சமூகப் பிற்போக்குத்தனத்தை உரத்த குரலில் சுட்டிக்காட்டுவது ஒரு காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் பெரும்போக்காக இருந்தது. ஆண், பெண் எழுத்தாளர்கள் பேதமின்றி இதையே எழுதிவந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இதற்கு மாறாக சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி போன்றோர் யதார்த்தமாக எழுதிவந்தார்கள். இந்த இருவிதமான போக்குகளுக்கும் இடையில் இயங்கியவர் ஆர். சூடாமணி.
மணம் முடிக்காமல் தனித்து வாழ்ந்த சூடாமணிக்கு எழுத்தே வாழ்க்கையின் முக்கிய பிடியாக இருந்திருக்கிறது. 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதி இருக்கிறார். 1957-ல் தொடங்கி 2000-க்குப் பிறகும் அவர் எழுத்து தொடர்ந்துள்ளது. சமூகச் சிக்கலுக்குப் புரட்சியைத் தீர்வாக முன்மொழியும் கதைகளுக்கு இடையில் நடக்கக்கூடியதை மட்டும் இவர் சொன்னார். உதாரண புருஷர்களைக் கதை நாயகர்களாகக் கொண்டு வெளிவந்த கதைகளுக்கு நடுவே அவற்றுக்கு மாறாக இயல்பான மனிதர்களைக் குறித்து எழுதினார்.
சூடாமணியின் கதை மாந்தர்களுக்கும் நம்மைப் போல் பலவீனங்கள் உண்டு. தங்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார்கள் இருக்கின்றன. தன்னைப் பழித்தவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். கால மாற்றத்தைக் காரணம் காட்டி எளிதாக அறத்தை மீறுகிறார்கள். இந்த செயல்பாடுகளால் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள்.
‘நான்காவது ஆசிரமம்’ என்ற அவரது கதையில் இரு ஆண்கள் வருகிறார்கள். ஒருவர் புரபசர், இன்னொருவர் மூர்த்தி. புரபசருடைய மனைவி சங்கரி மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார். புரபசர், தன் நண்பரின் மகளைத்தான் மணம் முடித்திருக்கிறார்.
புரபசருக்கு சங்கரியைவிட 20 வயது அதிகம். சங்கரிதான் விருப்பத்துடன் இதற்குத் துணிந்தார். மணம் முடித்த பிறகும் ‘புரபசர்’ என்றுதான் அழைத்தார். உண்மையில் ஒரு காலத்தில் சங்கரிக்கு, அவர் புரபசர்தான். மூர்த்தி, புரபசரின் துக்கத்தில் பங்குகொள்ள வருகிறார். பேச்சின் ஊடே சங்கரியின் முன்னாள் கணவர்தான் மூர்த்தி எனத் திடுக்கிட வைக்கிறார் சூடாமணி.
இவர்கள் இருவருக்கும் முன்பாக சங்கரிக்கு வேறு கணவர் இருந்திருக்கிறார். அவர் இறந்தபோன பிறகுதான் மூர்த்தியை மணம் முடிக்கிறார். வெளிப்படையாகப் பார்த்தால் இது மூன்று பேரை மணமுடித்த ஒருத்தியின் கதை. இப்படிப்பட்ட சங்கரிக்கு நம் மனதில் இடமளிக்க முன்வருவோமா, அவர் குரலுக்கும் செவிமடுப்போமா?
ஆனால், ஒவ்வொரு திருமணத்திலும் தன் கனவுகள் மூத்து இறப்பதைக் காண சகிக்காத சங்கரி படும் மன அவஸ்தை சூடாமணிக்குத் தெரிகிறது. ஆனால், சங்கரியின் இந்தச் சங்கடங்களை, ஆசைகளை கணவர்களின் குரல் மூலமாகவே பதிவுசெய்கிறார். சங்கரியின் குரலோ சூடாமணி என்னும் எழுத்தாளரோ அதில் குறுக்கிடுவதில்லை. மற்ற பெண் எழுத்தாளர்களிடமிருந்து சூடாமணி வித்தியாசப்படும் இடமும் இதுதான்.
தனித்து வாழும் தாய் பற்றிய ‘இறுக மூடிய கதவுகள்’ கதையில் அவள், மறுமணம் செய்யலாம் என நினைக்கிறாள். ஆனால், சிறு பையனான அவளுடைய மகனுக்கு அது பிடிக்கவில்லை. அதற்காகத் தன் விருப்பத்தைப் புதைத்துக்கொள்கிறாள். அவள் சாகக் கிடக்கையில் மகன் அம்மாவைப் புரிந்துகொள்கிறான்.
ஆனால், காலம் கடந்துவிடுகிறது. ‘செந்திரு ஆகிவிட்டாள்’ கதையில் மகளாக, மனைவியாக, அம்மாவாக இருக்கும் செந்திரு அவராக ஆகிவிடுகிறார். ‘செந்திருவாய்ட்டாள்’ எனக் கதைக்குள் சொல்லப்படுகிறது. இம்மாதிரிப் பல கதைகளை உதாரண சம்பவங்களாகக்கொண்டு பெண்களின் மனதை வாசகர்களுக்குக் காட்டுகிறார் சூடாமணி.
வெகுகாலம் கழித்து சந்தித்துக்கொள்ளும் சகோதரிகள் இருவரைப் பற்றிய ‘அந்நியர்கள்’ கதை இவற்றிலிருந்து வேறுபட்டது. உறவுகளுக்குள்ளான முரண்களைப் பேசுவது. ஒரே மாதிரி பெரிய பார்டர் சேலையை விரும்பும், ஒரே மாதிரி சர்க்கரை வற்றலைத் தயிரில் ஊறவைத்துச் சாப்பிடும், தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தனி மொழியை உருவாக்கிய அக்காவும் தங்கையும் அவர்கள்.
வெகுநாள் கழித்துச் சந்தித்துக்கொள்ளும் இந்தச் சகோதரிகள் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பான இறந்த காலத்தைத் திரும்ப அழைக்க நினைக்கிறார்கள். ஆனால், இப்போது அவர்கள் மனைவியாக, அம்மாவாக ஆகிவிட்டார்கள். இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் இந்தச் சகோதரிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இறந்த காலத்தின் திட வடிவமாக ஒரு ஜாடியை சூடாமணி கதைக்குள் வைத்திருக்கிறார். அது அவர்கள் அம்மா கொடுத்தது.
ஒரே மாதிரியான இரு ஜாடிகள். அந்த ஜாடியைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகிறாள் அக்கா. தங்கை யாரோ ஒருவருக்கு அதைப் பரிசாகக் கொடுத்துவிடுகிறாள். இந்தச் சம்பவத்தில் மொத்த கதையையும் சொல்லிவிடுகிறார் சூடாமணி.
இந்தக் கதையை அண்ணன் - தம்பி, அப்பா - மகன், நண்பர்கள் என எல்லா உறவுகளுடன் தொடர்படுத்திப் பார்க்கலாம். நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள், வேறு ஒருவராக மாறிவிட்டதை எதிர்கொள்ளும்போது நாம் அடையும் பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் இந்தக் கதை சொல்கிறது. சூடாமணியின் பெரும்பாலான கதைகளில் இம்மாதிரியான மெல்லிய உணர்வுகளின் திருத்தமான சித்தரிப்புகளைப் பார்க்க முடியும். இது அவரது கதைகளின் விசேஷமான அம்சம்.
சூடாமணி கதைகளை, பெண்ணியக் கதைகள் என ஒரு சட்டகத்துக்குள் அடக்க முடியாது. பூரண சுதந்திரத்துடன் அவரது மனதுடன் தொடர்புகொள்ளும் சம்பவங்களையும் மாந்தர்களையும் கதைகளாக எழுதியுள்ளார். ஒரு பெண்ணாக அவர்களின் தனித்த இயல்புகளை, குடும்ப அமைப்பால் அழுந்தப்பட்ட அவர்களது வாழ்க்கையை விசேஷமாகச் சொல்லியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் வெகுஜன இதழ்களில் வெளிவந்த மாதிரியான ஒரு மொழியைத்தான் சூடாமணி பயன்படுத்தினார்.
அதிலும் வாசகர்களை மயக்கும் அலங்காரங்களைத் தவிர்த்தார். ‘என்னிடம் ஒரு எளிமையான கதை இருக்கிறது. சொல்கிறேன்’ எனச் சட்டெனச் சொல்லத் தொடங்கிவிடுவார். யாரையும் குற்றவாளியாக்குவதும் இல்லை. இங்கே இப்படியெல்லாம் இருக்கிறது என்பதை மட்டும் அவரது கதைகள் சொல்கின்றன. ஆனால், அதற்குள் வலுவான கேள்வியை எழுப்பிடும் ஆற்றல் சூடாமணியின் கதைகளுக்கு உண்டு.
ஆர்.சூடாமணி, சென்னையில் 1931-ல் பிறந்தவர். சிறுவயதில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுச் சாவின் விளிம்புவரை சென்று மீண்டவர். ஆனாலும், உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டார். அதனால் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தினார். வீட்டிலிருந்தபடியே தமிழும் ஆங்கிலமும் பயின்றார். இரு மொழியிலும் எழுதியிருக்கிறார்.
சூடாமணி கதைகளை, காலச்சுவடு, ஆனந்த விகடன், கலைஞன், அடையாளம் ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. சாகித்திய அகாடமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சூடாமணி குறித்தும் நூல் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் கே.பாரதி இந்நூலை எழுதியுள்ளார். ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் செயல்படுகிறார்.
ஆர்.சூடாமணி, சென்னையில் 1931-ல் பிறந்தவர். சிறுவயதில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுச் சாவின் விளிம்புவரை சென்று மீண்டவர். ஆனாலும், உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டார். அதனால் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தினார். வீட்டிலிருந்தபடியே தமிழும் ஆங்கிலமும் பயின்றார். இரு மொழியிலும் எழுதியிருக்கிறார். சூடாமணி கதைகளை, காலச்சுவடு, ஆனந்த விகடன், கலைஞன், அடையாளம் ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. சாகித்திய அகாடமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சூடாமணி குறித்தும் நூல் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் கே.பாரதி இந்நூலை எழுதியுள்ளார். ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் செயல்படுகிறார்.
(நன்றி: தி இந்து)