இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்லமெல்லச் சரிந்துவரும் நிலையில், கே. சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் சமூகக் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை. சந்துரு கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்ததால் இவரின் கவலைகளும் வழிகாட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன.
நீதித்துறையை இந்திய மாண்புகளைக் காக்கும் கட்டமைப்பாகப் பாமரர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நீதிபதிகளின் மேலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவின் சாபக்கேடான சாதியத்தின் கருத்தியல்களைத் தாண்டி நீதிபதிகளும் வெளிவர முடியாமல் தவிப்பதால் அதன் போக்குகள் காலம்காலமாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன. நீதியை எதிர்பார்க்கும் தருணங்களில் அதுவே அநீதிக்கும் சுரண்டலுக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றது.
அரசியல்வாதிகளின்மேல் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் மேம்போக்காக அணுகிவந்துள்ளன. மதுரையை அடுத்துள்ள மலைகள், கிரானைட் கற்களாகத் தகர்க்கப்பட்டுள்ளன. மலைகளைக் காக்க, முறைகேடான வகையில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்க ஏதேனும் வழக்குகள் பதிவானால், கொள்ளைக்காரர்கள் நீதிமன்றத்தின் கருணை வெள்ளத்தினால் கரையேறிவிடுகிறார்கள். இதனால் நியாயமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
கிரானைட் கற்களுக்காக, பிராமி வடிவிலான தமிழ்க் கல்வெட்டுகள் அழிந்துவிடும் அபாயத்தைச் சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் நீதிமன்றம் கிரானைட் கொள்ளைக்காரர்களின் பக்கமே தீர்ப்பைச் சாதகப்படுத்துகிறது. இந்தச் சமயத்தில் வரலாற்றின்மீது உள்ளார்ந்த அக்கறையோடு செயல்பட வேண்டிய நீதிபதிகளுக்கு அது இல்லாமல் போன சம்பவங்களை சந்துரு சுட்டிக்காட்டும்போது நமக்கு ஏற்படும் கோபம் அளவிடற்கரியதாகும். இதுபோல தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நிகழ்ந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.
மாநில ஆளுநர்கள் யார், அவர்களின் பணி என்ன என்பதையெல்லாம் அரசியல் சட்டம் சுட்டிக்காட்டினாலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் அமைவதில்லை. மத்திய அரசின் ஏஜெண்டுகளாக இருந்து பலமுறை சட்ட நெறிமுறைகளைக் குலைத்திருப்பதை அறிய முடிகிறது.
சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்படுத்தும் சம்பவங்களில் மக்களைச் சமாதானப்படுத்த அரசு நியமிக்கும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பின்மையால் ஓரம் கட்டப்படுகின்றன. சொற்ப அரசியல் ஆதாயங்களுக்காக இவை கைவிடப்படுவதால் சமூகம் மேலும் ஆழமாகப் பிளவுபட்டுச் செல்கின்ற தன்மைகள் பலபல.
இந்தியாவில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட மறைந்த நீதிநாயகம் கிருஷ்ணய்யர் காரணமாக இருந்தது எப்படி? அந்தச் சம்பவத்தையும் இந்நூலில் காணலாம். கேரள உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய கிருஷ்ணய்யர், காவல்நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஓர் இளைஞனை விரைந்துசென்று காப்பாற்றுகிறார். நீதித்துறையில் காணப்படும் குறைகளை வெளிப்படையாக்கும் சந்துரு, இந்தியச் சமூகத்தில் நீதி எவ்விதம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, பல நீதியரசர்களின் செயல்பாடுகளை முன்னுதாரணமாக எழுதியுள்ளார்.
வளர்ச்சியின் பெயரால் இந்தியாவில் அமல்படுத்தப்படும் பல திட்டங்கள் இந்தியச் சுற்றுச் சூழலுக்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் ஏற்படுத்தும் பாதகங்கள் குறித்துத் தம் பார்வையை விளக்கவும் தவறவில்லை அவர்.
இந்திய ஜனநாயகம் ஒளிர வேண்டுமானால் சந்துரு போன்றவர்களின் பணிகள் அவர்களின் பணி ஓய்வுக்காலத்திற்குப் பின்னரும் தொடர வேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நிலையில், குறிப்பிட்ட அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை அளித்துவிட்டு, ஓய்வுபெற்ற கையோடு ஆளுநர் பதவியை அனுபவிக்கச் செல்லும் நீதிபதிகளால் நாடு நலம் பெறாது. கேரள ஆளுநராக இப்போது இருக்கும் சுப்ரீம் கோர்ட் முன்னாள்
நீதிபதி சதாசிவத்தைக் கண்டிக்கிறார் சந்துரு. அதற்காகவே இந்த நூல் நம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
(நன்றி: காலச்சுவடு)