சில மாதங்களுக்கு முன்பு ஓர் இலக்கிய இதழில் எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களது அருமையான கட்டுரை ஒன்று வந்திருந்தது. எழுதியது எழுதியாகிவிட்டது என்ற சொல்லாடல் அதில் இடம் பெற்றிருந்தது என்னைப் பெரிதும் ஈர்த்தது. அந்த சொற்களை இன்னும் விரித்துப் பார்த்தால், சொல்லுக்கு மட்டுமல்ல காட்சிக்கும், தொடுகைக்கும், கேட்டலுக்கும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தி வரக் கூடியது என்றும் பட்டது. சொல்லியது சொல்லியாகிவிட்டது. பார்த்தது பார்த்தாகிவிட்டது. தொட்டது தொட்டாகிவிட்டது, கேட்டது கேட்டாகிவிட்டது…..என்று! இது யாருக்கும் நேரக் கூடிய அனுபவம்தான். ஆனால் படைப்பாளி அந்தப் புள்ளியில் கொஞ்சம் கூடுதல் நேரம் உள்ளத்தைக் கிடத்திச் சிந்திக்கையில் அது ஒரு பிரதியாக மலர்ந்து வாசகரின் மடியில் வந்து விழக் காத்திருக்கிறது. புனைவுக்கும், உண்மைக்கும் என்ன உறவு, அல்லது, நிஜமும் புனைவும் எந்த விகிதத்தில் கலக்கிறது, உள்ளபடியே நடக்கக் கூடியதற்கும் நடக்கவே இயலாததற்கும் என்ன தொலைவு என்பதான கேள்விகள் இலக்கிய வீதிகள் நெடுகக் கால காலமாகக் குவியத்தான் செய்கின்றன. படைப்பாளி பதில் சொல்பவரல்ல; பதிலையும் படைப்பாக்கிக் கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பவர் என்றும் தெரிகிறது.
புனைவு இலக்கியத்தில் எப்போதும் சிறுகதைக்குத் தனி இடம் உண்டு. அதன் சாத்தியங்களில் எத்தனை எத்தனை பரிசோதனைகளை, ரசவாதத்தை, கிளர்ச்சியை, ஆவேசத்தை, அதிர்ச்சியை, பெருத்த அமைதியை நிகழ்த்துகின்றனர் படைப்பாளிகள்! ஒரு கதையை வாசித்து முடித்தபிறகு வாசகர் தமது உடல்மொழியில் வெளிப்படுத்தும் அவஸ்தைகளைவிட பெரிய விமர்சனத்தை யார் எழுதிவிட முடியும்! கதைகள் சிலவேளை படிப்பவரை உண்டு இல்லை என்றாக்கி விடுகின்றன. எட்டே கதைகள்தானா, தொகுப்பு உண்மையிலேயே முடிந்துவிட்டதா, நமது பிரதிதான் ஒருவேளை தவறுதலாக பக்கங்கள் குறைத்து அடுக்கப்பட்டுவிட்டதா என்று யோசிக்க வைத்த ஒரு கதைக் கொத்தை அண்மையில் வாசிக்க நேர்ந்தது.
“நீளும் கனவு”. எழுத்தாளர் கவின் மலர் அவர்களது சிறுகதைகளின் முதல் தொகுப்பு. வெவ்வேறு இதழ்களில் வந்திருக்கும் இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களத்தில் இயங்குபவை. எதிர்பார்ப்பு, நம்பிக்கை பொய்த்துவிடும்போது ஏற்படும் அதிர்ச்சி இரண்டும் பெரும்பாலான கதைகளின் வியக்கத்தக்க பொதுவான அம்சம் என்றாலும் அவற்றின் அனுபவங்கள் வேறு வேறானவை.
மீனுக்குட்டி, மின்மினி வெளிச்சம் என்ற தலைப்பிலான கதைகள் முறையே நிறம் பற்றியும், உயரம் பற்றியும் குழந்தைகள் உளவியல் ரீதியாக அடையும் அலைவுறுலைப் பேசுபவை. தன்னைக் கொண்டாடிக் குதூகலிக்கும் தந்தை, ஒரு போதும் தான் கருப்பாய்ப் பிறந்ததற்கு அழுதிருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறாள் மீனுக்குட்டி. அந்த நம்பிக்கைக் கண்ணாடியை எச்சரிக்கை கொள்ளாது உடைத்துச் சிதறடித்து விடுகிறாள் பாட்டி. அந்தக் குட்டிப் பெண் கடைசியில் அப்பாவிடமே கேட்டு எந்தப் பதிலைப் பெறுகிறாள் என்ற இடத்தில் கதை மிகுந்த உன்னத இடத்தை எட்டி நிறைவடைகிறது. மின்மினி வெளிச்சத்தின் நாயகன் பள்ளிச் சிறுவன் ராசு. குட்டையாய் இருப்பதாக உணரும் அந்தச் சிறுவனின் மன உளைச்சல் ஒரு சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டிருப்பது கவனம் கோருகிறது.
“விட்டு விடுதலையாகி”, மிகவும் வித்தியாசமான கதைக் கருவின் அசாத்திய பின்னலாக வழங்கப்பட்டிருக்கிறது. மோசமான மண வாழ்க்கை குறித்த விமர்சனம் பெண்ணைப் பெற்றோர் பார்வையில் கதையின் கடைசி பகுதியில் வெளிப்படும் இடத்தில் மரபார்ந்த பார்வைக்கும், பெற்ற பெண் படும் அவதி குறித்த வயிற்றெரிச்சலுக்கும் இடையேயான முரண்பாட்டை கவின் அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். முன் பகுதியில், தனித்து வாழும் பெண்கள் ஒன்றாக விடுதியில் பகிர்ந்து கொள்ளும் நட்பார்ந்த வாழ்க்கை இயல்பாக மலர்கிறது. நட்புச் சிற்பம் செதுக்குவதில் இந்தச் சிறுகதையும் முக்கியமாகிறது.
“மூன்று நிற வானவில்” அதிர்ச்சி முடிவை நோக்கி நகர்வதைத் தொடக்கத்திலேயே உணர வைப்பதுதான் என்றாலும், வாழ்ந்து கெட்டுவிடும் குடும்பத்தின் பளு இறுதியில் யார் முதுகில் ஏற்றப்படுகிறது என்பதைப் பதறப் பதறப் பேசி முடிகிறது. “அண்ணன்” கதை அப்பாவிப் பெண்ணின் நம்பிக்கையைக் கொச்சைப் படுத்திப் பெண்டாளத் துடிக்கும் குரூர ஆண் மனம் ஒன்றைப் பேசும் கதை. இடையே அவளுக்குள் உருவாகும் காதலின் கனவை சாதிய அச்சம் ஊதி அணைத்துவிடுவது, அந்த அண்ணனின் வக்கிரத்திற்கு வழி திறந்து கொடுக்கிறது.
இரவில் கரையும் நிழல்கள் மற்றும் தலைப்புக் கதையான நீளும் கனவு இரண்டுமே இந்தத் தொகுப்பின் சிறப்புக் கதைகளாக என்னை மிகவும் பாதித்தவை. நட்பையும், உறவையும், பெண்களிடையேயான அன்பின் பகிர்வையும் முதல் கதை அற்புதமாக விவரிக்கிறது. கதையின் ஓட்டத்திற்கு சுவாரசியமான கதை சொல்லல் காரணமாகிறது. பள்ளிக்கூடப் பருவத்தில் நட்புள்ளங்கள் சிரிப்பால் எழுப்பும் மிகப் பெரிய பாலம் வலுவானது என்று இருவருமே நம்பத் தலைப்படுகின்றனர். அதை இலேசான நெம்புதலில் தகர்த்துவிடுகிற மரபார்ந்த பார்வையின் ஒரு பக்கத்தில் திருமண வாழ்வின் வரம்புக்குள் விசும்பும் பெண் மனமும், மறுபுறத்தில் சவால்களை எதிர்கொண்டு வாழும் தனிப் பெண்ணின் உளவியலும் நொறுங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்கிறது. அதுவரையிலும் அவர்களை அடையாளப்படுத்தி வந்த சிரிப்புக்கு அப்போது எந்த இடமுமின்றிப் போய்விடுகிறது.
“நீளும் கனவு” ஏற்கெனவே சிலர் எழுதிவிட்ட பாலின மாற்ற சிக்கல்களைப் பேசும் கதைதான் என்றாலும், கவின் மலரின் எழுத்து நடையும், வலிமையான விவரிப்பும் கவனத்தை ஈர்க்கிறது. திருநங்கையர் குறித்த அசிரத்தையான பார்வையையும், அருவருப்பான விமர்சனத்தையும் வைக்கும் மனிதர்களை அசைத்துப் போடும் கூறுகளை ஆர்ப்பாட்டமின்றி எடுத்து வைக்கும் அருமையான சொற்சித்திரம்.
ஆனால், இந்தத் தொகுதியில் ஆவேச உணர்வுகளைத் தூண்டுகிற, சலனப்படுத்துகிற கதை ஒன்று இருக்கிறது. உரிமைக் குரலை எழுப்பும் ஒடுக்கப்பட்ட இனத்து வாலிபன் ஒருவனைக் காவல் துறை கொல்லாமல் கொன்றெடுக்கும் சித்திரவதையை அந்த இளைஞனின் உடல் மொழியிலிருந்தும், தவிப்புறும் அவனது உளவியலில் இருந்தும் பேசும் கதை தான் “மெய்”. உலகப் புகழ் பெற்ற தூக்குமேடைக் குறிப்புகள் நூலில், பாசிச கொடுங்கோல் ஆட்சியாளரின் கீழ்த்தரமான கொடுமைகளைத் தாங்க முடியாமல் தாங்கித் திணறும் ஜூலியஸ் பூசிக், என்னை ஏன் வலுவுள்ளவனாகப் பெற்றீர்கள் என்று தனது பெற்றோரை மானசீகமாக் கேட்டவாறு துடிதுடிக்கும் ஓரிடம் வரும். மெய் கதையின் வாலிபன் காவல் துறையினரால் ‘சாவடி’ அடிக்கப்பட்டும் சாக அனுமதிக்கப் படாமல், தான் எங்கே இருக்கிறோம் என்று தத்தளிப்பதும், மயங்கி வீழ்வதும், திரும்ப நினைவு திரும்பி பின்னோக்கி யோசித்துக் களைத்து விழுவதுமாகப் போகும் இந்தக் கதை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த பின்புலத்தில் எழுதப் பட்டிருக்கும் வலிமையான கதை.
தேர்ந்த கதை சொல்லியாகப் புனைவில் இயல்பான ஓட்டத்தில் கதைகளைப் படைத்திருக்கும் கவின் மலர், விகடன், உயிர் எழுத்து உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த கதைகளின் இந்தத் தொகுப்புக்காகப் பாராட்டுதலுக்கு உரியவராகிறார். பாத்திரங்களின் உரையாடல், சூழல் விவரிப்பு, கதை வடிவமைப்பு இவற்றில் தெறிக்கும் கவித்துவம் கதைகளை மேன்மைப்படுத்தித் தந்திருக்கிறது. ரோஹிணி மணியின் அட்டை வடிவமைப்பு சிறப்புற அமைந்திருக்கிறது. வாழ்வியல் அருளிச் செய்யும் அற்புதமான கதைக் கருக்கள், கவின் மலரின் அனுபவ வெளிச்சத்தில் அடுத்தடுத்த கதைகளாக வளர்ந்து சிறக்கட்டும்.
(நன்றி: சொல்வனம்)