பாம்புகளைக் கண்டவுடன் அச்சம் கொள்வதுடன், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து அதைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போர், நம் நாட்டில் 95 விழுக்காடு உள்ளனர். மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள அறியாமையே இதற்கு அடிப்படைக் காரணம்.Snake
பாம்புகளை தெய்வீகத்தோடு பார்க்கும் நம் நாட்டில்தான் பாம்புகளைப் பற்றிய பொய்யுரைகள், தவறான சொல்லாடல்கள், மூடநம்பிக்கைகள் ஆயிரம்ஆயிரமாய் குவிந்துள்ளன. நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் மக்களுக்கு காட்டுயிர்கள் பற்றி விழிப்பூட்டுவதற்கு பதிலாக, எதிர்மறையான மூடநம்பிக்கைகளையே திரும்பத்திரும்பக் கூறி வருகின்றன. இது மக்களிடம் இன்னும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
இந்தச் சூழலில் தோழர் ச. முகமது அலி எழுதி தமிழில் வெளிவந்துள்ள "பாம்பு என்றால்?" நூல் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் மேல் உள்ள ஆர்வத்தால் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் முகமது அலி, ஏற்கெனவே எழுதியுள்ள "நெருப்புக் குழியில் குருவி", "யானைகள்: அழியும் பேருயிர்", "இயற்கை: செய்திகள்-சிந்தனைகள்" போன்ற நூல்களின் மூலம் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர்.
இந்த நூலில் மனிதனின் பொதுப் புத்தியில் படிந்துள்ள பாம்பு பற்றிய மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் துணையோடு பலத்த அடி கொடுத்துள்ளார். அதில் சில முக்கிய விவரங்கள்:
- பல்லிகளில் இருந்தே பாம்புகள் பரிணமித்துள்ளன.
- பாம்புகள் முட்டை, பாலை உண்பதில்லை. முட்டையுண்ணி என்ற தனி வகை பாம்பு மட்டும் முட்டையை விழுங்குகிறது.
- நம் நாட்டில் காணப்படும் 270 வகைப் பாம்புகளில் 4 வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவை அனைத்தும் விஷமற்றவை.
இப்படி மக்கள் மனதில் பதிந்து, படிந்து போயுள்ள பழைமைக் கருத்துகளை அகற்றும் வகையில் ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். பாம்புகளின் வகைகள், பாம்புகளைப் பற்றிய இதர விவரங்கள் என 14 தலைப்புகளில் அறிவியல் கண்ணோட்டத்துடன், மேலைத்துவ பாணியில் இந்த நூல் தரமாக வெளிவந்துள்ளது. நேர்த்தியான ஒளிப்படங்கள், கோட்டோவியங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
மனிதர்களின் கைகளில் சிக்கி கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் அழிந்து கொண்டிருக்கும் பாம்புகளின் எதிர்கால வாழ்க்கை, தற்போது கேள்விக்குறியாகி நிற்கிறது. சூழலியல் சமன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பாம்புகள் அழிந்தால், அதன் தொடர்ச்சியாக மனிதனும் அழியும் நாள் தொலைவில் இல்லை.
"விலங்குகள் இல்லாமல் மனிதன் எங்கே? விலங்குகள் எல்லாம் மறைந்து விட்டால், மனிதன் மிகுந்த தனிமைக்கு உள்ளாகி மடிந்து விடுவான். இப்போது விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ, அது விரைவில் மனிதனுக்கும் நேரும். ஒரு வேளை மற்ற உயிர்களைவிட முன்னதாகவே, உன் படுக்கையை அசுத்தப்படுத்தி, ஒரு நாள் உன் மலத்திலேயே மூச்சுத் திணறிச் சாவாய்" என்று 1854ல் அமெரிக்க சிவப்பிந்தியத் தலைவர் சீயல்த் கூறிய வார்த்தைகள் உண்மையாவதற்கு முன், நாம் செயல்பட ஆரம்பிப்போம்.
- ஏ. சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், பெலிகன் நேச்சர் போட்டோகிராபி கிளப்
(நன்றி: கீற்று)