கல்விக்கான உரிமையும் மனித உரிமையே. இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அத்தகைய கல்வியை எவ்விதப் பாகுபாடுமின்றி சுதந்திரமாகப் பெற எல்லோருக்கும் உரிமையுண்டு. கல்விக்கான உரிமையென்பது பிற அடிப்படை உரிமைகளோடு பிரிக்கவியலாத, ஒன்றையொன்று சார்ந்த உலகளாவிய தன்மையுடையுடையது என அகில உலக மனித உரிமை பிரகடனம்(பிரிவு 26)- 1948 கூறுவதை நூலின் பின்னட்டை குறிப்பிடுகிறது.
அனைவருக்கும் பொதுவான, யாரையும் பாகுபடுத்தாத, ஏற்றத் தாழ்வுகள் அற்ற பொதுக்கல்வியே இந்தச் சிறுநூலின் ஆசிரியர்களது விருப்பம். திரு. அனில் சத்கோபால் மிகச் சிறந்த அறிவியல் அறிஞர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலையில் உயிரி வேதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுப்பள்ளித் திட்டத்திற்கான மக்கள் பிரச்சார அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். பல காலம் கல்வி பற்றிய விமர்சனங்களை மக்கள் முன் பல வடிவங்களில் வைத்து வருபவர்.
முனைவர் வசந்தி தேவி தமிழகம் அறிந்த கல்வியாளர். இவர் தம் மூச்சும் பேச்சும் எப்போதுமே கல்விதான். கல்வித் தளத்தில் அனைத்துப் பதவிகளையும் இவர் அலங்கரித்திருந்தாலும் கல்வித் தளத்தில் இன்னும் செய்ய வேண்டியதிருக்கிறதே என்று ஆதங்கப்படுபவர். இந்நூலில் உள்ள இரு கட்டுரைகளுமே கட்டுரையாளர்கள் கல்வி மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்துகின்றன எனவும், அதே வேளை கல்வி மக்களுக்கான கல்வியாக, சமூக மாற்றத்திற்கான கல்வியாக, ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக் கல்வியாக இல்லாமல் ஆள்வோரின் கருத்தியல் ஊடகமாகப்பட்டு வருவதையும், இக்கல்வியில் அடிப்படை சனநாயகப் பண்புகள் சமரசம் செய்யப்படுவதோடு எல்லோருக்குமான கல்வி ஒரு சிலருக்கான கல்வியாக இருப்பதால் சம நீதி மறுக்கப்படுவதையும் கண்டு கவலையுறுகின்றனர் என தன் முன்னுரையில் மக்கள் கண்காணிப்பகத்தின் முனைவர். இ. தேவசகாயம் குறிப்பிடுகிறார்.
பாகுபடுத்தும் கல்வி என்னும் முதலாவது கட்டுரையில், முனைவர். வே. வசந்திதேவி அவர்கள், “இன்றைய இந்தியக் கல்வி அமைப்பின் அடிப்படைத் தன்மை, அதன் பெரும் ஏற்றத் தாழ்வு ஆகும். சமுதாயத்தின் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒரு வகைப்பட்ட பள்ளி இருக்கிறது. கல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாயச் சாதனமல்ல. மாறாகக் கொடுக்கும் விலைக்கேற்பக் கிடைக்கும் கடை சரக்கு. இன்றைய வணிக உலகின் மொழியில் பள்ளிகளும், உயர் கல்வி நிலையங்களும் ‘அறிவு உற்பத்தி செய்வோர்’ (Knowledge producers); மாணவர்கள் ‘அறிவு நுகர்வோர்’ (Knowledge consumers); உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் சந்திக்கும் இடம் ‘சந்தை’. அதன் இயக்கம் விலை நிர்ணயம். இந்த ‘உற்பத்தியாளர் – நுகர்வோர்’ கல்விக்கொள்கை, ஏழ்மையில் ஆழ்ந்து கிடக்கும் ஜனநாயக நாட்டின் ஜீவ நாடியை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளது இன்றைய வணிகக் கல்வியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது.
“The purpose of education is the inclusion of the exclude” என்பது யுனெஸ்கோ அதிகாரி ஒருவரின் கூற்று. அதாவது கல்வியின் நோக்கமே ஒதுக்கப்பட்டவர்களை உள்ளடக்குவது என்பதாகும். ஆனால், இந்தியாவில் கல்வி இதன் எதிர்மறைக் குறிக்கோளைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வசதியுடையவர்களும், கல்விப் பாரம்பரியம் கொண்டவர்களும் மட்டுமே இன்றைய உலகின் ஒளிமிகு வாய்ப்புகளை அளிக்கும் கல்வி பெற முடிகிறது என்று கூறும் முனைவர் வசந்திதேவி, “ குழந்தைகளைப் பள்ளிகள் ஈர்ப்பதற்கும், பள்ளிகளில் தொடர வைப்பதற்குமான பல திட்டங்கள் (மதிய உணவு, வெளிநாட்டு நிதி உதவியுடன் நடக்கும் பல திட்டங்கள்) வேண்டிய பயனளிக்கவில்லை. 90 களிலிருந்து தொடங்கிய தாராளமயக் கொள்கைகளையொட்டி, அரசு தனது கல்விப் பொறுப்புகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள ஏற்றத் தாழ்வுகளும் இயலாமைகளும் இன்று இன்னும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பெரும்பான்மையோரை தகுதியற்றவர்களாக்குவது பல வழிப் பள்ளி முறை(multi track school), தனியார் பள்ளிகளைத் தங்கு தடையின்றி வளர விடுவது, ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது, தமிழ் வழிக் கல்விமுறை தரமற்றக் கல்வி என்னும் எண்ணத்தை வளரவிடுவது போன்ற 15 காரணிகளைப் பட்டியலிடும் முனைவர். வசந்திதேவி, இந்த புறந்தள்ளும் உத்திகள் மூலம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கல்வியமைப்பு ஒரு வடிகட்டுதலை நடத்துகின்றது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒருபெரும் எண்ணிக்கையிலான மாணவர், ‘தகுதி அற்றவர்’ என்று முத்திரை குத்தப்பட்டு, கல்வி அமைப்பிலிருந்து வெளியேறுகின்றனர். கல்வி ஏற்றத் தாழ்வுகளை அகற்றிச், சமத்துவ சமுதாயத்திற்கு வழி கோரும் அற்புதக் கருவியாக இன்றி, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்ற, அவற்றை நியாயப் படுத்துகின்ற வர்க்க சாதனமாக இயங்குகிறது.” என்கிறார்.
இத்தகைய படிநிலைக் கொண்ட கல்விமுறையால் ஏற்படும் விபரீதங்களை யூகித்தே 1960 களிலேயே கோத்தாரிக் கல்விக் குழு பொதுக் கல்வி முறை ( Common School System) அவசியம் என்பதை வலியுறுத்தியதை நினைவு கூர்கிறார்.
பொதுப் பள்ளி முறை என்றால் என்ன?
பேரா. அனில் சத்கோபால் தனது “ தாராளமயமாக்கலில் முடக்கப்பெறும் கல்வியுரிமை” என்னும் கட்டுரையில், பல்வேறுபட்ட சமூகக் குழுக்கள் மற்றும் வகுப்பினரை ஒருங்கிணைத்து கூட்டுறவுள்ள சமூகத்தை உருவாக்கும் பார்வையின் அடிப்படையிலேயே பொதுப்பள்ளி முறை சீரான தேசியக் கல்வி அமைப்பைக் கட்டுவதற்காக கல்வி ஆணையம் (1964 – 66) பரிந்துரைத்தது. இதைச் செய்யாவிடில் கல்வி என்னும் கருவியே சமூகப் பிரிவினைக்கு வழிவகுத்து வகுப்புகளுக்கு இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுமென எச்சரிக்கவும் செய்தது. இது வறிய பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு மட்டுமான தீமையாய் இல்லாமல் வசதிமிக்க வகுப்புகளைச் சார்ந்த குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தைகளுக்குள் பிரிவினை ஏற்படும்போது உயர் வகுப்பாரைச் சேர்ந்த பெற்றோர்கள் , வறிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களைத் தங்கள் குழந்தைகளுக்க்கு தெரிய விடாது செய்துவிடுவதோடு வாழ்க்கையின் யதார்த்தங்கள் அவர்களுக்குப் புரியாமல் போய்விட நேரும்… அதோடு அவர்களின் குழந்தைகள் முழுமையற்றும், சோகையுடனுமே வளர நேரும் என அப்பரிந்துரை எச்சரித்தது. இது போன்ற தீமைகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் தேச நலன், சமூக மற்றும் தேச ஒருமைப்பாட்டைக் கொண்டு வரும் சக்தி வாய்ந்த கருவியாகக் கல்வியை மாற்ற நாம் பொதுப்பள்ளி அமைப்பின் பொதுக்கல்வியை நோக்கிச் சென்றே ஆக வேண்டுமென்றும் அப்பரிந்துரை வலியுறுத்தியது ” எனத் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இது பொதுப்பள்ளிகளின் தேவையை விளக்கும் அருமையான பகுதி.
இவ்வாறு இரண்டே கட்டுரைகளைக் கொண்ட சிறுநூல் இது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இது. சமச்சீர் கல்வியினால் ஏற்பட்ட சிறு தளர்வு கூட, தற்சமயம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் வெகு வேகமாக சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றம் அடைவதன் மூலமும் பாகுபடுத்தல் அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது.
இச் சிறு நூலை வாசிப்பதன் மூலம் பொதுப்பள்ளிகளின் அவசியத்தையும், உலகமயமாக்கல் சூழலில் பெறும் கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிக் கொண்டே செல்வதையும், அனைவருக்கும் கல்வி தர மஹாத்மா ஜோதிராவ் பூலே காலத்திலிருந்து செய்யப்பட்ட முயற்சிகளையும் இந்நூலின் மூலம் அறியலாம்… வாசித்துப் பாருங்களேன்…