பூமிக் கோளத்திற்கு வெளியே காணக் கிடைக்கின்ற ஒரே காட்சி சீனத்தின் நெடுஞ்சுவர் என்று கூறப்படுவதுண்டு. அதைப் போன்றே மனித குலத்தின் போராட்ட வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த நெடும்பயணமும் தனித்தன்மை மிக்க ஒரு நிகழ்வாகும்.
‘மாவோவின் நெடும்பயணம்’ என்ற அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்நூல், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது என்பதே இதன் முக்கியத்துவத்தையும், பரவலான வரவேற்பை யும் உணர்த்துகிறது.
மஞ்சு அரச வம்சத்தை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்த கோமிண்டாங் 1911இல் சன் யாட் சென் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. (முதல் உலகப்போருக்குப் பின்) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி சீனாவில் ஜெர்மனி அனுபவித்து வந்த உரிமைகளை ஜப்பானுக்கு கைமாற்றிக் கொடுப்பதை எதிர்த்து 1919 மே 4இல் கிளம்பிய பேரெழுச்சிதான் இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்த முதல் நடவடிக்கை். தொடர்ந்து 1921இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியதைத் தொடர்ந்து, கோமிண்டாங் உடன் கூட்டணி வைத்த போதிலும் இந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
1927 ஏப்ரல் 12 அன்று சியாங் கை ஷேக் தலைமையிலான கோமிண்டாங் படைகள் திட்ட மிட்ட முறையில் கம்யூனிஸ்டுகள், அவர்களது ஆதரவாளர்களை கொன்று குவித்தன. அங்கிருந்து தப்பியோடிய கம்யூனிஸ்டுகள் தென்சீனாவின் ஜியாங்ஸியில் ஒன்றிணைந்து முதல் சோவியத் அமைப்பை உருவாக்கினர். இந்த சோவியத் அமைப்பின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்க கோமிண்டாங் படைகள் தொடர்ந்து தாக்குதல்களில் இறங்கின. ஏகாதிபத்திய ‘வெள்ளை’ படைகளிடமிருந்து தப்பிக்க செஞ்சேனை 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, இறுதியில் 1949 அக்டோபர் 1இல் சீன மக்கள் குடியரசு மாவோவின் தலைமையில் உருவானது.
ஜியாங்க்ஸியிலிருந்து ஷென்ஸியை நோக்கி மூன்று படைப் பிரிவுகளாக 2,30,000 செஞ்சேனை வீரர்களுடன் தொடங்கிய இந்த நெடும்பயணம் துயரம் நிரம்பிய ஒன்றாக இருந்தது. படைவீரர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த பயணத்தின்போதே உயிரிழந்தனர். பயண தூரம் 6,000 மைல்கள். அதாவது கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு இரண்டு முறை போய் வரும் தூரம் எனலாம்.
சியாங் கை ஷேக்-இன் ‘வெள்ளை’ படைகள் போகுமிடமெல்லாம் சுற்றி வளைக்க, அந்த வியூகங்களில் இருந்து தப்பிக்க செஞ்சேனை ஏறாத மலையில்லை; தாண்டாத பாலமில்லை; கடக்காத பெரும் ஆறு ஏதுமில்லை. செஞ்சேனை கடந்து சென்ற பகுதிகள் அனைத் திலும் விவசாயிகளை தட்டியெழுப்பி தன் ஆதரவாளர்களாக மாற்றியது.
நிழல்வண்ணனின் தமிழாக்கத்தில் வந்துள்ள டிக் வில்சனின் இந்நூல் நெடும் பயணத்திலிருந்து தொடங்கி 1976ஆம் ஆண் டில் அவர் மறையும்வரை மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடத்திய தத்துவார்த்தப் போராட்டங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மொழியாக்கம் இன்னும் சற்றே எளிமையாக இருந்திருந்திருக்கலாம்.
இந்த நெடும்பயண வரலாறு, காலங்களைக் கடந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சாதனை என்றே கூறலாம். வரலாறு மாணவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கையில் வைத்திருக்க வேண்டிய ஒரு நூல் இது.
(நன்றி: தி இந்து)