நமது நாட்டில் பாம்புகளைப் பற்றிய புனைவுகளுக்கும் புராணங்களுக்கும் பஞ்சமில்லை. உலகெங்கிலும் கூட இதே நிலைதான். இங்கு மண் புழுக்கள் மட்டுமே உழவனின் நண்பனாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளது. எலிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகின்ற காரணத்தால் பாம்புகளும் விவசாயிகளின் தோழனாக அறியப்பட்டிருக்க வேண்டும். இது ஏன் நடைபெறவில்லை என்பதை தனியே ஆய்வு செய்ய வேண்டும். இவற்றைப்போல எண்ணற்ற புழு, பூச்சியினங்கள் இன்று நாம் பயன்படுத்தும் வேதியுரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மாண்டொழிகின்றன.
பிரேம்:ரமேஷ் தங்களுடைய நாவலொன்றில் கிழக்குக்கடற்கரை சாலையை கடக்கும் எத்தனத்தில் மரவட்டைகள் அழிவது பற்றி சிலாகித்து எழுதி இருப்பார்கள். இதுதான் இன்றைய வளர்ச்சியின் பலன்!
நாள்தோறும் சாலையைக் கடக்கும் எண்ணற்ற பாம்புகள் பாதியில் மரணமடைகின்றன.
கால்கள், கண் இமைகள், புறச்செவிகள் இல்லாத ஊனுண்ணியான ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்புகள் சுமார் 3000 வகைகள் இருப்பினும் அவற்றில் ஒரு சிலவே மனிதனைக் கொல்லும் தன்மையுடையது.
பெரும்பாலானவை உணவுக்காக மட்டுமே நஞ்சைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்குப் பயப்படும் இவை அவர்களால் தொல்லை ஏற்படும் போது மட்டுமே கடித்து வைக்கின்றன.
மனித இனத்தை விட நீண்ட பாரம்பரியம் கொண்ட பாம்பினங்கள் பற்றிய கட்டுக்கதைகளை உலவவிட்டதில் இராம.நாராயணன் போன்றவர்கள் எடுத்த நாலாம்தர தமிழ் சினிமாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. பாம்புகள் பழி வாங்கும், பால், முட்டைகளை அருந்தும் என்றெல்லாம் கிராபிக்ஸ் செய்து மக்களை மழுங்கடிக்கும் அன்றை புராண வேலைகளுக்கு இவர்கள் மெருகூட்டினார்கள்.
ச. முகமது அலியின் ‘பாம்பு என்றால்?’ என்ற இக்குறு நூல் 14 தலைப்புகளில் பாம்புகள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விரிவாக இல்லாவிட்டாலும் பாம்புகளைப் பற்றி அறியாமைகளைப் போக்க இது தொடக்கநிலை நூலாக அமையக் கூடியது இந்நூல். பாம்புகளின் பற்கள் அமைப்பு, அதன் நச்சுத் தன்மை, கடித்த பின் செய்ய வேண்டிய முதலுதவி போன்றவற்றை இந்நூல் விளக்குகிறது.
இந்நூல் முழுவதும் பாம்புகள் பற்றிய படங்கள் நிறைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் பாம்புகளைப் பிடித்து நச்சை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் உயிருடன் விட்டு விடும் முறை ரோமுலஸ் விட்டேகரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தை எடுத்துக்காட்டி பழங்குடியினப் பண்பாடுகளில் பாம்பு முக்கிய அங்கம் பெற்றிருப்பதையும் விளக்குகிறது.
மக்களின் பொதுப்புத்தியில் கற்பிதங்களை உலவவிடுவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. சமூகத்தில் உள்ள பல்வேறு நோய்களைக் குறிக்க அவற்றை பாம்பாக உருவகம் செய்து தினமணியில் வெளியான மதியின் கேலிச் சித்திரம் மற்றும் இந்து கேசவ்-ன் கேலிச் சித்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டிருப்பது நன்று.
பாம்புக்கடியை ஒரு விபத்தாகக் கொள்ளாமல் மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை அணுகுவதால் ஆண்டிற்கு லட்சக்கணக்கானோர் பாம்புக்கடியால் மடிய நேரிடுகிறது.
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகளை அகற்றுதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இத்தகைய பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
தற்போதைய சமச்சீர் கல்வித் திட்ட பாடநூற்களில் ஊர்வன (பாம்புகள்) பற்றிக் குறிப்பிட வாய்ப்புகள் இருந்தும் அவ்விடங்கள் வெறுமையாகவே உள்ளன. சிங்கம், புலி, ஆமை, பறவைகள் போன்றவையே பாதுகாக்கப்பட வேண்டியவையாக பட்டியலிடப்படுகின்றன.
ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ராஜநாகம் படம் போட்டு பீதியூட்டப்பட்டு, இறுதியில் பாம்பைக் கண்டதும் கொல்லும் செயல் அந்த உயிரினத்தையே அழித்து விடும் என ஆதரவுக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
மாறிவரும் நமது ஆட்சியாளர்கள் அனைவரும் அணுசக்தி, அணுகுண்டு ஆதரவாளர்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே. ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் மரபு சார்ந்த, மரபு சாராத ஆற்றல் மூலங்கள் பற்றி பேசப்படுகிறது. நீர் மின்சக்தி, அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவற்றின் தீமைகள் எதையும் குறிப்பிடாமல் சூரிய சக்தி, ஓத அலை சக்தி, காற்றாடி சக்தி ஆகியவற்றின் இடர்பாடுகள் வண்ணத்தில் கட்டம் கட்டி கூறப்படுகிறது. இதிலிருந்து இவர்களது நோக்கம் தெளிவாகப் புரிகிறது.
இப்படிப்பட்டவர்கள் இயற்கையின் மீதும் கானுயிர்கள் மீதும் பற்றுதல் ஏற்படுத்தக் கூடிய பாடங்கள் மூலம் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என நம்ப இடமில்லை. பள்ளி மாணவர்கள் தனிப்பட்ட முறையிலாவது இந்த மாதிரியான நூற்களைப் படிக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவ வேண்டும்.
(நன்றி: மு. சிவகுருநாதன்)