ரிக் வேத வரி ஒன்று உண்டு. ‘அன்னத்திலிருந்தே அன்னம் பிறக்கிறது.அன்னம் அன்னத்தை உண்கிறது.’ மண்ணில் உள்ள அனைத்தும் பிறிதை உண்டே வாழ்கின்றன. சமூக வளர்ச்சியின் சித்திரமும் அதுதான். சமூகத்தில் ‘வளர்சிதை மாற்றம் ‘ உண்டே ஒழிய மாற்றம் இல்லை. வென்று வாழ்ந்ததை அதன் அடியில் முளைத்தது வென்று உண்டு தான் வளர்வதும் வீழ்வதும்தான் சமூக அமைப்புகளின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது.
சமூக அமைப்பையும் மாற்றங்களையும் புரிந்துகொள்வதில் மார்க்ஸியம் அதாவது முரணியக்க பொருள்முதல்வாதம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. இன்றுவரை இத்தளத்தில் நிகழ்ந்துள்ள புறவய ஆய்வுகள் அனைத்துக்கும் அடியில் மார்க்ஸியத்தின் கண்ணோட்டம் இருக்கும். சமூகப் பண்பாட்டு அமைப்புகள் என்பவை மேற்கட்டுமானங்களே என்றும் பொருளியல் சக்திகளே அடித்தளத்தை சமைக்கின்றன என்றும் அது வகுக்கிறது. பொருளியல் சக்திகளின் முரணியக்கம் மூலமே பொருளியல் அடிப்படை மாற்றமடைகிறது. அம்மாற்றமே மேற்கட்டுமானத்தை மாறுதலடையச்செய்கிறது.
இன்றைய சூழலில் மார்க்ஸியத்தின் அவ்ரவு சிந்தனைத்தளத்தில் உருவாக்கிய மாற்றங்களை புரிந்துகொள்வது மிகமிகக் கடினம் . சமூக அமைப்புகள் மாறாத சில விழுமியங்களிலிருந்து உருவானவை என்றும் அவ்விழுமியங்கள் மானுட அடிப்படை சார்ந்தவை என்பதனால் சமூக அமைப்புமாற்றம் என்பது அவ்விழுமியங்களை இல்லாமலாக்கி சமூகத்தையே அழிக்கும் என்பதும் அக்காலகட்டத்து நம்பிக்கை. ‘அதனதன் இடத்தில் அது அது” இருப்பதைப்பற்றிய பழமொழிகள் நம் மொழியில் குவிந்து கிடப்பதைக் காணலாம்.
ஒருவகையில் இது இயல்பே. காரணம் நமக்கு முந்தைய காலகட்டம் சமூக உருவாக்கத்தின் சமூக நிலைப்பாட்டின் காலகட்டம். பொதுவாகச் சி¢ந்தித்தால் செவ்வியல் காலகட்டத்தை சமூக உருவாக்கத்தின் காலம் எனலாம். அப்போது பழங்குடி வாழ்க்கைமுறை தரப்படுத்தப்பாட்டு சமூக அமைப்பு உருவாகிறது. சிதறி வளரும் சமூகங்கள் ஒன்றாகின்றன. கம்யூனிஸச் சொற்களில் சொல்வதென்றால் ஆதி கம்யூனிஸம் இல்லாமலாகி நிலப்பிரபுத்துவம் உருவாகிறது.தமிழ்நாட்டில் சங்க இலக்கியங்களின் காலகட்டத்தை இவ்வாறு செவ்வியல் காலமாகச் சொல்வது மரபு. கைலாசபதி இதை வீரயுகமரபு என்று சொல்கிறார். சமூக அமைப்பை உருவாக்குவதே இக்காலகட்டத்து சிந்தனைகளின் அடியியல்பாக இருக்கும்.
இரண்டாவது வருவது கற்பனாவாத காலகட்டம். இக்காலகட்டத்தில் சமூகங்கள் இணைந்து மாபெரும் சமூகங்கள், அரசுகள், பேரரசுகள் உருவாகின்றன. அவற்றை நிலைநிறுத்தும்பொருட்டு அடித்தட்டில் சமூக விழுமியங்கள் உறுதியாக நிலைநாட்டப்படுகின்றன. அவற்றை மாற்றமில்லாதவையாக, என்றுமுள்லவையாக ஆக்கும்பொருட்டு பெருமதங்கள் உருவாகின்றன. பெருமதங்கள் இல்லாமல் காப்பியங்கள் இல்லை. கற்பனாவாதம் காப்பியங்களை பெருமளவில் உருவாக்கும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பு, பேராரசு என்னும் நிர்வாக அமைப்பு, பெருமதங்கள், கற்பனாவாத இலக்கியம் ஆகியவை ஒன்றோடொன்று கலந்தவை. தமிழ்நாட்டில் ஐம்பெருங்காப்பியங்கள் உருவான காலகட்டம் முதல் கடைசியில் பதினெட்டாம் நூற்றாண்டு தலபுராணங்களின் காலம்வரையிலான காலகட்டத்தை இரண்டாம் கட்டம் எனலாம்.முருவான சமூக அமைப்பின் கருத்து அடிப்படைகளை உணர்ச்சிகரமாக நிறுவுவதே இக்காலகட்ட சிந்தனை.
அதன் பின் வந்த நவீனத்துவ காலகட்டம். இது முதன்மையாக இயந்திரமயமாதலின் காலம். இயந்திரங்கள் தொழில்புரட்சியைக் கொண்டுவந்தன. தொழில்புரட்சி அனைவருக்கும் கல்வி, பொதுவான செய்தி தொடர்பு, போக்குவரத்து வளர்ச்சி போன்றவற்றை உருவாக்கியது. விளைவாக சமூக அமைப்பின் எல்லா கூறுகளும் சமமான வளர்ச்சியை கோரின. ஆகவே பல்லாயிரம் வருடங்களாக நிலைநின்றுவரும் நிலப்பிரபுத்துவம் ஆட்டம் கண்டது. இவ்வாறு ஒரு மாபெரும் சமூக மாற்றம் நிகழும்போது தேவையாக உள்ள சிந்தனை முறை தொகுத்தலோ, வலியுறுத்தலோ அல்ல. ஆராய்ச்சிதான். ஆகவே சமூகத்தின் அடிப்படைகளை பிரித்தும் தொகுத்தும் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் நோக்கு உருவாகிவந்தது. இதுவே நவீனத்துவத்தின் அடிப்படை. இக்காலகட்டத்தில் உரைநடை வலுப்பெறுகிறது. இலக்கியத்தின் சாரமான பணி வாழ்க்கையையும் வரலாற்றையும் சமூகத்தையும் ஆராய்ந்து அறிதலே என்ற சிந்தனை இக்காலகட்டத்திற்கு உரியது.
நவீனத்துவத்தின் ஆகப்பெரிய சிந்தனை முறை மார்க்ஸியமேயாகும். ஆகவே சமூகப்பகுப்பாய்வின் மிகச்சிறந்த மாதிரிகளை மார்க்ஸியம் சார்ந்த எழுத்துமுறையே உருவாக்கியது. சமூக அமைப்பு பொருளியல் அடித்தளம் மூலம் அதன் தேவைக்கு ஏற்ப உருவான மேற்கட்டுமானமே என்ற நோக்கானது சிந்தனைகளிலும் விழுமியங்களிலும் உள்ள பொருளியல் உள்ளுறைகளை சுட்டிக்காட்டியது. மார்க்ஸிம் கார்க்கியின் நாவல்கள் இவ்வகையில் கீழைநாட்டு இலக்கியத்துக்கு சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்தன. கீழைநாட்டு இலக்கியங்கள் பலவற்றில் கார்க்கியின் ‘தாய்’க்கு ஒரு நகல் காணப்பட்டும் என்று சொல்லப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியை சித்தரிக்கும் நாவல்கள் உலக இலக்கியத்தில் ஏராளமானவை. பொதுவாக முதலிய சிந்தனை கொண்ட எழுத்தாளராகக் கருதப்படும் தாம்ஸ் மன் எழுதிய புடன் புரூக்ஸ் போன்ற நாவலிலும் ஆய்வடிப்படை மார்க்ஸியமாகவே உள்ளது.
தமிழிலும் ஆரம்பகால நாவல்களில் இருந்தே மார்க்ஸியச் சமூக ஆய்வு காணப்படுகிறது. ‘பொய்த்தேவு’ நாவலின் கரு ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத்தேடல் பற்றிய சித்தரிப்பே. வேதாந்த – இருத்தலியல் கலவை அது. ஆனால் அதிலுள்ள சமூக மாருதல் குறித்த சித்தரிப்பு மார்க்ஸிய சமூக ஆய்வையே அடிப்படையாகக் கொண்டது. சாம்பசிவ ராயரின் வீழ்ச்சியும் சோமு முதலியின் எழுச்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் காட்டப்படும் விதம் உதாரணம். க.நா.சு மேலைநாவல்களில் இருந்து இந்த ஆய்வுமுறையை பெற்றிருக்கலாம். கடைசியாக ‘ஆழி சூழ் உலகு’[ஜோ டி க்ரூஸ்] வரை இந்த ஆய்வுமுறையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாய்வுமுறை கொச்சையாக பயன்படுத்தப்படுவது மெல்லமெல்ல அதிகமாயிற்று. பொருளியல் அடிப்படையில் சமூக மாறத்தை சித்தரிப்பதும் நுட்பமாக வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஊடுருவியுள்ள பொருளியல் உள்ளுறையை ஆராய்வதும் இல்லாமலாகி எல்லாவற்றையும் பொருளியல் மாற்றம் என்ற வரட்டு சூத்திரத்தின் அடிப்படையில் விவரிக்க ஆரம்பிப்பதையே நான் கொச்சையானது என்கிறேன். ரகுநாதன் தொடங்கி மேலாண்மை பொன்னுச்சாமி வரை அதற்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. வாழ்க்கையின் இயல்பாகவும் சாரமாகவும் உள்ள மனிதமனம் என்னும் விசித்திரமானதும் நுட்பமானதுமான நிகழ்வு உதாசீனப்படுத்தப்படுகிறது. இலக்கியம் தட்டையான கறுப்புவெள்ளைக் கதாபாத்திரங்களும் செயற்கையான நிகழ்ச்சிகளும் கொண்டதாக ஆகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் அரசியல் கோட்பாடுகளின் உதாரண விளக்கமாக இலக்கியம் சுருங்கி விடுகிறது.
சமூக மாற்றத்தை சித்தரிக்கும் நாவல்களை மதிப்பிடுவதற்கு எளிமையான முதல் அளவுகோல் அது கதாபாத்திரங்களை எளிதில் வகுத்துவிடமுடியாத தனித்தன்மை கொண்ட மனிதர்களாகக் காண்கிறதா என்பதே. செ.கணேசலிங்கன் நாவல்களில் கதாபாத்திரங்கள் சில கருத்துக்களின் பிரதிநிதிகள் மட்டுமே. அவற்றுக்குள் நாவலாசிரியரின் கோட்பாட்டுக்குள் வைத்து புரிந்துகொள்ள முடியாத சிக்கல்கள் ஏதும் இல்லை. ஆழி சூழ் உலகு நாவலின் கதாபாத்திரங்கள் எதுவுமெ அப்படி இல்லை. அவை மனிதர்கள். அவர்களின் ஒருபகுதியை புரிந்துகொள்ள மட்டுமே கோட்பாடுகள் உதவும்.
மார்க்ஸிய சமூக ஆய்வு முறைமையை இலக்கிய நுட்பத்துடன் கையாண்ட நாவல்களில் முக்கியமானது என்று கேரளத்தில் புகழ்பெற்ற படைப்பு பி.கேசவதேவ் எழுதிய ‘அயல்கார்’. இதன் தமிழாக்கம் கெ.சி.சங்கர நாராயணன் அவர்களால் செய்யப்பட்டு லட்சுமி கிருஷ்ணமூர்த்தியால் வாசகர் வட்டம் சார்பாக சிறந்த முறையில் 1967ல் வெளியிடப்பட்டுள்ளது. தமி இலக்கிய வாசகர் மத்தியில் பரவலான தாக்கத்தை உருவாக்கிய முக்கியமான நாவல் இது. அதற்கு பத்துவருடங்களுக்கு முன்னர் இது புகழ்பெற்ற மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளிவந்தபோது மிகப்பரபரப்பான வாசிப்¨ப்ப பெற்றது. கேளிக்கைக்கூறுகளே இல்லாத கறாரான சமூக ஆய்வு நாவல் இது. கேரளமக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே புறவயமாகப் பகுத்து ஆராய வழிவகுத்த படைப்பு இது.
இது இரு நிலப்பிரபுத்துவ குடும்பங்களின் கதையாக ஆரம்பிக்கிறது. மங்கலச்சேரி வீடு, பச்சாழி வீடு [தரவாடு அல்லது குடும்பம்] நிலப்பிரபுத்துவத்தின் இரு இயல்புகளை இவை முறையே பிரதிபலிப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. மங்கலச்சேரி நிலப்பிரபுத்துவகாலத்து அறிவின் பலம் கொண்டது. அதன் செல்வம் ஆயுர்வேத வைத்தியம் மூலம் வந்தது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்து சடங்குகள் ஆசாரங்கள் மூடநம்பிக்கைகள் விலக்குகள் ஆகியவற்றுடன் அக்காலத்துக்கு உரிய விழுமியங்கள் பலவற்றையும் அவர்களிடம் காணலாம். அவர்கள் தங்களை அண்டி வாழ்பவர்களை எந்நிலையிலும் காப்பவர்கள். தங்களால் ஆளப்படும் மக்களிடம் உணர்வுபூர்வமான ஈடுபாடு கொண்டவர்கள்.பெருந்தன்மை, கருணை குலப்பெருமை ஆகியவை கலந்த ஆளுமை கொண்டவர்கள். அதேசமயம் கண்டிப்பாக சுரண்டல் அமைப்புதான் இது பச்சாழிக்குழும்பம் நிலப்பிரபுத்துவகாலத்து முக்கியமான ஆதிக்கக் கூறான வன்முறையிலிருந்து எழுந்தது. போர்ப்பயிற்சி பெற்ற குறுப்புகளின் குலம் அது. அவர்களின் அதிகாரமே அச்சத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் உருவானது.
இவ்விரு குடும்பங்களின் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆதிக்கப்போர்தான் நாவலின் முக்கியமான கரு. இரு ஊன் உண்ணி மிருகங்கள் போல இரு குடும்பங்களும் மோதி ஒன்றை ஒன்று அழிக்கின்றன. பெண்கொள்ளுதலில் மையம் கொண்ட சண்டை மெல்லமெல்ல கோயில்விவகாரங்களில் தீவிரம் கொண்டு கொலைகொள்ளையில் உச்சமடைகிறது. நீதிமன்ற வழக்குகள் இருசாராரின் செல்வத்தையும் இல்லாமலாக்குகின்றன. இரு குடும்பங்களும் சிதைந்து சிதைந்து அழிகின்றன. அவற்றின் சிதைவுகளை உண்டு புதிய சமூகம் ஒன்று உருவாகி வருகிறது.
இரு குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள் ஆண்களின் குணச்சித்திரத்தில் நுட்பமான வேறுபாட்டை ஆசிரியர் உருவாக்கிக் காட்டுகிறார். மங்கலச்சேரி குடும்பத்தைச்சேர்ந்த பெண்களிடம் தைரியம் இருந்தாலும் பொதுவாக அவர்கள் அடங்கிச்செல்கிறார்கள். அடிப்படையான அறவுணர்வை இழப்பதில்லை சுமதி அதற்கு ஓர் உதாரணம். பச்சாழி வீட்டுப் பெண்கள் அகந்தையும் அறியாமையும் கொண்டவர்கள். பச்சாழி தேவகியைப்போல. ஆனால் வீழ்ச்சி இருவருக்கும் ஒன்றே. இருகுடும்பங்களிலும் பொருளியல் விழ்ச்சி சீரழிவுகளைக் கொண்டுவருகிரது. பெண்கள் ஒருவரோடொருவர் மோதுகிறார்கள். பிய்த்துக்கொண்டு செல்கிறார்கள். வறுமை முற்றும்போது ஓடிப்போகிறார்கள், விபச்சாரத்துக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். தேவகியையும் சுமதியையும் ஒப்பிட்டால் இதை உணரலாம். தேவகியின் வீழ்ச்சி அகந்தையின் விளைவு. அது அவளை விபச்சாரியாக்குகிறது. சுமதி தன் மகனுக்கு உயர்கல்விக்காக, அவனவது அந்த நரகத்திலிருந்து தப்பும் பொருட்டு தன்னை விபச்சாரியாக்குகிறாள். இருவர் கதையும் ஒன்றே.
மங்கலச்சேரி ,பச்சாழிஇருகுடும்பங்களின் ஆண்களும் அப்படியே. தன் மூர்க்கத்தால் ஆணவத்தால் பச்சாழி மாதவக்குறுப்பு அழிகிறார். ஆனால் மங்கலச்சேரி பத்மநாப பிள்ளை அவரது பெருந்தன்மையாலும் குலப்பெருமையாலுமே அழிகிறார். குடி, பெண்பித்து, அடிதடி ஆகியவை பச்சாழி குடும்பத்தை அழிக்கின்றன. வீன் ஆடம்பரம், எதையுமே குலப்பெருமை சார்ந்ததாக எடுத்துக்கொள்ளும் கர்வம், தன்னைச்சார்ந்தவர்களுக்காக கொலைவரை போகும் அர்ப்பணிப்பு ஆகியவை மங்கலச்சேரி ஆண்களை தெருவில் நிறுத்துகின்றன. விளைவு ஒன்றே. இவ்விரு குடும்பங்களும் எப்போதும் அப்படி போரிட்டதில்லையா என்ற வினா எழக்கூடும். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ‘குடிப்பகை’ உச்சத்தில் இருந்ததை நாம் காண்கிறோம். ஆனால் அப்போது உச்சத்தில் அவர்களை கட்டுப்படுத்தும் சக்தியாக மன்னர் அதிகாரம் என்ற அமைப்பு இருந்தது. அவ்வமைப்பு இல்லாமலானதும் அடித்தளம் ஒன்றோடொன்று மோதி அழிகிறது.
நிலப்பிரபுத்துவத்தைச் சித்தரிப்பதில் காட்டும் இந்த விரிவானதும் உட்சிக்கல் நிரம்பியதுமான நோக்கே கேசவதெவின் நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. இத்தகைய நாவல்கள் பொதுவாகச்செய்வதுபோல நிலப்பிரபுத்துவத்தை இருண்ட காலமாக, அதைச்சார்ந்தவரக்ளை கொடூரமானவர்களாக காட்டவில்லை. [நம் இலக்கியத்தில்தான் எத்தனை கொடூரமான பண்ணையார்கள், ஈவிரக்கமற்ற முதலாளிகள்] ஆனால் நிலப்பிரபுத்துவத்தின் கருணைகொண்ட முகத்தைக் காட்டியபடித்தான் அண்டைவீட்டார் நாவலே தொடங்குகிறது. தடுப்பணைகள் உடைந்து ஆற்றுவெள்ளம் ஊரைச்சூழ்கையில் அனாதையாக ஆகும் மக்களை அரவணைத்து , சாதிமத ஆசாரங்களை உதறி அவர்களை தன் இல்லத்துக்குக் கொண்டுவருகிறார் பத்மநாப பிள்ளை. தன் களஞ்சியத்தை திறந்து கடைசி நெல் வரை எடுத்து அவர்களுக்கு உணவிடுகிறார்.அதுவே அவரது வீழ்ச்சியின் தொடக்கமாக ஆகிறது.
அவரது ஆசாரமான வீட்டில் எங்கிருந்தோ வந்த தீண்டப்படாதவனாகிய ஈழவன் குஞ்சன் சமையலறைவரை செல்லும் அதிகாரத்துடன் இருக்கிறார். குஞ்சனுக்கு அவ்வீட்டில் இருக்கும் இடம், அவருக்கு தன் எஜமானர்கள் மீது இருக்கும் ஆழமான அன்பும் விசுவாசமும் இந்நாவலில் நிலப்பிரபுத்துவத்தின் சாதகமான முகத்தைக் காட்டும் இடமாகும். அதேயளவு பிரியம் அவ்வீட்டினருக்கு அவர் மீதும் உள்ளது. அப்பிரியம் தலைமுறைகளாகத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் குஞ்சனின் குழந்தைகள் *க்கு எதிரான வெறுப்பைக் கக்கும்போதுகூட மாறாமல் தொடர்கிறது. ஈழவ நாயர் போரின்போதுகூட பத்மநாப பிள்ளை குஞ்சனின் குழந்தைகளுக்காகவே போரிடுகிரார். சிறைக்குச் செல்கிறார். அப்பிரியமே அவர் குடும்பத்தை முழு அழிவுக்கு தள்ளுகிறது. ஆனால் இப்பிரியம் கூட எளிமையானதல்ல. குஞ்சனின் மகள் கல்யாணத்தின்போது *க்கு கொடுத்தனுப்ப்பபடும் தேங்காயையும் பழத்தையும் பட்டினி கிடக்கும்போதும் சரோஜினியம்மா திருப்பி அனுப்பிவிடுகிறாள். அவளுக்கு அவர்கள் மீது மீளாப்பிரியம்தான், ஆனால் ஒருபோதும் சமமாக அல்ல. அண்டிவாழ்பவர்களாக.
அதேபோல உருவாகிவரும் புத்தெழுச்சியின் சித்திரத்தையும் மிகவிரிவாக கறுப்பும்வெள்ளையும் கலந்த ஒன்றாகவே நாவல் காட்டுகிறது.தன் பதினெட்டுவயதில் வீட்டை விட்டு வெளியேறி இந்த சமூகமாற்றத்திற்கான போராட்டத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தவர் கேசவதேவ் என்ற பின்னனியில் இதை நாம் கானவேண்டும். இப்புதிய சமூக மாற்றத்தை ஒரு புதுவெள்ளக் கொப்பளிப்பாகவே அவர் காட்டுகிறார். குப்பையும் செத்தையும் மிதக்கும் சேற்றுப்பெருக்குபோல. நாராயணகுரு உருவாக்கிய சமூக எழுச்சி கிராமங்களை அடையும்போது கேடிகள் பங்குபெறும் அடிதடிகளாக மாறுவதை சித்தரிக்கிறார். இறந்தகாலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஈழவ புதிய தலைமுறை அக்கால உறவுகளையும் ஏன் நன்றிக்கடன்களையும் கூட தூக்கிவீசுவதை, அதில் நசுங்கும் மென்மையான மன உணர்வுகளை பொருட்படுத்தாமலிருப்பதை தேவ் காட்டுகிறார். தன் பிரியத்துக்குரிய குஞ்சனின் மகன் வாசுவை சாலையில் வைத்து ஒருமையில் அழைக்கும் பத்மநாப பிள்ளையை அவன் அவமானப்படுத்தும் காட்சி ஒரு உதாரணம். ஒன்று அழியும் சுரண்டலின் தரப்பு. இன்னொன்று உருவாகும் சமத்துவத்தின் குரல். ஆனாலும் சரிதவறுகளை சொல்லிவிடமுடிவதில்லை.
உருவாகிவரும் புதியகாலம் நவீனத்துவக் கருத்துக்களின் காலம் மட்டுமல்ல நவமுதலாளித்துவத்தின் காலமும்கூட என்பதைக் காட்டுகிறார் தேவ். உண்ணாமல் உறங்காமல் உழைத்து பணம்சேர்ப்பதைமட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட குஞ்சுவரீதும் குடும்பமும் மெல்லமெல்ல சமூகத்தின் பொருளியல் அடித்தளத்தைக் கைப்பற்றுகின்றனர். அச்சமூகத்தின் பண்பாட்டு மாற்றங்களில் , அதற்கான போராட்டங்களில் அவர்களுக்கு எந்தப்பங்கும் இல்லை. ஊருக்குப் பொதுவாக ஒரு பாலம் கட்டுவதைப்பற்றிய விவாதங்களில்கூட குஞ்சுவரீது ‘எனக்கு பாலம் தேவையில்லை, தேவையானவர்கள் கட்டுங்கள்’ என்று வெளியேறுகிறார். குஞ்சுவரீது புலையராக இருந்தவர். புலையன் ஊருக்குள் நடமாடக்கூடாது அவனே மதம் மாறி கிறித்தவரோ முஸ்லீமோ ஆனால் நடமாடலாம் என்ற விசித்திரமான ஆசாரம் மூலம் மதம் மாறியவர் அவர். அந்த மதமாற்றமே அவருக்கு வேறு எந்தபுலையனுக்கும் கிடைக்காத பொருளியல்வாய்ப்புகளையும் ஹிந்து சமூகத்திடமிருந்தே பெற்றுத்தருகிறது.
குஞ்சுவரீதிடம் சேர்ந்த செல்வம் அடுத்தகட்டமாக தொழில் மூலதனமாகும். முதலாளித்துவத்தை உருவாக்கும். அம்முதலாளித்துவமே வாசு முதலியவர்களால் உருவாக்கப்பட்ட சமூகமாற்றத்தின் கனிகளை கொய்து அனுபவிக்கும். புரட்சிகரச் சமூகமாற்றம் என்ற பெரும் கனவின் உள்ளுறையாக உள்ள இந்த அபத்தத்தை அத்தகைய ரு புரட்சியின் தொடக்கநாயகர்களில் ஒருவரான கேசவதேவே எழுதும்போது உருவாகும் ஆழமான அதிர்ச்சி அன்றைய கேரளசமூகத்தை பெரிதும் பாதித்தது.
முற்றிலும் மார்க்சிய சமூக ஆய்வுமுறையைக் கொண்டுள்ள இந்நாவலை ஒரு ‘முற்போக்கு’ நாவலாக வகுக்க முடியுமா? அபடிச் சொல்லலாம்தான். உண்மையில் இதுவே முற்போக்கு இலக்கியத்தின் அசல் என்றுகூடச் சொல்லலாம். சமூகமாற்றத்தைக் கொண்டாடும் நாவல் இது. ஆனால் ஓர் ஆழமான வாசிப்பு அந்த மாறறம் மூலம் அப்படி என்னதான் பெரிதாக நிகழ்ந்துவிட்டது, இன்னொரு ஆளும் வற்கம் உருவானதைத் தவிர என்ற வினாவையும் சென்றடையும். மாற்றங்கள் மனிதர்களை ஒவ்வொரு வகையாகப்பாதிக்கின்றன. வீழ்ச்சியும் எழுச்சியும் இணையாகவே நிகழ்கின்றன. வாழ்க்கை ஓடுவதாகவும் படுகிறது குளம்போலத் தேங்கி அலையெழுவது மட்டுமே நிகழ்வதாகவும் படுகிறது. இந்த பன்முக வாசிப்பே இந்நாவலின் பலமாகும்.
மொழியாக்கம் சுமுகமாகவும் அழகாகவும் அமைந்த நாவல் இது. அக்கால மொழியாக்கங்கள் உரியமுறையில் பலரால் திருத்தியமைக்கப்பட்டிருப்பதன் செழுமையை பொதுவாகக் கொண்டிருக்கின்றன என்று படுகிறது. சில சொலவடைகள் கேரளப்பண்பாட்டின் ஆழம் புரியாமல் செய்யப்பட்டுள்லன ‘வெளுப்பதற்கு தேய்த்தபோது தழும்புவிழுந்தது’ என்ற ப்ழமொழி ‘தோல்வெளுக்க செய்த முயற்சி குஷ்டமாக முடிந்தது’ என்று மொழியாக்கம் செய்யபப்ட்டிருப்பதைப்போல. நாவலின் இறுதியில் சில மர்மங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும் கதை கடைசிப்பக்கங்களில் அவசரமாகச் சுருக்கப்பட்டிருப்பதும் குறைபாடுகள் எனலாம்.
ஆனாலும் அரை நூற்றாண்டு தாண்டியபின்னும் இந்நாவலில் உயிர் துடிக்கிறது. மேலுமேலும் வாசிப்புக்குரியதாகவே இந்நாவல் உள்ளது.
(நன்றி: ஜெயமோகன்)