பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சிந்தியத் தமிழனின் வரலாறும், புதுச்சேரியின் வரலாறும் இணைந்த ஒன்று என்பதுபோல இந்தியப்பெருங்கடல் தீவுகளான மொர்ரீஸியஸ், ரெயூனியன் போன்றவற்றின் வரலாறு பரெஞ்சிந்திய வரலாற்றோடு இணைந்த ஒன்று தான். உலக நாடுகளை வரைந்தவன் எஞ்சிய கடைசி சொட்டில் உதரிய சிறுதுளியாக ஆப்பிரிக்க கண்டத்துக்கருகே உள்ள மொர்ரீஸியஸ் ஆப்பிரிக்கர், சீனர், இந்தியர் மற்றும் ஐரோப்பியர்கள் சேர்ந்து வாழும் தீவு. இந்தப்பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரின் வலசைப்பயணத்தைத் தொகுத்து எழுதப்புறப்பட்டால் ஆசியத்தீவின் கடந்த ஐநூறு ஆண்டுகளின் குறுக்குவெட்டு வரலாற்றுச் சித்திரம் கிடைத்துவிடும். கடலாடித்தள்ளிய இந்தியப் பெருங்கடல் பயணங்கள் மிக அற்புதமான வரலாற்றுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சரடைக்கொண்டு கூலிக்காகச் சென்றவர்களான தமிழர்களின் கதையை ஒரு வரலாற்று நாவலாக மாற்றியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா.
நீலக்கடல் – ஒரு நெடிய கனவைப்பற்றிய புனைவுக்கதை. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த துருக்கியர்கள், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் கனவுக்கதை. கிழக்காசிய நாடுகளின் வரலாற்றைப் பின்னிப்பிணைக்கும் கதை. காரண காரியங்களை ஆராயப்புறப்பட்டால் யதார்த்தமும் சிக்கலான நூல்கண்டுதான் என்றாலும் அது பல நேரங்களில் நேரடியான அர்த்தங்களைக் கொண்டது. ஆனால் கனவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. நாம் அறியாத எல்லைகளுக்குச் சென்று புலப்படாத ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் வெளி அது. வரலாற்றின் நானூறு ஆண்டுகள் கனவு வழியாக ஊடுருவி அல்லற்படும் ஆளுமைகளைப்பற்றியது இக்கதை. பிரெஞ்சுத் தீவும், புதுச்சேரி, சந்திரநாகூர் பகுதியின் கும்பனியரசின் வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாது அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இரக்கமற்ற சூறாவெளியாக அலைக்கழிந்த அடிமை வாழ்வையும் அதனூடாக வாழ்வின் ஒளிமிக்க தருணங்களையும் ஒருசேரக்காட்டும் படைப்பாகிறது. பிரெஞ்சு காலனிய நகரங்களான புதுச்சேரி, சந்திரநாகூர், காரைக்கால், மாஹே மக்களின் வரலாற்றை எழுதிய பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், கண்ணீரைக் காப்போம் போன்ற புதினங்களின் மீது ஏறி நின்று அவற்றையும் விஞ்சும் ஒரு வரலாற்று நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.
வெளிவந்த கடந்த பன்னிரெண்டு வருடங்களில் தமிழ் இலக்கிய சூழலில் இந்த நாவலுக்கான வரவேற்பு சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லமுடியும் என்றாலும் அவை எதுவும் நாவலின் உள் இயங்குமுறையில் தேடமுடியாது என்பது இங்கு முக்கியமானது! வாழ்வாதாரத்தைத் தேடி பயணங்கள் மேற்கொண்டு புது நிலத்தையும் நவயுக கலாச்சாரங்களையும் தைரியமாகச் சந்தித்து அகதியாக அலைந்து திரிந்த வாழ்வைக் கூறும் முதன்மையான இடப்பெயர்வு நாவலாக நாம் நீலக்கடலைப் பார்க்கலாம். உலக இலக்கிய வரலாற்றில் எக்ஸோடஸ் வகை நாவல்களின் வரிசையில் தைரியமாக வைக்கக்கூடிய தமிழ் படைப்பு இது.
பெர்னார் குளோதன் – எனும் பிரெஞ்சுக்காரனின் – பல வாழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு காதலும், தேடலும் நிரம்பிய சரடில் கதை தொடங்குகிறது. நாவல் என்பது காலத்தோடு விளையாடும் ஆட்டம். அதை நீட்டியும் குறைத்தும் செலுத்தப்படும் பல கண்ணிகள் நாவலில் உண்டு. இதில், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடிடூட்டில் இந்தியவியல் ஆராய்ச்சிக்காக பழைய ஓலைச்சுவடுகள், சித்தர் பாடல்கள் ஆய்வில் இருபதாம் நூற்றாண்டில் ஈடுபடும் பெர்னார் குளோதன் ஒருவன். கனவில் அவனை அலைக்கழிய விடும் பெண் உருவத்தைப் பிந்தொடர்ந்து அவன் சென்று சேரும் இடம் பதினெட்டாம் நூற்றாண்டு மொர்ரீஸியஸ். பதினெட்டாம் நூற்றாண்டு பெர்னார் குளோதன் தனது கும்பனியாரின் வெறுப்பையும் மீறி மலபாரிப்பெண்ணான தெய்வானையைக் காதலிக்கிறான். இக்காதல் கனியக்கூடாது என பிரெஞ்சு கவர்னரும் அவரது கூட்டாளிகளும் தடைவிதிப்பது போலவே அவளது தாயார் தன் பெண்ணைப் பற்றிய ஒரு ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக காதலுக்குத் தடைவிதிக்கிறார்.
இக்கதையின் நுனியைப் பிடித்து இறங்கும் பெர்னார் ஒரு பக்கம் உள்நுழைந்து கதையின் மையப்பாத்திரமாகவும் வலம் வருகிறார். லாபொர்தனே, துய்ப்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை, பெத்ரோ கனகராய முதலியார் எனப் பல உண்மையான கதாபாத்திரங்கள் கதையில் வருகிறார்கள். பிரபஞ்சனின் வரலாற்று நாவல்களிலும் இவர்களது வருகை இருந்தாலும் மிக முக்கியமான வித்தியாசம் நாகரத்தினம் கிருஷ்ணா முன்வைக்கும் சமரசமற்றப் பார்வை. இக்கதையில் ஆனந்தரங்கப்பிள்ளையும் காலனியாதிக்கத்திற்கு சலாம் போட்டு லாபம் அடைபவராக வருகிறார். அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும், தனிப்பட்ட சொத்துகளைச் சேர்ப்பதற்கும் எவ்விதமான கீழ்மைக்கும் இறங்கத் தயாராக இருக்கும் அந்நியர் ஆட்சிக்குக் கைகொடுத்து உதவியர்களின் பங்கினால் நமது கைகளிலும் ரத்தம் படிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.
நீண்ட நெடிய அந்நியர் ஆளுமைக்கு உட்பட்டு நிலவளமும், மக்கள் வளமும், சகோதரத்துவ பிணைப்பும், பண்பாட்டு சின்னம், கலாச்சார பெருமிதம் என அனைத்தையும் இழந்து நின்ற ஐநூறு வருட கால வரலாற்றைக் காட்டுகிறது இந்த நாவல். விஜயநகர ஆட்சியின் முடிவில் முழுமுற்றாக மத்திய மற்றும் தென்னிந்திய நிலம் துலுக்க ஆட்சி தொடங்கி டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கைமாறிய சித்திரமும் அதன் சமூக அவலங்களின் நீட்சியும் ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான பார்வை. இதனாலேயே இது காலனிய நாட்களைப் பற்றி எழுதப்பட்ட தமிழின் முன்னணிப்படைப்பாக அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட பிரபஞ்சனின் தோளில் ஏறிப்பார்த்ததோடு மட்டுமல்லாது வரலாற்றின் மாறுபோக்குகளை மேலும் நுணுகி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியில் படித்து எழுதுபவராகவும் இருப்பதால் அவரால் பல காலனிய பிரெஞ்சு ஆவணங்களைத் தேடி வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீது மேலதிக வெளிச்சத்தை அளிக்க முடிந்திருக்கிறது. பல சொற்றொடர்கள் பிரெஞ்சிலும் தமிழிலும் கொடுத்திருக்கிறார். அதில் பல தேதியிட்ட வரலாற்று நிகழ்வுகளாகவும் உள்ளன.
நவாப்புகளின் ஆக்கிரமிப்பு முயற்சி மற்றும் மராத்தா மன்னர்களின் ஆட்சியின் போது வகித்த அரசியல் நிலைமையின் பின்புலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வட ஆற்காட்டு நிலத்தின் மாறும் நிலைமையைக் காட்டியுள்ளார். செஞ்சி, புதுவை, மதராஸ், சந்திரநாகூர், மாஹே, காரைக்கால் எனப் பயணம் செய்தபடி கதை இருந்தாலும் காலனி ஆதிக்கத்தின் கோர முகத்தின் தொடக்கங்கள் பலவற்றுக்கான ஊற்றுமுகத்தை இக்கதையில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆங்கிலேயர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பிரெஞ்சு அரசர்கள் கனிவானவர்கள் என்பதை உடைத்துக் காட்டிய பிரபஞ்சனின் வழியில் பல குவர்னர்களின் பதவி மற்றும் பண மோகத்தினால் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் காட்டியுள்ளார். சூழ்ச்சி, தந்திரம், பேராசை, மக்கள் நலம் பற்றிய அக்கறையின்மை என அனைத்தும் ஒரு கரிய புகை போல நாவல் முழுவதும் படர்ந்துள்ளது.
கடந்த நானூறு ஆண்டுகளாக பலவகையான அந்நியர் ஆதிக்கத்தினிடையே உருவாகி வளர்ந்த புதுச்சேரி நகரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளின் பாதிப்பு குறைவே. டச்சு, பிரெஞ்சு, வங்க கலாச்சாரங்கள் பிரதானமாக பாதிப்பை செலுத்தியது எனலாம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரெஞ்சும் இருபதாம் நூற்றாண்டில் வங்கமும் புதுவையின் தனித்துவத்தை நிறுவியதில் முதன்மையானதாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் செஞ்சி மற்றும் சோழ தேசப்பகுதிகளை ஆண்ட முகலாய அரசுகள் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தின. மராத்தியர்களின் ஆட்சியின்போது கலை மற்றும் கலாச்சார தாக்கத்தினால் தஞ்சை மண்ணின் ரசனை விரிவடைந்ததைப் போல பிரெஞ்சு கலாச்சாரம் புதுவை மண்ணுக்கு உரம் சேர்த்தது. இருவித கலாச்சாரங்கள் மோதும்போது ஏற்படும் எதிர்மறையான வீழ்ச்சிகளையும் மீது புதுவை மக்களின் உலகப்பார்வை விசாலமடைந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். வணிகத்துக்காகக் கால் பதித்த பிரெஞ்சு கும்பனியாரின் அடக்குமுறையும் பேராசையும் ஆங்கிலேய அரசுக்கு எவ்விதத்திலும் குறைவானதில்லை என்றாலும் துய்ப்ப்ளேவைப் போன்ற தலைவர்கள் மக்களின் பண்பாட்டுச் செல்வங்களின் மீது பிடிப்பு செலுத்தி அவர்களது வாழ்வின் தரத்தை முன்னேற்றும் முயற்சிகள் பல செய்தனர். பிரெஞ்சு ஆட்சி ஆங்கிலேயர்களது கொள்ளை ஆட்சியைவிட மனித விரோதத்தன்மை நிறைந்தது என பிரபஞ்சன் தனது முன்னுரையில் எழுதியிருப்பார். அல்ஜீரியா, மொர்ரீஸியஸ் நாடுகளில் பிரெஞ்சு ஆட்சியின் அவலங்களைக் கேள்விப்படும்போது நீதித்துறையின் மீது அவர்களது அலட்சியமும், அடிமை மனிதர்களது மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்துவிடுமளவு பேராசையும் அரக்க குணமும் கொண்டவரகள் என்பதை நம்மால் உணர முடியும். காலனிய ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த சித்திரம் என்பதால் நாம் ஒருவரை விட மற்றொருவரது ஆட்சி சிறப்பானது என எவ்விதம் சான்றிதழ் அளிக்க முடியும்? உலகம் முழுவதும் நிலவி வந்த அடிமை முறையும், பேராசையின் விளைவால் சக மனிதரைப் புழுவென மதிக்கும் அவலமும், நீதி என்பதே வல்லானின் சட்டம் எனும் நிர்வாக முறையும் எவ்விதத்திலும் ஒப்பீட்டுக்கு உகந்தவை அல்ல. ஆனாலும் காலனியாட்சி காலத்தின் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள் இன்றும் புதிது புதிதாகப் பல கீழ்மைகளின் சாட்சியங்களை வெளிக்கொண்டுவந்தபடி இருக்கின்றனர் என்றாலும் ஒட்டுமொத்தமாக மானுட வாழ்வுக்கு மேன்மை தரும் சில விஷயங்களுக்கு காலனியாதிக்கம் மறைமுகமாகக் காரணமாக அமைந்திருப்பதைக் கொண்டு நாம் சிலதெளிவுகளை அடைய முடியும்.
கலைஞர்களும் வரலாற்றாசியர்களும் வரலாற்றை காலந்தோறும் வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றிசியர்களின் வரலாற்றுப் பார்வை கொண்ட விழுமியங்களை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ இருபதாம் நூற்றாண்டிலோ போட்டுப் பார்க்க முடியாது. தங்கள் வரலாற்றுப் பார்வைக்குத் தகுந்தாற்போன்ற வரலாற்றுணர்வை கலைஞர்கள் மேற்கொள்வர். நீலக்கடல் மற்றும் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ ஆகிய இரு வரலாற்று நாவல்களையும் நாம் அணுகி ஆராயும்போது இந்த உண்மை மேலும் பலமடங்கு விரிவடையும்.
நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளேயின் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார். லாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அந்நிய ஆதிக்கத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாதிருந்தது அந்த கோர வரலாற்றின் கறையைப் பூசியவர்களாகிறார்கள். இந்த வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் நாகரத்தினம் கிருஷ்ணா காலனியாதிக்கத்தின் கோர முகத்தின் மற்றொரு பக்கத்தை ஆழமாகப் பதிந்தவர் ஆகிறார். மானுடம் வெல்லும் நாவலும் காலனியாதிக்க நோயைக் காட்டியது என்றாலும் அந்நியர் ஆட்சியின் பண்முக விளைவுகளை (சாதகமும் உண்டு) அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியக்கடல் பகுதி கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் மிக முக்கியமான வணிகவழியாக இருந்துள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் விதியை மட்டுமல்லாது தொழிற்வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களின் விதியையும் இந்த கடல்பகுதி தீர்மானித்து வந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் உறைபனிக்காலம் முதல் மக்கள் கூட்டம் இடப்பெயர்ப்பு நடத்திய முக்கியமான பகுதியும் இதுதான். ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஒன்றாக இருந்த நிலப்பகுதி பிரிந்தபின்னர் ஐரோப்பாவின் உறைபனிகாலத்தில் மக்கள் கூட்டமாக இடம் மாறிய காலம் முதல் காலனியாதிக்கக் காலம் வரை தொடர்ந்த நகரும் நாகரிகமாக இது இருந்துவந்துள்ளது. மொர்ரீஸியஸ், ரெயூனியன் எனும் சிறு தீவுகள் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரு வணிகக்கப்பல்களாலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள் எனலாம். புயலிலிருந்து தப்பிக்கவும், கடற்கொள்ளையர்களிடம் சிக்காமல் தஞ்சம் பெறவும் இச்சிறு தீவுகள் காலனிய சக்திகளுக்கு உதவியுள்ளது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நன்முனைப் புள்ளியிலிருந்து காற்றின் விசைக்கேற்ப இந்தியாவை அடைவதற்கு முன்னர் இயல்பாக கப்பல்கள் சென்றடையும் தீவு இது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியான இத்தீவின் மீது டச்சும்,பிரான்சும், இங்கிலாந்தும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியதில் மிகச் செழிப்பானது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து கேமரூன் பகுதியிலிருந்தும் வந்த கூலிகளாலும் அடிமைகளாலும் வளம் பெற்றது மொர்ரீஸியஸ். அங்கு விளைந்த கரும்பு, பருத்தி தோட்டங்களினால் காலனிகளும் செழித்தன. புதுவையிலிருந்தும் தெலங்கானா, வங்கம் பகுதியிலிருந்து வந்த மக்களால் உருவான இவ்வளர்ச்சியின் சித்திரம் நீலக்கடல் நாவலில் மிகச்சிறப்பானப் பகுதிகளாகும். தமிழில் இந்திய தமிழர்களின் Exodus அதாவது இடப்பெயர்வு பற்றிய முதல் நாவலாக அமைந்துள்ளது. காலனியாதிக்கம் எனும் வரலாற்றியலின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்றாவனமாகவும் இது உள்ளது.
இந்திய மக்களின் உலகலாவிய இடப்பெயர்வு என்பது பதியப்படாத இலக்கியம். இலங்கைத் தமிழரின் அகதி வாழ்வு பலவகையில் புனைவுகளாவும், அபுனைவுகளாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. மிகச் சிறத்த நாவல்களாகவும் அவ்வாழ்கை நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்திய மக்களின் இடப்பெயர்வு பற்றி மிகச் சொற்பமான பதிவுகளே உள்ளன. ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் நாவல்கள் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தெற்காசியா தீவுகளில் செட்டியார் கடைகளில் வணிகம் செய்யவந்து இந்திய சுதந்திரப்போரில் நேதாஜியுடன் தோள்கொடுத்து நின்ற தமிழர்களைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது. நவீன நாவலுக்கு உரிய இலக்கணத்துடன் அமைந்திருந்ததால் வரலாற்றின் ஊடுபாவுகளுக்குளும் வரலாற்றுப்பார்வை மாறும் விதங்களையும் பண்பாட்டு வீழ்ச்சிகளையும் முழுவதுமாக காட்டவில்லை.
(நன்றி: சொல்வனம்)