வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் குடும்பக் கதை இது. பஷீருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதனால், மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையினிடையே எழுதிய கதைதான் ‘பாத்துமாவின் ஆடு’ என்னும் இந்நாவல். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி எழுதி முடிக்கப்பட்ட இந்நாவல் 1959 ஆம் ஆண்டுதான் முன்னுரையோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் பஷீர், தான் எழுதி வெளியிட்ட நூல்கள் அனைத்துமே பலமுறை திருத்தியெழுதியும், பிரதியெழுதியும் அழகுபடுத்தப்பட்டவை. “இது பிரதியெழுதாமலும், திருத்தம் செய்யாமலும் முதலில் எழுதியபடி அப்படியே வெளியாகியிருக்கிறது. நான் வாசித்துப் பார்த்தேன். பிரதியெழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. திருத்தம் செய்யவும் தோன்றவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நாவலில் தன்னை மையமாக வைத்து பஷீர் ஒரு புது உலகையே உருவாக்கியுள்ளார். தன்னுடைய குடும்பத்து நபர்களையும், பாத்துமா என்ற தன்னுடைய சகோதரியின் ஒரு பெண் ஆட்டையும் மையமாக வைத்தே இக்கதையை நகைச்சுவையாக எழுதியுள்ளார்.
தன்னுடைய ‘பால்யகால சகி’, ‘சப்தங்கள்’ ஆகிய இரு புத்தகங்களின் பிரதிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தன்னுடைய போர்வையைச் சாப்பிட வரும் ஆட்டினைப் பார்த்து “அந்தப் போர்வையைத் தின்னாதே! அது நூறு ரூபாய் கொடுத்து வாங்கியது. அந்தப் போர்வையின் வேறு பிரதியெதுவும் என்னிடம் இல்லை. என் புத்தகங்களின் பிரதிகள் இன்னும் இருக்கின்றன. பவதி’க்கு வேண்டுமானால் நான் அதைத் தருவித்து இலவசமாகத் தருகிறேன்”. பஷீரின் இந்தக் கூற்று வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தாமல் அன்றைய நூறு ரூபாய் என்பது அவருடைய வாழ்க்கையைப் பொருத்தவரையில் எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தது என்ற கருத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
மையக் கதாப்பாத்திரமான பஷீரை அன்பு என்னும் பெயரால் சுரண்டும் குடும்ப உறவுகளை இந்நாவல் முழுக்கக் காணமுடிகிறது. “பெரிய காக்கா, இனிமே எனக்கு ரூபாயாக எதுவும் தரவேணாம். பாத்திரங்கள் வாங்கித் தந்தாப் போதும். அதுகூட…நாங்க வீடு மாறிப் போகும்போது தந்தாப் போதும்” என்னும் ஆனும்மாவும் “பெரிய காக்கா எனக்குப் பணமா எதுவும் தரவேணாம். கதீஜாவுக்கு இரண்டு (தங்க) கம்மல் மட்டும் செய்து போட்டுடுங்க” என்னும் பாத்துமாவும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
பெண்கள் என்ற தனி உலகத்திற்குள் அவர்களிடையே நிலவும் போட்டி பொறாமைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உறவுகள் வேறுபடல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவுகள் ஆகியவற்றை இந்நாவலில் விவரித்துச் செல்கிறார் பஷீர்.
பஷீர், மனிதர்களுக்குக் கொடுக்கும் அதேயளவு முக்கியத்துவத்தை அல்லது அதைவிட அதிக அளவு முக்கியத்துவத்தை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுக்கிறார் என்பதை அவருடைய பெரும்பாலான நாவல்களில் காணலாம். ஆறறிவு உடைய மனிதன் ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் கீழானவனாகத் தன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும்போது, “மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை” (முன் அட்டை) என்று உறுதியாகக் கூற முடியும்.
இந்நாவலைப் படிக்கும்போது வெளிப்படையாக நகைச்சுவையாகத் தோன்றினும் ஆழமான பார்வையில் பார்க்கும்போது, பொருளாதாரப் பிரச்சினைகள் கூட்டுக் குடும்பங்களை எவ்வாறு சிதைக்கின்றன என்பதையும் மன்னிக்கும் மனநிலை இல்லாத மனிதர்கள் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாயிருப்பினும் சொந்த வாழ்க்கையில் தோல்வியையே தழுவுகின்றனர் என்பதையும் மறைமுகமாகக் கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
நகைச்சுவையாக எழுதப்பட்ட இந்நாவலிலும் பஷீர் அனுபவித்த வேதனைகளையும், வலிகளையும், நாவல் நிகழ்வுகளினூடாக, இந்நாவலைப் படிக்கும் வாசகனால் புரிந்து கொள்ள முடியும். “இது ஒரு தமாஷ் கதை. இருந்தாலும், எழுதும்போது நான் மனதிற்குள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தேன். வேதனையை மறக்க வேண்டும். எழுத வேண்டும், மனதை” (முன்னுரை) என்ற பஷீர், தன்னுடைய வேதனைக்கு மருந்தாக எடுத்துக் கொண்டது பேனா முனையையே.
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்கூட தன்னுடைய எழுத்துகளையும், சிந்தனைகளையும் மறக்கவோ, மறுக்கவோ செய்யாத ஓர் எழுத்தாளன் பஷீரைத் தவிர வேறு ஒருவரும் மலையாள இலக்கிய உலகில் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். இதுவே பிற எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து பஷீரை வேறுபடுத்திக் காட்டுகிறது.