மேலைப்புலங்களில் இலக்கிய மானிடவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. செவ்விலக்கியக் கருவூலத்தைக் கொண்ட தமிழ் மரபில் இலக்கிய மானிடவியல் வளர வேண்டிய ஒரு முக்கியமான கற்கைத் துறையாகும். இத்தகைய தடத்தில் உருவாகியுள்ள முதல் நூல் பாணர் இனவரைவியல் என்று கூறலாம். தமிழ்ச் செவ்வியல் ஆய்வினை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் கட்டாயமும் இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளன. அதனை உலகளாவிய ஆய்வு முறையியலுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இச்சூழலில் பாணர் இனவரைவியல் நூலின் வருகை மிகவும் முக்கியமானதாகும்.
இலக்கிய மானிடவியல் துறையில் தொல்குடிச் சமூகங்களையும் பண்பாடுகளையும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில் சங்க இலக்கியங்களி லிருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய சமூகவியலும் பண்பாட்டுவியலும் நமக்குத் தேவையாகின்றன. இயற்கையோடு இயைந்த சமூகமாகச் சங்ககாலச் சமூகம் காணப்பட்டது. அதனைத் திணைச் சமூகம் என்றே கூறலாம். தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய தொன்மையையும் தொடர்ச்சியையும் சான்றுரைக்கும் வகையில் 5000 வருடங்களுக்கு முன்பே உருவானவை சங்க இலக்கியங்கள். தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளுக்கு அப்பால் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களால் எமதாக்கப்பட்ட பண்பாட்டுத் தரவு மூலங்களாகவே சங்க இலக்கியங்கள் உள்ளன என்பது மானிடவியல் நோக்கிலான கருத்தாகும்;.
சங்ககாலப் பன்மியச் சமூகக் கட்டமைப்பினையும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர அறிந்து கொள்ள இவ்விலக்கியப் பரப்பு பெரிதும் துணை புரிகின்றது. ஐந்து திணைகளையும் கடந்த சமூகமாகப் பாணர் சமூகம் காணப்பட்டது. அடிப்படையில் பாணர் சமூகமானது ஒரு அலைகுடிச் சமூகமாகும் (nomadic community. உலகளவில் ஆயர் சமூகமே முதலில் தோன்றிய அலைகுடிச் சமூகம் என விவாதிக்கப் பெறுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் பேசப்படும் பாணர்கள் ஆயர்வாழ்வு சாராத அலைகுடிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இந்த ஐவகைப் பிராந்தியங் களிடையே பண்பாட்டுப் பாலமாகப் பங்காற்றியுள்ளனர். ஆகவே மனித குலப் பரிணாமத்தில், தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட பரிணாமத்தை மீளாய்வு செய்யவேண்டி யுள்ளது. அத்தகைய ஆய்வு விடயத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாணர் இனவரைவியல் அமைந்துள்ளது.
இந்நூல் ஐந்து தொடர்ச்சியான இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் பாண்மரபின் தோற்றுவாய் பற்றியும், இந்தியாவில் நாடோடியத்தின் தோற்றுவாய் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு மிகவும் துணை செய்கின்றது. இரண்டாம் இயல் சங்ககாலப் பாணர் பற்றியது. இலக்கியத் தரவுகளிலிருந்து அலைகுடிகளின் சமூகக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ள முடியும் என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. பாணர்களின் சமூகவியல் அல்லது பாணர்களின் இனவரைவியல் என்பதாகவே இந்த இயல் அமைகிறது. பாணர்கள் தொடர்பான குறிப்புகளும் அவர்களுடைய வாழ்வியல் பதிவுகளும் இனவரைவியல் விவரிப்புக்கு உட்பட்டுள்ளன. இலக்கிய மானிடவியல் புலம் தமிழில் உருவாக்கம் பெற் றுள்ளது என்பதற்குச் சான்றாக இந்நூல் விளங்குகின்றது.
அடுத்த இயல் பழங்குடிப் பாணர் பற்றியதாகும். சங்ககால மரபொன்று இன்று வாழும் மரபாக உள்ளதை இவ்வியல் விளக்குகிறது. வரலாற்றுக் காலம் தொட்டு வடஇந்தியாவில் பூர்வ திராவிடக் குடிகள் உள்ளனர். அவர்களில் கோண்டுப் பழங்குடியினர் மிகவும் முக்கிய மானவர்கள். இவர்கள் நடு இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தைச் சுற்றி ஆறு மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்களுடைய பாணர்கள் பர்தான்கள் எனப்படுகின்றனர். வடஇந்தியாவில் சிதறிவாழும் பர்தான்கள் பற்றியும் அவர்களுடைய வாழ்வியல் பற்றியும் இந்நூல் முழுதளாவிய புரிதலை எமக்குத் தருகின்றது.
நான்காவது இயல் சமகாலப் பாணர்கள் பற்றியதாகும். இவ்வியல் மிக விரிவான இயலாக அமைந்திருக்கின்றது. அறிஞர் கைலாசபதியின் தமிழ் வீரநிலைக் கவிதைத் தமிழ் மரபினை கிரேக்கம் வேல்ஸ், ஐரிஸ் உள்ளிட்ட மேலைப் பாண் மரபுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது.
இதன் தொடர்ச்சியாக நூலாசிரியர் பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழ் மரபைத் தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள தென்னிந்திய நாடோடி மரபோடும், அதற்கடுத்து வடஇந்திய நாடோடி மரபோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். பாணர் இனவரைவியல் இந்தியத் துணைக்கண்டத்தில் காணப் படும் மிக முக்கிய நாடோடிச் சமூகங்களை ஒப்பியல் நிலையில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.
இந்த நூலின் மிக முக்கியமான பங்களிப்புகளில் இது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். பண்டைய தமிழ்ச் சமூகத்தின் பாண் மரபு தொடர்ச்சியோடும் மாற்றங்களோடும் இன்று காணப்படுவதை நூலாசிரியர் மிகச் சிறப்பாக விளக்குகிறார். இன்று தமிழகத்தில் காணப்படும் குடிப்பிள்ளைகள் என்னும் மரபு பண்டைய பாண் மரபின் நேர் தொடர்ச்சியாக அமைவதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
ஐந்தாம் இயல் பாண் சமூகத்தின் இன்றைய நிலை பற்றியது. இவ்வியலில் பாணர்களுடைய சமூகப் படிமலர்ச்சியை மானிடவியல் நோக்கில் மிகத் தெளிவாகப் பொருத்தமான எடுத்துக்காட்டுகள், மேற் கோள்கள் போன்றவற்றுடன் விளக்குகிறார். பாண் மரபின் படிமலர்ச்சியானது பல்வேறு நிலைகளில் பரிண மித்திருப்பதை மானிடவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்கிறார்.
தமிழைச் சமூக அறிவியல் மொழியாக்குதல், சமூக அறிவியல் கருத்துக்களையும், கோட்பாடுகளையும், அவற்றின் பிரயோகங்களையும் தமிழுக்கு உரியதாக மாற்றுதல் என்னும் இரு வேறு சமூக அறிவியல் பயணத்தில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது. மானிடவியல் அணுகுமுறையுடன் இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்யும் ஒன்றாகவே பாணர் இனவரைவியல் அமைந் துள்ளது.
பாணர் இனவரைவியல் என்னும் தலைப்பிலான இந்நூல் பாணர் பற்றிப் பண்பாட்டு மானிடவியல் நோக்கில் அறிய முற்படுகின்றது. சங்ககாலப் பாண் மரபின் முறையையும் அதன் தொடர்ச்சியையும் மாற்றத் தையும் பற்றி அறிவது இந்நூலின் நோக்கங்களில் ஒன்றாகும்.
பண்டைய பாணர் மரபானது நீண்டதொரு சமூகப் படிமலர்ச்சிச் சூழலில் எத்தகைய மாற்றங் களோடு உருமாறிப் புதிய திரிபு வடிவங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதனைச் சமூகப் பண்பாட்டுப் படிமலர்ச்சி, இனவரைவியல், இன வரலாற்று அணுகுமுறைகளின் அடிப்படையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்துறை இணைநோக்கின் அணுகுமுறைகளின் தேவை தமிழிலக்கியச் சூழலில் உணரப்பட்டு வருகின்ற சமகாலத்தில் தமிழுக்கு இந்நூல் ஒரு புதிய வரவு. இந் நூலின் பயன் என்பது தனியே பாணர்களின் வாழ்வியலை விளங்கிக் கொள்வது மட்டுமல்ல, சங்ககாலச் சமூகங்கள் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியான இன்றைய சாதிய, பழங்குடிச் சமூகங்கள் பற்றியும் மானிடவியல் நோக்கில் புரிந்துகொள்வதற்கான புதிய அணுகுமுறையையும் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி மேலும் பல ஆய்வு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளும் போது இந்நூலின் பயன் எமதாகும்.
நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய கைலாசபதியின் நினைவுப் பேருரை தமிழ்ப் பாணர்கள் பற்றியதாகும். அவ்வுரை மிகவும் விரிவடைந்து தனியரு நூலாக இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. சங்க இலக்கியம் பற்றிய படிப்பினை ஓர் ஆழமான பல்துறை கற்கைப் புலமாக விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
சமூக அறிவியல்களில் துறைதோறும் புதுப்புது கற்கை நெறிகளுடன் ஆராய வேண்டிய தேவையுள்ளது. அவ்வகையில் மானிடவியல் நோக்கில் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் பாண் மரபு ஆராயப் பெற்றுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும். அதனை இன்றைய காலகட்டம் வரை இணைத்து ஒரு முழுதளாவிய பார்வையுடன் நோக்கியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
மானிடவியல் அறிவும், தமிழர் பண்பாடு தொடர்பான ஆழ்ந்த புலமையும், அதிகமான தமிழ் இலக்கிய வாசிப்புகளும், நுண்நிலையான புரிதலும், தேடலும் இந்நூலின் பின்புலமாக அமைகின்றது.
(நன்றி: கீற்று)