எலிஸாஃபே இங்கிலாந்தை சேர்ந்த 24 வயதுப் பெண். தனது கணவரான அந்தோனிஃபேவுடன் இந்தியப் பயணத்தை 1779-ல் இங்கிலாந்திலிருந்து, தொடங்கினார். இந்தியாவில் பாரிஸ்டராக பதிவு செய்து, கல்கத்தாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் நடத்தி, நிறைந்த செல்வமும், வளமான வாழ்க்கையும் வாழலாம் என கற்பனை செய்தவாறு, தனது கணவர் ஃபேயுடன் எலிஸா புறப்பட்டார்.
இங்கிலாந்திலிருந்து ஐரோப்பா வழியாக ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஊடாக, பிரான்ஸ், இத்தாலி வழியாக ஜெனோவா துறைமுகம் வந்தடைந்து, மரக்கலம் மூலம் கெய்ரோ வரையும், பிறகு செங்கடல் வழியாக பாய்மரக் கப்பல் மூலம் கள்ளிக்கோட்டை வந்தடைந்தார். பின் கோவாவிலிருந்து சென்னை வந்து, கல்கத்தா சென்றடைந்தார். இந்தப் பயணம் சுமார் ஒரு வருடகாலம் நீடித்தது.
வழிப்பறிக் கொள்ளையர்களிடம், எதிர்ப்பாளர்களிடம் மாட்டிக் கொண்டு பொருள்களை இழந்து, சிறைப்படுத்தப்பட்டு, பலவித இன்னல்களைச் சந்தித்து கல்கத்தா சென்றடைந்தார். இதில் ஏன் அவர் தரை வழிப் பயணத்தை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணம் விளங்கவில்லை. ஏனெனில், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கடல்வழி மார்க்கம் அதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
சாகசமும், துன்பங்களும் நிறைந்த இந்தப் பயணத்தை எலிஸா மேற்கொண்டபோது, ஒரு அற்புதமான செயலையும் செய்தார். தொடர்ந்து தனது தாயாருக்கும், சகோதரிக்கும் இவர் தன்னுடைய பயண விபரங்களை, அழகான, இலக்கியத் தரம் வாய்ந்த நடையில் கடிதங்களை எழுதி வந்தார்.
மழையிலும், குளிரிலும், பின் கடும் வெப்பத்திலும், கடிதங்களை எழுத எலிஸா மறந்ததே இல்லை. அவருடைய 23 கடிதத் தொகுப்புகளைக் கொண்ட நூலே இந்தப் பயண நூல்.
250 ஆண்டு காலத்திற்கு முன் தரைவழி, கடல்வழிப் பயணம் எவ்வாறு இருந்தது என்று நினைக்கும் போது ஒரு கணம் பிரமிப்பாகவும், அச்சம் தருவதாகவும் இருக்கிறது. இருப்புப் பாதை, மோட்டார் வாகனம் வருவதற்கு முன்பான காலம்!. குதிரைகள் இழுக்கும் கோச்சு வண்டி பயணம், மலைமீது கழுதை சவாரியில் பயணம், என செழுமையான ஐரோப்பிய பள்ளத்தாக்குகளிலும், ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடந்தும், மழை, கடும்பனிக்கு நடுவில் பயணம் மேற்கொண்ட இந்த இளம்பெண்ணின் தீர மனத்தை நினைத்தால் வியப்பும், வியாகூலமுமாக நம் மனம் அதிருகிறது. ஐரோப்பா நெடுவிலும் பெரிய பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிகச் செலவுகளும், செலாவணிப் பிரச்சனைகளும், சமாளிக்கப்பட்டன. எலிஸாவிற்கு சிக்கனம் கை வந்த கலை. எதையும், எந்தச் செலவுகளையும் தனது சிக்கன மனதினிலேயே பரிசீலிப்பதில் வல்லவர். கெய்ரோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த அடிதடி, வழிப்பறிக் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய புர்கா கலாச்சாரம், வழி எங்கும் தான் சந்தித்த மனிதர்கள், அவர்களை பற்றிய விவரணை, அவர்களுடைய சுபாவங்கள் என அழகாகப் பதிவு செய்திருப்பதுதான் இந்நூலை வாசிக்கத் தூண்டும் நூலாக்குகிறது.
ஒரு வழியாக செங்கடல் வழியாக கள்ளிக்கோட்டை வந்து சேர்ந்தபோது இவருக்குப் பெரிய ஏமாற்றம். இங்கிலாந்து ஆட்சி நடைபெறும் நினைப்பில் வந்தவருக்கு பெரும் அடி. அங்கு ஹைதர் அலியின் பட்டாளம் இவரை வரவேற்றது. ஆங்கிலேயனாக இருந்த, கொடுமனம் கொண்ட கொள்ளையன், அய்ரேஸ் தலமையில் இவர்களுடைய பாய்மரக் கப்பல் சூழப்பட்டு கைதுசெய்யப்படுகிறார்கள். கள்ளிக்கோட்டையில் இவர்களிடமிருந்து இன்னும் ஏதாவது விலைமதிப்பற்ற பொருட்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி, இரண்டு மாதங்களுக்கு மேல் சிறைவைக்கப்பட்டனர். தங்களிடமிருந்த அனைத்துப் பொருட்களையும் எலிஸா தம்பதினர் இழந்தனர். விலை உயர்ந்த சிறிய பொருள்களான கைக் கடிகாரங்கள். கை உறையில் போட்டு தந்திரமாக மறைத்து வைத்திருந்தார். ஆங்கிலேயனாக இருந்தாலும் மோசடி கொள்ளையன் அய்ரோசுக்கு இங்கிலாந்து பெண்மணியிடம் சக நாட்டவர் என்ற எந்த பரிவுமில்லை. அவர்களுடனே கோவாவிற்கு செல்ல வேண்டும், பணம் இழப்பீடு வேண்டும் என்ற இவர்களுடைய கோரிக்கை(அங்கிருந்த பல கையூட்டு பேர் வழிகளால் அலைக்களிக்கப் பட்டார்கள். கையூட்டிற்கும் இந்தியாவிற்கும் பல ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியம் இருக்குமோ?!. கிறித்துவப் பாதிரியார் ஒருவர் அனுப்பிய எழுநூறு ரூபாயும், ஹைதர் அலி ஆட்சியர் அளித்த இழப்பீடு ஐநூறு ரூபாயும், கையூட்டு கொடுப்பதற்கும், சில செலவினங்கள் செய்வதற்கும் உதவியாக இருந்தது.
யூத வணிகர் ஒருவருடைய நன்மதிப்பைப் பெற்று கள்ளிக்கோட்டையிலிருந்து கோவா தப்பிச் சென்ற பிறகு, கோவாலிருந்து சென்னைப்பட்டினம் வந்தார். சென்னைப்பட்டினம் பற்றிய இவருடைய விவரணை வியப்பளிக்கக்கூடியதாக இருக்கிறது. அன்றைய சென்னையின் செல்வச் செழிப்பையும் அறிய முடிகிறது. அழகிய நகராக உருவாகிக் கொண்டிருந்த சென்னையை விவரிக்கிறார். அடித்தட்டு மக்களுடைய வாழ்வையும் பதிவுசெய்ய மறக்கவில்லை. சில நாட்களுக்குப் பின் தம்பதிகள் கல்கத்தா நோக்கிப் பயணிக்கிறார்கள். கணவரைப் பற்றிய இவருடைய் நம்பிக்கைகளும், சரிவைச் சந்தித்து கொண்டு இருப்பதையும் அறியமுடிகிறது. முன்கோபமும், விவேகமற்ற அவருடைய அணுகுமுறையும், எலிஸாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல தடைகளைக் கடந்து, செல்வம் சேர்க்க வேண்டுமென்று இந்தியப் பயணத்தை மேற்கொண்ட இவருக்கு, கணவரின் நிலை தொடர்ச்சியாக கவலையூட்டுவதாக இருந்தது. பல இடங்களில் மிஸ்டர் ஃபேயின் குணத்திற்கு கடிவாளம் போட்டு எலிஸாவால் மட்டுமே நிலமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஒரு வழியாக, கல்கத்தாவை அடைந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மிஸ்டர் ஃபே பதிவுசெய்து கொண்டார்.
கல்கத்தா வாழ்க்கை எப்படி இருந்தது? ஐரோப்பியருடைய ஆடம்பர வாழ்க்கை, பணிவாக இருப்பது போலிருந்து ஊதாரியான அவர்களுக்கே வட்டிக்குப் பணம் கொடுக்கும் வேலைக்காரர்கள், வெள்ளையர்கள் ஒருபுறம் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை ஓட்டாண்டி ஆக்கும் இந்திய தந்திரகார பனியா வணிகர்கள் பற்றியும், மெலிந்த தேகத்தடனும் பல விஷயங்களில் உறுதியற்ற போக்கையும் மத ரீதியான மன உறுதியையும், இந்தியர்களின் குணநலன்களாகக் குறிப்பிடுகிறார்.
உடன்கட்டை ஏறும் சதிப்பழக்கத்தையும், பூரி ஜகநாதர் ஆலயத்தில் தேரோட்டத்தின் போது சக்கரத்தில் பாய்ந்து, உயிரைப் போக்கிக் கொண்டால் மோட்சத்திற்குப் போகலாம் என்ற நம்பிக்கையைப் பார்த்து, துயரத்துடன் பதிவு செய்கிறார். கணவர் ஃபேயுடான உறவு, பெரும் கடனாளி ஆக்கி விட்ட நிலையில் வெறும் கையுடன், ஃபேயிடமிருந்து விவாகரத்து பெறுகிறார். சில நல்ல உள்ளம் கொண்ட ஐரோப்பியக் குடும்பங்களுடைய ஆதரவில் சில மாதங்கள் இருந்து விட்டு இங்கிலாந்து திரும்புகிறார். கல்கத்தாவின் சூழல் பிடித்துவிட்டதால் என்னவோ அதற்குப் பின்பும் இந்தியா வந்து, அழகிய தொப்பிகள் விற்கும் கடை வைத்து வாணிபம் செய்கிறார். கல்வி நிலையம் நடத்துகிறார். இங்கிலாந்திற்கு இரண்டு முறை போய் வருகிறார். செல்வத்தைத் தேடுவதில் எலிஸா பெரிய அதிர்ஷ்டக்காரியாக இல்லையென்றாலும் அவருடைய் போராட்ட குணம் இறுதிவரை குறையவில்லை. தனது அறுபதாவது வயதில் கல்கத்தாவில் மரணமடைகிறார். இளமையில் புறப்பட்ட எலிஸாஃபேயின் இந்த சாகசப் பயணம் இறுதிவரை அவரைத் துணிச்சல்கராகவே ஆக்கியது. இன்றைய சூழலில் கூட இளம்பெண்கள் பயணம் மேற்கொள்வது எவ்வளவு ஆபத்தாக (நம் தேசத்தில்) இருக்கிறது என்று நினைக்கும் போது, எலிஸாவை, அவருடைய இலக்கியத் தரமான கடிதங்களை அவருடைய வாழ்வும், மன உறுதியும் இந்நூல் வாசிப்பிற்கு பின்பு நம் மனதில் நெடுங்காலம் வெளிச்சமாக இருக்கும் என்பது திண்ணம்.
(நன்றி: புத்தகம் பேசுது)