பூமிப்பந்தின் குறுக்குநெடுக்காக எந்த வரிக்கோட்டில் வசிப்பதாக இருந்தாலும் சரி, மனிதன் படிப்படியான தனதுசெயல்பாடுகளால் உயர்ந்து மகோன்னதமானவனாகிறான். அதற்காக அவன் எதையும் இயல்பாகவே செய்பவனாகவுமிருக்கிறான். காலம் அவனை கௌரவிக்கிறது. போற்றப்படுகிறான். அதன் நேரெதிராகவே மனிதன் படிப்படியான தனது செயல்பாடுகளால் சுயநலமிக்கவனாகவுமாகிறான். அதற்காக, சக மனிதனிலிருந்து சர்வ உயிரினங்கள்வரையும் அவன் கைக்கொள்கிறான். அவன் எதையும் செய்பவனாகவுமிருக்கிறான். காலம் அவனுக்குக் கை கொடுக்கிறது. இப்போது அவன் மற்றவர்களால் பயத்துடன் போற்றப்படுகிறான். ஆதி முதலே இதுதான் வடிவமாக இருக்கிறது. இந்த வடிவம் பற்பல சித்திரங்களில் வகைமை களாகப் பேசப்பட்டுவருகின்றன. அவை இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் நம்மிடையே பரவியிருக்கின்றன. இதன்தொடர்ச்சியாகப் பேச்சுவழிக் கதைகளும் எழுத்தாய்க் கவிதைகளும் கதைகளும் பனுவல்களும் புதினங்களும் இன்னும் எழுதப்பட்டு வருகின்றன. முடிவில்லாத கதைகள் நம்முடையைவை. உலகம் முழுவதுமே மகோன்னதத்துக்கும் சுயநலத்துக்குமிடை யிலானத் தொடர்ச்சியும் தொடர்பும் இருந்தபடியே இருக்கிறது.
சிறுபறவையேயாயினும் சரி… தனது வாழ்வியலுக்கு ஆதாரமாக ஜீவிதத்துக்கானத் தேடலில் இறங்குகிறது. தனக்குப் பிடித்தமானவைகளையே தேர்வு செய்கிறது. இங்கே அஞ்சல் நிலையம் என்ற மொழிபெயர்ப்பு நூலையும் புறாக்காரர் வீடு என்ற சிறுகதைத் தொகுப்பையும் தமிழுக்குத் தந்த நண்பர் பாலகுமார் விஜயராமன் இப்போது உலகச்சிறுகதைகள் பத்தை நம்முன்னே விரித்துவைக்கிறார். இந்தப்பத்துச் சிறுகதைகளுமே மனிதனின் மகோன்னதத்தையும் அவனது சுயநலத்தையும் நம்முன்னே கலைத்துப்போடுகிறது.
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழி யில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். லேசாய் சலசலக்கும். காற்றுடன் சேர்ந்து முணுமுணுக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். அவர் கண்டடைந் ததை நம்மிடம் பகிரும்போது தேடலின் பொருள் நம்மை வியக்க வைக்கும். அப்படியே இப்போதும் ஒருசில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். அது அவரது இயல்பு. அவரது உள்ளொளியின் நேர்த்திறனால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும். முடிகிறது.
தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று வரைபடத்தின் நரம்புக்கோடு களின் மீது ஊர்ந்து அலைந்திருக்கிறார். ஊர்தலில் பல்வேறு வகைமையானச் சித்திரங்களை அவர் கண்டிருக்கிறார். அதுவே ‘கடவுளின் பறவைகள்‘ எனும் இந்நூலை சிறகடித்துப் பறக்கச் செய்கிறது.
‘கடவுளின் பறவைகள்‘ எனும் தலைப்பே சற்று அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. நம்மூர் கடவுள்களில் பெரும்பாலானவற்றுக்கு பறவை வாகனமாகவோ அல்லது கணமோ இருப்பது வாடிக்கை. தொன்மங்களும் படிமங்களும் நிறைந்துகாணப்படும் நம் சமூகத்தில் கடவுள் மீது கை வைப்பதென்பது நெருப்பைத் தீண்டுவதற்கு இணையானது. தீட்டாகிவிடும். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு சமயோசிதம் எத்தனை முக்கியமானது என்பது பாலகுமார் விஜயராமனின்
கதைத்தேர்வில் அசாத்தியமாக வெளிப்படுகிறது. அவரது கடவுள்களின் பறவைகள் எல்லாமே நேயத்தைச் சுட்டுவதாக இருக்கின்றன.
உலகம் முழுவதிலுமிருக்கும் மனிதமனங்களின் அழுக்காறுகளை அவற்றின் இயல்புடனேயே பந்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் அபாரமானவை. தோலினாலான ஒரு இடைவாருக்கு இரண்டு ஆட்டிடையர்களைக் கொன்றொழிக்கும் தீவிரத்தின் தொடர்ச்சிதான் சமகாலத்தின் இலங்கைப் படுகொலைகளையும் பாலஸ்தீனப் படுகொலைகளையும் பின்னணியில் காட்சிப் பொருட்களாக நமக்குள் விதைத்துவிட்டுப் போகின்றன.
ஒருகதையில் மோசஸுக்கும் பல்லிக்குமிடையில் நடக்கும் உரையாடல் அழகானது. வாசித்து அனுபவிக்கவேண்டிய ஓரிடம். தேர்வுசெய்த கதைகளில் பெண்களின் பங்களிப்பை மிக நேர்த்தி யாகப் பதிவுசெய்திருக்கிறார். காணாமல்போனக் கணவனை தேடியலையும் பெண், அவன் கொலைசெய்யப்பட்டிருப்பான் எனும் சந்தேகத்தில் துப்பறிந்து கொலையாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் துணிவு போற்றப்பட வேண்டியது. அதுபோல தவறான உறவால் குடும்பத்தை விட்டுவிட்டு புறப்பட்டுவிடும் ஒரு ஆண், பெண்ணில் பின்னொரு நாளில், ‘உம் பையனப் பாக்கணும்னு ஆசையிருந்தா நீ கௌம்பிப்போ!‘ என்று பெண் சொல்வது உலகப் பெண்களின் மனதின் அடியாழத்தில் புதைந்துகிடக்கும் பரிவைப் பிரகடனப்படுத்துகிறது. வாழ்வின் வட்டம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே செல்வதுதான் பெண்களின் சோகமும் சாபமும்.
சமீபகாலமாக பிறமொழிக் கதைகள் தமிழுக்கு வருவது ஆரோக்கியமானக் கதவுகள் திறந்திருப் பதால்தான். நூலின் பெரும்பாலானக் கதைகள் அறியப்படாத எழுத்தாளர்களின் கதைகளாக இருப்பது கூடுதல் வலிமை தருவதாக இருக்கிறது. அதுபோல உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படும் மொழிபெயர்க்கப்படும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளரின் கதையும் இதிலொன்று உண்டு. அந்த இடத்தை அறியப்படாத ஓர் எழுத்தாளருக்கு அளித்திருந்தால் நூல் ஒருசீராக இருந்திருக் குமென நான் கருதுகிறேன்.
நல்ல பலகதைகளை இத்தொகுப்பின் வழியே தந்திருக்கும் பாலகுமார் விஜயராமனுக்கு வாழ்த்துகள். வெளியீட்டாளர் நூல்வனம் மணிகண்டன் வெள்ளைப்பாண்டியனுக்கு அன்பு.