‘யாராவது ஒரு பாட்டு பாடுங்களேன்’ - இந்த வாக்கியம்தான் `நகலிசைக் கலைஞன்’ புத்தகம் உருவாவதற்கு விதை என்று சொன்னால், புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சுந்தரும், புத்தகத்தைப் படித்த பின்பு நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். ஆசிரியர் குமாரசாமி ஒரு மின்வெட்டு நேரத்தில் பாடச் சொன்னபோது முதன்முதலில் இருட்டில் பாடிய ஜான் சுந்தர், இன்றைக்கு இளைய நிலா இசைக்குழுவின் உரிமையாளர்; பாட்டுப் பட்டறை என்னும் இசைப் பள்ளியின் தாளாளர். கவிஞர். மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களின் வலிமிகுந்த அனுபவத் தொகுப்பே இந்தப் புத்தகம்.
திரையிசைதான் தமிழர்களின் இசை என்றாகிவிட்டது. அவர்களின் இரவுகளை திரையிசையே தாலாட்டிச் சோறூட்டுகிறது. தமிழனின் அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலாகவும் கிரியா ஊக்கியாகவும் தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இருக்கின்றன. சூழலின் இறுக்கத்தைக் குறைப்பது முதல் உறவின் நெருக்கத்தை இறுக்கிக் கட்டுவது வரை, வேறு எதைக் காட்டிலும், அந்த வேலையை திரையிசை கனக்கச்சிதமாகச் செய்துவிடுகிறது. அப்படி தமிழனின் மனதை இசையால், குரலால் கொள்ளைகொண்டவர்களின் கீர்த்தி மிகப்பெரியது.
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.எம்.எஸ், ஜானகி, சுசீலா, ஜேசுதாஸ், எஸ்.பி.பி, சித்ரா... போன்றோர் இந்த கீர்த்தி மூர்த்திகளில் முன்னணியில் இருப்பவர்கள். பின்னணியில் இன்னும் எத்தனையோ சங்கீத சாகரங்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் ரசிகனுக்கும் குரல்வழித் தொடர்பு உண்டே தவிர முகவழிப் பரிட்சயம் ரொம்பக் குறைவு. அந்தக் குறைந்த இடத்தில் அந்தக் கீர்த்திமிக்க கலைஞர்களின் பாத்திரங்களில் தங்களை வார்த்துக்கொள்கிறவர்கள் நகலிசைக் கலைஞர்கள் எனப்படும் மெல்லிசைக் குழு கலைஞர்கள். இவர்கள் இசையன்றி வேறொன்றும் அறியாத எளியவர்கள். வலிமிகுந்த ஆச்சர்ய வரலாறு இந்த எளிய கலைஞர்களுக்கும் உண்டு. அதைத்தான் சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஜான் சுந்தர் எழுதுகிறார்... "அங்கீகாரம் கிடைக்கும் வரையில் கலைஞர்களின் வாழ்வு கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. ரசனையுள்ளங்களின் உபசாரத்துக்கும் அனுசரணைக்கும் கைகளைக் குவிக்கும் எளிய கலைஞன், கிடைத்த இடத்தில் உடலைக் கிடத்தி, உசுப்பும் நொடியில் எழுந்துகொள்கிறான். தூங்கி வழியும் கூட்டத்தை அள்ளி உற்சாகத்துக்குள் அமிழ்த்துகிறான். தூங்கி வழியும் மொத்தச் சமூகத்தையும் தட்டி எழும்பும் பொறுப்பு கலைக்கு இருக்கிறது. கலைதான் அதைச் செய்ய முடியும். அது செய்யும்.
ஒரு மெல்லிசைக் கச்சேரி புக் செய்வது முதல், அந்தக் கச்சேரி முடிவடையும் வரைக்கும் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தால் அது, நமது வாழ்க்கைக்கும் ஒத்துப்போகுமோ என நினைத்துப் பார்க்கிற வகையில் புத்தகத்தில் ஏராளமான இசைச் சம்பவங்கள் இருக்கின்றன. அதில் துயரம், வலி, கேலி, கண்ணீர், கொண்டாட்டம், பயணம், சிரிப்பு... எல்லாம் புல்லங்குழல் துளை வழியாகக் கசியும் இசைபோல வாசிப்பவனை வசீகரிக்கின்ரன. இந்த சம்பவங்கள் இடையேதான் டீத்தலை வந்துபோகிறார். சிகரம் என்கிற ஆச்சர்ய விளிப்பையும், சுதி நிக்காது என்கிற சோக விளிப்பையும் ஒரே மாதிரி சுரத்தில் சொல்லும் நந்தனார் வருகிறார்.
இரண்டு மூன்று மணி நேர பஸ் பயணத்தில் ஐந்நூறு அறுநூறு இசைத் துணுக்குகளை உருவாக்கிவிடும் பலகுரல் கலைஞர் நீலமலை மகேந்திரன் மைக் பிடிக்கிறார். கீபோர்டுக்கு மாறிய கிடார் கௌதம், படகோட்டி என்ற பட்டப்பெயரோடு சிரிக்க வைக்கிறார். பேஸ் கிடாரிஸ்ட்டான விபுலண்ணனின் மாமா பக்கிட்டி ஆனது எப்படி என்ற சிரிப்புக் கதை இருக்கிறது. ரோட்டில் படுத்து உறங்குவதும், ஸ்டேஜ்ஜில் ஏறி இசைப்பதும் இந்தக் கலைஞர்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் கண்ணீரைச் சிரிப்புக்குள் புதைத்து இவர்களை இயங்கச் செய்வது ஒன்றே ஒன்றுதான். அது... இசை. அதுவும் திரையிசை. அதைப் பற்றிய ரசிக மனப்பான்மையோடு அணுகிய எழுத்து என்கிற வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழுக்குப் புது வாழ்க்கையைக் காட்டுகின்றன. சிறு வயதில் சுவரில் டார்ச் வெளிச்சத்தில் ஃபிலிம் துண்டுகள் கொண்டு சினிமா காட்டி மற்றவர்களை மகிழ்விக்கும் சிறுவனுக்கு நிகரான சந்தோஷத்தை எழுத்தில் வைத்திருக்கிறார் ஜான் சுந்தர்.
நகலிசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்து என்பதால் ஜான் சுந்தரின் எழுத்தில் ஓர் இசைமை கூடிவந்திருக்கிறது. அதில் சம்பவங்களின் சுவாரஸ்யமும் வார்த்தைகளின் துல்லியத்தன்மையும் ஒரு சிறுகதையை வாசிக்கிற அனுபவத்தைத் தருகின்றன. அதற்கு ஒரு உதாரணமாக ‘பூக்கமழ் தேறல்’ தலைப்பில் வரும் பாணன் வீழ்ந்த காதையைச் சொல்லலாம். மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களைப் பற்றி ஆவணத் தொகுப்போ என்ற அச்சத்தோடு அணுகுபவர்களுக்கு நெஞ்சூறும் இசை அனுபவத்தைத் தந்திருக்கும் ஜான் சுந்தருக்கு வாழ்த்துகள்..!
(நன்றி: விகடன்)