இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் கவிதையும் காசுமீரிலிருந்து வெளிவந்த கன்வேயர் எனும் ஆங்கில மாத இதழில் இடம் பெற்றவை. மனித உரிமைச் செயற்பாட்டளரான கவுதம் நவலாகாவின் கட்டுரைகள், உஸ்மா பலாக்கின் அனுபவக் கட்டுரை, மார்க் அதோனிஸின் கவிதை அடங்கிய இத்தொகுப்பை வெண்மணி அரிநரன் தமிழாக்கம் செய்திருக்கிறார். இச்சிறுநூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் அமைதியின் வன்முறைஇலங்கையின் போர்க்குற்றங்களை பேசுவதற்கு இந்திய அரசுக்கு தகுதி இல்லை என்பதை காஷ்மீர் பிரச்சினை விளக்குகிறது. இதையே ஒருமுறை ராஜபக்சேவும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஈழப் பிரச்சினையை மட்டும் உணர்ச்சி பூர்வமாக ஆதரிக்கும் தமிழின ஆர்வலர்களிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை. அதனால்தான் காசி ஆனந்தன் போன்ற ஈழத்து ‘கவிராயர்கள்’ காஷ்மீர் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துகிறார்கள்.
ஈழ விடுதலை, காஷ்மீர் விடுதலை உள்ளிட்ட தேசிய இனப் போராட்டங்களை ஆதரிப்பதோ இல்லை அடக்குவதோ, ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க நலன்களோடு தொடர்புடையவை. இதன்றி அவை பேசும் மனித உரிமை வெறும் நாடகமே. இந்தியா போன்ற அவற்றின் பிராந்திய துணை வல்லரசு நாடுகளும் தத்தமது தரகு முதலாளிகளின் நலனைக் கொண்டே தேசிய இனப் போராட்டங்களை நசுக்குகின்றன. இலங்கை சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்வதும் இப்படித்தான்.
“போரில் மக்கள் மட்டுமல்ல, உண்மைகளும் கூடத்தான் பலியிடப்படுகின்றன” என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார் கவுதம் நவலாகா. காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவலாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு? சாக்கடை, குடிநீர் பிரச்சினைகளுக்காக மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை, விடுதலை போராட்ட உணர்விற்கு எதிராக பார்ப்பது அபத்தம். ஆறாவது ஊதிய ஆணையத்தின் படி ஊதிய உயர்வு வேண்டும் என்று ஆசிரியர்கள் போராடினால் கூட அங்கே 144 தடை உத்திரவு அமல்படுத்தப்படுகிறது. பொருளாதார போராட்டமானாலும் கூட அங்கே உரிமை கிடையாது.
அமர்நாத் பயணத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, காஷ்மீர் அரசு கூட விழுந்து விழுந்து எல்லா வசதிகளையும், பாதுகாப்புகளையும் செய்கின்றது. இந்துமதவெறி அமைப்புகள் வருடாவருடம் இந்த யாத்திரையை வைத்து செய்யும் கூச்சல்கள், அத்துமீறல்கள் அனைத்தும் சகித்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் காசுமீரில் 70,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், பத்தாயிரக் கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டதும், 10,000-த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதற்கும் பொறுப்பேற்க யார் இருக்கிறார்கள்? இதை எழுப்பி மக்கள் போராடினால் அதை ஒடுக்க இந்திய இராணுவம் ஓடி வருகிறது.
கூடவே காசுமீர் போராளிகளால் கொல்லப்பட்ட சில காசுமீர் பண்டிதர்கள் குறித்த செய்திகள் பேசப்படுவது போல இவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் அதே போராளிகளால் கொல்லப்படும் முசுலீம்களை பற்றி யாரும் பேசுவதில்லை. காசுமீர் விடுதலை இயக்கங்களின் இந்த தவறுகளை மக்கள் முடிந்த அளவு கண்டிக்கிறார்கள். ஆனால் பல கொலைகள் இந்திய அரசின் சதிகள் என்று தெரியவந்த பிறகு இந்த கண்டிப்பு நிதானமாக வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போராளிகளின் ஆயுதப் போராட்டங்களை விட, மக்கள் திரளாக பங்கேற்கும் அரசியல் போராட்டங்களே அதிகம் நடக்கின்றன. அல்லது மக்களின் அரசியல் போராட்ட வீச்சு காரணமாக போராளிக் குழுக்களின் தவறுகள் கணிசமாக குறைந்திருக்கின்றன.
கல்லெறிவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் ரூ 400 வழங்கப்படுகிறது என்று இந்திய அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் அவதூறு செய்கின்றனர். எல்லா நாட்களும் கற்கள் வீசப்படுவதால் நாளொன்றுக்கு ரூ 57-தான் கூலியாக வருகிறது. இந்த கல்லெறியில் பிடிபட்டால் சிறை, சித்திரவதை, ஆயுள் முழுவதும் போலிஸ் கண்காணிப்பில் அடிமையாக வாழ்வது, சமயத்தில் உயிரிழப்பது கிடைக்கலாம். 57 ரூபாய்க்காக தமது உயிரை யாரேனும் இப்படி இழக்க சம்மதிப்பார்களா என்று கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?
காஷ்மீரில் இராணுவ வீரர்கள், போராளிகள், பாக்கில் உள்ள காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்கள் என அரசு மற்றும் புகழ்பெற்ற ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள், புள்ளிவிவரங்களை வைத்தே இந்தியாவின் அவதூறுகளை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். காஷ்மீர் போராட்டத்தை பொதுவாக ஆதரிப்போரும், பொதுவாக தேசபக்தி காய்ச்சலுடன் எதிர்ப்போரும் இந்த கட்டுரையின் வாதங்களையும் தரவுகளையும் அறிந்து கொள்வது அவசியம்.
“நெஞ்சை அழுத்தும் நினைவுகள்” எனும் தலைப்பில் இரண்டாவது கட்டுரையை உஸ்மா பலாக் எனும் காஷ்மீரின் மைந்தர் தனது குழந்தைப் பருவத்திலிருந்து தற்காலம் வரையிலான நிகழ்வுகளை உணர்ச்சியாகவும், நேர்மையான கேள்விகளாகவும் எழுதியிருக்கிறார். போராட்டக் காட்சிகளை பார்த்து வளர்ந்த அவருக்கு “ஹம கியா சாஹ்தே? ஆசாதி!” – நாங்கள் என்ன கேட்டோம்? விடுதலைதானே? எனும் முழக்கம் மறக்க முடியாத ஒன்று. அம்மாவிடம் “நமக்கு ஆசாதி எப்போது கிடைக்கும்” என்று கேட்டதை மறக்க முடியாது என்று நினைவுகூர்கிறார்.
“காசுமீரின் முழுமையான சித்திரம் என்பது அழகான தால் ஏரியையும், முகலாயத் தோட்டங்களையும் மட்டும் கொண்டதல்ல; அது உலகிலேயே மிகுதியான படைவீரர்கள் குவிக்கப்பட்ட மண்டலம்”, என்கிறார் உஸ்மா பலாக். அதன் பாதிப்புகள் ஏதோ சுட்டுக் கொல்லப்படுவது மட்டுமல்ல, ஒரு பள்ளிச்சிறுவனின் உணவுப் பாத்திரம் சோதனையிடப்படுவதில் தொடங்கி கல்வி, வரலாறு, பொருளாதாரம் அனைத்திலும் நிலவுகிறது.
அவரது அண்டை வீட்டில், ஐந்தாவது படிக்கும் சிறுவன் கல்லெறிவதற்காக அம்மாவிற்கு தெரியாமல் வருகிறான், அவனுக்கு நிதி அளிப்பது ஐஎஸ்ஐயா என்று கேட்கும் அவர் நீதி வழங்கும் பொறுப்பை நம்மிடமே விட்டு விடுகிறார்.
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். படிப்பதோடு கட்டுரையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும் கோரும் நூல்!
(நன்றி: வினவு)