வெகுநாட்களாக என் கனவிலும் நனவிலும் நினைவிலும் நின்றிருந்த பெயர் கசாக்கின் இதிகாசம். அந்தப் பெயரை எங்கே எப்போது எவரால் கேட்டறிந்தேன் என்பது நினைவில் இல்லை. (ஜெயமோகனின் ‘நாவல்’ நூலில் அறிந்திருக்கலாம்). சென்ற ஜனவரியில் ஓ.வி.விஜயனின் இந்த நாவலை வாங்கியபோது எனக்கு ஏமாற்றமளித்தது அதன் பக்கங்களே. ஏனெனில் ‘இதிகாசம்’ என்றதும் என் கற்பனை அபரிமிதமாக இருந்தது. (எப்போதும் தடிமனான புத்தகங்களின் மீது எனக்கு அளவற்ற ஈடுபாடு உண்டு!) தடிமனான பல புத்தகங்களுக்கு இணையானது இதுவென படித்த பிறகே புரிந்தது. கசாக்கின் ஓராசிரியர் பள்ளிக்கு ஆசிரியராகப் பணியாற்ற வரும் ரவி அங்கிருக்கும் மனிதர்கள் எப்படி தனக்கான வாழ்க்கைய அமைத்துக் கொள்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை அவதானிப்பதை, அவர்களுடனான அவன் உறவை, அவர்களோடு அவன் மேற்கொள்ளும் பயணத்தைச் சித்தரிப்பதே கசாக்கின் இதிகாசம்.
வாழ்க்கையைக் காட்சிப்படுத்த விஜயன் கைக்கொண்டுள்ள படைப்பு மொழி தனித்துவமானது; அபாரமானது. தவ்வித் தவ்வித் தாவும் மொழிநடையில், துண்டுதுண்டாகக் காட்சிகளைச் சித்தரித்து, அவற்றை நம்முன் பூக்களாய்ச் சிதறச்செய்துவிட்டு, எல்லாவற்றையும் இணைத்து மாலையாகத் தொடுக்க வாசகனை நிர்பந்திப்பது கசாக்கின் இதிகாசம் வாசிப்பில் நிகழும் பேரனுபவம். வாசிப்பு என்பது என்ன? நம் கண்ணில் தென்படும் வார்த்தைகள் வாக்கியங்கள் இவற்றின் பொருள் மட்டும்தானா? பிரதி மட்டுமில்லாமல் பிரதிக்கு வெளியேயும் நம்மை சஞ்சரிக்கச் செய்யும் வித்தை என விஜயனின் எழுத்தைச் சொல்ல முடியும். வாக்கியங்கள் முடிந்த பிறகும் நம்மை விடாமல் பிடித்து இழுத்துச் செல்லும் பாதையில் பயணித்தாலன்றி நாம் நாவலை உள்வாங்க முடியாது. நாவலின் மலையாளக் கொச்சை நம்மைத் திணறடித்தாலும் தொடர் வாசிப்பில் பழகிவிடுகிறது.
வாழ்க்கை என்பது என்ன? உணவு, காமம், மரணம் என்ற மூன்று மட்டுமல்ல அவற்றுக்கும் அப்பால், அவற்றுக்கு இடையே ஏதோ ஒரு மெல்லிய ஒற்றைச் சரடு மனித வாழ்க்கையை நடத்துகிறது. அந்தச் சரடே ரவியைக் கசாக்கின் மனிதர்களோடு சேர்ந்து காலத்தின் வெளியில் பயணிக்க வைக்கிறது. அவன் காணும் அப்புக்கிளி, மொல்லாக்கா, மாதவன் நாயர், சிவராமன் நாயர். மைமுனா, நைசமாலி, கோபலு பணிக்கர், கல்யாணி, நாராயணி, குப்புவச்சன் என்ற பல்வேறு பாத்திரங்களும் நம்முடைய மனதில் அழிக்க முடியாத கோட்டோவியமாக பதிந்துவிடுகிறார்கள். கோட்டோவியம் என்பது ஆழமான வண்ணங்களால் உருவானதல்ல மாறாக நுட்பமான காட்சிப்படுத்தலினால் உருவாவது. அவ்வாறாகவே கசாக்கின் மனிதர்கள் நாவலின் பக்கங்களில் உலவுகிறார்கள்.
வாசகனின் நுட்பமான கூர்ந்த வாசிப்பு தேவைப்படும் இடங்கள் நாவலில் எண்ணற்றவை. “நாற்றுப்புரையைத் திறந்து உள்ளே வந்து நின்றபோது ரவிக்கு ஒரு ஜன்மம் கடந்தது போன்று தோன்றியது. வேறொரு காலத்திலெங்கொ கால் வைப்பதாகத் தோன்றியது. காகிதங்களும் மைப்புட்டியும் ஷேவிங் செட்டும் நேநீர்ப் பாத்திரமுமெல்லாம் தான் வைத்த இடத்திலேயே இருக்கின்றன. அந்த நாட்கள் முழுதும் உதிர்ந்த தூசு மட்டும் அவற்றின் மேலே படிந்திருந்தது. ஒரு மணம்: ரவி அது என்னவென்று யோசித்துப் பார்த்தான். பயணத்தின் மணம். காலத்தினூடே ஜடப்பொருட்களின் பயணம். துடைப்பமெடுத்துத் தூசு தட்டிய ரவி அந்தப் பயணத்தைத் தடுத்தான்” இந்த வரிகள் நம்முள் ஏற்படுத்தித்தரும் வாசிப்பின் தருணங்களும், அந்தத் தருணங்கள் நம் மூளையில் ஏற்படுத்தும் பரவசமும் அலாதியானவை.
ஓ.வி.விஜயனின் மொழி நடையின் உவமைகள் மிகவும் அழகானதாக மிளிர்கின்றன. நாராயணியின் அழகைச் சொல்லும் போது, ‘பால் குடிக்கும் குழந்தையால் தளர்த்த முடியாத கல் முலைகள்’ எனும் வரிகள் புன்னகையை ஏற்படுத்துவதோடு அபாரமான கற்பனையையும் தோற்றுவிக்கிறது. பள்ளிக்கு வரும் சிறுவன் ஒருவன் தன் ஒழுகும் மூக்கைத் துடைத்துக்கொள்ளாமல், ‘யானைத் தந்தங்களை மேலே இழுத்துக் கொண்டான்’ என்று குறிப்பிடும்போது அந்த உவமை அவருக்குள் விழுந்த தருணத்தை எண்ணி வியக்கிறேன். ரவியின் வாழ்க்கை மெல்ல மெல்ல கசாக்கின் மனிதர்களோடு இணைந்தும் இயந்தும் செல்வதை, ‘மெதுவாக வாழ்க்கை அதன் தினசரி முறையைக் கண்டுபிடித்தது’ எனச் சொல்லும் போது வாழ்க்கையை அதன் போக்கை புரிந்துகொள்ள முடிகிறது.
நிதர்சனமான உலகத்தை சித்தரிப்பதோடு அல்லாமல் அவற்றுடன் வாழ்வின் புரிபடாத பலவற்றை மயாஜாலமென இணைத்தும் பிணைத்தும் நாவலை நடத்திச் செல்கிறார் விஜயன். அத்தகைய காட்சிகளின் சித்தரிப்புகள் நம்மைக் கனவுலகில் சஞ்சரிக்கச் செய்கின்றன புராணக் கதைகளில் வரும் காட்சிகளின் சித்தரிப்பைப் போல. குஞ்ஞாமினா ரவியிடம், “பேன்களுக்கு ஆத்மா உண்டா?” என்ற கேள்வியும், பத்மா ரவியிடம், “நீ யாருகிட்டேர்ந்து தப்பியோடப் பாக்குற?” எனக் கேட்பதும் வாழ்க்கையின் புதிரையும், ரகசியத்தையும் உணர்த்துவதோடு அதன் அழகையும் அகோரத்தையும் வெளிப்படுத்துகிறது. அக்கேள்விகள் நம் அகத்தில் சுழன்றடிக்கும் சூறாவளியில் நாம் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது.
வாழ்க்கை நம்மை இட்டுச் செல்வது எங்கே? அதன் முடிவில்லாப் பயணம் எத்தகையது? போன்ற கேள்விகள் மனதில் முட்டிமோத, “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று எப்போதேனும் ஒரு முறையேனும் நம்மை நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோமெனில் கசாக்கின் இதிகாசம் நம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். “துயரம் போல, ஆறுதல் போல, இருட்டு. இருட்டில் ஆங்காங்கே மின்மினிகள். ஊர் விளக்குகள் என்ற பயணிகள். இப்போது நாற்றுப்புரை ஒரு ரயில் பெட்டி. பட்டென்று வெளியிலுள்ள இருட்டைப் பற்றி நினைத்துப் போனான். தான் இப்பொது இருப்பது எங்கே? இருபுறமும் இருட்டின் தரிசுகளினூடே திரிவிளக்குகள் நீங்கி மறைந்தன. பயணத்திற்கிடையிலொருமுறை, எங்கிருந்தோ மற்றொரு தண்டவாளம் பாய்ந்து நெருங்கியது. மற்றொரு பிரயாணம், கர்மபந்தத்தின் நொடிநேரப் பரிச்சயம். சக்கரங்களுக்கிடையில், ஒரு நொடி மட்டும். தாளம் கொட்டியபடி அது மீண்டும் அகன்றது” எனும் நாவலின் வரிகள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அளவுகடந்ததாகும்.
பிரம்மாண்டமான கடலைக் கண்டு நாம் வியக்கலாம், ரசிக்கலாம் ஆனால் அதை நாம் அறிந்துகொண்டு விட்டோம் என நினைப்பது நம் அறிவீனத்தையே காட்டும். நாம் எப்போதும் கடலை அல்ல அலைகளையே காண்கிறோம். நம் கால்களைத் தொட்டுத் தொட்டு விலகிச் செல்லும் அலைகளையே நாம் கடலாகக் காண்கிறோம். உண்மையில் கடல் எனும் பிரம்மாண்டத்தை அறியவும் உணரவும் நாம் இன்னும் அதிகமும் பிரயத்தனப்பட வேண்டும். ஓ.வி.விஜயனனின் கசாக்கின் இதிகாசம் படித்து முடித்ததும் என்னுள் ஓடிய உணர்வுகள் இவைதான். ஆக, வாசிப்பில் அலைகளையே கடலாக எண்ணி நின்றுவிடாமல் நாம் மேலும் பயணிக்கவேண்டியது அவசியம்.
கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும்போது நினைவின் அடுக்குகள் குழம்பியும், முன்னுக்குப் பின் முரணாகவும், புகைமூட்டத்துடன் மங்கலாகவும், சில இடங்களில் பளீரென பிரசாசம் நிரம்பியதாகவும் இருக்குமே அப்படித்தான் இருக்கிறது ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம். இருநூற்றுக் கொச்சம் பக்கமுள்ள இந்நூலில் அகத்தியரின் கமண்டலமென வாழ்க்கையின் பிரம்மாண்டத்தையும் பின்னங்களையும் ஒருசேர அடக்கிவிடுகிறார் ஓ.வி.விஜயன். இந்நூலுக்கு மதிப்புரையோ முன்னுரையோ ஏதும் இல்லாதிருப்பது வருத்தமளிக்கிறது. உள் அட்டையிலும் பின்அட்டையிலும் சில குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன அவ்வளவே.
(நன்றி: கேசவமணி)