கார்ல் மார்க்ஸ் பிறந்த 200-வது ஆண்டு இது. உலகில் பல்வேறு தத்துவச் சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன. நவீன அறிவுசார் துறைகள் அனைத்தின் மீதும் புரிதல் ஏற்படுத்தக்கூடியவையாக, உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் மேம்பட்ட வகையில் வாழ வேண்டும் என்று கருதுபவையாக, அதற்கெல்லாம் மேலாக அறிவியல்-தர்க்கபூர்வமாக அமைந்த கொள்கைகளாகப் பெரும்பாலான சிந்தனைகள் இல்லை. மார்க்ஸும் எங்கெல் ஸும் ‘மார்க்ஸியக் கொள்கை’ மூலமாக மேற்சொன்ன புரிதல்களை சாத்தியப்படுத்தினார்கள். மார்க்ஸ் இறந்து 135 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய கொள்கைகள் உலகின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.
தமிழில் மார்க்ஸின் கொள்கைகள் குறித்து எழுதப்பட்ட அளவுக்கு, அவருடைய வாழ்க்கை பற்றி எழுதப்படவில்லை. ஏழைப் பாட்டாளிகளும் தொழிலாளர்களும் மேம்பட்ட முறையில் வாழ வேண்டும் என்று விரும்பிய அவருடைய வாழ்க்கையின் பெரும் பகுதி வறுமையில் தள்ளாடியது. வறுமையால் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவருடைய நான்கு குழந்தைகள் இளம் வயதிலேயே பலியானார்கள். ஆனால் வறுமை, துயரங்கள், அவதூறு, நாடு கடத்தப்படுதல், அரசுக் கண்காணிப்பு என எதுவுமே அந்த மேதையைக் கட்டிப்போடவில்லை. இதழ்கள், இயக்கங்கள், நூல்கள் எனத் தன் கருத்துகள் அனைத்தையும் தீவிரமாகவும் ஆணித்தரமாகவும் மார்க்ஸ் வெளியிட்டுக்கொண்டே இருந்தார். மகத்தான படைப்பான ‘மூலதன’த்தையும் அவர் படைத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய மனைவி ஜென்னியும், தத்துவச் சிந்தனைகளில் எங்கெல்ஸும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் துணைநின்றார்கள். எங்கெல்ஸின் தொடர் பொருளாதார உதவி, ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ வழங்கிய சொற்பச் சம்பளம், வீட்டிலிருந்த விலை மதிப்புள்ள பொருட்களை அடகுவைப்பது ஆகியவற்றின் மூலமே மார்க்ஸின் வாழ்க்கை நகர்ந்தது. ஒருபக்கம் அரசியல்-பொருளாதார ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மார்க்ஸ், மற்றொருபுறம் சமதர்ம சமூகத்தை அமைக்கவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடினார், இயக்கங்களை உருவாக்கினார். எழுத்து வழியாக மட்டுமில்லமால், மற்ற வகைகளிலும் அவரது தாக்கம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நண்பர்களின் பார்வையில்
மார்க்ஸ் பிறந்த 200-வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங் கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது ‘நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்’ என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலை கள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற சுவாரசியத்துடன் லீப்னெஹ்ட் விவரித்துள்ளார். மார்க்ஸைப் போலவே ஜெர்மன் அகதியான அவர் லண்ட னில் குடியேறி வாழ்ந்தபோது மார்க்ஸ் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களும் இதில் அடங்கும்.
பால் லஃபார்க் எழுதியுள்ள குறிப்புகள் லீப்னெஹ்ட் அளவுக்குச் சுவாரசியமாக இல்லாவிட்டாலும், ஒரு இளைஞராக மார்க்ஸைப் பார்த்து வியந்த, அவரது பல்வேறு திறன்களை அருகிலிருந்து உணர்ந்த ஆச்சரியங்களைப் பதிவுசெய்துள்ளார். இந்த இருவருடைய பதிவுகளையும் வாசிக்க சுவாரசியமான நடையில் ச.சுப்பாராவ் மொழிபெயர்த்துள்ளார்.
வாழ்வும் பணியும்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச-சமதர்மச் சிந்தனைகள் திருக்குறளில் அறச்சிந்தனையாக வெளிப்பட்டுள்ளன. அதைப் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டு, விரிவான எடுத்துக்காட்டுகளோடு ஆசிரியர் விளக்கியுள்ளார். மார்க்ஸியம் நம் மண்ணுக்குப் புதுமையானதோ, அந்நியமானதோ அல்ல என்பதே அவரது வாதம். அந்த வகையில் இந்த நூல் வெறும் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், நமக்கும் மார்க்ஸ்-மார்க்ஸியத்துக்கும் இடையே உள்ள தொடர்பாக விரிந்துள்ளது.
மார்க்ஸ் பிறந்தார்
ரஷ்ய எழுத்தாளர் ஹென்றி வோல்கவ் எழுதிய ‘பர்த் ஆஃப் அ ஜீனியஸ்’ புகழ்பெற்ற நூலை ‘மார்க்ஸ் பிறந்தார்’ என்ற கவித்துவத் தலைப்புடன் பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்த்ததன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் ரஷ்யாவில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வெளியான நூல் இது. உலகத் தத்துவச் சிந்தனைகளுக்குப் புதிய கண்களைத் தந்த மார்க்ஸ் பற்றி, இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. கார்ல் மார்க்ஸின் ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் எப்படி வளர்ந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்த நூல் அலசியிருக்கிறது. மார்க்ஸியத்தை வறட்டுக் கோட்பாடாக அல்லாமல், அவருடைய காலப் பின்னணியிலிருந்து எப்படி அது கொள்கையாக உருவெடுத்தது என்பதை இந்த நூல் மூலம் அறியலாம். மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் பற்றி அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய அவசியமான படைப்பு.
உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை
மார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘காரல் மார்க்ஸ் - உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை’ என்ற குறுநூலை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே.
(நன்றி: தி இந்து)