(டிசம்பர் 24, 2017 அன்று யாவரும் பதிப்பகம் நடத்திய ஜீ.முருகனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘கண்ணாடி’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பேசியதன் (பேச நினைத்தன்) எழுத்து வடிவம்)
O
அடவி, அந்திமழை, அம்ருதா, இடைவெளி, உயிர்எழுத்து, உயிர்மை, உன்னதம், ஓலைச்சுவடி, கணையாழி, கல்குதிரை, காக்கைச் சிறகினிலே, காலச்சுவடு, சிலேட், சிறுபத்திரிகை, செம்மலர், தடம், தீராநதி, நம்நற்றிணை, நான்காவது கோணம், புதியசொல், பேசும் புதிய சக்தி, மணல்வீடு ஆகிய அச்சு இதழ்கள் தவிர இணைய இதழ், இணைய தளம் என ஒவ்வொரு வருடமும் ஆயிரம் கதைகளுக்கு குறைவில்லாமல் தமிழ் இலக்கியச் சூழலில் எழுதப்படுகின்றன. வெகுஜன இதழ்களைக் கணக்கில் கொண்டால் எழுதிக் குவிக்கப்படும் சிறுகதைகளின் எண்ணிக்கை நம் கற்பனைக்கு அப்பால் சென்றுவிடும். கவிதை, நாவல், சிறுகதை ஆகிய வடிவங்களில் முந்தைய இரண்டைக் காட்டிலும் சிறுகதையே ஒரு படைப்பாளிக்கு சவாலான இலக்கிய வடிவம் என்பது எனது எண்ணம். ஜீ.முருகனும் இத்தகைய எண்ணத்தை தனது நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்துகிறார். ஒன்றின் கீழ் ஒன்று என எழுதினால், சிக்கனமான சொற்களால் ஒரு தத்துவத்தை உதிர்த்தால், ஏதோ ஒரு தருணத்தை மொழியால் பூசி முழுகினால் அது கவிதை என்பது போன்ற சில மேம்போக்கான புரிதல்களாலேயே ‘ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள்’ மாதிரியான புத்தகங்கள் சாத்தியமாகின்றன. அப்படியான புரிதல்களால்தான் தரமற்ற சிறுகதைகளும்கூட எழுதிக் குவிக்கப்படுகின்றன.
இந்த வருடத்தில் சில நிர்பந்தங்களின் பொருட்டு, அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்க முடிந்தது. அதே போல, கடந்த சில வருடங்களில் வெளியான புதிய சிறுகதைத் தொகுப்புகள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன். சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட மாந்தர்களை (தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள், திருநங்கைகள், விலைமாதுகள்) வலியோடும், பிரச்சார தொனியுடனும் வெளிப்படுத்தும் கதைகள், தத்துவம் மற்றும் நீதிக் கதைகள், தேய்வழக்கான பாணியிலான மனித உறவுகளின் சிக்கலைப் பேசும் கதைகள், சமகால பிரச்சனையொன்றின் பத்திரிகை செய்தியைக் கதைகளாக்குதல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களின் வெறும் விவரிப்பு, மேற்சொன்னவற்றையே வடிவ ரீதியாக வேறொரு பாணியில் முயற்சித்தல். இப்படியானவைகளே பெரும்பாலானோரின் படைப்பாக உருகொண்டிருக்கிறது. இதிலிருந்து விலகி கச்சிதமாக எழுதப்பட்ட முழுமையான சிறுகதைகளின் எண்ணிக்கை மிகமிக சொற்பமே.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜீ.முருகன் எழுதத் துவங்கியிருக்கிறார். ஜீ.முருகனின் இந்தக் ‘கண்ணாடி’ தொகுப்பைப் பேசும்போது அவரது முந்தைய சிறுகதைகளையும் கணக்கில்கொள்வது, அவரது படைப்பை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கு ஏதுவாகயிருக்கும். யதார்த்தமான நேரடியான கதைகளுக்கு எதிரான மனமுடையவர் ஜீ.முருகன். அவரது ஒவ்வொரு கதைகளிலும் வடிவ ரீதியான யுக்திகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது. அவரது அநேக படைப்புகளில் விலங்குகளின் இருப்பு இருக்கிறது. காமம் சார்ந்த விஷயங்களை ஜீ.முருகனின் பாணியில் எழுதுகிறார். அவரது அநேக பாத்திரங்கள், உலக இலக்கியப் பரிட்சயமுள்ளவர்களாக உலக சினிமாக்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சில கதைகளை ‘முன்னிலை’யில் எழுதியிருக்கிறார். அவரது இத்தகைய இயல்புகளின் நீட்சியாகவே இத்தொகுப்பும் இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள், வடிவ ரீதியிலான முயற்சிகளாலும் யூகிக்க இயலா அல்லது குழப்பத்தை உண்டாக்கும் கதையின் முடிவினாலும் வேறொரு சாயலைப் பெற்றுத் தப்பித்துக்கொள்ள முயல்கிறது. விதவிதமாக ஒலியெழுப்பும் புதிய இசைக்கருவி ஒன்றில் விதவிதமான வினோத ஒலிகளை இசைத்துக் காட்டுகையில் கிட்டும் உணர்வும் அதைக் கண்டு அதிசயித்து வியக்கும் உணர்வுமே கிடைக்கிறதே தவிர, ஒரு இசைக்கோர்வையைத் தரிசிக்கும் தருணத்தை இத்தொகுப்பின் கதைகள் நமக்குத் தரவில்லை. ஜீ.முருகனின் பலமாக வடிவங்கள் இருக்கும்போது அவரின் கதைகளின் கருப்பொருள் குறித்து பேசுவதற்காக வடிவ நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயமிருக்கிறது.
கல்குதிரைக்கு ஜீ.முருகன் அளித்த நேர்காணலொன்றில் யதார்த்தவாத கதைகளைத் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு, சிலர் தான் பார்த்த மாந்தர்களைச் சம்பவங்களை அனுபவங்களை அப்படியே ரத்தமும் சதையுமாக பதிவு செய்ய நினைக்கிறார்கள், அது மானுட ஆவணமாக மாறிவிடுகிறது, நான் அப்படியே உள்ளது உள்ளபடி ஆவணம் போல பதிவு செய்ய விரும்புவதில்லை என்கிறார். இத்தொகுப்பின் முதல் கதையான ‘பாம்பு’, இடைவெளி முதல் இதழில் வெளியாகியது. இந்தக் கதையின் வடிவம் அப்போது என்னை வெகுவாகக் கவர்ந்தது. சாதி அரசியல் சார்ந்த கதைகள் மிக நேரடியாக பதிவாகிக்கொண்டிருக்கும்போது இத்தகைய வடிவ ரீதியான யுக்தி மிகவும் அவசியமான ஒன்றாகத் தோன்றியது. மாந்தர்களுடைய இருப்பின் ஊடாக பாம்பின் நகர்வு, அதன் வர்ணனை, தாத்தாவின் நோய்மை, அவரது கனவு, இறுதியாக இவற்றை ஒன்றிணைத்து முடித்த விதம் என வடிவ ரீதியில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கதை இது. ஆனால், இக்கதையில் சாதிக்கு ஆதரவான குரல் ஒலிப்பதாக இக்கதை வெளியான பின்பு விமர்சனங்கள் எழுந்தன. ஜீ.முருகன் அதற்கு முகநூலில் விளக்கம் அளித்ததாக நண்பரின் மூலம் அறிந்தேன். ஆனால், இப்போது அது வாசிக்கக் கிடைக்கவில்லை. இக்கதையில் இறந்துபோகும் பெண் பாத்திரம் தவிர மற்ற எல்லோருமே சாதிப் பெருமை பேசுபவர்களாக சாதி வெறி பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அப்பெண்ணுமேகூட அறியாத வயதில் இன்னது எனத் தெரியாமல் அவனைக் காதலித்துவிட்டேன் என்கிறாள். வேறு சாதிப் பையனைக் (காலனிப் பையன்) காதலித்த தனது வீட்டின் பாசத்திற்குரிய பெண்ணைக் கொல்லும் சாதி வெறி பிடித்த குடும்பத்தின் கதைதான் இதன் சாராம்சம். அப்படியான ஒரு குடும்பத்தின் ஆவணம் எனலாம். இக்கதையில் சாதிக்கு ஆதரவான குரலும் இல்லை எதிரான குரலும் இல்லை, நிஜத்தில் நடக்கும் கதையை வடிவ ரீதியாக வேறொரு நிறத்தில் தந்திருக்கிறார். இந்த முப்பது வருட சாதி சார்ந்த கதைகளின் போக்கைப் பார்க்கும்போதும் சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் சாதிய வன்முறைகளைப் பொருட்படுத்தும்போதும் இப்படியான ஆவணங்கள் அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. ஆதரவானதாகவும் அல்லாமல் எதிரானதாகவும் அல்லாமல் ஒரு ரிப்போர்ட் போல இக்கதை எழுத்தப்பட்டிருப்பதால் சாதிய மனோபாவம் கொண்ட ஒருவனுக்கு (சாதிக்கு எதிரான மனநிலையுடையவன் இதை ஆவணமாக எளிதில் கடந்துபோய் விடுவான்.) இக்கதை பெருமை தரும் ஒன்றாகவே இருக்கும். நமது சூழலில், இத்தகைய கொலைக்கு ‘எதிரான’ குரலை ஒலிக்க விடுவதே சாதியக் கதைகளின் தேவையாக இருக்க முடியும்.
ஜீ.முருகனின் இலக்கியம் குறித்தான நிலைப்பாடுகளோடும் சினிமா குறித்த பார்வையோடும் பெரும்பாலான நேரங்களில் ஒன்றிப்போக முடிகிறது. அவை சுவாரசியமாகவும் இருக்கின்றன. ஆனால், அவரது புனைவுகள் அவரது நிலைப்பாட்டிலிருந்து விலகியிருப்பவையாக உள்ளன. சில சமயங்களில் தனக்கு அனுகூலமாக அவரது நிலைப்பாட்டிலிருந்து விலகி கருத்துரைப்பவராகவும் தோன்றுகிறது அல்லது அவரது நிலைப்பாட்டினை புனைவில் சாத்தியப்படுத்த தவறிவிடுகிறார் எனலாம்.
“ஒரு வாசகன் கதையைக் கேட்பதற்கோ கருத்தைக் கேட்பதற்கோ வாசிப்பதில்லை, வாழ்வின் மீதான ஒரு ஆழ்ந்த தரிசனத்தையே எதிர்பார்க்கிறான்” எனும் தெளிவான கூற்றை வெளிப்படுத்தும் ஜீ.முருகனின் சில கதைகள், கருத்து சொல்வதற்காகவே எழுதியிருப்பதும் – குறிப்பாக நீதிக் கதை பாணியிலான கதைகள் – எவ்வித தரிசனத்தையும் தரத் தவறி வெறும் சொற்களாக சம்பவங்களாக எஞ்சியிருப்பதும் விந்தைதான்.
இடம் கதை வக்கிரமாக உள்ளதாக சில விமர்சனங்கள் வந்ததே எனும் கேள்விக்கு (கல்குதிரை 26) ஜீ.முருகனின் பதில்: “சிலருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். தன் நிர்வாணத்தையே பார்த்து அருவருப்பு கொள்பவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? இதைப் புரிதல் பிரச்சனையாக நான் பார்க்கவில்லை; பொது வெளியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதில் நேரும் சங்கடத்தால் எழுவது. ரத்தத்தில் கலந்து போன கலாச்சார மதிப்பீடுகள் வாழ்வின் நிதர்சனத்தை சந்திப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இடம் கதை வக்கிரமானது என்றால் நானும் வக்கிரமானவன்தான். ஆனால் நான் ஜெனே போல திருடனோ, ஓரினச் சேர்க்கையாளனோ இல்லை. பாரம்பரியமான ஒரு குடும்பத்தின் உறுப்பினன். ஒரு பொறுப்புமிக்க பத்திரிக்கையாளன், எழுத்தாளன். பிறகு இது போன்ற கதைகளை எதற்காக எழுத வேண்டும்? நீங்கள் சொல்வதுபோல நாசூக்காக எழுதியிருக்கலாம், இல்லை எழுதாமலேயே விட்டிருக்கலாம். இதை எழுது என்று யார் நிர்பந்திக்கிறார்கள்? ஆனால் எழுத்தாளனுக்கு மனதின் நிர்பந்தம் ஒன்று இருக்கிறது. அதுதான் எதை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. நாம் சந்திக்கும் வாழ்வின் கூறுகள் இலக்கிய அழகியலுக்கு உகந்ததாக மாறும் தருணங்கள் நிகழும்போது அதை நேர்மையான எழுத்தாக மாற்றுவதுமே எழுத்தாளனின் வேலை. இதில் நல்லது, கெட்டது, வக்கிரமானது என்றெல்லாம் எந்த பேதமும் இல்லை. பிறகு டி.எச்.லாரன்ஸ், ஜெனே எல்லாம் எப்படி உருவானார்கள்? நபக்கோவால் ‘லொலிடா’ எழுதியிருக்க முடியுமா? ஜி.நாகராஜன் ‘நாளை மற்றுமொரு நாளை’ எழுதியிருக்க முடியுமா?”
தன்னைவிட இருபத்திஐந்து வயது சிறிய பெண்ணிடம் ஹம்பெர்ட் உறவுகொண்டான் என்பதை மட்டும் நபக்கோவ் எழுதவில்லை. லோலீடாவுக்காக அவளது அம்மாவை ஹம்பெர்ட் மணந்துகொண்டான் என்பதோடு நபக்கோவ் நிறுத்தவில்லை. இப்படிச் செய்திருந்தால் அது வக்கிரமாக வெளிப்பட்டுவிடும் என்பதை நபக்கோவ் அறிவார். ஜீ.முருகனும் அறிவார். இலக்கியம் குறித்த அபிப்ராயங்களை செறிவாக உருவாக்கிக்கொள்ளும் ஜீ.முருகன், தனது படைப்புகளில் சாத்தியப்படுத்தத் தவறுவது வியப்பாக உள்ளது. ‘இடம்’ கதையாக இருக்கட்டும் அல்லது இத்தொகுப்பின் ‘ஆப்பிள்’ கதையாக இருக்கட்டும், இவை வக்கிரமாகத் தோன்றுவதற்குக் காரணம் அவை காமத்தின் பொருட்டு நிகழும் சம்பவங்களை நேரடியாக நிர்வாணப்படுத்துவதுதான். இது தவிர உரையாடல், பாத்திர வார்ப்பு, வர்ணனை, மொழி போன்றவற்றில் ஜீ.முருகன் காட்டும் அக்கறையின்மையும் மற்றுமொரு காரணம். இவை நமது நம்பகத்தன்மையை இழக்கச் செய்கின்றன. மேம்போக்கான சொற்பிரயோகங்களின்மீது, அசிரத்தையான கதாப்பாத்திர வார்ப்பின்மீது பெரும் அதிருப்தி உண்டு.
ஆப்பிள் – கதைச் சுருக்கம்: தனது முன்னால் கள்ளக்காதலியை பதினேழு ஆண்டுகள் கழித்து சந்திக்க வருகிறான், அவளது மகளுக்காக கிண்டிலுடனும், ஆப்பிள்களுடனும். அவனுக்கு அவளுடைய நினைவுகளுடன் எப்போதும் கலந்து வருவது இந்த ஆப்பிள்கள்தான். அவள் வீட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்காக ஆப்பிளை அரிந்து கொண்டுவந்து கொடுப்பாள். அவளுக்கும் அவனுக்கும் ஏதோ மனக்கசப்பு. அதற்கு பின்பாக மீண்டும் அவன் வந்திருப்பது அவளுக்கு அதிர்ச்சிதரும் விஷயம். இருவருக்குள்ளாக உரையாடல் தொடங்கி, அது சண்டையாக உருப்பெற்று, அவளை அவமானப்படுத்துவதற்காக அவளது மகளுடன் தான் படுக்க நேர்ந்ததைச் சொல்லி, பின்பு அவனது மகள்தான் அவள் என்பதைத் தெரிவிக்கிறாள். அவன் அவமானத்திற்குள்ளாகி அவ்வீட்டைவிட்டு வெளியேறுகிறான். இதைத் தொடர்ந்து இக்கதை முடியும் விதம் ஜீ.முருகனின் தனித்துவமான அம்சம்.
கதை இப்படித் துவங்குகிறது: “அவள் கதவைத் திறந்தாள். கையில் ஒரு பையுடன் அவன் நின்றிருந்தான். வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு. இந்த வெயில் நேரத்தில் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?” – முதல் நான்கு வரிகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அடுத்த வரி, ‘இந்த வெயில் நேரத்தில் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?’ பதினேழு ஆண்டுகள் கழித்து தனது கள்ளக்காதலனைச் சந்திக்கும்போது – எதிர்பாராத வருகை – இப்படித்தான் நினைப்பாளா? இதனால்தான் ‘மேம்போக்கு, அசிரத்தை, அக்கறையின்மை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதாகிறது.
அவளை மீண்டும் அடைவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் அவன்.
அவளது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், அவளது வீட்டை அவன் எப்படிக் கண்டுபிடித்தான், அவனது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்குள்ளாக உரையாடல் துவங்குகிறது. இப்போது அவள் அப்துல்லா என்பவனை வைத்திருக்கிறாள். அவனுக்கு அப்துல்லாவின்மீது பொறாமை. அவளுடைய கணவனேகூட அவளுக்குப் பொருத்தமற்றவன்தான் – இது கதைசொல்லியின் குரல் என்பது குறிப்பிடத் தக்கது. ‘அவளுடைய வசீகரத்துக்கு எந்த விதத்தில் ஈடானவர்கள் அவர்கள்? அவளுடைய உடலை முழுதாகக் கொண்டாடக்கூடியவர்களா அவர்கள்?’
கடந்த சில ஆண்டுகளில் மிகுந்த அவஸ்தைக்குள்ளான வார்த்தைகளுள் ஒன்று – கொண்டாட்டம். ஜோடனையான வார்த்தைகளின் மூலம் கதையினை நகர்த்திச்சொல்லும் யுக்தி ஜீ.முருகனின் பலவீனமான அம்சம்தான்.
கடமைக்கென காலை விரிக்கும் வீட்டுக்காரி (கதைசொல்லியின் வார்த்தைகள்) குறித்து சொல்கிறான். அவள் சிரித்துக்கொண்டே கேட்கிறாள், ‘ஒரு வருஷமா எதுவும் இல்லாமதான் இருக்கீங்களா?’
‘ஆமாம். அவளத் தொட்டு ஒரு வருஷம் ஆச்சி.’
‘என்னை மாதிரி வெளியிலகூட எவளும் கிடைக்கலையா என்ன?’
அவளுடைய கேள்வி ஒரு தாக்குதல்தான். சற்று கோபத்துடன் அவளை உற்றுப் பார்த்தான். அவள் அவனை நேரடியாகப் பார்க்காமல் தலைக் குனிந்துகொண்டாள்.
பக் 71லிருந்து தொடர்ந்து வாசிக்கவும்…
அவனது நோக்கத்தை உணர்ந்தவள், அதை தற்போது விரும்பாதவள், அவனது வருகையை வெறுப்பவள், அவனை அங்கிருந்து கிளப்புவதைக் குறித்து யோசித்துக்கொண்டிருப்பவள் இதையெல்லாம் (யார்கூடயும் படுக்கவில்லையா, இதையெல்லாம் ஏன் வாங்கி வந்தாய், கிண்டில்னா என்ன விலை எவ்வளவு, இத்தியாதி…) ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டிருப்பாளா? அந்தப் பெண்ணின் ஒவ்வொரு செய்கையையும் வார்த்தைகளையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
யதார்த்தத்தில், புனைவு யதார்த்தத்தில் எதுவுமே சாத்தியம்தான். ஆனால், சம்பவத்தைப் படைப்பாக்குகையில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எதை நீக்க வேண்டும், எந்த வார்த்தையை எப்படிப் பிரயோகிக்க வேண்டும் என்பதில்தான் படைப்பின் நம்பகத்தன்மை இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இதெல்லாம் அடிப்படை. எழுத்தில் இயங்கும் எந்தத் துறையிலும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு காற்புள்ளியும்கூட அக்கவுண்டபிள்.
தொடர் உரையாடலில் வார்த்தை தடித்து, ஏற்கனவே ஒரு பெண்ணோடு தான் படுத்ததாக அவளிடம் சொல்லியிருந்தான் அல்லவா, ‘உனது மகள்தான் அவள்’ என்கிறான்.
அவளது எதிர்வினை: டேய் அவளப்பத்தி உனக்கு என்னத் தெரியும்? தெரிஞ்சா சொல்லு பாப்போம்.
அவன்: சும்மா கத்தாதடி. காசு கொடுத்தா ஓட்டலுக்கு வர்றவதான அவ. நீ என்னமோ அவ பத்தினி மாதிரி பில்டப் பண்ணிக்கிட்டிருக்க.
மூக்கை உறிஞ்சிகொண்டே சொல்கிறாள், நீ எப்படிப்பட்ட பாவத்த பண்ணியிருக்கத் தெரியுமா? நல்லா யோசிச்சுப் பாரு. இப்பத் தேவிடியாப் பட்டம் கட்டி நிற்க வச்சிருக்கியே, படுத்தேன்னு சொன்னியே அவ உன் மகளாகக் கூட இருக்கலாம். ஏன் இருக்கலாம், அவ உன் மகதான். உன் கூட படுக்கிற காலத்துல அந்தப் பாவிய நான் பக்கத்துலக் கூட சேர்த்தது இல்ல.
இது என்ன புதுக்கதை என்று நினைத்த அவன் திகைத்து நின்றான்.
மொழி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறைய பேசிவிட்டபோதும் ஜீ.முருகனின் படைப்புகள் பற்றி பேசும்போது இவ்வம்சம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இவரது படைப்புகளின் பெரும் பிரச்சினையாகக் கருதுவதால் சில வரிகளை மேற்கோள்காட்ட வேண்டியிருந்தது.
சில கதைகளில் சாதிய மனோபாவத்துக்கு ஆதரவான குரல் வெளிப்படுகிறது; நேர்காணல் மற்றும் அற்புதங்கள். ‘நேர்காணல்’ கதையில், சில காலத்துக்கு முன்பு சிவகிரியில் நடந்த ஆணவக் கொலையைக் குறித்து எழுதிய சீனியர் நிருபர், அவ்வூரைச் சேர்ந்த புதிதான ஒருவனிடம் அந்தப் பழைய கதையைச் சொல்கிறார். கதையின் இறுதியில் இடம்பெறும் வாக்கியங்களை விட்டுவிடுவோம், 94ஆம் பக்கத்தின் கடைசி பத்திக்கு முந்தைய பத்தியை அவ்வளவு சுலபமாக நாம் தவிர்த்துவிட முடியாது. சீனியர் நிருபர் சொல்கிறார்: “கோர்டில ஆஜராக வந்தப்பதான் சின்னதம்பி கவுண்டரையும், அவருடைய மகன்களையும் நேராப் பார்த்தேன். அந்தக் கொலையையும் அவுங்களையும் சம்பந்தப்படுத்தியே பாக்க முடியல. இவுங்களா அந்தக் கொடூரமான கொலைய செஞ்சாங்கங்கற மாதிரி ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு அப்பாவியாக இருந்தாங்க. உண்மையச் சொல்றதுன்னா, இவுங்களப் போயி சிக்க வைச்சிட்டமேங்கற குற்ற உணர்வுதான் எனக்கு வந்தது.” ஆணவக்கொலை புரிபவர்களெல்லாம் நம்மோடு இருக்கும் அப்பாவி ஜீவன்கள் போன்ற முகத்தோற்றம் உள்ளவர்கள்தான் என்பதுகூடத் தெரிந்திராத அப்பாவி சீனியர் நிருபரா அவர்? இந்தக் கதையில் எந்த சாதியைக் குறித்துப் பேசுகிறார், அதன் அரசியல் என்ன என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சாதி வெறிபிடித்த கொலைகாரர்களைச் சிக்க வைத்ததை எண்ணி குற்ற உணர்வு கொண்டதாக எழுதுவதெல்லாம் அபத்தம்.
‘அற்புதங்கள்’ கதை ஒரு தமிழ் இலக்கியக் குடும்பத்தைப் பகடி செய்கிறது. கதையை வாசிக்கும்போது அது எந்த குடும்பம் என்பதை நீங்கள் யூகித்துவிடலாம். அப்படியான ஒரு குடும்பம் இல்லையென்றே வைத்துக்கொள்வோம், அதாவது முழுக்கவும் கற்பனை என. மணி என்பவர் இலக்கியம் என்றால் என்ன, யார் எழுத முடியும் என கௌரவனை விமர்சித்தாலும் கதைசொல்லி அதைப் புறந்தள்ளி அப்படியான கொண்டாட்ட மனநிலையைப் பாராட்டுகிறார். இதன் பிறகு கௌரவனின் ஒவ்வொரு செயல்பாட்டையும் சூசகமாக கேலி செய்கிறது இக்கதை. இந்தக் கதையின் ஒட்டுமொத்த போக்கின்மீது உடன்பாடில்லையென்றாலும் ஒரே ஒரு பத்தி என்னைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. மணியின் உரைக்குப் பின்பாக கதைசொல்லி சொல்கிறான்: “ஆனால் எனக்கு கௌரவனைப் பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் கண்டு வியக்கிற மகிழ்கிற அப்பாவித்தனம் அவரிடம் இருந்தது. கீழ்மட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதர் இவ்வளவு பிரபல்யத்தைப் பெற முடியுமென்றால், செல்வத்தை சேர்க்க முடியுமென்றால் அதை அவர் ஏன் கொண்டாடக்கூடாது? யார் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்படவில்லை, தந்திரங்கள் செய்யவில்லை? அவரை குறைகூறும் பலரின் மனதிலும் ஒரு பொறாமை உணர்வு கலந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. உண்மையில் நான் வெறுத்தது தனக்குள் சுருங்கிக்கொள்ளும் மணி போன்ற மரவட்டைகளைத்தான்.” இந்தக் கதை இப்படியான முழுவதும் கேலியான தொனி இழையோடுகிறது. ‘கீழ்மட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதர் இவ்வளவு பிரபல்யத்தைப் பெற முடியுமென்றால், செல்வத்தை சேர்க்க முடியுமென்றால் அதை அவர் ஏன் கொண்டாடக்கூடாது?’ என்ற வரி ஏன் இடம்பெற்றது எனும் கேள்விக்கு எவ்வளவு யோசித்தும் பதில் கிட்டவில்லை.
‘கைவிடப்பட்ட ஒரு கதை’ எனும் கதை, ஜெயலலிதா, சசிகலா, எம்.ஜி.ஆர் என நேரடியாக பகடி செய்கிறது. நாயரை வளைத்துப்போடும் அன்னம்மாதான் ஜெயலலிதா, அன்னம்மாவிற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அவளின் தங்கை சசிகலா, நாயர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். ‘ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா?’ என சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இதனை ‘Cheap Politics’ என்று சிலர் விமர்சித்தார்கள். அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதென்பது வேறு. அவர்களது அந்தரங்கத்தை, சொந்த வாழ்வை பகடி செய்வது விமர்சனமாகாதே? இதில் படைப்பாக எதை நாம் எடுத்துக்கொள்ள முடியும? பல்வேறு அரசியல் தலைவர்களைப் பன்றியோடும் நாயோடும் ஒப்பிட்டு, மகத்தான அரசியல் நாவலைப் படைத்த ஜார்ஜ் ஆர்வெல்லை அறியாதவரா ஜீ.முருகன்?
(நன்றி: சாபக்காடு)