நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்

நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்

கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது ஜலால் அல்-தீன் என்ற இயற்பெயர் கொண்ட உலகப் புகழ் பெற்ற ரூமியின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளின் தமிழ் மொழியாக்க நூல், “தாகங்கொண்ட மீனொன்று”. ‘தி லாஸ்ட் ரிஸார்ட்’ வெளியீடான இந்த நூலை, ‘காலச்சுவடு பதிப்பகம்’விநியோகிக்கிறது. ரூமியின் கவிதைகளை தமிழில் என்.சத்தியமூர்த்தி மொழியாக்கம் செய்துள்ளார்.

இந்த மொழியாக்கக் கவிதைகளைப் பற்றி எழுதியே தீர வேண்டுமென்ற வேட்கையை தந்தது, ரூமியின் மொழிவளம், அவர் கவிதைகளில் நிறைந்து கிடைக்கும் தீராத உரையாடல்கள், இறையன்புடன் சங்கமத்துக்கான தீவிரத் தேடல், பெரும் பரிதவிப்பு, தன்னுள் நிறைதல் ஆகிய உணர்வுகள் எனலாம். ரூமியின் கவிதைகளில் வெளிப்படும் முரண் உணர்வுகளையும் உளச்சிக்கல்களையும் பற்றி எழுதுவதென்பது எளியதான காரியமல்ல. ரூமியின் கவிதை மிகவும் எளிமையானது, அதே சமயம் தீவிரமான ஆன்மீகத் தேடலை உள்ளடக்கியது. மேலோட்டான லௌகீக குணாதிஸ்யங்களோடு திகழும் கவி மொழியின் உள்ளார்ந்த கருத்தானது, பற்றற்ற மனோபாவத்துக்கு நெருங்கிச் செல்லத் தூண்டுபவை. காதலும் கலவியும் என்று மேல் பார்வைக்குப் புலப்படும் ரூமியின் கவிதைகள், மரணத்தையும் ஆன்மாவையும் அவற்றின் சங்கமத்தை நோக்கி நகரத் தூண்டும் கருவிகளாகத் திகழ்கின்றன.

எத்தனை வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தாலும், காதலையும், பக்தியையும், கூடல் இன்பத்தின் பின் கவ்விக்கொள்ளும் பிரிவின் துயரத்தையும் விளக்க முடிவதில்லை. அவை எப்போதும் புதிராகவும் சொல்ல முடியாத ரகசியமாகவுமே தொடர்கின்றன. இதைத்தான் பல இடங்களில் ரூமி பதிவு செய்கிறார். இந்த மொத்தத் தொகுப்பின் சாராம்சமாக நான் பார்ப்பது “தெளிவுறப் போவதில்லை / அப்புதிரின் சூட்சமம்”. இந்தத் தெளிவின்மையே இறை அன்பை, பெரும் பரிவும் கருணையும் கொண்டதாகப் பார்க்கத் தூண்டுகிறது. “நம்புவதற்கோ மறுப்பதற்கோ / இடமேதும் இல்லை” என்று வியக்கச் செய்கிறது. அதே சமயம், தவிக்கவும் வைக்கிறது. எதைப் பற்றிக்கொள்ளத் துடிக்கிறோமோ, அதை விட்டுவிலகவே பெரிதும் விழைகிறோம். இந்த நகைமுரணே ரூமி கவிதைகளில் காணப்பெறுகிறது. ஒரே கவிதையில் களிப்பின் நடனமாய் வரும் இசை, அதே கவிதையின் தொடர்ச்சியில், அத்தனை களிப்பும் ஒரு மகத்தான கூண்டினுள் இருந்தபடி பாடுவதாகவும் பதியப்படுகிறது. தனது நாணயங்கள் கள்ளமானவை என்று சொல்லும் இடத்தில், ஏன் கள்ளம் என்றும், ஏன் இன்னும் உலகவாழ்வை விழையும் அவா என்றும், பற்பல கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. வார்த்தைகளிடையே வீற்றிருக்கும் பெரும் மௌனமும் கூட, நம் மொழிபெயர்ப்புக்கு, தம்மை ஒப்புக்கொடுத்து நிற்கின்றன. ரூமியின் கவிதைகளின் எளிமையே அதன் புதிர்த்தன்மையை மேலும் கூட்டுபவை, ஏமாற்றக் கூடியவை. ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு திறப்புகளைத் தரும் சூட்சமம் கொண்டவை.

ரூமி கவிதைகளில் காணப்பெறும் முரண்தன்மை ஒருவித மனப்பிறழ்ச்சிக்கு இணையானதாகும். அத்தகைய முரண், ரூமியின் பல்வேறு கவிதைகளில் இடம் பிடித்திருக்கின்றன. கவிதை ஒரு விதமாய் தொடங்கி, அத்தொடக்கத்திற்கு சற்றும் பொருந்தாத வேறு ஒரு தளத்தில் முடியும் கவிதைகள் பல, இந்தக் கவிதைத் தொகுப்பிலிருக்கின்றன. ஒரே கவிதையில் வெவ்வேறு கண்ணிகளால் பல்வேறு விதமாய் நெய்து வடிவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றினுள் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா என்ற சுவாரசியத் தேடலுக்கும் அவை வழி வகுக்கின்றன. பரிபூரண காதலன் தன் காதலிக்கு சொல்வதாக தொடங்கும் கவிதை, காதலியை, அவள் நற்குணங்களை, பரிவை, பெருங்கருணையை புகழ்ந்து கொண்டே போனபின்னர், அதுவே ஆன்மீகத் தேடலாக, தத்துவ விசாரமாக மாறி, உடலை நீங்கி, இறையோடு ஒன்றிணையும் விழைவையும் சொல்லிவிட்டு, மீண்டும் காதலியிடம் மறைத்து வைக்க முடியாத காதலாக வெளிப்படுகிறது. இந்தக் கவிதையை, காதலில் பித்துற்று, தன் அகத்தினுள் நினைத்தேங்கும் மனகுழப்பங்களாக மட்டும் பார்ப்பது ஒருவகை அணுகுமுறை. ஆனால் அந்தக் காதலை, இறைமையின் கருணையாக காணும் நுட்பமான நாகாசு வேலையையும் கவிதைகுள்ளேயே வடித்து வைத்திருப்பது தான், ரூமியின் தனிச்சிறப்பு. “நான் உன்னைப் பிரிந்திருந்த போது / இவ்வுலகு இருக்கவில்லை/ வேறு எவ்வுலகும் கூட” என ஓரிடத்திலும், “இரவு பகலாகப் பாடுகிறேன் / இந்த மகத்தான கூண்டினுள் / இருந்தபடி” என்று அதே கவிதையில் பின்பகுதியிலும் வருகிறது. முதலில் சொன்ன வரி, அதீத காதலாய் வெளிப்படும் உணர்வு, பின்னதில் இவ்வுலக சிறுமைகளில் துன்புறுவதாகப் பதிவாகிறது. இந்த முரண் கண்ணிகளை வெளிப்படுத்தும் அந்த கவிதை, ஆழமான வாசிப்பனுபவத்தை மேலும் உன்னதப் பரப்புக்கு நகர்த்துகிறது.

முரண் கருத்துகள் மட்டுமல்லாது, முரண் குறீயிடுகளை அடுத்தடுத்த பத்திகளில் பயன்படுத்துகிறார் ரூமி. “மீன்களைப் போல நம்மையும் பெருங்கடல் அல்லாவா சூழ்ந்திருக்க வேண்டும்?” என்று முதல் பத்தியில் கடலையும் நீர்மையையும் பதிவு செய்யும் அவர், “வியாழன் இரவு / மீண்டும் இங்கே சந்தித்துக் கொள்வோம் நாம் / என ஒலிக்கின்றனவா ஒட்டகத்தின் மணிகள்?” என்று பாலைவனத்தை அடுத்த பத்தியிலும் பதிவு செய்வது, கவிதையில் இடைபடும் மௌனத்தை இன்னும் வலுவுடையதாக ஆக்குகிறது. கடலில் நீர்மையை அனுபவிக்கும் அதே மனம், பாலையின் வெறுமையில் தகிக்கிறது. இதனை, காதலின் மனநிலை என்றும், கடவுளை தசிரிக்க இயலாத மனம் படும் பாடு என்றும், வேறோர் புரிதலை நிர்மாணிக்க ஏதுவாக, இக்கவிதை குறிப்புணர்த்திச் செல்கிறது.

பெரும்பாலான கவிதைகள் எளிய மொழியில் நேரடித்தன்மையோடிருந்தாலும் பல நவீனக்கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு, “தாகங்கொண்ட மீனொன்று”. நவீன கவிதைகளில் காணப்படும் படிமம், குறீயிடு போன்ற அனைத்து அம்சங்களை கொண்ட கவிதைகள் இந்த தொகுப்பில் காணக் கிடைக்கின்றது. “விருந்தினர் இல்லம்”, “தாகங்கொண்ட மீனொன்று”, “தீராத உரையாடல்”, “பாறையும் மதுக் கிண்ணமும்” போன்றவை, அவ்வகையான கவிதைகளில் சில. “விருந்தினர் இல்லம்” கவிதையில், அனுதினம் தான் எதிர்கொள்ளும் பல்வேறு உணர்வுகளை, நம்முடைய விருந்தாளிகளென எதிர்கொள்ளச் செய்யும் ரூமி, இந்த வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையுடைய உலகை, ‘விருந்தினர் இல்லம்’ என்று குறிப்பாகச் சொல்வதைக் காணலாம். இத்தொகுப்பில் தலைப்பிடப்படாத முதல் கவிதை, இறையன்பையும் காதலையும் நுட்பமாக ஏற்றிச் சொல்லும் படிமக் கவிதை. “தாகங்கொண்ட மீன்னொன்று” கவிதையிலும், இன்னும் பல கவிதையிலும், வரும் நீர்க்கலயம், மீன், எல்லாம் படிமங்களும் குறீயிடுகளே. தவித்திருக்கும் மீனை மானிடர்க்கும், நீர்க்கலயத்தை இறையன்புக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மற்றொரு கவிதையில், “நிரம்பிக் கொண்டிருக்கும் நீர்க்கலயம் / உனக்கு உணர்ந்தும், அதை சுமந்து செல்ல / ஒருவர் இருக்கின்றார் என்பதை” என்ற வரிகள் நுட்பமான ஒரு அவதானிப்பு. நீர் நிரம்ப அவ்விடத்திற்கு அக்கலயத்தை கொண்டுவந்தவர் எவரோ, அதை அவரே மீண்டும் வீட்டிற்குக் கொண்டு செல்வார் என்பதாய் நேரடி பொருள்படும் இந்த வரிகளில், கனிவையும் தன்னம்பிக்கையும் உணர்ந்தும் வரிகளாகவும், அதைத் தாண்டி, நிறை வாழ்வின் பின்னால் வரவிருக்கும் மரணத்தை, அப்போது இறையன்பு நம்மை சுமக்க காத்திருப்பதாக ரூமி உணர்த்த விழைவதாயும் நான் உணர்கிறேன். பதிமூன்றாம் நூற்றாண்டுன் கவிதைகளில் இத்துணை நவீனத்துவம் மிகுந்திருக்கிறாதா என்பது தனிப்பெரும் ஆய்வுக்குரியது.

ரூமி பயன்படுத்தியிருக்கும் உவமைகளும், சில நுட்பமான குறியீடுகளும், வியக்க வைக்கின்றன. “இப்பேச்சரவம் / புதிய நாணயங்களை அச்சடிப்பதைப் போல / அவை குவிந்தவண்ணம் இருக்கின்றன”. பேச்சரவம் என்னும் சொல் அவ்விடத்தில் அந்தச் சத்தம் விரும்பத்தக்கதாக இருக்கின்றதா இல்லையா என்பதை உவமையின் வாயிலாக உணர்த்துகிறார். பக்தியை, இறையன்பை நாடுபவருக்கு, லௌகீகத்தின் மேலிருக்கும் வெறுப்பு, நாணயங்களையும் அதன் சத்தத்தையும் வெறுக்க வைப்பதாகக் கருதி, இவ்வுவமையின் மூலமாக, பேச்சரவமற்ற மௌனத்தைக் கோருகிறார் ரூமி என்பதாக உணர்கிறேன். இவ்வாறாக ரூமி தேர்த்தெடுத்த உவமை அவர் சொல்ல வந்த கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. அது போல், மேலும் ஓரு உவமை, “தொடர்ந்த சாகசத்திற்கு / ஒப்படைத்துவிடு உன்னை / அதற்கு விசுவாசமாய் இரு / கதவின் நாதங்கியை போல”. தேடல், பதில் கிடைக்காமல் போதல், ஆகியன எவரையும் சோர்வுறச் செய்யலாம். ஆயினும், தட்டிய கதவுகள் திறந்தாலும், திறக்காமல் போனாலும், கதவின் நாதாங்கி, கதவோடு எப்போதும் இருக்கும். இதைக் குறிப்பிடுவதன் மூலம், ரூமி நம்மை இறையன்புக்கு மட்டுமல்லாது, எந்த ஒரு தேடலுக்கும், தேடியது கிடைக்கும் வரை விசுவாசமாக இருக்கச் சொல்கிறார். மாணிக்கக் கல்லை ஒரு கவிதையில் குறிப்பிடும் ரூமி, “அதற்குச் சூரிய ஒளியிடம் / தடை ஏதுமில்லை” என்கிறார். மிக நுட்பமான குறியீடிது. பாறையாக இருக்கும் போது, அதனுள் ஒளி ஊடுருவ முடியாது. அதுவே வைரமாகவோ, மாணிக்கமாகவோ உருமாறும்போது, அதன் குணம் மாறி, தன்னுள் ஒளி நுழைவதை அனுமதிக்கும். இது நட்பு, காதல், இறையன்பு, இன்னபிற மானசீகமான உணர்வுகள் அனைத்துக்கும் பொருந்துவதான ஒரு உவமானம். ஆன்மா மாணிக்கமாய் கனியும் வரை காத்திருந்தால் இறையன்பு ஒளியாய் தன்னுள் நுழைய எவ்வித தடையும் அதற்கு இருக்கப் போவதில்லை.

இத்தனை நுட்பமான குறியீடுகளான, காதலும், அதீதபக்தியும், சங்கமமும்(மரணம்), என விரிந்து செல்வதே பக்தி இலக்கியம். தொன்மையில் இறையன்பைப் போற்றுதல், இறையருளைப் பாடுதல் என்ற மரபே நீண்ட காலம் இருந்திருக்கிறது. அதையே கலையாக வளர்த்தெடுத்திருக்கின்றனர், பக்தி இலக்கியக் கர்த்தாக்கள். இது நமது தேசத்தில் மட்டுமல்லாமல், எல்லா தேசத்திலும், எல்லா மதத்திலும் நடந்திருக்கிறது. உணர்வுகளுக்கும் கலைக்கும், கவிதைக்கும் இசைக்கும், மொழியும் மதமும் ஒரு பொருட்டே அல்ல. யார் மேல் உட்சபட்ச அன்பு கொள்கிறோமோ அது காதலாக கனிவதில் எந்த வியப்புமில்லை. இதையே நமது பக்தி இலக்கியங்களும் நிறுவி இருக்கின்றன. அதுவே ரூமி கவிதைகளிலும் கொட்டிக் கிடக்கிறது.

நமது பக்தி இலக்கியத்தில், ஆண்டாள், அக்கமகாதேவி, லல்லேஸ்வரி, மீரா, காரைக்கால் அம்மையார் ஆகியோர், கடவுள் மேல் கொண்ட பக்தியை காதலாய், தீவிரத் தேடலாய், சங்கமத்திற்கு இட்டு செல்லும் ஊடகமாய், தங்களது கவிதைகளைக் கையாண்டிருக்கின்றனர். மீரா, காரைக்கால் அம்மையார் தவிர, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பெண்களும் தமது உடல், அதன் கூடல் ஆகியன, இறையன்பைப் பெற்று தரவல்லது என்று நம்பினார்கள், அவர்கள் அனைவர்க்கும் கடவுள் எதிர்பாலினன். அதையே தன் பாடல்களில் பதிவு செய்தார்கள். இவர்கள் அனைவரிலிருந்தும், ரூமி வேறுபடுவது, தன்னை ஆண் என்றோ, பெண் அன்றோ, ரூமி எங்கும் நிறுவிக் கொள்ளவில்லை என்பது தான். ரூமியின் சில கவிதைகளில், இறையை பெண்ணாகவும் தன்னை ஆணாகவும் (“கடல் உன்னிடம் / காதல் கொண்டு வரும்போது”), அதே கவிதையில் தன்னைப் பெண்ணாகவும் (“முழு நிறை ராஜாளி ஒன்று / எக்காரணமும் இன்றி / உனது தோளில் / வந்தமர்கிறது / உனதே உனதாக”) இறையை ஆணாவும், வேறு ஒரு கவிதையில் தாமிருவரும் மானிட காதலர், எப்போதும் இறையன்பை நோக்கி பயணப்படுபவர் என்பது போலவும் (“மீன்களை போல நம்மையும் / பெருங்கடல் அல்லவா சூழ்ந்திருக்க வேண்டும்”), இறையும் தானும் வெவ்வேறானவர் இல்லை என்றும், பல்வேறு விதமாகப் புனைந்திருக்கிறார். மேலும், அவர் எமக்குள்ளும் (“அவர்கள் ஒருவருக்குள் மற்றவராக / இருந்து வருகிறார்கள் / காலங்காலமாக”) எல்லோருள்ளும் இருக்கிறார் என்பதாகவும் கூடப் பதிவு செய்கிறார் ரூமி. இவர் காதலி / காதலன் / இறையன்பு என்பது ஷம்ஸையா அல்லது அதைத் தாண்டிய ஒன்றையா என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது.

ஆண்டாளின் மிகப் புகழ்பெற்ற, “கற்பூரம் நாறுமோ” திருமொழியின் அதே பொருள் தரும் ரூமியின் கவிதை ஒன்று இருக்கிறது. “தீராத உரையாடல்” என்ற கவிதை அது. “இந்த இசைக்குழு முழுவதிலுமே / மிக அதிர்ஷ்டசாலி யார்? / புல்லாங்குழல் தான் / இசையைக் கற்றுக் கொள்ள / அதன் வாய் உனது உதடுகளை ஸ்பரிக்கிறது”, என்ற இடத்தில், ஆண்டாள் வந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை. இது எனது வாசகக் கோளாராக இருக்கலாம். அதே கவிதையில், “என்னை தொடுவாயா / அப்போது தான் / நான் நானாவேன்”, என்ற இடமும் உண்டு. இந்த இடத்தில் ஆண்டாளும், அக்க மகா தேவியும் நினைவுக்கு வருவதை, எப்படித் தவிர்ப்பது? பிரகலாத சரித்திரம், “அடைக்கப்பட்ட வழித்தடம்” என்ற ரூமியின் கவிதையில், “பல்லாயிரங்களும் நீ / ஒன்றேயாகி நிற்பதுவும் நீ”, என்ற வரிகளில் நினைவு கூறவல்லது. மேலும் “விடைதரல்” என்ற ரூமியின் கவிதையில், “சூரியனும் நிலவும் மறைவதால் / அவற்றிற்கு ஏதேனும் / தீங்கு நேர்ந்து விடுகிறதா என்ன?”, என்ற வரிகளில் பகவத்கீதையை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆண்டாளின், அக்கமகாதேவியின், அதே பரிதவிப்பை, ரூமியின் சில கவிதை வரிகளில், “என்னைச் செலுத்துகிற கண்ணியை / ஒரு வசத்தில் இழுக்கிறாய் நீ, / பிறகோ / மறுவசத்தில்”, உணரலாம். இவ்வாறாகக் காதல், தேடல், சங்கமம் என்ற போக்கிலிருந்து சற்றே மாறுபடும் சில இடங்களும் உண்டு. அவை வாழ்வியல் சிக்கல்களைத் தீர்க்கும் தத்துவ விளக்கங்களாக, அறிவுரைகளாக, உச்சாடனம் செய்ய உகந்த மந்திர மொழிகளாக விரிகின்றன. பல கவிதைகளில் இவை பரவி விரவி இருந்தாலும், “உயிர்த்துத் ததும்பும் ஓர் உலகு” கவிதையின் மந்திர மொழி, மனதை மெஸ்மரைஸ் செய்யும் விதமான நுணுக்கங்கள் கொண்டது.

 நமது பக்தி இலக்கிய மாந்தர்கள், இறையன்பை ஒரேயொரு இறைவன் மீது செலுத்துகின்றனர். ரூமியோ பல காதல் கொள்வதை ஆதரிக்கிறார். அதே சமயத்தில், மானுடக் காதல் போலத் தெரிந்தாலும், அது இறைமையை நோக்கிய தேடலுக்கு இணையானதே என்று சொல்லவும் இடம் வைத்திருக்கிறார். “தூய வேட்கையோடு / தான் வேண்டும் உதடுகளின் / சுவையை உணர்ந்தபடி” என்ற இடத்திலும், “அவள் பிரிந்து சென்றாள் / அவன் பிரிந்து சென்றான் / எனப் புலம்புகிறாய் / கவலையை விட்டொழி / வரக்கூடும் பலர் / உன்னைத் தேடி” என்ற இடத்திலும், எவ்வித வேறுபாடுமின்றி எல்லோரிலும் இறையன்பை காண ரூமி விழைகிறார், என்றே நினைத்துக் கொள்கிறேன்.

இந்த நூலின் மொழியாக்கத்தின் சில இடங்களில் வந்திருக்கும் சொல்லாடல்களான, ‘ஆண்டையும் அடிமையும்’ என்பதும், ‘குந்திக் கொண்டிருந்தான்’ என்பதும், கவித்துவ மொழிக்கு அப்பால், அதனை ஒரு உரைநடையாக்கிவிடுகிறது. அதன் காரணம், மொழிபெயர்ப்பாளர் சார்ந்த வட்டாரவழக்காகவும் அதன்வழியான சொற்தேர்வாகவும் இருக்கலாம். மற்றபடி, மிகச் சிறந்ததொரு எளிமையான மொழியாக்கம் இது. சில சொற்களான “அருகின்மை”, “துயலொழிவு” என்பன மிகப் புதியதாகவும், தனித்துவமாகவும், கவித்துவமாகவும் இருக்கின்றன. இவர் மொழிப்பெயர்ப்பில், ஆங்கிலம் வழி மொழிபெயர்க்கப்பட்ட ரூமியின் கவிதைகளை மேலும் செறிவாக ஆக்கி, அதன் உண்மைப் பொருளையும் தாண்டிய இன்னுமொரு தளத்திற்கு விரித்துச் செல்கிறது.

The way of love is not
a subtle argument.
The door there
is devastation.

(ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்)

இதனை சத்தியமூர்த்தி பின்வருமாரு மொழி பெயர்த்திருக்கிறார்.

காதலின் வழி
நுட்பமான விவாதமல்ல
பிரளயமே
அங்கு செல்வதற்கான
வாயில்

இதையே, என்னுடைய மொழியாக்கத்தில் வெளிப்படுத்தும்போது, எனக்கு கவிதை இவ்வாறு வந்து சேர்கிறது :

காதல்
நுட்பமான விவாதமல்ல
அது
பேரழிவின் வாயில்

‘பேரழிவு’ (devastation) என்பதை, ‘பிரளயம்’ (catastrophe) என்று மாற்றியமைத்த சொற்சேர்க்கையால், ரூமியின் கவிதைக்கு நம்மொழியில் மேலும் செழுமையை சேர்த்திருக்கிறார் சத்தியமூர்த்தி. பிரளயத்திற்குப் பின்னர், புதியதோர் உலகம் நிர்மாணிக்கப்படும். பேரழிவு என்பது வெறும் அழிவு மட்டுமே, ஆக்கமில்லை. இவ்வுதாரணம், ஒரு கவளச்சோறு மட்டுமே. இதே போல் பல இடங்களிலும், மொழிப்பெயர்பாளர் இந்தக் கவிதைகளை செறிவாக்கியுள்ளதை சுட்ட முடியும்.

ரூமியின் கவிதைகளில் ஆங்காங்க சில புராணக் கதைகளின் சுவடுகளும், பல்வேறு சூஃபி, இஸ்லாமிய முன்னோடிகளின் பெயர்களும் வருகின்றன. பல கவிதைகளில் ஜோசப், கீதிர், சாலமன், சிகில், ரபியா என்ற பெயர்கள் கவிதைக்கு பொருந்தியும், பொருந்தாமலும் வந்து போகின்றனர். அவர்களை வெறும் பெயர்களாக வாசிக்காமல், கவிதைத் தொகுப்பின் பின்பாதியில் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்புகளைப் படித்து, பின்பு மீண்டும் அந்தக் கவிதைகளை வாசிக்கும் போது, அதன் பொருள் மேலும் வேறு விதமாய் தொனிக்கிறது. உதாரணமாக “காதல் நாய்கள்” கவிதையில் “ஆன்மாவின் வழிகாட்டி / கீதரை / அடர்ந்த பசுங்காற்றில் / நான் காண்பது போல / கனவு கண்டேன்” என்ற வரிகளில், கீதிர், தீர்க்கதரிசிகளின் ஆசானாகவும், ஆன்மீக தரிசனத்தை தேடும் ஆன்மாக்களின் வழிகாட்டியாகவும் போற்றப்படுவர் என்று படித்த பின்னர், கிடைக்கும் இணைப்பு அலாதியானது. அந்த இணைப்பின் பிறகு, “காதல் நாய்கள்” கவிதையில், “உன்னை மன்றாடச் செய்த துக்கமே / உன்னை இட்டுச் செல்லும் / சங்கமத்திற்கு” என்பது ஒரு மந்திரம் போல், ரூமியில் குரலாக மட்டுமல்லாது, கீதரின் குரலாகவும் ஒலிக்கின்றது. அதே போன்ற இன்னொருமொரு கவிதை “இரவில் ஓர் உரையாடல்”. இதில், “துர்க்கிஸ்தானிலுள்ள சிகிலின் / அழகான கிராமவாசிகள் / ஒருவருக்கொருவர் ஒத்திருப்பதைப் போல / அவையெல்லாம் உன் பிரதிபலிப்புகளே”, என்ற வரிகளில் கோடி காட்டப்படும் சிகில் பற்றிய குறிப்பில், அப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அழகிய புறத்தோற்றமும், நேர்த்தியான உடையலங்காரமும் கொண்ட நாடோடிகள் என்ற தகவல், இவ்வரிகளின் அழகை மேலும் கூட்டுகிறது. இவ்வாறு கவிதைகளை மட்டுமல்லாது பல புனைகதைகளை வாசிக்கவும் அல்லது புனைகதைகளை நாமே புனையவும் ரூமியின் கவிதைகள் வழி செய்கின்றன.

இந்தத் தொகுப்பில், எனக்கு பிடித்தது என, எந்த வகைமையிலும் வைக்க இயலாமல், சில வரிகள் உண்டு. உதாரணத்திற்கு, “கடலாழத்தின் எங்கோவொரு முத்தலிருந்து / பிறக்கின்றன அதன் நளின அசைவுகள்” இந்த வரிகள், கடலில் அலைகளை, அவை இவ்வரிகளை நான் நினைவுரும் போது நளினமாய் வெட்குவதை காட்சியாய் காண முடிகிறது. மேலும், “தங்க நூலிழையால் / நீ நெய்தெடுக்கும் / ஓளிப்பரப்பில் / நானொரு பிம்பம்” என்ற வரிகளை, அதீத காதலில் பிதற்றும் வார்த்தைகளாகப் பார்க்காமல், தகதகத்து ஜொலிக்கும் பிம்பமாய், சித்திரமாய் நம்மை உருவாக்கக்கூடிய ஒரு வழிகாட்டி/ குரு/காதலன்/காதலி கிடைக்கப்பெற்ற வாழ்வு பேரின்பகரமானது, என்று விரித்துப்பார்க்கத் தோன்றுகிறது. “நிலவிற்கு வழி / வாசல் அல்ல / சாளரமே”, என்ற வரிகளின் நிஜத் தன்மையும், ரூமியின் அதீத எல்லை மீறல்களும், நம் மனக்குகையில் பல சாளரங்களைத் திறந்து பார்த்து, சிரித்து விட்டு செல்கிறது.

ஒரு கவிதையில், விறகு சுள்ளிகளும் தீச்சுடரும் பேசுவதாக, “அடர்ந்து தடித்திருக்கிறாய் நீ / பொசுங்கிப் போ! / சஞ்சலத்து ஊசலாடுபவம் நீ / நானோ திடமானவன்” என்றொரு உரையாடல் வரும். இந்த வரிகளை ரூமியின் வேறொரு கவிதையில், “காதலின் வழி / நுட்பான விவாதமல்ல” என்ற வரிகளோடு இணைக்கும் போது நமக்கான வேறொரு கவிதை பிறக்கிறது. அது மேலுமொரு கவிதையில் வரும் வரிகளான “விவாதமும் வேண்டாம் / சாமர்த்தியமான பதிலும் வேண்டாம்” என்று இணைக்கும் போது, இன்னுமோர் புதிய கதையாக உருவெடுக்கிறது. இது வித்தியாசமான விளையாட்டு. நம்மில் எவரேனும், சரணாகதியான அன்பை தருகிறோமா / பெறுகிறோமா என்பதற்கான விடையை, நான் தேடத் தொடங்கியது இந்த வரிகளில் இருந்து தான். மிக தீவிரமாய் நேசிப்பவரிடம், நெருக்கமான நட்பிடன் தீராத விவாதங்களில் ஈடுபட்டு அன்பை விரையமாக்குகிறோம் என்பதை, உணர வைத்த வரிகள் இவை. ரூமியின் இன்னொரு கவிதையில், “தொடர்ந்து தட்டிக் கொண்டியிரு / உள்ளிருக்கும் ஆனந்தம் / என்றேனும் சாளரத்தை திறந்து / எட்டிப் பார்க்கும் / எவர் வந்திருக்கிறார் என” என்கிறார். இவற்றை இணைக்கும் போது, மேலும் ஒரு காதல் கதை புனையப்படலாம். இப்படி எழுதிக் கொண்டே போக நூல் முழுக்க சிறுசிறு குறிப்புகள், கவர்ந்த வரிகள், என எனக்குள் வித்திட்டவை ஏராளம்.

மேலே சொன்னது போல ரூமியின் கவிதை எளிமையானவை, ஆனால் எளிமையாக இருப்பதைப் போல பாசாங்கு செய்து, நம்மை ஏமாற்றுபவையும் கூட. இந்தக் கவிதைத் தொகுப்பு எனக்கு அறிமுகப்படுத்த பட்ட நாள் 7.1.2017. அன்று சுகுமாரனிடமிருந்த பிரதியைப் பெற்றுக்கொண்டு, அடுத்தநாள் ரயிலில் பயணிக்கும் போதே, வாசித்து முடித்து விட்டேன். உடனே எழுத வேண்டுமென்ற ஆவலும் எழுந்தது. தீவிர வைணவளான நான், “இன்ஷா அல்லாஹ்” சொல்ல நேர்ந்தது இப்படித் தான். ஆம், ‘அல்லாஹ்’ என்னை இவ்வளவு நாட்கள் இதைப்பற்றி எழுத விடவில்லை. ரூமியின் கவிதைகளின் வசீகரம், அதில் தொடர்ந்து வசித்திருக்கச் செய்பவை. இப்போது கூட, ரூமியின் கவிதை வரிகளிலேயே சொல்வதென்றால், “வார்த்தைகளைப் பயன்படுத்த / ஏன் எண்ணினேன் என்ற / தவிப்பே எஞ்சுகிறது”. என்னவெல்லாம் சொல்ல வந்தேனோ, அதை எதுவும் சொல்லவில்லை. அதை சொல்லிவிடவும் முடியாது என இதை எழுதி முடித்த கணம் உணர்கிறேன். ரூமியின் கவிதைகள் அப்படிப்பட்ட தீராத உரையாடலை நம்முள் நிகழ்ந்துபவை. வாழ்வின் எல்லா சிக்கல்களுக்கும் காரணமான அன்பை, மேலும் வேறுவிதமாய் அணுக வழிகாட்டுபவை. தீராத துயரத்தை ஆற்றுபடுத்துபவை.

இதுவரை எந்த ஒரு கவிதைத் தொகுப்பையும் நான் இத்தனை முறை வாசித்தது இல்லை. ஆயினும் ஒவ்வொரு முறையும் அது புதிதாக படிப்பது போலவே இருப்பது இரண்டாவது ஆர்ச்சரியம். முதலாவது, எத்தனை முறை பார்த்தாலும், மனதில் முழுதாய் பதிவாகாத ஶ்ரீரங்கம் கோவில் பெரியபெருமாளின் துயில் கொள்ளும் தோற்றம். ரூமி சொல்கிறார், “ஒரு பாறையின் மீது / பெருங்கடலைத் துளித் துளியாய் / வாரியெடுக்கும் தேவை / நமக்கெதற்கு இனி”. ஆம், ரூமியின் கவிதைகளை பற்றிப் பேச துணிவது, அதே அளவிற்கான அறியாமைக்கு ஒத்ததே. அவர் கவிதைகளில் உள்ளனவற்றை எல்லாம் பேசவிட இயலாது. கற்று அனுபவித்து நடைமுறையில் கடைபிடிக்கலாம். “தாகங்கொண்ட மீனொன்று” அவசியம் வாசிக்கப்பட வேண்டிய, துய்த்துத் திளைக்க வேண்டிய, கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இதனை இவ்வளவு நேர்த்தியாக மொழியாக்கம் செய்து, வடிவமைத்து, நமக்கெல்லாம் தந்திருந்திருக்கிறார் என்.சத்தியமூர்த்தி. அவரது மொழியாக்கம், ரூமியின் கவிதைகளை எல்லோருக்கும், மத வேறுபாடின்றி அணுக, வழி வகுக்கின்றன. அதெற்கென சத்தியமூர்த்திக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

(நன்றி: கபாடபுரம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp