‘மலையாள மொழியில் வெளிவந்த வாழ்க்கைச் சரிதங்களில் சிறந்தது என்று கேரள சாகித்ய அகாதமியின் விருதினைப்’ பெற்றிருக்கும் இந்நூல் நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் இருண்ட பகுதியை வெளிப்படுத்துகிறது. 1975ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று மூன்றாவது முறையாக இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாயினர். அவ்வாறு துன்பங்கள் அனுபவித்த குடிமக்களில் ஒருவர்தான் ஈச்சரவாரியர்.
மகனை இழந்து, அவன் என்ன ஆனான் என்று தெரியாமலே தன் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களும் மகனைத் தேடியபடியே, காவல்துறை, விசாரணை முகாம்கள், நீதிமன்றம் என்று அலைந்து கொண்டிருந்த ஒரு தந்தையின் மன வலிகளை வெளிப்படுத்துகிறது இந்நூல். இந்நூலின் பிற்சேர்க்கையாக, ஈச்சரவாரியரின் மகன் ராஜனின் புகைப்படங்களும், ‘ஆள் கொணர்வு மனுவின் மீதான தீர்ப்பு’ என்ற வழக்கு சம்மந்தமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் இடம்பெற்றுள்ளன.
‘உள்நாட்டுக் குழப்பங்களால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து’ நேர்ந்ததாகக் கூறி நாட்டில் ‘நெருக்கடி நிலை’ பிரகடனப்படுத்தப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாகப் பறிக்கப்பட்டன. அப்போதைய பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி ஆவார்.
1976 மார்ச் 1ஆம் தேதி கோழிக்கோடு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த ஈச்சரவாரியரின் மகன் ராஜன், மாநிலக் காவல்துறையினரால் விடுதியில் வைத்துக் கைது செய்யப்படுகிறார். அவர் தவறான தகவலின் மூலம் கைது செய்யப்பட்டதோடு மட்டுமன்றி, அவர் கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்பதும், தவறான கைது நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகும் உரிமை மறுக்கப்பட்டிருந்ததும் நெருக்கடி நிலையின் அன்றைய சூழலை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக அரங்கேற்றப்பட்ட தந்திர நாடகம் அது. அந்த நாடகத்தில் ஜனநாயகத்தின் காவல் அமைப்புகளாக அதுவரை கருதப்பட்ட எல்லா மையங்களும் முடமாயின. நீதிமன்றங்கள் ஊமைக் கூடங்களாயின. ஊடகங்கள் அரசாங்கத்தின் ஒத்துக் கருவிகளாயின. காவல்நிலைய ங்கள் வதைக் கொட்டடிகளாயின” என்ற கூற்றைப் பார்க்கும்போதே நெருக்கடி நிலையின் குரூரமான முகத்தைப் பார்க்கமுடிகிறது. ‘மக்களாட்சி’ என்ற பெயரில் ஆளும் தலைவர்கள் நடத்தும் கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடுகள் இவை.
கல்லூரி முதல்வரால் தகவல் தெரிவிக்கப்பட்டு மகனைத் தேடி ஓடி வருகின்ற தந்தை, மக்கள் மன்ற உறுப்பினர்கள், மாநில உள்துறைச் செயலர், காவல்துறை உயரதிகாரிகள் என்று பலரையும் சந்தித்து மனு சமர்ப்பித்து வேண்டுகி றார். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நெருக்கடி நிலை தளர்த்தப்பட்ட பிறகு கேரள உயர்நீதிமன்றத்தில் முதல் நபராக ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல் செய்கிறார் ஈச்சரவாரியர். அந்த மனுவில், கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவாதிகளாக அன்றைய கேரள மாநிலத்தின் உள்துறை அமைச்சர் கே.கருணாகரன், உள்துறைச் செயலர், காவல்துறை இயக்குநர், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
‘அப்படி ஒரு கைது நிகழ்ச்சி நடக்கவே இல்லை’ என்று கூறி மாநில அரசும், காவல் துறையும் முதலில் மறுத்தன. பின்பு சட்டவிரோதமான போலீஸ் காவலில் ராஜன் இறந்து போனதாக அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனால் பதவியேற்ற ஒரே மாதத்தில் தன் பதவியை இழந்தார் கருணாகரன். பிறர் பதவி நீக்கம், கைது ஆகிய தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
“ஒரு தகப்பன் தனது மகனைப் பற்றி நினைவு கூரும்போதே ஓர் அரசு தனது குடிமக்களுக்குச் செய்த சதியும் அவர்கள் மீது நடத்திய வன்முறையும் கலந்த ஓர் இருண்ட காலகட்டம் வெளிச்சத்துக்கு வருகிறது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் அதிகாரபீடம் நடத்திய அரசு பயங்கரவாதத்தின் சான்று இது” என்ற சுகுமாரனின் கூற்று முற்றிலும் பொருத்தமானது.
மறைக்கப்பட்ட சில உண்மைகளையும், அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளினாலும் தான் அனுபவித்த துயரங்களையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் ஈச்சரவாரியர். இந்த நூலை வெறும் ‘அனுபவப் பதிவு’ நூல் என்று மட்டும் கூறமுடியாது. சமகால அரசு அமைப்பு, அதன் உட்கூறுகள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, பொதுநீதி ஆகியவற்றின் மீதான வெளிப்படையான விமர்சனம் என்றுதான் கூற வேண்டும்.