ஏதோ வழக்கு விஷயமாக கோர்ட்டுக்குப் போய்க்கொண்டிருந்தவர் கண்களில் அக்காட்சி படர்ந்தது. அடையாறு சாலையின் மதில்களில் சித்திரம் வரைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். நின்று பார்த்தார். சுற்றி இருந்தவர் பேச்சில் இருந்து, அந்தப் பெண் புத்திசுவாதீனம் இல்லாதவள் என்று தெரிந்தது. அதோடு பேச்சுத் திறனும் அற்றவர் கூட. தன் புத்தம் புதிய கோட்டைக் கழற்றி அந்தப் பெண்ணுக்கு கொடுத்தார் அவர். உலகம் ஒரு ‘கிறுக்க’னைப் புதுசாகப் பார்த்தது. மறுநாள் அதே இடத்தில் அந்தப் பெண்ணைக் காணலாகுமோ என்று தேடிப் போகிறார். இல்லை. அவள் வரைந்த சித்திரங்கள் மட்டுமே இருந்தன. நடந்த ஆண்டு 1931. இது நடந்த ஒரு பத்தாண்டுக்கு முன்னர்தான், ‘கிறுக்கு’ என்று பலரும் கருதிய ஒரு கவி, புதுச்சேரி யில் தன் கோட்டை ஒரு தொழிலாளிக்குத் தந்ததை உலகம் பார்த்தது. எழுதிச் செல்லும் விதியின் கை, இந்த இரண்டு கிறுக்கர்களைத்தான் உவகையுடன் பதிவு செய்தது. முன்னவர் மகாகவி பாரதி. பின்னவர் மதுரகவி பாஸ்கரதாஸ்.
மதுரகவி பாஸ்கரதாஸின் பிறந்த நாள் 1892, ஜுன் 6-ம் நாள். இயற்பெயர் வெள்ளைச்சாமி. பால்ய பருவம் தொட்டு, நாடகம் எனும் பெரும் கலை அவரை ஈர்த்து தனக்குள் அடக்கிக் கொண்டது. அவரது வீடு, நாடக அரங்கமாயிற்று. நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவருக்கு ஆத்ம நண்பராக இருந்த ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, வெள்ளைச்சாமியின் நாடக ஆற்றலைக் கண்டு, தன் அவையில் பாடவைத்து, ‘முத்தமிழ் க்ஷேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்’ எனும் விருதுப் பெயரைச் சூட்டினார். அன்று முதல், ‘மதுர கவி பாஸ்கரதாஸ்’ எனும் பெயர் திக்கெட்டும் பேசப்படுவதாயிற்று!
அவர் நாடகப் பயணம் இலங்கை, மலேயா, ரங்கூன், பர்மா என விரிந்தது. 1931-ம் ஆண்டு, தமிழ்ச் சினிமா தன் மவுனத்தை விட்டுப் பேசவும் பாடவும் தொடங்கியபோது, பாஸ்கரதாசரின் தமிழை உவந்து ஏற்றுக்கொண்டது. ‘காளிதாஸ்’ திரைப்படத்தில் தொடங்கி, பத்துக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். சுமார் 40 ஆண்டுகள் நாடகம் - வசனம் - பாடல்கள் என்று வாழ்ந்த தாசர், 1952-ம் ஆண்டு புகழ் உடம்பு கொண்டார்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் தமிழ் நாடகக் கலைஞர்கள். 20-ம் நூற்றாண்டுப் பிறப்பு தொடங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பை தமது நாடக எழுத்திலும், பாட்டிலும், காட்சிகளிலும் வைத்த கலைஞர் பட்டியலில் முதல் வரிசையில் வருபவர் நமது பாஸ்கரதாசர். அவ்வை சண்முகம், தியடோர் பாஸ்கரன், அறந்தை நாராயணன் போன்றோர் தாசரின் தேசியப் பங்களிப்பை உறுதி செய்துள்ளார்கள். அகில இந்திய தேசிய காங்கிரஸ், தாசரைப் பதிவு செய்து பெருமை செய்திருக்க வேண்டும். பாவம், காங்கிரஸுக்கு இதுவா வேலை?
சினிமா நடிகர்கள் உள்ளிட்டு எந்த நடிகரும் அடைந்திராத புகழைப் பெற்ற கிட்டப்பா, நம் தாசரின் சிஷ்யர். கே.பி.சுந்தராம்பாள் தாசரிடம் நாடகம் மற்றும் தேசிய பாடல்களை எழுதி வாங்கிக்கொண்டு, பாடவும் கற்றுச் சென்றவர். அந்தக் காலத்துப் புகழ்பெற்ற நடிகர்கள் விஜயாள், கோல்டன் சாரதாம்பாள், எஸ்.டி.சுப்புலட்சுமி என்று நீளும் பட்டியலை நிலைநிறுத்தம் செய்தவர் தாசர். இவரிடம் அம்மா சண்முகவடிவை முன்னிறுத்திப் பாடல்கள் எழுதி வாங்கிச் சென்றுள்ளார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. புகழ்பெற்ற சங்கீதக்காரர்கள் அரியக்குடி, டி.எம்.காதர் பாட்சா, விசுவ நாத தாஸ், சுப்பையா பாகவதர் போன்றோர் தாசரின் பாடல்களைக் கேட்டு வாங்கிச் சென்று பாடியவர்கள்.
அந்தக் காலத்தில் ‘இச்சைக்கொரு சங்கரதாஸ், பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ், பெருமைக்கொரு வேலுச் சாமி’ என்கிற சொலவடையே ஏற்பட்டிருந்தது. சங்கரதாஸ்... நாடக முன்னோடி, வேலுச்சாமி... புகழ்பெற்ற கவி. அதென்ன பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்? தெருவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள், பாஸ்கரதாஸின் பாடலைப் பாடியே தம்மை அறிவிப்பார்களாம். பாஸ்கரதாஸின் கிராம போன் ரிக்கார்டுகள் அந்த அளவுக்குப் பெருவாரியாக வெளிவந்து, இன்றைய வானொலி, தொலைக்காட்சியின் பணிகளைச் செய்திருக்கின்றன.
சரியாக 60 ஆண்டுகளே வாழ்ந்த தாசர், 1917 தொடங்கி 195-ம் ஆண்டு வரை, தான் சந்தித்த மனிதர்கள், கலை ஆளுமைகள், கொடுக்கல் வாங்கல், நாடகப் பணிகள், பொதுச் சேவைகள் போன்றவற்றை டைரிக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.
சுமார் அரை நூற்றாண்டுத் தமிழ் நாடக உலகம், நாடக நடிகர்கள், அவர்கள் வாழ்க்கை நிலை, மக்கள் வாழ்நிலை போன்ற பல நுணுக்கமான செய்திகளைச் சொல்லும் இந்த அரிய நாட்குறிப்புகளை நம் இன்றைய நிகழ்காலத்து ஒரு முக்கிய நாடக ஆளுமையான ச.முருகபூபதி, புத்தகமாகத் தொகுத்துள்ளார். இதை மிகச் சிறப்பாக ‘பாரதி புத்தகாலயம்’ பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது.
பாஸ்கரதாஸின் இந்த டைரிக் குறிப்பில் எவரைப் பற்றி யும் வெறுப்பு, அலட்சியம், தூஷணம் என்று ஒரு வரியும் இல்லை. பெரும் புகழ் பெற்ற கலைஞரும், சவரம் செய் பவரும் அவருக்கு ஒருபான்மையரே. எவரையும் மதிக்காதவர் என்ற புகழ்பெற்ற சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்தரம், பாஸ்கரதாசரைத் தனக்கு மேலாகக் கொண்டவர். ஒரு நாளில் பாதியைப் பெரும் புள்ளியோடு கழித்த தாசர், மீதியைக் குறவர் குடியிருப்பைத் தேடிச் சென்று பாடச் சொல்லி கேட்டுக்கொண்டிருந்தவர்.
தன் காலத்து மேதைகளால் போற்றி உணரப்பட்ட மேதை, நம் தாசர். பாட்டு இருக்கும் இடமெல்லாம், பாட்டு இவரை அழைத்துக்கொண்டே இருந்தது. வயல்வெளிப் பெண்கள், நாற்று நடும் பாட்டு, ரயிலில் பைராகிகள் பாடும் பாட்டு, சிவலார்பட்டிக் கிழவியின் பாடல், குடுகுடுப்பைக்காரர் பாடல், சந்நியாசிகள் பாட்டு, சடை அலங்காரப் பாட்டு, பக்கிர்களின் பாட்டு, பனையேறி பாடிய பனைப் பாட்டு, மீனவர்கள் பாட்டு என்று பாடும் ஜனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தாசர் இருந்தார். ஒவ்வொரு அரிசியாகச் சேர்த்துச் சேர்த்துச் சாதம் பொங்கினார் அவர். அரியக்குடியும், செம்பையும், முசிறியும் இவர் தேடிப் போனவை. அதே தாகம், வியர்வையின் பாடலைக் கேட்கவும் அவருக்கு இருந்தது. சென்னை மவுண்ட் ரோடு குதிரை வண்டிக்காரர்களை நாடிச் சென்று பாடச் சொல்லி கேட்டிருக்கிறார். வட இந்திய சங்கீதத்தில் பெரும் புகழ்க் கலைஞர் சைகாலின் மெட்டுக்கு இவர் பாட்டெழுதினார். தலைவிரிச்சான் சந்திலிருந்து வந்த பூட்டுக்காரன் கேட்டுக்கொண்டபடி அவனுக்கு பூட்டு பற்றிப் பாட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
நாட்குறிப்பில் பல இடங்களில் பொம்மைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பொம்மைகள் பற்றிப் பாடல்கள் எழுதி இருக்கிறார். தாசருக்கு பொம்மைகள் மேல் பெரு விருப்பம். பொம்மை கிளிகளும், ஓலைக் கிளிகளும் பல இடங்களில் இந்தப் புத்தகத்தில் பறந்தபடி இருக்கின்றன.
வீட்டுக் கதவை வந்து முட்டிய குதிரை அவரை யோசிக்க வைத்திருக்கிறது. ஏன்? அன்று மாலையே, குதிரைக்குப் புல் கட்டு வாங்கிப் போட்டிருக்கிறார். அவர் மனம் சாந்தப்பட்டுள்ளது. மாடி அறைக்குள் திசை தெரியாது வந்து புகுந்துவிட்டது ஒரு கரிச்சான். அறையை விட்டு வெளியேற வழி தெரியவில்லை அதுக்கு. தாசர், தன் அறை விளக்கை அணைத்திருக்கிறார். இரவில் பறவைகளுக்கு தன் பாதை தெரியும். கரிச்சான் வெளியேறிவிட்டது. இதைத்தான் தாசருக்கு அவரது கலையும், புத்தகமும், வாசிப்பும் கொடுத்திருக்கிறது.
நாட்குறிப்பு எழுதுதல் தமிழர்கள் மத்தியில் இல்லாதது. ஆனந்தரங்கர் போல சில பேர்களே எழுதியவர்கள். பிரஞ்சு அரசு, தன் அதிகாரிகளைக் கட்டாயமாக டைரி எழுத வேண்டும் என்று விதி செய்திருக்கிறது. பாஸ்கரதாஸின் இந்த நாட்குறிப்புகள், தமிழகத்தின் கலை வரலாற்றை மற்றும் ஒரு நாடக இசைக் கலைஞரின் மன மலர்ச்சியை, மிக மேலான தளத்திலும், தரத்திலும் பதிவு செய்துள்ள ஆவணம்.
பாஸ்கரதாசர், தம் மாணவ - மாணவியரின் கலை வளர்ச்சியில் காட்டிய ஈடுபாடு, அவர்களின் குடும்ப நலத்திலும் இருந்துள்ளது. தம்மை மாணவர்களின் குடும்பத்தோடு இணைத்துக்கொண்ட அசல் குரு அவர். இந்த நாட்குறிப்பு முழுவதிலும் நடந்து செல்வது அப்பழுக்கில்லாத மனிதப் பண்பு. ஆற்று நீரோட்டம்போல நிதானத்துடன் பயணம் செய்கிறது, தாசரின் அனுபவங்கள்.
(நன்றி: தி இந்து)