நொறுங்கும் புனிதங்கள்

நொறுங்கும் புனிதங்கள்

தமிழில் வட்டார வழக்கு சார்ந்த யதார்த்த நாவல்கள் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துடன் தனித்து விளங்குகின்றன. தமிழகத்தில் சிறிய மாவட்டமான குமரி நிலப்பரப்பில் ஹெப்சிபா ஜேசுதாசன் தொடங்கிப் பல நாவலாசிரியர்கள் காத்திரமான படைப்புகளைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் சிறுகதை ஆசிரியரான குமாரசெல்வாவின் முதல் நாவலான குன்னிமுத்து இடம் பெறுகிறது. புனிதம் என்ற பெயரில் சமூகம் கட்டமைத்துள்ள மதிப்பீடுகளைப் பகடி செய்துள்ள நாவல், வாசிப்பில் சுவராசியத்தை ஏற்படுத்துகிறது. பெண் என்றாலே மறு உற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல் மிக்கவள் என்ற பொதுப்புத்தியைச் சிதைக்கும் வகையில், இருளி என்ற பெண்ணை முன்வைத்து விரிந்துள்ள நாவல் பெண்ணுடல் அரசியலை முன்வைத்துள்ளது.

இன்று குமரி மாவட்டத்தில் நிலவும் மத அரசியல் தனிமனித வாழ்க்கையில் ஊடுருவி ஏற்படுத்தும் சேதங்கள் அளவற்றவை. வாதைகளை வழிபட்டு வந்த மரபு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் இந்துத்துவா அரசியல் முன் வைக்கப்படுகின்றது.

பாரம்பரியமாகப் பத்திரகாளியம்மன் கோவில் பூசாரியான தங்கநாடனின் உரிமை மறுக்கப்படுகிறது. வைதிக மதம் சார்ந்த போற்றி பூசாரியாக நியமிக்கப்படுகின்றார். மதத்தை அரசியலுடன் ஒன்றிணைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறுகிறது.

இன்னொரு புறம் டயோசிஸ் அமைப்பின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ திருச்சபை சார்ந்து நடைபெறும் அதிகாரப் போட்டி உக்கிரமாக இருக்கிறது. சமூகத்தில் உதிரியாக அன்றாடம் யாரையாவது ஏமாற்றிப் பிழைக்கும் நடராஜன் கிறிஸ்தவனாக மதம் மாறி சர்ச்சில் செயலராகப் பதவியேற்றுச் சுரண்டுவது இயல்பாக நடைபெறுகிறது. ஏற்கனவே பல்லாண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பொன்னையா கம்பவுண்டர் புதிதாகப் பெந்தகோஸ் சபையை ஆரம்பித்து விசுவாசிகளை இயேசுவின் பெயரால் சுரண்டுகின்றார்.

இறைவன், இறை நம்பிக்கை என்ற பெயரில் பாவப்பட்ட மக்கள் கேள்விகள் எதுவுமற்று விசுவாசத்தில் மூழ்கடிக்கப்பட்டிருப்பதைக் குமாரசெல்வா பகடியாகப் பதிவாக்கியுள்ளார். திருமண வீட்டில் பெந்தகோஸ்தே சபையினர் மத்த்தின் பெயரால் செய்யும் அபத்தங்களும் அதற்கு ஊராரின் எதிர்வினைகளும் நகைச்சுவையின் உச்சம். பைபிளை நன்கு வாசித்துள்ள ஆசிரியரான ஸ்டீபன் இயேசுவைப் புரட்சியாளாராகச் சித்தரித்துப் பேசும் பேச்சுகள் கவனத்திற்குரியன.

எந்தவொரு மதம் சார்ந்தும் தனது அபிப்ராயங்களை முன்வைக்காமல் பாத்திரங்களின் வழியே ஆழமான விவாதங்களைத் தூண்டும் வகையில் நாவலின் கதைப் போக்கு விரிகிறது.இன்றளவும் தனிப்பட்ட பேச்சு வழக்கு, உணவுப் பழக்கவழக்கம் என வாழ்ந்துவரும் குமரி நில மக்களைப் பாடாய்ப்படுத்தும் மதங்களின் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதை நாவல் வலியுறுத்துகின்றது.

குன்னிமுத்து என்ற விதை ஏதோ ஒரு வகையில் இருளியுடன் தொடர்புபட்டுள்ளது. கடைசிவரை வயதுக்குவராத பெண்ணுடல் சமூகத்தில் எதிர்கொள்ளும் துயரங்கள் ஒருபோதும் முடிவதில்லை. செடியின் அடியில் சிந்திக் கிடக்கும் குன்னிமுத்து விதைகளின் சிவந்த நிறம் இருளிக்கு மாயக் கவர்ச்சியைத் தருகிறது. கிராமத்தினரின் கேலிக்குள்ளானபோதும் அவளது மனம் ஈரம் ததும்பக் கசிகிறது. பங்கிராஸ் வைத்தியர் வீட்டில் வேலை செய்யும்போது பொறுக்கியான வண்டாளத்தின் மீது அவளுக்கு ஏற்பட்ட விருப்பமும் அப்படிப்பட்டதுதான். அவளது குடும்ப வாழ்க்கை கணவன் வண்டாளத்தால் நாசமாகிறது. தந்தையும் கொல்லப்படுகிறார்.

அடி, உதை எனக் கழியும் அன்றாட வாழ்வில் அவளுக்கு நம்பிக்கை தருவதாக எதுவும் இல்லை. வண்டாளம் துர்மரணம் அடைகிறான்.அவனுக்கு இன்னொரு பெண் மூலம் பிறந்த சுந்தரியை வளர்த்து ஆளாக்குகின்றாள். எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி அவளது பயணம் தொடர்கின்றது. பிள்ளை பெற முடியாத பெண்ணை உடல் ரீதியாக ஒதுக்கும் நுண் அரசியல் பற்றிப் பேசும் நாவல், ஒருநிலையில் அவளை மனித உயிராகக்கூட மதிக்காத சூழலைக் கேள்விக்குள்ளாக்குன்றது.

ஜெர்மன் கிறிஸ்தவ மிஷினரியின் தொண்டினை மறந்துவிட்டு அவர்மீது பொய்யாகப் பாலியல் குற்றச்சாட்டு சுமத்துதல், வைத்தியச் சேவை செய்த வல்லுநர் பங்கிராஸ் ஒதுக்கப்படல் போன்ற நிகழ்வுகள் சமூக அறம் குறித்துக் கேள்வி எழுப்புகிறது. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற ஆதங்கம் தோன்றுகின்றது. வேறு என்ன செய்ய?

நவீன வாழ்க்கைப் பரப்பில் தனிமனித இருப்பு எந்த அளவு தாக்குப் பிடிக்கும் என்பது நுட்பமான கேள்வி. இப்படியெல்லாம் என்னைச் சுற்றி நடக்கிறதே என்ற மன உளைச்சலுடன் கதைகளின் வழியே உலகைப் பதிவாக்க முயலும் குமாரசெல்வாவின் முயற்சி வெற்றியடைந்துள்ளது.

(நன்றி: தி இந்து)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp