மலையாள நாவல் இலக்கிய வரலாறு பல்வேறு சோதனை முயற்சிகளை உட்கொண்டே வளர்ந்து வந்திருப்பது வெளிப்படை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதைப் பிரதிபலிக்கிற அல்லது ஏற்றுக்கொள்கிற அல்லது நிராகரிக்கிற படைப்பு முயற்சிகள் இயல்பானவையே. ஆனால் ஒரு நாவல் அல்லது கலைப் படைப்பு, காலம் கடந்தும் வாழ்வதென்பது மக்கள் அதை எவ்வாறு ஏற்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும். இந்த 21ஆம் நூற்றாண்டின் படைப்புகள் பற்றிய ‘கால ஏற்பு’ பற்றிக் கூறுவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும். அந்த வகையில் உருவம், உள்ளடக்கம், கதையின் செல்நெறி, கதை சொல்லப்பட்டுள்ள முறை ஆகிய அனைத்திலும் ஸ்ரீகுமாரின் இந்த நாவல் புதிய போக்கைக் கொண்டு ள்ளது. “... நான் அறிந்தவரை நிகழ்கால வாழ்க்கையைத் தாந்த்ரீக மரபுடன் தொடர்புபடுத்தி இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள முதல் தாந்த்ரீக நாவலென்று ஸ்ரீகுமாரின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்” என மலையாள நூலின் முன்னுரையில் மலையாள எழுத்தாளர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதாகப் பின்னட்டையில் குறிப்பிட ப்பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியரும் இதனையொத்த கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். ‘தாந்திரிகம்’ என்னும் இந்தியத் தத்துவ மரபை, நடைமுறையை உள்வாங்காதவர்களால்/ உள்வாங்க முடியாதவர்களால் இந்த நாவலை உள்வாங்குவது மிகக் கடினமாகவே இருக்கும். காரணம், கதை என்றவொன்றை நீக்கிப் பார்த்தால் அல்லது ஒட்டுமொத்தக் கதையிலும் மேலோங்கி நிற்பது எதுவெனப் பார்த்தால் ஆண் - பெண்ணின் அளவிட முடியாத காமவெறியும் அது தணிக்கப்படுதலாகவுமே அமைந்துள்ளது. வாசகன் இதுதான் தாந்திரிகமோ என எண்ணினால் விடையிறுப்பது கடினமே.
குரு, சீடன் சதீஸ், இவர்களின் கார் பயணம், இறுதியில் தாசி பவானி வீட்டில் வந்து தங்குதல், அங்கே தாந்திரிக முறையில் சக்ர பூசை நடத்துதல் அதில் கலந்துகொள்ள மேலும் ஆறு இணைகள் வருதல் என நாவல் தொடங்கு கிறது. இந்தச் சக்ர பூசை செய்யும் அறைக்குள் நுழையும்போதே அனைவரும் அம்மணமாகிவிட வேண்டும். “ஆத்ம நிதர்சனத்துடன் ஈஸ்வரனை அணுக வேண்டியவர்கள் எல்லாக் குண பேதங்களையும் களைந்து மானாபிமானங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்ற தத்துவ வெளிப்பாட்டின் குறியீடுதான் இந்த மறைவில் இருந்து வெளிப்படுதல்” என இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பவானியும் குருவும் நிற்கும் தோற்றத்தைக் காணும் சதீஸுக்கு “துல்லிய அளவிலான அர்த்தநாரீஸ்வரத் தோற்றமாக” அது தெரிகிறது. தாந்திரிக மார்க்கத்தின் விதி கர்த்தா பரமேஸ்வரன்தான் என்னும் குரு, இதை ஓர் இரகசிய அமைப்பு என்கிறார். சைவம், சக்தி, வைஷ்ணவம், சூரியன், விநாயகன், பௌத்தம், ஜைனம் என இயங்கும் மார்க்கங்களில் இது இயல்பாகவும் இரகசியமாகவும் இன்றும் நிலைபெற்று வருகிறது என்கிறார் குரு. வாசகரின் பொது அறிவுக்குப் புரியாதது இது - இயல்பான சக்ர பூஜை - ஏன் இரகசியமாக நடைபெற வேண்டும் என்பதுதான்.
சக்ர பூஜை செய்ய குருவையும் பவானியையும் ஒட்டி எல்லோரும் வட்ட வடிவில் நிர்வாணமாக உட்காருகிறா ர்கள். மது, மாமிசம், மீன் என ஒவ்வொன்றாகக் குரு சுவைத்தபின் இடமாகவும் வலமாகவும் சுற்றுக்கு விடப்படுகிறது. பின்பு, தேவைப்பட்டவர்கள் ‘புகை பானம்’ அருந்துகிறார்கள். பின்னர் குரு கம்பீரமாக இடது காலின் அடிபாகத்தை வலது தொடையின் மீது வைத்து அமர, பவானி இடது தொடைமீது கால்களை தொங்க விட்டுக்கொண்டு உட்காருகின்றாள். இருவரும் இருவர்தம் குறிகளையும் பிடித்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட பஞ்சோபசாரத்தின் இறுதி வடிவம் மைதுனம். “ஒவ்வொருவரும் அவரவர் இணையோடு மைதுனம் செய்து ஆத்மிக சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் எல்லோரும் இங்கு வந்து சேருங்கள்” எனக் குரு கட்டளையிடுகின்றார். சக்ர பூஜையின் இறுதியான ஆண் - பெண் உறவு ‘திவ்யமான, அனுபூதியாகத் தோன்றும்’ என்கிறார் ஆசிரியர்.
இந்த நாவலில் வரும் பெரும்பாலான பாத்திரங்களுக்கு முன்ஜென்ம வாசனை உண்டு; பின்ஜென்ம வாசனை யைக் குரு மட்டுமே அறிவார்.
சக்ர பூஜை நடந்த இரவு முடிந்து சூரியோதத்தின்போது பவானி தயாராகிவிட்டாள். மற்ற அனைவரும், குரு உட்பட, செவிமடுப்போராக அமர்ந்திருந்தனர். சின்மயி யாக மாறிய பவானி கதை சொல்கிறள்; இதுதான் ஸ்ரீகுமார் கூறவரும் அமர கதை. முன்னால் கூறியது தாந்திரிகத்தின் முன்னோட்டம்.
சுதீரன்(கதாநாயகன்), இவனது தந்தை - கொடுமையும் காமவெறியும் பணமும் உள்ள தந்தை; தனக்கு எதிரான மௌனத்தையும் தாங்க முடியாத இந்தத் தந்தை, சுதீரனின் தாயை (ஏழு குழந்தை பெற்றவள்) சுவரில் சார்த்தி நிற்க வைத்து நாபிக்குழியில் உதைத்துக் கொலை செய்கிறார். சின்ன வயதில் விளையாட்டாகக் கோயில் பூசாரி மகளை முத்தமிடும் சுதீரன், தன் தந்தைக்கும் ஊருக்கும் பயந்து வீட்டைவிட்டு ஓடுகிறான். களைத்து விழும் சுதீரனை மந்திரவாதி சிருகண்டன் நம்பியார் காப்பாற்றுகிறார். சுதீரன், நம்பியார் மகள் வேசுமணி யோடு ‘தொடர்புக் கொள்கிறான்’. நம்பியார் இறந்ததும் வேசுமணியோடு ஓடும் சுதீரன் சேலத்திற்கு வந்து பெரும் பணக்காரன் ஆகிறான். நாராயணன் என்ற குழந்தையைக் கொடுத்துவிட்டு வேசுமணி இறக்க, பெரும் பொருளுடன் ஊர் வந்து சேர்கிறான். தன் குடும்பத்தை ஒழுங்கு படுத்துகிறான். பின்னர் வேதவதியை மணக்கிறான். பெங்களூருக்குச் செல்ல நேரிட்ட சுதீரன், ரோசுக்குட்டியை அனுபவிக்கிறான். ‘திவ்யமான - அனுபூதி நிறைந்த அனுபவம்’. ரோசுக்குட்டி, தன் பிறவிப் பயன் முடிந்துவிட்டது என்று கூறி சுதீரனை அனுப்பிவிடுகிறாள். அனுபூதி கண்டவனோ ஆடாத ஆட்டம் ஆடுகிறான். இதை அறிந்த வேதவதி அவனைக் கண்டித்து வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். “இரவின் கடைசி யாமத்தில், பிரம்ம முகூர்த்தத்தில், சுதீரன் படுக்கையைவிட்டு எழுந்தான். கழுத்தில் கிடந்த தங்கச் செயினையும், விரலில் அணிந்த நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரத்தையும், வாட்சையும் கழற்றி மேசையின் மீது வைத்துவிட்டு இறங்கி வெளியே நடந்தான். மாற்று உடைகூட இல்லாமல். தென்கிழக்கு ஆகாயத்தில் உதித்திருந்த அகஸ்திய தாரகை சுதீரனின் கிருக பரிதியாகத்தைக் கண்டு கண்மூடிச் சிரித்தான்” . வெளியேறும் சுதீரன் அலைந்து திரிந்து இறுதியில் அகஸ்திய மாமுனியின் அருளால் பாபா’வாகி , இடையில்வரும் தடைகளை உடைத்து, பாபா’வுக்காகவே காத்திருக்கும் கமலா என்ற சீடப்பெண் வழிகாட்ட, ஒரு கிராமத்தில் அவளது வீட்டிலிருந்து சித்தி பல செய்து காட்டி, அங்கே கமலா மூலம் புவனேஸ்வரி ஆலயத்தை நிறுவிய பின்னர், நடந்து நடந்து ‘சதாசிவ்கர்’ என்னும் இடத்தில் ஒரு மலைச்சரிவில் தர்காவுக்குப் பக்கத்தில் வந்துசேர்கிறார்; தன் இறுதி யாத்திரைக்குத் தயாராகிறார்.
சின்மயி’யான பவானி, முக்தா என்ற வேசியாக இருந்து பின்னர் எப்படி பாபா’வை வந்தடைகிறாள் என்பதுதான் கதை முடிவு. மதக் கலவரத்தால் பெற்றோரைப் பிரிந்த முக்தா, காஜா மொய்னுதீன் வீட்டில் சிறப்பாக வளர்கி றாள். பின்னர், சந்திர வர்மா என்ற மலையாளி - ஓவியர் வீட்டில் காஜாவால் சேர்ப்பிக்கப்படுகிறாள். உலகப் புகழ்பெற்ற இசை - நடனமணி ஆகிறாள். ஓவியர் நிர்வாணக் கோலத்தில் அவளைப் பலவாறாக வரை கிறார். அவர்களுக்கிடையே திருமணமும் நடைபெறு கிறது. அனுபூதி இன்பத்திற்காகக் காத்திருக்கும் முக்தா, தன் கணவன் ஆண்மையற்றவன் என்பதை அறிகிறாள். கணவன் இறக்க, அடக்கமாட்டாத உடல்வெறி யால் இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும்வரும் ஆண்களோடு ஆடுகிறாள்; அனுபூதி கிடைக்கவில்லை. தன் தோழி அகிலா’வின் தம்பி கோகுலபாலனோடு உறவுகொண்டு, எல்லையற்றப் பெருவெளியில் ஏகாந்த அனுபூதி கிடைத்துக் கருவும் உண்டாகிறது.
கோகுலபாலன் சாஸ்திர ஞானங்கள் பெற்ற இளைஞன். முக்தாவுக்குக் கரு அருளியதோடு தன் ஞானப்பணி முடிந்துவிட்டதாகவும், மீண்டும் எப்போதாவது வந்து பார்ப்பதாகவும் கூறிவிட்டு யாத்திரைக்குக் கிளம்பி விடுகிறான். திவ்யமான -தெய்வானுபூதியில் பெற்ற பிள்ளையோடு ‘சதாசிவ்கர்’ பகுதியில் வாழும் நிலையில், அங்கு வந்துசேர்ந்த பாபா’வின் சீடப் பெண் ஆகிறாள். மீண்டும் பெரும்பணக்காரனாகி, ஞானத்தைத் துறந்து, முக்தா’வைக் காணவரும் கோகுலபாலன் அவளைத் தாம்பத்ய வாழ்க்கைக்கு அழைக்கிறான். ஞானம் பெற்ற அவளோ அவனைப் புறக்கணித்துப் பாபா’வைச் சரணடை கிறாள். ஒருநாள் பாபா’வின் தலை மீதிருந்து சூரியனை நோக்கிக் கட்டை விரல் அளவு ஒளிப்பிழம்பு எழுகிறது. சக்கையான பாபா சமாதி ஆகிறார். ஒரு அமர கதை முடிகிறது.
இந்த நாவலில் வரும் ஆண், பெண் பாத்திரங்கள் அனைத்துமே காமவெறியால் தலைதெறிக்க ஆடுகின்றன. ஏதோவொரு கட்டத்தில் உடலின்பத்தின் ஆழத்தில் நுழைந்து அனுபூதி பரவச நிலை அடைகின்றன. மது, மாமிசம், மீன், முத்திரை, மைதுனம் என்ற பஞ்சோற்பத்திதான் சக்ர பூசையின் இறுதி நிலை எனப்படுகிறது. தாந்திரிகம் பற்றி தத்துவ நிலையை அறியாமல் இந்த நிலை விமர்சிக்கப்படக்கூடாது என்றால், இந்த நாவல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகி விடும். ஆனால், வாசகரின் பொதுவாசிப்புக்கும் ஓர் அறிவு இருக்கிறது. அது பல கேள்விகளால் வாசகர்களைக் குழப்புகிறது.
தாந்திரிக மரபு எல்லா வழிபாட்டு மரபாலும் ஏற்று க்கொள்ளப்பட்ட இயல்பான மரபென்றால் அது ஏன் இரகசியமாக (அமைப்பாக) வைக்கப்படவேண்டும். புதிய புதிய, குறிப்பாகச் சமஸ்கிருத வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டாலும் புணர்ச்சி வெறி, அதன் உடல் உபாதை, அது தணிக்கப்படும் விதம் இதைத் தவிர இந்த நாவல் வேறு பக்தி மார்க்கத்தைக் காட்டவில்லை. பட்டினத்தாருக்கும் அருணகிரிநாதருக்கும் பழகிய தமிழ் வாசகனுக்கு ‘சுதீரன் - பாபா’வாதல் மிகப் பெரிய செய்தி யாக இருக்கமுடியாது. கதை என்ற கூறினை எடுத்து விட்டால் இந்த நாவலில் மிஞ்சுவது வெறும் ‘சக்ர பூஜை’ உடல் வெறிகள்தான். “தேவதாசிகளுக்கும் வேசியர்களுக்கும் விசேஷமான முன்னுரிமை தருவது பாரதப் பண்பாட்டின் ஒரு அம்சமாகும்” என ஆசிரியர் கூறுவது கடைந்தெடுத்த பொய் ஆகும். ‘மது, மாமிசம், மைதுனம்’ தாந்திரிகத்தின் முக்கியமான அம்சம் என்பதால் இன்றைய 18-25 வயது இளைஞர்கள் அந்த அனுபூதியை நோக்கி முன்னேறுகிறார்கள் எனப் பொருள் கொள்ளமுடியாது.
புகைபிடித்தலைப் ‘புகைபானம்’ எனக் கூறிவிட்டால் அது வழிபாட்டின் ஒரு கூறாகிவிடாது. அது பீடியா கஞ்சாவா என்ற விளக்கம் இல்லை. மைதுன அனுபூதிக்கு முன் நிலையாக, பவானியின் மகளாகிய தாரா, சதீஸை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் நுழைகிறாள். “சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு மேசை மீதேறி அமர்ந்த தாரா, ஒரு சண்டித் தேவடியாள் போலச் சிகரெட்டை இழுத்துப் புகைச் சுருளை மேல்நோக்கிச் சுழற்றி” விடுகிறாள். இது சதீஸின் உள்ளத்தைக் காண்பதற்கான தந்திரமாம்.
“அனுசுயா, அத்திரி மகரிஷியுடன் கொண்ட அதே பதி விரதத்தை இந்தத் தாரா உன்னிடம் கொண்டிருக்கிறாள். அருந்ததி, வசிஸ்டருடன் கொண்டிருந்த அதே பதிவிரதம் எனக்கு உன்னிடமிருக்கிறது. லோபமுத்திரை அகஸ்திய ருடன் கொண்டிருந்த அதே பதிவிரதத்தை நான் உன்னிடம் கொண்டிருப்பேன் ” எனத் தாரா சதீஸிடம் கூறுவதாக ஆசிரியர் எழுதிச் செல்கிறார். அப்படியானால் அனுசூயாவும், அருந்ததியும், லோபமுத்திரையும் தாரா போல ‘ஒரு சண்டித் தேவடியாள்கள்’ எனப் பொருள்கொண்டால் மதக் கலவரம் மூண்டுவிடும். தாந்திரிகத்தில் குரு’வின் நாக்கு, பாம்பு போல நீண்டு செய்யும் காரியங்கள் அச்சமூட்டுவனவாக உள்ளன.
ரோசாக்குட்டி, “எனது தேடுதலின் இலட்சியமே அனுபூதியினூடே நீங்கள் தந்த மேலாதிக்கம்தான்... என்னுடம்பில் உயிர் நிற்கும் காலம் வரை நான் சுதி தந்த பரமானந்த அனுபூதியைச் சுமந்து திரிவேன்... போய் செயல்படுங்கள். வெற்றி பெறுங்கள். எனது தீர்க்க தரிசனம் உங்களுக்குச் சாபல்யமாகும்” எனச் சுதீரனுக்கு அருள்கிறாள். இவை பூர்வ ஜென்ம வாசனை என்பது ஆசிரியர் முடிவு.
குருஜீ, சரணம், சமாதி, பைரவி, (இடையிடையே ஸ்லோகங்கள்), முன்ஜென்ம வாசனை, மந்திரலோகப் பிரவேசம், சக்ர பூஜை, அரூபரூபம், பைரவி சக்ரம், பஞ்சோபசாரம், மைதுனம், குறித்தளிர், சின்மயி, முக்தா, பவானி, ஷட் கர்மங்கள், திவ்யம், தெய்வீகம், அனுபூதி, ஜனனேந்திரியம், உடுதுணியின்மை, முலைப்பால் ஊட்டல், சந்திரபட்சம், விதிப்பயன், நனவு, நனவிலி, ஆழ்துயில், ஞானம், அஞ்ஞானம் - இப்படிப்பட்ட சொற்கள், அதையொட்டிய செயல்கள் ஆகியன அடிக்கடி இடம்பெறுவதுதான் தாந்திரிக நாவல் என்றால் ‘ஆம்’ என ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.
“பண்பாட்டின் கலப்பினக் கூறுகளற்ற சுதேசி இலக்கியம் என்றும் இதனைச் சொல்ல முடியும். நாவலின் வடிவம் மாந்திரிக யதார்த்த தன்மை கொண்டது. காலங்களைக் குலைத்துப் போட்டு மறுகட்டுமானம் செய்வதால் பின் நவீனத்துவத் தன்மைகொண்டது. பழமையான இந்திய மரபைப் பேசுவதால் கீழைத் தேசிய மரபு சார்ந்தது...” என்றெல்லாம் மொழிபெயர்ப்பு ஆசிரியர் இந்த நாவலை வியக்கிறார். சாதாரண வாசகன் இந்த நூலைப் படிக்கும்போது இவ்வாறு உள்வாங்க முடியுமா என்பது கேள்விக்குரியதே.