நூற்றாண்டு காணும் திராவிட இயக்கம் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.திராவிட இயக்க வரலாறாக,திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனமாக, திராவிட இயக்கத்திற்கு எதிரான கருத்துகளாக, திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளாக - இப்படி நான்கு திசைகளில் இருந்தும் திராவிட இயக்கம் குறித்த நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், அனைத்தும் ஒரே தரத்தின அல்ல என்பதை நாம் அறிவோம்.
இந்த மண்ணில் திராவிட இயக்கமும், பெரியாரும் ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்ற பக்குவ மற்றவர்கள் பக்கமிருந்து வரலாற்றை மறைத்தும், வரலாற்றுத் திரிபுகளையும் மட்டுமே சுமந்துவரும் நூல்கள் வருகின்றன.திராவிடத்தின் பகை இலக்கான ஆரியத்தின் பக்கமிருந்து,உண்மைக்குப் புறம்பான,அவதூறுகளை மட்டுமே நிரப்பிக் கொண்டும் பல நூல்கள் வருகின்றன.
இவைகளுக்கு நடுவே, திராவிட இயக்க ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும், திராவிட இயக்கம் என்னும் பெருவெடிப்பின் தன்மையையும்,பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையின் தலைமைத்துவத்தையும் உள்ளது உள்ளபடி அணுகி, ஆராய்ந்து, உண்மை என்னும் உரைகல்லில் உரைத்துத்தந்த பலநூறு நூல்கள் திராவிட இயக்கத்தின் காலப்பெட்டகங்களாகக் கருத்துக் கருவூலங்களாக நம் கைகளில் உள்ளன.அந்த வரிசையில் ,நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் கோவி.லெனின் எழுதிய ‘திராவிடர் இயக்கம் நோக்கம்-தாக்கம் -தேக்கம்’என்னும் நூலும் நம் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
திராவிடம் என்றால் என்ன என்ற வினாவில் தொடங்கி, நூறாண்டுகள் வரை முடிந்த அளவு பயணித்து,இன்று தி.மு.க.மீதும்,அதன் தலைவர் கலைஞர் மீதும் தொடுக்கப்படுகின்ற அம்புகள், அதற்குரிய காரணங்கள் வரை, கண்ணாடி முன்நின்று பார்ப்பது போல அப்படியே பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
திராவிட இயக்கங்களின் வளர்ச்சி,சாதனைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுவதோடு, அவ்வியக்கங்களில் காணப்பட்ட உட்பூசல்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் பிழைகள்,திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்களாக வைக்கப்படு வதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.அதே நேரத்தில், குறிப்பாக,திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குறிவைத்துத் தொடுக்கப் படுகின்ற தாக்குதல்கள் பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் இந்நூல் பேசுகிறது.திராவிட இயக்கம் என்னும் மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் உண்மை வரலாறு,முழுமையாகக் கற்பிக்கப்படாத இன்றைய இளைய தலைமுறையினர்,இணையத் தளம், முகநூல்,டுவிட்டர் ஆகியவற்றில் ஆங்காங்கே துண்டு துண்டாகப் பதிவிடப்படும் தொடர்பற்றச் செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு,எழுப்பி வருகின்ற வினாக்களுக்கும் இந்நூலுள் விடைகள் இருக்கின்றன.
தாத்தாவுக்கும், பேரனுக்குமான உரையாடலாக, ஆங்காங்கே பேச்சுவழக்கிலும் செய்திகளைச் சொல்லிச் செல்லும் ஆசிரியரின் உத்தி புதுமையாகவும்,படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. ஒரு நூற்றாண்டு வரலாற்றினை நறுக்குத் தெறித்தாற்போன்ற நடையில், தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
சாதி ஒழிப்பிற்கான சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட,திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களிலும் திராவிடர் கழகத் தொண்டர்கள் அனுபவித்த துயரங்களையும், சந்தித்த இழப்புகளையும் விரிவாகப் பதிவு செய்திருப்பது,அவர்களைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் அண்ணாவின் ஆட்சிக்காலத்தைப் பற்றி இன்னும் சற்றுக் கூடுதலான பக்கங்களில் பதிவு செய்திருக்கலாம். திருக்குறளைப் போன்று குறுகிய காலமே ஆட்சியில் இருந்தார் என்றாலும், செய்தவையும், செய்ய நினைத்திருந்தவையும் ஏராளம் என்பதால், சற்று விரிவாகவே சொல்லியிருக்கலாம்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,திராவிட இயக்கங்களும்,திராவிட அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும் என்னும் நூலாசிரியரின் வேண்டுகோளோடு நிறைவடையும் இவ்வரலாற்று நூலினை அனைவரும் படிக்க வேண்டியது காலத்தின் தேவை.