டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன்.
சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.
பொதுவாக நான் தமிழில் வெளியாகும் பயணநூல்களைப் படிப்பதில்லை. பெரும்பான்மை பயணநூற்கள் எங்கே என்ன சாப்பிட்டோம். புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என்ற வெற்று அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமேயிருக்கும். ஆனால் நடேசனின் எகிப்திய பயணம் சுய அனுபவத்தை முன்னிறுத்தி வரலாற்றுபின்புலத்தை, சமகால அரசியலை, பண்பாட்டு சிறப்புகளைப் பேசுகிறது.
எழுத்தாளர் என்பதால் பயணத்தில் எதை முக்கியமாகத் தேடி காண வேண்டும் என நடேசன் சிறப்பாகத் திட்டமிட்டிருக்கிறார். வரலாற்று ஆய்வாளரைப் போல நுணுக்கமான தகவல்கள், குறிப்புகள், கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்து தருகிறார். அதே சமகால அரசியல் சூழலையும் பண்பாட்டு நெருக்கடிகளையும் கூடவே விவரிக்கிறார். அவ்வகையில் இந்நூலை வாசிப்பவர்கள் எகிப்தின் வரலாற்றையும், பண்பாட்டு சிறப்புகளையும் இன்றைய வாழ்க்கைமுறையையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
அசோகமித்ரனின் எழுத்தைப் போல மெல்லிய புன்னகையை வரவழைத்தபடியே செல்லும் எழுத்துமுறை நடேசனுக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அனுபவத்தைத் துல்லியமாக விவரிப்பதுடன் சென்ற இடத்தில் தங்களுக்குச் சேர்ந்த சங்கடங்களைப் பரிகாசத்துடன் விவரிப்பது வாசிப்பில் நெருக்கத்தை உருவாக்குகிறது. குறிப்பாக விமானநிலையத்தில் விஸ்கி போத்தலை ரகசியமாகக் கொண்டுவர கையூட்டு கொடுத்த சம்பவமும். அதைத்தொடர்ந்து வரும் உரையாடல்களும் சுவாரஸ்யமாகயுள்ளன.
உலகிலே முதன்முறையாக ஆணுறையைப் பாவித்தவர்கள் எகிப்தியர்கள் என்று தான் புத்தகம் துவங்குகிறது. ஒரு பயணநூலை இப்படி யாரும் துவங்க மாட்டார்கள். இந்த வரி பயண அனுபவம் வெகுஜாலியாக இருக்குமோ என்ற குறுகுறுப்பை வாசகனிடம் உருவாக்குவதோடு மருத்துவரின் கண்ணோட்டத்தில் தான் வரலாற்றை எழுதப்போகிறேன் என்பதற்கும் சாட்சியாக உள்ளது.
பயணத்தில் தங்கும் விடுதிகளில் ஜன்னல்கள் முக்கியமானவை. வெளியே என்ன பார்க்க முடிகிறது என்பது முக்கியமானது, இணையத்தில் அறை பதிவு செய்யும் போது அவர்கள் ஜன்னல்களைக் காட்டுவதில்லை என ஒரு இடத்தில் நடேசன் குறிப்பிடுகிறார்.
இதை நான் பல ஊர்களில் உணர்ந்திருக்கிறேன். சில அறைகள் சவப்பெட்டியை போன்றதாகயிருக்கும். உடனே காலி செய்து பெரிய ஜன்னல் உள்ள வேறு அறைக்குப் போய்விடுவேன். ஜன்னல் என்பது உலகிற்கும் நமக்குமான உறவின் அடையாளமில்லையா.
நைல் நதியில் கிடைக்கும் பேச் மீனைச் சாப்பிடத் தேடி அலைந்த சம்பவம், உணவகத்தில் ஹுக்கா பிடித்தது என மாறுபட்ட அனுபவங்களைச் சொல்லி வரும் நடேசன் அதன் ஊடாக ஒரு மருத்துவரின் கண்ணோட்டத்தில் உடல் ஆரோக்கியத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசுவது முக்கியமானது.
வருடத்தில் 365 நாட்களை நமக்குத் தந்தது எகிப்தியர்களே, சிரிய நாட்டு மன்னன் தனது சகோதரிக்குப் பிரசவம் பார்க்க ஒரு பெண் மருத்துவரை அனுப்பும்படி இரண்டாம் இராம்சிக்கு ஒலையனுப்பயிருக்கிறான். நைல் நதிக்கரையோர பாப்பிரஸ் புல்லில் தான் உலகத்தின் காப்பியங்கள் எழுதப்பட்டன. கீசா பிரமிட்டைக் கட்டுவதற்கு 90000 தொழிலாளர்கள் இருபது வருஷம் வேலை செய்தார்கள். வரைபடம் இல்லாமலே பிரமிடுகள் கட்டப்பட்டன. எகிப்தில் பெண்வழியான ராஜவம்சமே பலகாலமாகத் தொடர்ந்தது. ஹொரொடோடஸ் நூலில் எகிப்திய வரலாற்று நூலில் பூனைகள் இறந்து போனால் வீட்டில் உள்ளவர்கள் தனது புருவத்தைச் சவரம் செய்து கொள்வார்கள் என்ற தகவல் உள்ளது என போகிற போக்கில் வரலாற்று உண்மைகளை இடைசரடாக இணைந்து சொல்லிக் கொண்டே போவது சிறப்பாகவுள்ளது
பிரமிடுகள் ஏன் உருவாக்கபட்டன என்பதைப் பற்றி விவரிக்கும் போது ஒநாய்கள் அழுகிய சடலங்களை உண்ணக்கூடியது. அதன் இரைப்பை அதற்கு ஏற்றதாக உள்ளது. ஆகவே ஒநாய்கள் கிளறி உண்ணமுடியாதபடி பாறைகளைத் தோண்டி சடலங்களைப் புதைக்கும் முறை உருவானது. அதிலிருந்து வளர்ச்சி பெற்றே பிரமிட் தோன்றியது, இறந்தவர்கள் அதே உடலுடன் மேலுலகம் செல்கிறார்கள் என்ற நம்பிக்கையே இந்த உடல்களைப் பாதுகாக்க முக்கியக் காரணம் எனக்கூறுகிறார் நடேசன்.
நைல் நதியில் அவர் செய்த பயணங்களை வாசிக்கும் போது நாமே உடன் பயணிப்பது போலிருக்கிறது. மிருகங்களின் மம்மியைக் காண ம்யூசியத்திற்குப் போன அனுபவமும் அதில் இடம்பெற்றுள்ள செய்திகளும் வியப்பூட்டுகின்றன. எகிப்திய பாரம்பரிய வைத்திய நூல் ஒன்றை கண்ட அனுபவத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.
பயணத்தின் வழியாக நாம் காண்பது ஒரு தேசத்தின் அழிந்து போன வரலாற்றை, பண்பாட்டை, மரபுச்சுவடுகளை மட்டுமில்லை. சமகால வாழ்விற்கும் அதற்குமான இடைவெளியை, தொடர்ச்சியை, விடுபடல்களையும் தான் என்பதை நடேசனின் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மருத்துவர்கள் எங்கே சென்றாலும் மனிதர்களின் உடலமைப்பு, உணவுமுறைகள், சுற்றுச்சூழல், நோய் மற்றும் சிகிட்சை முறைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எகிப்திய பயணத்தின் ஊடே நடேசன் மருத்துவரின் கண்கள் கொண்டு வரலாற்றை ஊடுருவுகிறார். அதனால் வரலாற்றின் மீது புதுவெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. அவ்வகையில் இந்தப் புத்தகம் முக்கியமான பதிவாகும்.
நடேசனின் நைல் நதிக்கரையோரம் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளார்கள். பயணத்திலும் வரலாற்றிலும் விருப்பமுள்ளவர்கள் இதை அவசியம் வாசிக்க வேண்டும் என்றே சொல்வேன்.
(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன்)