சோவியத் இலக்கியங்கள் தமிழுக்கு மிக முக்கியமான பங் களிப்பை செய்திருக்கின்றன. அதன் வழியே உருவானவர்களில் நானும் ஒருவன். எனது கல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியத்துக்குள்ளாகவே மூழ் கிக் கிடந்தேன். அப்போது வாசித்த ஒரு நாவல் இன்றுவரை என் விருப்பத் துக்குரிய நாவலாக இருக்கிறது.
பாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத் துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங் களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை.
‘ராதுகா பதிப்பகம்’ வெளியிட்ட இந்நூலை தற்போது ‘நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்’ மறுபதிப்பு செய்துள்ளது. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர்: பூ.சோமசுந்தரம்.
தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடல் பிரதேசத்தில் உள்ள தாஜிக்ஸ் தான் மலைகிராமம் ஒன்றில் பிறந்தவர் அலீயெவா. அவரது தாய் மொழி அவார். அதற்கு வரி வடிவம் கிடையாது. 1930-களில்தான் இதற்கு என புது வரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஆகவே, எழுத்து மரபு இம்மொழிக்கு கிடையது.
வாய்மொழி மரபைச் சேர்ந்த பாடல் களும், கதைகளும் மட்டுமே அவார் மக்களிடம் இருந்தன. பள்ளி வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்து, பின்பு ரஷ்யாவின் மிகமுக்கிய கவிஞர்களில் ஒருவராக உயர்ந்தார் அலீயெவா.
அவார் மொழியின் மகத்தான கவி ரசூல் கம்சுதேவ்.
‘நாளை அவார் மொழி மடியுமானால்
இன்றைக்கே நான்
இறந்து போவேன்’
- எனப் பாடியவர் ரசூல்.
ஒருமுறை ரசூல் கம்சுதேவ் இத்தா லியப் பயணத்தின்போது ஒரு வணிகர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்று இருந்தார்.
அந்த வணிக நண்பர் இனிமையாகப் பேசி, உபசரித்து பரிசுகள் எல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தார். ஊர் திரும்பியதும் வணிகரின் தாயைச் சந்தித்து அவரது மகனைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி எடுத்துக் கூறி விருந் தோம்பலுக்கு நன்றி கூறினார் ரசூல்.
வணிகரின் தாய் ரசூலிடம் ‘‘என் மகன் உங்களோடு அவார் மொழியில் பேசினானா?’’ என்று ஒரே கேள்வியை மட்டுமே கேட்டார்.
‘‘இல்லை…’’ என்று ரசூல் சொன் னதும், ‘‘அப்படியானால் அவன் என் பிள்ளை கிடையாது. அவன் பிணம். தாய் மொழியை மறந்தவன் பிணத்துக்கு சமம்’’ என்று சொல்லிவிட்டு அந்தத் தாய் கோபித்துக் கொண்டு போய்விட்டார் என ரசூல் கம்சுதேவ் குறிப்பிடுகிறார். அவார் இன மக்கள் அந்த அளவுக்குத் தாய் மொழியை நேசித்தார்கள்.
தான் எப்படி எழுத்தாளராக உருவானேன் என்பதை முன்னுரையில் அலீயெவா சுவைபட விவரித்திருக்கிறார்.
உராஷ் பைராம் பெருநாள் அன்று அதி காலையில் ஒரு கன்னிப் பெண் புல் வெளிக்குச் சென்று, தூய பீங்கான் கிண்ணத்தில் பனித் துளிகளைத் திரட்டிச் சேர்த்து, அந்தப் பனிநீரால் முகத்தை கழுவிக் கொண்டால்… அவள் பேரழகி ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையிருந்தது.
அதிகாலையில் அலீயெவா பனித் துளிகளைச் சேகரிக்க புல்வெளிக்கு சிறுகிண்ணத்தை மறைத்து எடுத்துக் கொண்டு சென்றார். எங்கு பார்த்தாலும் அழகான பூக்கள். ஒவ்வொன்றிலும் ததும்பும் பனிநீர். திடீரென அவருக்கு கவலை உண்டானது. பனித் துளிகளை நாம் வடித்து எடுத்துக் கொண்டால் பூக்களுக்கு வனப்பும் தளதளப்பும் போய்விடுமே… என்ன செய்வது? ஆனால், அழகி ஆகவேண்டும் என்ற விருப்பம் அவரை உந்தித் தள்ளியது. ஒரு நீலமலருக்கு முன்பாக மண்டியிட்டு அதில் இருந்த பனிநீரைக் கிண்ணத்தில் வடித்துக் கொண்டார்.
பக்கத்தில் இன்னொரு பூச்செடி இருந் தது. அது கோணலாக வளைந்திருந்தது. அந்தச் செடியை தழைக்கவிடாமல் ஒரு பெரிய பாறாங்கல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்த வேதனையில் கண்ணீர் விடுவது போல பூச்செடியில் பனித் துளிகள் சிந்திக் கொண்டிருந்தன.
இதைக் கண்ட அலீயெவா கல்லை முழுபலத்துடன் அசைத்து பெயர்த்துத் தள்ளியபோது, திடீரென குபுக் குபுக் என்ற சத்தத்துடன் ஊற்று பெருகிவரத் தொடங்கியது. புதிய மலை ஊற்று பொங்கி வந்ததைப் பற்றி அம்மாவிடம் சொன்னபோது அம்மா உற்சாகத்துடன் சொன்னார்:
‘‘புது ஊற்று பெருகும்போது அதன் முன்பாக நின்று வணங்கி எதை வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேறும்’’.
அம்மாவும் அலீயெவாவும் ஊற்றைத் தேடிப் போனார்கள். அலீயெவாவுக்கு என்ன வேண்டிக் கொள்வது எனப் புரிய வில்லை. மனதில் எத்தனையோ ஆசை கள் இருந்தன. ஆனால், ஊற்றருகே மண்டியிட்டு மெலிந்த கைகளை வானை நோக்கி உயர்த்தி, மெதுவான குரலில் தனது தந்தை வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்.
‘‘இறந்தவர்கள் உயிர்த்து எழுவது இல்லை’’ என்று சொல்லிவிட்டு, அம்மா ஊற்றின் முன்பாக ‘‘இந்த உலகில் போர் மூள விடாதே. எங்கள் ஆண்களைக் காப்பாற்று’’ என இறைஞ்சினார். அவரது கண்ணீர்த் துளிகள் ஊற்றில் கலந்தன. புல்வெட்டுபவனின் அரிவாளுக்கு முன்பு இளம்புல் நடுங்குவது போல ‘போர்’ என்ற பயங்கர சொல்லுக்கு முன்பு அம்மா பயந்து நடுங்கினார்.
அந்த சம்பவம் அலீயெவாவை மிக வும் பாதித்தது. அன்றுதான் தனது முதல் கவிதையை அவர் எழுதினார். ‘சமாதானப் பதாகை’ என்ற அந்தக் கவிதையை அம்மாவுக்குப் படித்துக் காட்டினார் அலீயெவா. அந்தக் கவிதை பள்ளியின் சுவரொட்டி பத்திரிகையில் வெளியிடப் பட்டது. அப்படித்தான் அலீயெவா எழுத்தாளராக உருவானார். அவரது சொந்த வாழ்வின் அனுபவத்தில் இருந்தே ‘மண்கட்டியைக் காற்று அடித் துப் போகாது’ நாவல் உருவாக்கப் பட்டிருக்கிறது.
மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அகமதின் மனைவி பரீஹான் மிகுந்த கஷ்டத்தில் குடும்பம் நடத்துகிறாள். அவர்களுக்கு உதவுகிறார் கள் உமர்தாதா - ஹலூன் தம்பதிகள்; பரீஹானை அடைய இச்சைக் கொண்டு அலையும் ஜமால்; அவனுடைய மகனுக்கும் பாத்திமாவுக்கும் ஏற்படும் காதல்; உமர்தாதாவின் மகனுக்கு பாத் திமாவை மணம் முடிக்க பெரியவர்கள் கொள்ளும் விருப்பம்; பரீஹான் மீது விழும் கொலைப் பழி; நீதி விசாரணை; போரின் விளைவால் முறிந்து போகும் காதல்… எனப் பட்டுநெசவைப் போல வண்ண இழைகளால் இந்த நாவலை நெய்திருக்கிறார் அலீயெவா.
இதில் உமர்தாதா மறக்க முடியாத கதாபாத்திரம். அந்தக் கிழவன் மண்ணை நேசிப்பது போல இன்னொருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே. அவரது கருணையும், துணிவும், உழைப்பும், மன உறுதியும் வியப்பளிக்கிறது. பேச்சுக்குப் பேச்சு அவர் பழமொழிகளை உதிர்க் கிறார். அதில் ஒன்றுதான் ‘மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது’ என்பது. இதுபோல நிறைய பழமொழிகள் அவர் பேச்சில் வெளிப்படுகின்றன.
அவார் இன மக்கள் மண்ணை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.
அவார் இனப் பெண்கள் தங்களுக் குள் சண்டையிடும்போது, கோபத்தில் ‘‘உன் குழந்தைக்குத் தாய்மொழி மறந்து போகட்டும்; தாய்மொழியைச் சொல்லித் தர வாத்தியார் கிடைக்காமல் போகட்டும்’’ என சாபம் கொடுப்பார்கள் என்று படித்திருக்கிறேன்.
எவரது சாபமோ தெரியவில்லை, தமிழ்மொழி அந்த நிலையில்தான் இன்று வாழ்கிறது. அலீயெவாவைப் போல ரசூல் கம்சுதேவைப் போல தாய் மொழியின் பெருமைகளை உலகறிய செய்யவும், மொழியை நேசிக்கவும், வளர்த்தெடுக்கவும் வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
(நன்றி: தி இந்து)