மதுரை ‘எழுத்து’ பதிப்பகத்தின் ‘தலித் வரலாற்று நூல் வரிசையில்’ வெளிவரும் நூல் `பெருந்தலைவர் எம்.சி. ராஜா'. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக முதன் முதலாக இந்திய (காலனிய இந்தியா) தேசிய அளவிலான இயக்கத்திற்கு வித்திட்டவர், இத் தேசத்தின் முதல் தலித் அரசப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் (1919). முதல் பாராளுமன்ற உறுப்பினராக (1925) பதவி வகித்தவர். ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் கோயில் நுழைவு உரிமைக்கான சட்டப் பாதுகாப்பிற்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கும் அடித்தளமிட்டவர். தமிழகம் மட்டுமன்றி இத்தேசம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ எனும் ஆய்வு நூலொன்றை 1927 ஆண்டில் வெளியிட்டவர். இத்தேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றைக் குரலாக நாடாளுமன்றத்தில் 1925 ஆம் ஆண்டிலேயே ஓங்கி ஒலித்தவர். பார்ப்பன பணியாக்களின் கூடாரமாகத் திகழ்ந்த காங்கிரசாரின் எதிர்ப்புகளை நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் எதிர் கொண்டவர்.
1931 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட கள்ளர்கள் தங்கள் சாதிக் கூட்டத்தில் 11 தீர்மானங்களை போட்டுள்ளனர். இந்த அடக்குமுறை தீர்மானத்துக்கு எதிராக எம்.சி.ராஜா இராமநாதபுரத்திலேயே 1931 மே 22ஆம் நாளன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி ஆதிக்கசாதித் திமிருக்கு எதிராக முழக்கமிட்டவர். அக் கூட்டத்தில் அவரது பேச்சு அவரது பண்பாட்டு முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே திகழ்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இது போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக ‘ஆதி திராவிட மகாஜன சங்கம்’ என்ற ஒடுக்கப்பட்டவர் அமைப்பொன்று 70 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்டுள்ள செய்தி வியப்பாக உள்ளது. இந்நூல் 416 பக்கங்களில் நான்கு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவு நூல் தொகுதி : 1930இல் ஜே.சிவசண்முகம் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட `ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தெரிவு செய்யப்பட்ட எழுத்தோவியங்களும் உரைகளும்' என்ற நூல்,
இரண்டாவது பிரிவு நூல் தொகுதி: ‘நாளிதழ் குறிப்புகள்’,
மூன்றாவது பிரிவு நூல் தொகுதி : ‘சட்ட மன்ற உரைகள்’ மற்றும்
நான்காவது பிரிவு நூல் தொகுதி : ‘பொதுவான குறிப்புகள்’
இவை அனைத்தும் முதல் முறையாக தமிழில் வெளி வருகின்றது.
பெருந்தலைவர் எம். சி. ராஜா சிந்தனைகள்
தொகுப்பாசிரியர் : வே.அலெக்ஸ்
தமிழில் : ஆ.சுந்தரம்
(4.3.1927ல் இந்திய சட்டமன்றத்தில் ஆற்றியது)
பேரவைத்தலைவர் அவர்களே, சிறப்புமிக்க இப்பேரவையில் எனது சமூகத்தினரின் மனக்குறைகளை வெளிப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்காகத் தங்களுக்கு நான் பெரிதும் நன்றியுடையவனாயிருக்கிறேன். தனது குரலை நீண்ட காலமாக எழுப்பிக் கொண்டிருந்தும் இப்பேரவையில் அதனை எழுப்பிடும் வாய்ப்பைப் பெற்றிடத் தவறிய வகுப்பின் பிரதிநிதியை அருள்கூர்ந்து இப்பேரவைக்கு அனுப்பியதற்காக மேதகு ஆளுநருக்கும் மேதகு கோஷேன் பிரபுவுக்கும் என்னுடைய இதயமார்ந்ததும் உண்மையானதுமான நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதனை எமது சமூகத்திற்கு வழங்கப்பட்ட பெருமையாகக் கருதுகிறேன். பெருமை மட்டுமல்லாமல் எண்ணிக்கையில் பெரிதாக இருப்பது மட்டுமல்லாமல் முழுதேசத்திற்கும் முதுகெலும்பு போல் உள்ளதொரு சமூகத்திற்கு அங்கீகாரம் அளித்திட அரசு கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது. தனது சொந்த நாட்டவரிடமிருந்து கூட இத்தகு அங்கீகாரத்தை இச்சமூகம் பெற்றதில்லை. அவர்கள் நீண்ட நெடுங்காலமாக எமது இனத்திற்கெதிராக இழைத்த கொடுமைகளையெல்லாம் இங்கு நான் சொல்லப்போவதில்லை. அவையாவும் உலகறிந்த உண்மைகள். எமது இனத்தைக் குறிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தையே அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் பழிப்புக்குப் பதில் சொல்லாகியுள்ளது. எனவே இப்பேரவைக்கு என்னை அனுப்பி வைத்தமைக்காக நான் இந்திய அரசாங்கத்திற்கும் சென்னை மாநில அரசாங்கத்திற்கும் இரண்டு மடங்கு அல்ல மூன்று மடங்கு நன்றியுடையவனாயிருக்கிறேன்.
ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நிலையைப் பற்றி சிந்திப்பதே கொடூரமானது. நாட்டின் ஒரு பகுதி மக்களை மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திடும் வகையில் சட்டங்களை வகுத்து வைத்துள்ளார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் மக்களில் ஒரு பகுதியினர் தங்களுடைய குற்றத்தினாலோ அல்லது சமூக ஏற்பாட்டினாலோ இயற்கையாகவே அடித்தளத்துக்கு இறங்கிவிடுவதுண்டு. ஆனால் இந்தியாவிலோ தாங்கள் நாட்டைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை (தற்போதைய நிலவரப்படி 6 கோடி மக்கள்) வாழ்க்கையில் உயருவதற்கான வாய்ப்பு எதுவுமில்லாமல் தலைமுறை தலைமுறையாக அழுத்தி வைப்பதற்கென்றே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இம்மக்கள் மனித இன வட்டத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார்கள். மிருகங்களைக் காட்டிலும் இழிவாக அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்ற வகையில் சட்டமியற்றியுள்ளார்கள். அவர்கள் பட்டினியில் வாட வேண்டும்; சுத்தமான காற்றை அவர்கள் சுவாசிக்கக் கூடாது; சுத்தமான நீரைக் குடிக்க அவர்களை அனுமதிக்கக் கூடாது. ஏனைய மக்களோடு அவர்கள் சேர்ந்து வாழக்கூடாது. அவர்கள் பன்றிகளைப் போல் தனித்து அடைத்து வைக்கப்பட வேண்டும். மற்றவர்கள் நடக்கும் சாலைகளில் அவர்கள் நடக்கக் கூடாது. ஒரே ஆலயங்களில் அவர்கள் வழி படவோ ஒரே பள்ளியில் பயிலவோ கூடாது. ஒரே நகரத்தில் வாழவோ ஒரே உணவை உண்ணவோ கூடாது. ஐயா, இதுவே இம் மக்கள் காலாகாலமாக வைக்கப்பட்டிருந்த நிலை.
தாமதமாகச் செயல்பட்டாலும் உறுதியாகச் செயல்படும் இறைவன் நம்பிக்கையற்று தவித்த கோடானு கோடி மக்களின் அவலக்குரலைக் கேட்டு பிரிட்டிஷாரை இந்தியாவுக்கு அனுப்பியிராவிட்டால் இவ்வித நிலை எக்காலமும் நீடித்திருக்கும். எப்பொழுதும் இரக்கம் காட்டுகிற கடவுளுக்கு நன்றி கூறவேண்டும். ஏனென்றால் நாங்கள் அனுபவித்து வந்த மிகக்கொடிதான தீமைகளிலிருந்து எங்களை மீட்பதே இந்தியாவில் பிரிட்டிஷாரின் பணியாக அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் வருகையுடன் எமது விடுதலை தொடங்கிற்று. தீமைகளைச் சரிக்கட்டும் வகையில் தமது சுண்டுவிரலை அசைப்பதில் இறைவனும் கூட பாராமுகமாகவே இருந்திருக்கிறார்; எனினும் நான் அவருக்கு மிகுந்த நன்றியுடையவனாயிருக்கிறேன் என்று சொல்லுகிறேன்.
எப்படியிருப்பினும் நாங்கள் பெற்றுள்ள சிறிதளவிலான கல்வி, பொருளாதார வளம், தனியாள் உரிமையனைத்தும் சுயநலமிக்க எமது நாட்டவர்களாலோ எமது உறவினர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதிப்பெருமை மிக்க இந்துவோ எங்களுக்குத் தந்ததல்ல. தங்களது சுயநலமிக்க உணர்வுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எங்களுடைய உழைப்பைச் சுரண்டி எங்களுக்கு ஒரு பிச்சை போல் சிறிய உதவியையே செய்தார்கள். மாறாக பிரிட்டிஷாரே எமக்கு இன்றுள்ள நிலையை ஏற்படுத்தித் தந்தார்கள். தென்னாப்பிரிக்காவிலுள்ள தமது நாட்டவர்கள் (இந்தியர்கள்) நடத்தப்படும் விதம் பற்றி என்னுடைய நண்பர்கள் கோபம் கொண்டுள்ளார்கள். உள்நாட்டில் வெகு அருகாமையில் நாங்கள் இருப்பதன் காரணமாகவா எங்களது நிலைமையைப் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன? அல்லது வெளிநாட்டிலுள்ள மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உள்நாட்டிலுள்ள ஒழுங்கீனங்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கு வேண்டுமென்றே அவர்கள் செய்யும் முயற்சியா? தங்களது சொந்த நாட்டவரில் பெருவாரியான பகுதியினரை இன்றுவரை அடிமைநிலையில் வைத்து கொடுமைப்படுத்தி வரும் இவர்களின் வாயிலிருந்து தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் அநீதி பற்றிய வாதங்கள் புறப்பட்டு வருவது உண்மையில் மிகுந்த வினோதமானது.
ஐயா, அவர்கள் அனைவரும் இந்திய அமைச்சர்கள் வேண்டிக் கூக்குரலிட்டார்கள். நான் மனம் திறந்து கேட்கிறேன். உயர்ந்த சம்பளம் பெறும் இவ்விந்திய அதிகாரிகள் எங்களுக்காக யாது செய்தார்கள்? அவர்கள் செய்துவரும் கொடுமைகளைப் பற்றிய எங்களது கோரிக்கை அவர்களுடைய ஒரு நாளிரவு தூக்கத்தையாவது கலைத்திருக்குமா?. இல்லை ஐயா, அவர்களுக்கு இந்த அமைச்சர் பதவி கிடைத்திருக்கவே கூடாது. ஐயா, ஊமைகளாக இருக்கும் கோடிக்கணக்கான இம்மக்களின்துன்பங்களைப் போக்குவதற்கு உண்மையில் இச்சட்டப் பேரவை யாது செய்துள்ளது? மாநிலச் சட்டமன்றங்கள் அவர்களுக்காகச் செய்துள்ளது என்ன? இந்திய மக்கள் ஆட்சியதிகாரத்தைப் பெற்றவுடன் ஒடுக்கப்பட்ட இனத்தவர் முன்னேறுவதற்கு அவர்கள் உதவி புரிவார்கள் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டதுண்டு. இந்நாட்டில் இத்தகு கொடுமைகள் நிகழ்ந்தனவென்று சாதி இந்துக்கள் வெட்கத்துடன் சிந்தித்துப் பார்க்கும் வேளையாவது நெருங்கி வந்துள்ளதா? பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திரத்தைத் தகர்த்து அவர்களின் குடிமக்களுக்குரிய உரிமைகளைப் பறித்துக்கொண்டது என்னும் குற்றச்சாட்டை எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போர் பிரிட்டிஷாருக்கு எதிராகச் சுமத்துவதை இப்பேரவை மண்டபத்தின் நான்கு சுவர்களுக்குள் பல முறை நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால், மனிதர்களாக வாழும் உரிமை கூட ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு சாதி இந்துக்களால் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்களுடைய சட்டம் அனுமதிக்கிறது ; நீதி மன்றமும் அதை ஆதரிக்கிறது. எங்களுடைய சமூகக் கொடுமைகள் சீர்படுத்தப்படும் முன்னர் இந்தியா சுயாட்சி பெற முடியுமா? அரசியல் சமத்துவம், அரசியல் சுதந்திரம், மற்றும் அரசியல் சகோதரத்துவம் பெறத் துடிக்கிறவர்கள் மத்தியில் சமூக ரீதியான சமத்துவம், சமூக ரீதியான சுதந்திரம், சமூக ரீதியான சகோதரத்துவம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தொழில் என்பது பரந்த அளவில் இரண்டு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்படலாம். ஒன்று விவசாயம், மற்றொன்று தொழிற்சாலைப் பணி. தொழிற்சாலைகளைப் பொறுத்த மட்டிலும் பொது மக்கள் போராடுகிறார்கள். அரசாங்கம் அது பற்றிய சட்டங்களை இயற்றுகிறது. காரணம் யாதெனில் தொழிற்சாலைகள் பெரும்பாலும் அயல்நாட்டவருடையவை. ஆனால் இந்தியாவின் உழைக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டுள்ள விவசாயத்துறை பற்றி எவருமே கவனம் செலுத்துவதில்லை. ஏன் ? அதில் அரசியல்வாதிகள் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. விவசாயிகள் இயக்கத்தை முன்னின்று நடத்தும் அரசியல்வாதி எவருமில்லாததால் அரசாங்கமும் அதுபற்றி அக்கறை காட்டுவதில்லை.
உண்மையில் அத்தகைய அரசியல்வாதி ஒருவர் இருந்தால் அவர் சந்திக்கும் முதல் நிலச்சுவான்தாரே அவரைக் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்று அருகாமையிலுள்ள குளத்தில் அவரை மூழ்கடித்து விடுவார்.
திரு. என்.எம். ஜோஷி : இவ்விஷயத்தில் அரசு என்ன செய்யமுடியும் என்று நான் கேட்கலாமா?
ராவ்பகதூர் எம்.சி. இராஜா : அது பற்றி சட்டமியற்றச் சொல்லித்தான் நான் அரசாங்கத்தைக் கேட்கிறேன். அரசியல்வாதியும் இப்போது நிலவி வரும் கொடுமை கற்றுத்தரும் பாடத்தைப் படித்துக் கொண்டாலும் விவசாயக் கூலியின் பரிதாப நிலையை மேம்படுத்தும் தமது முயற்சிகளைப் புதுப்பிக்காமலேயே போய்விடுவார். ஐயா, இது போன்ற சூழ்நிலையில் தான் அரசின் உதவியும் மாண்புமிக்க என் நண்பர் திரு.ஜோஷியின் உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. நம் நாட்டில் நிலச்சுவான்தார்கள் ஒரு வலிமைமிக்க அமைப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பகுதி விவசாயக் கூலிகள், இவர்கள் அரைவயிற்றுக்கே போதுமான உணவும் அரை நிர்வாணத்தை மட்டுமே மறைக்கும் உடையும் கொண்டவர்கள். உயிரை உடலைவிட்டுப் போக விடாமல் பாதுகாப்பதற்கே போதுமானதல்லாத கூலிப் பணமே அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களின் கடின உழைப்பைக் கொண்டு நிலச்சுவான்தாரர் செழிப்படைகிறார். நிலச்சுவான்தாரருக்கும் கூலித் தொழிலாளிக்கும் நடுவே இந்திய அரசியல்வாதி ஒரு போதும் வரமாட்டார்; அப்படி ஏதாவது ஒரு அரசியல்வாதி தலையிட்டால், நான் ஏற்கனவே சொல்லியபடி நிலச்சுவான்தாரர் அவரது செவியைத் திருகி விடுவார். எனவே விவசாயக் கூலிகளின் பரிதாபமான நிலையை நிரந்தரமான வகையில் மாற்றியமைத்திட அரசு சட்டமியற்ற வேண்டியது அத்தியந்த அவசியமாகிறது. அத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் குடிபெயர்தல் ஒரு முடிவுக்கு வரும்; தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பேரளவு தொல்லையைத் தந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஒரு போதும் எழா.
இந்த சந்தர்ப்பத்தில் வங்காளம் நாக்பூர் இரயில்வே போராட்டத்திற்கான காரணங்களை ஆராய்வதற்காகக் குழு ஒன்றினை நியமிப்பதை எதிர்த்து நான் வாக்களித்ததற்கு விளக்கம் தர விரும்புகிறேன். நிர்வாகத்தால் முன்னிறுத்தப்பட்டு நிர்வாகத்தால் வழிநடத்தப்படும் விசாரணை அதிகாரி கிளிப்பிள்ளை போல் நிர்வாகத்தின் கொள்கையையே சொல்லிக் கொண்டிருப்பார் என்பதுவே அதற்குரிய காரணம்.
ஐயா, இப்பொழுது அரசுப் பணிகளில் அனைத்துத் துறைகளும் இந்திய மயமாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இவ்விந்தியமயமாக்கலின் பொருள் என்ன? இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான பணியிடங்கள் சாதி இந்துக்களுக்குக் கிடைக்கும் நிலையும் மக்களில் பெரும்பாலானவர்கள் எந்த மாற்றமும் பெறாத நிலையும் ஏற்படுமென்பதே இதன் பொருள். உயர்ந்த பணி யிடங்களைப் பெறும் இந்துக்கள் பெருந்திரளான மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். ஏனென்றால் இந்தியர்கள் காலங் காலமாய் நிலவிவரும் சாதி உணர்வுகளால் குருடாக்கப் பட்டிருக்கிறார்கள். அசாதாரணமான தைரியம் கொண்ட ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்களும் தங்களது நாட்டவராலேயே இழுப்புண்டு நாட்டுக்கு எவ்வித நன்மையும் செய்யவியலாதவர்களாக முடக்கி வைக்கப்படுவார்கள். அதே வேளையில் இதுபோன்ற பிரதிகூலங்கள் எதுவுமில்லாத ஆங்கிலேயர் நாட்டின் பிரச்சினையைத் தெளிவாகப் பார்த்து அதை நிவர்த்திப்பதற்குரிய வழியைத் தேடுவார்.
எந்தவொரு பண்பட்ட நாட்டின் அரசாகவிருந்தாலும் அதன் கருவூலத்தின் முதன்மையான பொறுப்பாக அமைந்திருப்பது, மனிதர்களின் மனமகிழ்வுக்கான நடவடிக்கைகளை எடுத்து நாட்டு மக்கள் நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதேயாகும். ஐயா, உபரியாக வரும் நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்து தங்களின் இரங்கத்தக்க நிலைக்கு எவ்விதத்திலும் பொறுப்பாளியாக இல்லாத எமது மக்களின் பரிதாபமான நிலையை மாற்றியமைக்கும் பணிக்காகச் செலவு செய்தல் முறையல்லவா?. இந்திய அரசு இப்பிரச்சினையை உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும். காலாகாலமாகத் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ள நாட்டின் மக்கட்தொகையில் ஆறில் ஒரு பகுதியினரின் இழிநிலையைப் போக்கிடும் பாதையில் நாட்டு முன்னேற்றம் நெறிப்படுத்தப்பட வேண்டும். மண்ணின் மைந்தர்களான இக்கோடானு கோடி மக்களின் முன்னேற்றத்திற்கான பாதையில் செல்லாவிடில் நாட்டு முன்னேற்றம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.
“ஒடுக்கப்பட்ட இனத்தவரின் பாதுகாவலர்” என்னும் அலுவலகத்தைத் துவக்கியதே ஒடுக்கப்பட்ட இனத்தவரின் முன்னேற்றத்திற்காக சென்னை அரசு செய்த தீவிரமான முதல் செயலாகும். இந்திய அரசினாலேயே இது போன்ற செயல்பாடு நிகழ முடிந்தது. தீர்மானம் எண் 1835 (வருவாய்த் துறை) அடிப்படையில் 13 செப்டம்பர் 1916இல் சென்னை அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தனிஅதிகாரியும் அலுவலர்களும் கொண்டதாக ஒடுக்கப்பட்ட இனத்தவரின் பாதுகாவலர் எனும் தனித்துறையைச் சென்னை அரசு உருவாக்கியது. இவ்அலுவலர் பின்னர் வேறு சில பணியையும் செய்யலாயினார்; இறுதியில் அவர் பல்வேறு பணிகளடங்கிய தொழிலாளர் ஆணையாளர் ஆனார். அவருடைய பணிகளில் ஒன்று ஒடுக்கப்பட்ட இனத்தவரைப் பாதுகாத்தல். ஐயா, இது சரியல்ல.
வேண்டுமென்றே முன்னேறவிடாமல் வைக்கப்பட்டு வந்துள்ள மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியின் மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதற்கென்றே பெருகிவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை இப்பேரவை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் “ஒடுக்கப்பட்ட இனத்தவரின் பாதுகாவலரின்” அலுவலகம் நிறுவப்பட்டு பெருந்திரளான இம்மக்களின் நிலைமை சீர்ப்படுத்தப்பட வேண்டும்.
ஐயா, அடுத்தபடியாக உயர்கல்வி பெறுவதற்கான திறம் கொண்ட எம்மினத்து இளைஞர்கள் இங்கிலாந்து அல்லது ஜப்பான் அல்லது அமெரிக்காவுக்குக் கல்வி கற்பதற்குச் செல்லத் துணைபுரியும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக பட்ஜெட்டில் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். டஸ்கீஜியிலுள்ள பெரும் சிறப்பு வாய்ந்த - அமெரிக்காவின் பெருமகனாம் புக்கர் டி. வாஷிங்டனால் நிறுவப்பட்ட – நிறுவனத்தின் பயன்பாட்டை நாமெல்லாரும் அறிந்துள்ளோம். கல்வி பெறுவதற்கு அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பினால் திரும்பிவந்த பிறகு ஒடுக்கப்பட்ட இனத்தவரின் முன்னேற்றத்திற்கான பாதையைக் காட்டி அவ்வினத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க மாட்டார்களா?
ஐயா, இப்போதுள்ள நிலையிலேயே ஒடுக்கப்பட்ட இனத்தவரை வைத்திருப்பது நாட்டிற்கே பெருத்த நஷ்டம், உங்களுடைய ஐக்கியத்திற்கான கையை நீட்டினால் நாளை இந்நாட்டிற்கான பெரும் சொத்தாக அவர்கள் இருப்பார்கள். (கை தட்டல்)
(நன்றி: கீற்று)