிறார். நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. ஆசிரியர் லட்சுமிராம் தனது செயலில் சிறிது வெற்றி பெற்றதாய் உணர்கிறார். இது அவருக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது.
மூன்றாவது பகுதி “பருவத்தின் முடிவில்”…
இந்த பகுதியில் வரும் பள்ளியின் ஆண்டுவிழா சம்பவம் சுவையானது. பள்ளியே ஆண்டுவிழாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தயாராகிக் கொண்டு இருக்க, ஆசிரியர் லட்சுமிராமின் வகுப்பு மாணவர்களோ எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதைப்பற்றி தலைமை ஆசிரியர் வருத்தம் கொண்டு கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவிக்கிறார். இதைப்பற்றி கல்வி அதிகாரி லட்சுமிராமிடம் விசாரிக்க, ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்கிறார். அதாவது சமஸ்கிருத செய்யுள் ஒப்பித்தல், கவிதை படிப்பது, நாடகம் போன்றவை எல்லாம் மனப்பாடத்திறனையே முன்னிறுத்துவதாகவும் மேலும் நன்றாக படிக்கும் சில மாணவர்களை முன்னிலைப்படுத்துவதாகவும் தன்தரப்பு நியாயங்களை முன்வைக்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். இந்த விளக்கத்தை கல்வி அதிகாரி ஏற்றுக்கொள்ள மறுக்க, தான் ஒரு எளிய நிகழ்வை தயாரிப்பதாக ஆசிரியர் லட்சுமிராம் வாக்களிக்க அரைமனதுடன் சம்மதிக்கிறார் கல்வி அதிகாரி. ஆண்டு விழா அன்று மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் அரைமனதுடன் ரசிக்கும் கல்வி ஆணையர், ஆசிரியர் லட்சுமிராமின் நான்காம் வகுப்பு மாணவர்கள் மிக எளிய பொருட்களைக் கொண்டு எலியாக , தையல்காரனாக, அரசனாக மிக இயல்பாக, எதார்த்தமாக நடித்துக்காட்டிய நாடகங்களைக் கண்டு மனம் மகிழ்வு கொண்டு மாணவர்களையும் ஆசிரியர் லட்சுமிராமையும் மனதார வெகுவாகப் பாராட்டுகிறார். இதனால் கல்வி அதிகாரி மட்டுமல்ல பள்ளியே மகிழ்கிறது. இதுவரை ஆசிரியர் லட்சுமிராமின் பரிசோதனைகளையெல்லாம் வேண்டாத வேலை என்று விலகிச் சென்ற, கேலி செய்த ஆசிரியர்களெல்லாம் இப்போது அவரை உற்று கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். அடுத்ததாக இலக்கணத்திலுள்ள பெயர்ச்சொல், விணைச்சொல் எல்லாவற்றையும் மிக எளிதாக செயல்பாடுகளுடன் கற்றுத்தர மாணவர்கள் எவ்வித சிரமமின்றி இயல்பாகக் கற்றுக்கொள்கின்றனர்.
பருவத்தேர்வுகள் நெருங்கின. கல்வி அதிகாரியே தேர்வாளராக வருகிறார். ஆசிரியர் லட்சுமிராமின் பயிற்றுவித்தல் மட்டுமல்ல, தேர்வும் வித்தியாசமாக இருக்கிறது. கதை கூறுதல் ஒரு தேர்வாக இருக்கிறது.மாணவர்கள் கதையைச் சரியான நடையில், குரலில் ஏற்ற இறக்கம், நடிப்பு ஆகியவற்றோடு கூறினார்கள். கதை கேட்டவர்கள் ஒன்றிப்போனார்கள். “ எதைக் குறித்த தேர்வு?” என்று ஒரு ஆசிரியர் கேட்க “மொழித்திறன், கதைகூறும் திறன், ஞாபக சக்தி, நடிப்புத்திறன் முதலியவற்றுக்கானத் தேர்வு” என்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். அடுத்தது அந்தாதி விளையாட்டு ஒரு தேர்வாக இருக்கிறது.பிறகு விடுகதைகளும் புதிர்களும் ஒரு தேர்வு, அடுத்து வார்த்தை புனைதல் விளையாட்டு, பின் குப்பைகளை சுத்தம் செய்தல் தேர்வு, பிறகு மரம் ஏறுதல், பம்பரம் விடுதல் தேர்வு, உடற்பயிற்சி தேர்வு. கடைசியாக மாணவர்கள் அழகாக, நேர்த்தியாக இயற்கைப் பொருட்களை காட்சிப்படுத்திய அறையைக் கண்டதும் அனைவரும் அசந்து விட்டனர். பின் மாணவர்களே செய்த பொம்மைகளைக் கண்டு கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். பிறகு மாணவர்களே நடத்திய சஞ்சிகை, நூலகத்தில் மாணவர்கள் படித்த புத்தகங்கள், மாணவர்களின் அழகான கையெழுத்து என பல விசயங்களைக் கண்டு கல்வி அதிகாரி நிறைவடைகிறார். ஆசிரியர் லட்சுமிராமோ தான் இன்னும் கணக்கிலும் புவியியலிலும் ஏதும் செய்யவில்லை என்றும் ஆண்டிறுதிக்குள் அதையும் செய்துவிடுவதாக உறுதி கூறுகிறார்.
நான்காம் தலைப்பு “ கடைசிக் கூட்டம்”
தொடர் முயற்சியின் காரணமாக தான் கொண்ட நோக்கத்தில் வெற்றியை நோக்கி பயணிக்க, அதே பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் லட்சுமி ராமின் முயற்சியைப் பாராட்டுகிறார்கள். பிறகு தனது பயிற்சியில் விடுபட்டுப் போன புவியியல், அறிவியல், கணக்கு போன்றவற்றையும் தனது வழக்கமான சிறப்பான, எளிமையான பயிற்சிகள் மூலம் கற்பித்து மாணவர்களை முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்கிறார். ஆனால் கல்வி அதிகாரியோ உன்வகுப்புக்குத் தேர்வே தேவையில்லை என்கிறார். மனப்பாடக் கல்விமுறையை எதிர்த்து புரிதலுடன் கூடிய மாணவர்களின் வெற்றி மிகச் சிறப்பானது. இதைச் சாத்தியமாக்கிய ஆசிரியர் லட்சுமிராம் போன்றோர் தற்போதும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே பிரச்சினை.
“தான் மேற்கொண்ட குறிக்கோளை நிறைவேற்ற ஒருவனுக்கு உற்சாகமும் , தன்னம்பிக்கையும், ஆழ்ந்த ஈடுபாடும்தான் தேவை. புதியன செய்ய வேண்டும் என்பதற்கான் உள்ளுணர்வுதான் – முக்கியமான ஒரு குறிக்கோளுக்காக ஒருவனது ஆன்மாவின் ஏக்கம்தான் இதை உண்டாக்க வல்லது” என தனது சக ஆசிரியர்களிடம் கூறுவது எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் இந்நூல் தவழ வேண்டும். வகுப்பறையில் புது வெளிச்சம் பரவ வேண்டும்!